நாட்களே பெய்த பெரு மழையால் சிதைந்து கிடக்கிறது சிங்காரச் செ சில ன்னை. தமிழகத்தின் தலைநகர் என்று மார்தட்டிக் கொண்ட சென்னை இன்று ஏனைய மாவட்டங்களிடம் மடிப்பிச்சை கேட்டு நிற்கிறது. வருடந்தோறும் பெய்யும் பருவமழையால் புயல் கடக்கும் பூமியாக கடலூர் மட்டுமே மாட்டிக்கொள்ள, இம்முறை தலைநகரிலும் மழை பெய்ததால் உலகப் புகழ்பெற்றிருக்கிறது சென்னை. சுனாமி எனும் ஆழிக் கூத்தைத் தோற்கடித்த இந்த மழை சென்னையில் ஆடியிருப்பதோ அகோரத் தாண்டவம்.
கடந்த முதலாம் திகதி மாலை கறுக்க ஆரம்பித்த வானம் சுமார் ஒரு வாரம் வரை வெளுக்கவே இல்லை. பதிலாக சென்னையைப் போட்டு வெளுத்து வாங்கியது.
மழை வீழ்ச்சியைத் தாங்க முடியாத தாங்கும் அளவுக்கு நிர்வகிக்கப்படாத சென்னை மாநகர ஏரிகள், மறுநாள் இரண்டாம் திகதி காலை முன்னறிவிப்புடனும் முன்னறிவிப்பின்றியும் வாய் பிளந்தன. ஆயிரம் கன அடி, இரண்டாயிரம் கன அடி என்று ஆரம்பித்த செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் முப்பதாயிரம் கன அடி வரை வெளியேற்றப்பட்டது. இது தவிர, போரூர் ஏரி, அடையாறு, புழல் ஏரி என சென்னையின் அனைத்து ஏரிகளிலும் மழை நீர் நிறையவே உபரி நீர் உடனடியாக வெளியேற்றப்பட்டது.
காலையில் பால் வாங்கவும் பத்திரிகை வாங்கவும் வெளியே போனவர்கள் வீடு திரும்புவதற்குள் குபுகுபுவென வீடுகளுக்குள் புகுந்தது மழை வெள்ளம். வெள்ளத்தின் வேகத்துக்கு ஈடாக வீட்டில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்த மக்களால் முடியவில்லை. போட்டது போட்டபடி இருக்க உயிர் பிழைத்தால் போதும் என்று பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர்.
சரியாக அதற்கு ஒரு வாரத்துக்கு முன் பெய்த மழையில் அறுந்து விழுந்த மின் கம்பிகளை மிதித்துச் சிலர் பலியானதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முதலாவதாக டிசம்பர் முதலாம் திகதி இரவே மின்சாரத்தைத் துண்டித்தது சென்னை மாநகராட்சி. தொடர்ந்து பதினெட்டு மணி நேரங்களுக்கு மேல் மின்சாரம் கிடைக்காததால் அலைபேசிக் கோபுரங்களும் உயிரிழந்தன.
முதலாம் திகதியன்று போடப்பட்ட சம்பளத்தை எடுத்துக்கொண்ட ஊழியர்கள் தப்பிக்க மறுநாள் எடுத்துக்கொள்ளலாம் என்று அலட்சியம் செய்தவர்கள் ஏ.ரி.எம்.களும் இயங்காததால் மாட்டிக்கொண்டனர்.
ஒரு வாரத்துக்கு முன் பெய்த மழை நீரே வடியாமல் இருந்த தாம்பரம், குரோம்பேட்டை, வேளச்சேரி, முடிச்சூர், பள்ளிக்கரணை, ஓ. எம். ஆர். (பழைய மகாபலிபுரம் வீதி) என்பன மீண்டும் பெய்த கனமழையால் வெள்ளத்தில் மூழ்கின. அதைவிடக் கொடுமையானது கூவத்தின் கோபம்.
ஆறாக இருந்து, அப்பகுதி மக்களின் மெத்தனத்தால் மெகா சாக்கடையாக மாறிய கூவம் கொப்புளித்து அன்று அந்த மக்களைப் பழி தீர்த்துக் கொண்டது. கூவத்தைச் சுற்றியுள்ள ஈக்காட்டுத்தாங்கல், சைதாப்பேட்டை, கிண்டி. ஜாபர்கான்பேட்டை, ராமாபுரம், முதல்வர் பதவிக்காக நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதியான ஆர். கே. நகர் என அனைத்துப் பகுதிகளிலும் கூவத்தின் சாக்கடை கழிவுகளே பெருவாரியாகப் புகுந்தன.
காலை சரியாக எட்டு மணியளவில் தெருக்களுக்குள் பரவ ஆரம்பித்த வெள்ளம் மதியத்துக்குள் சுமார் மூன்றடி உயரத்தைத் தொட்டது. பாலங்கள் பல்லிளித்தன. தார்ச்சாலைகள் தகர்ந்தன. சுரங்கப் பாதைகளும் ஸ்விம்மிங் பூல்களாகவே கடுமையான வாகன நெரிசலுக்கு முகங்கொடுத்தனர் மக்கள்.
நேரம் ஆக ஆக, மழை பலமாகப் பெய்தது. நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மிதக்க ஆரம்பித்தன. வாகனங்களைக் கைவிட்டுவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை மக்களுக்கு.
இயற்கையின் சீற்றத்தைச் சற்றும் எதிர்பார்த்திராத மக்கள், போதியளவு உணவுப் பொருட்கள் கையிருப்பில் இல்லாததாலும், மின்சாரம் இல்லாததாலும் பெரும் சிரமத்துக்கு ஆளாயினர். கேன்களில் நிரப்பப்பட்ட மினரல் தண்ணீரையே குடிநீர் ஆதாரமாகக் கொண்ட சென்னை மக்கள், கடைகள் திறக்கப்படாததால், வீட்டைச் சுற்றித் தண்ணீர் இருந்தும் குடிக்க நீரின்றி அல்லாடினர். மின்சாரம் இல்லாத அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் ஆள்துளைக் குணறுகளில் இருந்து நீர் இறைக்க முடியாததால் சிரமபரிகாரம் செய்துகொள்ளவும் சிரமப்பட்டனர்.
வானத்தின் வன்முறைக்கு ஆளான சென்னை கிட்டத்தட்ட ஒரு யுத்த பூமியாகவே காணப்பட்டது. கண்ணில் பட்டவர்கள் கண்களில் எல்லாம் அச்சம் உச்சம் தொட்டிருந்தது. நிலைமையின் விபரீதத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாநிலமும், நாடும், உலகும் உணரத் தொடங்குகையில் ஏராளமான சேதங்களைச் செய்துவிட்டிருந்தது மழை. வளர்ப்பு மிருகங்களை வெள்ளம் அடித்துச் செல்ல, அவற்றைக் கண்களில் நீருடன் வேடிக்கை பார்க்க மட்டுமே மக்களால் முடிந்தது.
வீட்டுச் சுவர்களை அங்குலம் அங்குலமாகக் கபZகரம் செய்துகொண்டிருந்த வெள்ளத்தைக் கண்ட சென்னை மாநகர மக்களுக்கு அது ஒரு தூங்கா இரவு.
மறுநாள் வருண பகவான் கொஞ்சம் கருணை காட்டவே, சென்னையைத் தலைமுழுகும் நோக்கத்துடன் மெட்ரோ ரயில் மூலமாக கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குப் படையெடுத்தனர் மக்கள். பல்லாயிரம் கோடிகளை ஏப்பமிட்டு உயர்ந்து நிற்கும் மெட்ரோ ரயில் சாதாரண நாட்களில் பெட்டிக்கு ஒருவர் கூட இல்லாமல்தான் பயணிக்கும்.
ஆனால் மூன்றாம் திகதியன்று மெட்ரோவின் வருமானம் அதன் வரலாற்றுப் புத்தகத்தில் பொன்னெழுத்தில் பதிக்கப்பட்டிருக்கும் என நம்பலாம். தெருக்களில் நீர் சூழ்ந்திருந்ததால் அன்றைய தினம் மட்டும் மெட்ரோ மூலமாகப் பயணித்த மக்களின் எண்ணிக்கை ஓரிரு இலட்சத்தைத் தொடும்.
முழு மாநிலமுமே மழை நீரால் கண்ணீர் வடிக்க, அந்த அவலத்தையும் அரசியலாக்கி அதில் சுயலாபம் தேடிக்கொள்ள முயற்சித்த தமிழக அரசியல்வாதிகளை என்னவென்று சொல்வது?
இந்தப் பேய் மழை பெய்ததற்கு முதல்வர் ஜெயலலிதாதான் காரணம் என்று மட்டும்தான் மு. க. ஸ்டாலின் சொல்லவில்லை. மற்றும்படி நிகழ்ந்த அத்தனை அசம்பாவிதங்களுக்கும் அவர்தான் காரணம் என்று தெருத்தெருவாகச் சென்று புகார்ப் பட்டியல் வாசித்தார் அவர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லும்போது கூட மிக ஜாக்கிரதையாக அடுத்த தேர்தல் பற்றி சூசகமாகப் பேசினார் மு. க. ஸ்டாலின்.
வழக்கம் போல் ஹெலிகொப்டரை வரவழைத்து அதில் ஏறி ஒரு ‘ரவுண்டு’ அடித்துவிட்டு போயஸ் கார்டனுக்குள் புகுந்து கொண்டார் ஜெயலலிதா.
அ. தி. மு. க. சார்பில் ஆர். கே. நகர் இடைத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய வந்திருந்த நாற்பது எம். எல். ஏ.க்களில் ஒருவர் கூட அனர்த்தம் நடந்த உடனேயே அந்தத் தொகுதியையும் அவரவர் சொந்தத் தொகுதிகளையும் எட்டியும் பார்க்கவில்லை. மாறாக வெளி மாவட்டங்கள், வெளிநாடுகளில் இருந்த வந்த நிவாரணப் பொருட்களில் ஜெயலலிதாவின் படங்களை ஒட்டுவதிலேயே அக்கறையாக இருந்தனர்.
இன்னும் சில அ. தி. மு. க. விசுவாசிகள், தன்னார்வத் தொண்டர்கள் எடுத்து வந்திருந்த நிவாரணப் பொருட்களை விநியோகிக்கத் தடை விதித்தது மட்டுமன்றி, அதை எதிர்த்த தன்னார்வத் தொண்டர்களைத் தாக்கவும் செய்தனர். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் இலஞ்சம் தந்தால் தான் நிவாரணப் பொருட்களை விநியோகிக்கவே விடுவோம் என்று கறாராகச் சொன்னார்கள்.
சேதங்களைப் பார்வையிடச் சென்ற அ. தி. மு. க. பிரமுகர்கள் சிலரை பொதுமக்கள் சரமாரியாகக் கேள்விகள் கேட்க, அதுவரை அப்படியான கேள்விகளுக்கு முகங்கொடுத்துப் பழக்கப்பட்டிராத அவர்கள் பொதுமக்களைத் தாக்கிய சம்பவங்களும் அரங்கேறின.
தமிழ் சினிமாக்களில் காண்பிக்கப்படும் அரசியல்வாதிகளின் பிம்பங்களுக்கு நிஜத்தில் உயிரூட்டினர் தமிழக அரசியல்வாதிகள்.
ஒவ்வொரு கட்சியும் அக்கட்சிக்குச் சொந்தமான தொலைக்காட்சி வாயிலாக தமது கட்சி நலன் சார்ந்த ரீதியிலேயே செய்திகளையும் ஒளிபரப்பின. ஒட்டு மொத்தத்தில் என்னதான் நடந்தாலும் தமது போக்கை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்பதையே தமிழக அரசியல்வாதிகள் உணர்த்தினர்.
2016ல் நடைபெறவிருக்கும் தேர்தலில் ஏற்கனவே சொத்துக்குவிப்பு, மதுவிலக்கு, ஜாஸ் சினமாஸ், அவதூறு வழக்குகள். தேசத்துரோக வழக்கு என்று பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கும் ஜெயலலிதாவுக்கு இந்த கன மழையும் பலத்த பாதிப்பையே ஏற்படுத்தும் என்பதைச் சொல்வதற்கு அரசியல் அறிஞர்கள் தேவையில்லை.
ஆனால் எந்தத் தீமையிலும் ஒரு நன்மை உண்டு என்பதை தமிழகத்தின் ஒவ்வொருவருக்கும் ஒட்டுமொத்தமாகச் சேர்த்துப் பாடம் கற்பித்திருக்கிறது இந்த மழை.
ஆண்டாண்டு காலமாக முகம் தெரியாமலேயே வாழ்ந்திருந்த அடுக்குமாடி வாசிகள் அறிமுகமாகிக்கொண்டது இந்த மழையால்தான். கீழ்த்தளத்தில் வாழ்ந்த மக்களை வலியச் சென்று தம் வீடுகளுக்கு அழைத்து வந்து தங்க வைத்துக் கொண்டனர் மேல் தள வீட்டுக்காரர்கள். கல்வி, பணம், மதம், இனம், மொழி என்ற எதுவுமே இதற்குத் தடை நிற்கவில்லை. தங்குமிடம் இருந்த உணவு சிறிதே என்றாலும் அதைச் சமைத்துப் பரிமாறினார்கள். கிடைத்தது ஒரு பிடிச் சோறுதான் என்றாலும் வயிறும், மனமும் அங்கே சேர்ந்தே நிறைந்தது.
தம் வீட்டுப் பூஜையறையில், இஸ்லாமியர்கள் தொழுவதற்குப் பாய் போட்டுக் கொடுத்தார்கள் பிராமணர்கள். தொழுகைப் பாய்களை கிறிஸ்தவர்கள் தூங்குவதற்குக் கொடுத்தார்கள் இஸ்லாமியர்கள். தேவாலயங்களும், கோயில்களும். மசூதிகளும் எந்த வேறுபாடுமின்றி கைவிரித்து அடைக்கலம் கொடுத்தன.
சென்னை நகர மக்களுக்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குள் தஞ்சம் புகுந்த மக்களுக்கு உணவு சமைத்து எடுத்து வந்து தம் கையாலேயே பரிமாறினர் இஸ்லாமியர்கள். மசூதிகளுக்குள் மக்கள் நிறைந்திருந்ததால் தெருவில் நின்றபடி தமது வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர் இஸ்லாமியர்.
மாநகரின் மின்சாரம் முழுமையாகத் துண்டிக்கப்பட்டிருக்க, ஒற்றை மெழுகுவர்த்தியைச் சுற்றி குடும்பமே ஒன்றாக அமர்ந்துகொண்டு உணவருந்தியது. அதில் கிடைத்த சந்தோஷம், எந்தவொரு உணவகத்திலும் இல்லை என்பதை உணர்வுபூர்வமாக உணர்ந்துகொண்டனர் குடும்பத்தினர்.
தொலைக்காட்சி, இணைய தளம், தொலைபேசி, அலைபேசி என அனைத்தும் முடங்கிக்கொள்ள, மடிக் கணனிக்குப் பதிலாக தம் மகளையோ, மகனையோ மடியில் வைத்துக்கொண்டு மழலை பேசக் கேட்ட பெற்றோர் பலர்.
ஆடையில் அழுக்குப் படியாமல் பணியாற்றும் ஐ. ரி. இளைஞர்கள் தான் சென்னையின் சேறும் சகதியுமான தெருக்களில் இடுப்பளவு தண்ணீருக்குள் முதலில் இறங்கியவர்கள். நவநாகரிக போதை கொண்டவர்கள் என்று வர்ணிக்கப்படும் இளைஞர்கள்தான் சிறு சிறு குழுக்களாக இணைந்து மீட்புப் பணியாளர்கள் வரும் வரையில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டவர்களைக் கயிறு போட்டும் கரம் கொடுத்தும் கரைசேர்த்தனர்.
தமிழகத்தில் மட்டும்தான் பாதிக்கப்பட்டவர்களை விட தன்னார்வத் தொண்டர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது என்று மீட்புப் பணிக்காக தமிழகம் வந்திருந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தமிழக இளைஞர்களுக்குப் புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது.
பணக்காரன், ஏழை எல்லோருக்கும் வயிறுகள் வெவ்வேறானாலும் பசி ஒன்றுதான் என்பதை, சாலைகளில் விநியோகிக்கப்பட்ட உணவுப் பொட்டலங்களை வாங்க வரிசையில் நிற்கும் போதுதான் பலரும் உணர்ந்தார்கள்.
இவை மட்டுமா? படத்துக்குப் படம் பல கோடி பார்க்கும் உச்ச நடிகர்களின் உதவி இலட்சத்தில்தான் இருந்து. ஆனால் கிரிக்கெட்டில் இந்தியாவின் பரம வைரிகளாகக் கருதப்படும் தலைசிறந்த வீரர்களான முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்த்ன ஆகியோர் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்காக அளித்திருக்கும் நிதியுதவி ஓரிரு கோடிகளைத் தாண்டியது. விளையாட்டு வேறு வாழ்க்கை வேறு என்பதை இவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். தமிழக மக்களுக்குப் புரியவும் வைத்திருக்கிறார்கள்.
துப்புரவுப் பணியாளர்கள் என்றாலே தூர நிற்பது மக்களின் வழக்கம். ஆனால் தம் வீடுகளுக்குள் புகுந்த நீரைக்கூட வெளியேற்ற முயற்சிக்காமல், கொட்டும் மழைக்குள்ளும் நகரைச் சுத்தம் செய்ய அணிதிரண்ட சுமார் இருபதாயிரம் துப்புரவுப் பணியாளர்களுக்கு நன்றி கூறத்தான் வேண்டும். அவர்கள் துப்புரவு செய்தது தெருக்களை மட்டுமல்ல மக்கள் மனங்களில் அவர்கள் மீதிருந்த தவறான புரிதல்களையும்தான்.
இவர்களைப் போலவே முடிந்தவரை முழுமையான ஒத்துழைப்புத் தந்து சென்னைக்குள்ளும் சரி, வெளியூர்களுக்கும் சரி பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குப் பரிமாற்றியவர்கள் பேருந்து சாரதிகளும், நடத்துனர்களும் தான்.
மொத்தத்தில் மது, மாட்டிறைச்சி, மதச் சார்பின்மை, சகிப்புத் தன்மை என்று கிடைத்ததையெல்லாம் வைத்து கட்சிகள் அரசியல் செய்ய ‘நம் மனதில் மனிதத்துவம் இன்னும் மறைந்துவிடவில்லை’ என்பதை மழையின் தயவால் ஓங்கி ‘உறைக்கச்’ சொல்லியிருக்கிறார்கள் தமிழக மக்கள்.
தண்ணீர் தேசத்தில் இருந்து…
வெலியமுனை குருசாமி