வேலையில்லாதவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உற்பத்திசார் பொருளாதார கொள்கைகளே தேவை

(கருணாகரன்)

வேலைகோரும் பட்டதாரிகள் வீட்டிலும் வீதியிலுமாக நிறைந்து போயிருக்கிறார்கள். படித்துப் பட்டம் பெற்ற பிறகு வேலை கிடைக்கவில்லை என்றால், அவர்களால் என்ன செய்ய முடியும்? வேலை கேட்டுப்போராடுவார்கள். இந்தப் போராட்டத்தைப் பற்றி அரசாங்கம் அக்கறைப்படவில்லை என்றால், அதைக் கோவிப்பார்கள், அரசாங்கத்துக்கு எதிராகக் குரல் எழுப்புவார்கள். கூடவே தங்களுக்கு முன்னே உள்ள அரசியல்வாதிகளையும் அதிகார அமைப்புகளையும் எதிர்ப்பார்கள். இப்போது நடந்து கொண்டிருப்பது இதுதான்.

மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் பட்டதாரிகளின் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இங்கு மட்டுமல்ல, நாடு முழுவதிலும் பட்டதாரிகளுக்கு வேலையில்லாப் பிரச்சினை உண்டு.

அதனால் பட்டதாரிகள் எல்லா இடங்களிலும் வேலைகோரும் போராட்டங்களை அவ்வப்போது நடத்திக் கொண்டிருக்கின்றனர். “வேலை தா” என்று சத்தமிட்டவாறு தெருக்களில் ஊர்வலம் போகும் பட்டதாரிகளை அவ்வப்போது நாம் பார்க்க முடியும். இந்த நிலைமை ஏன் வந்தது? ஏன் நீடிக்கிறது?

“வேலைகோரும் பட்டதாரிகளின் பிரச்சினை இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் உள்ள ஒரு பிரச்சினை. வளர்ச்சியடைந்த அமெரிக்காவில் கூட சுமார் ஐந்து சதவீதமானவர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள்.

ஐரோப்பிய நாடுகளும் இன்று இந்தச் சவாலை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பிரான்ஸில் வேலையற்றவர்கள், வீதிகளில் படுத்துறங்குகின்றனர். சீனாவிலும் இந்தப் பிரச்சினை உண்டு” என, சில புள்ளிவிவரங்களைச் சொல்லி, அரசியல் தலைவர்கள் கடந்து போக முயல்கின்றனர்.

நேற்று முன்தினம் (04) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்கே நடைபெறும் வேலைகோரும் பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பாகவும் ஏறக்குறைய இதே போன்றதொரு பதிலையே கூறியிருக்கிறார்.

“பட்டதாரிகள் அனைவருக்கும் அரசாங்க வேலை வழங்குவது என்பது சாத்தியமற்றது. தனியார் துறையில் ஓர் இலட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உள்ளன.

அதில் பட்டதாரிகளுக்கு ஏற்ற தொழில்களும் உள்ளன. வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யாமல் இன்று வந்து என்னோடு கதைத்து இருந்தால் இன்றே 10 பேருக்கு வேலைவாய்ப்பைப் பெற்று கொடுத்திருப்பேன்.

இந்தப் புதிய அலுவலகத்திலோ (“ஜனாதிபதிக்குத் தெரிவியுங்கள்” என்ற குறைகேள் பணிமனையில்) அல்லது எனது அலுவலகத்திலோ வேலை பெற்றுக் கொடுத்திருக்க முடியும்” என்றார்.

மேலோட்டமாகப் பார்த்தால் சரிபோலத் தோன்றினாலும், இது நாட்டின் தலைவருடைய பொறுப்பான பதில் அல்ல. “அரசாங்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் எல்லோரையும் சேர்த்துக் கொள்ள முடியாது.

பதிலாகத் தனியார்துறைகளில் ஓர் இலட்சம் பேருக்குரிய வேலைவாய்ப்புகள் இருக்கின்றன” என்ற விளக்கத்தைச் சொல்லும் ஜனாதிபதி, அந்த வேலைகளில் பட்டதாரிகள் இணைந்து கொள்ள விருப்பமில்லாமல் அல்லது இணைந்து கொள்ள முடியாமல் இருப்பதற்கான காரணங்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை.

இல்லையென்றால், எதற்காகப் பட்டதாரிகள் தனியார்துறையை நாடிச் செல்லத் தயங்குகின்றனர்? என்பதை அவர் கண்டறிய வேண்டும்.

இந்தப் பொறிமுறையில் ஏதோ தவறிருப்பதால்தானே, தனியார்துறையை நோக்கிப் பட்டதாரிகள் செல்லாமல் இருக்கிறார்கள்? படித்தவர்கள் (பட்டதாரிகள்) அந்த வேலைக்குப் போகாமல், இப்படி வீதியில் நின்று போராடவேண்டிய அவசியம் ஏன் வந்தது?

படித்தவர்கள் எல்லோருக்கும் அரசாங்கம் வேலை வாய்ப்பை வழங்க முடியாது என்பது உண்மையே. ஆகவே, படித்துப் பட்டம் பெற்ற எல்லோரும் அரசாங்கத்திடம் வேலைவாய்ப்பை எதிர்பார்க்க முடியாது.

ஆனால், படித்தவர்கள், படிக்காதவர்கள் அனைவரும் ஒரு நாட்டில் தொழில் வாய்ப்பைப் பெறக்கூடிய வசதி அல்லது அடிப்படைகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு நாட்டின் சிறப்பான இயல்பு அல்லது திட்டமிடல் என்பது அது அனைவரும் வேலைசெய்யக்கூடிய, அனைவருக்கும் வேலை கிடைக்கக்கூடிய பொறிமுறையைக் கொண்டிருப்பதேயாகும்.

இதற்குச் சிறப்பான பொருளாதாரக் கொள்கை அவசியம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இலங்கையில் அப்படியான ஒன்றில்லை. இலங்கையின் பொருளாதாரக் கொள்கை என்னவென்று இலங்கையிலுள்ள தலைசிறந்த எந்தப் பொருளாதார நிபுணருக்கும் தெரியாது.

எந்தப் புத்திஜீவியினாலும் சொல்லமுடியாது. ஏன், நாட்டின் தலைவர்களுக்கே தாங்கள் எத்தகைய பொருளாதார அடிப்படைகளை உருவாக்கியிருக்கிறோம், எத்தகைய பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றுகிறோம் என்று தெரியாது.

இதனால்தான் நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இயற்கை வளமும் மனித வளமும் மூளை வளமும் இருந்தும் இலங்கை மேலும் மேலும் பிற நாடுகளிடமும் ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றிடம் பெருந்தொகைக் கடனை உச்சமான நிபந்தனைகளுடன் வாங்கிக் கொண்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் அரசாங்கத்தின் கொள்கைசார் குறைபாடே.

நாட்டின் வளர்ச்சிக்கு எப்போதும் உற்பத்திகள் அவசியம். உற்பத்திக்கான களநிலை இல்லையென்றால், அந்த நாடு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தே ஆகும்.

கூடவே வேலையில்லாதவர்களின் பிரச்சினைக்கும் முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டே தீரும். உற்பத்திகள் நடக்கும்போது பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும். வேலையில்லாதவர்களின் பிரச்சினையும் தீரும். இதற்கு உற்பத்திசார் பொருளாதாரக் கொள்கைகள் அவசியம்.

இலங்கையில் உற்பத்திக்காக வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை விடப் பாதுகாப்பு, மத விவகாரங்கள் உள்ளிட்ட பிற செலவுகளுக்காக ஒதுக்கப்படும் நிதி அதிகளவானது.

இது அடிப்படையில் குறைபாட்டையும் தவறையும் கொண்டது. மட்டுமல்ல, உற்பத்திக்குரிய அடிப்படை விதிகளையும் சட்டங்களையும் சாதகமான முறையிலும் உருவாக்குவதிலும் இலங்கை மிகப் பின்தங்கியே உள்ளது.

இதனால், மிகச் சாதாரணமான தொழில் முயற்சி ஒன்றை ஆரம்பிக்கின்ற ஒருவர் அல்லது ஒரு நிறுவனம், ஏராளமான அவசியமற்ற விதிகளைச் சுமக்கவும் கடக்கவும் வேண்டியுள்ளது. அப்படித்தான் அவற்றை ஏற்றுக்கொண்டாலும் அந்தத் தொழிற்துறையை அடுத்த நிலைக்கு வளர்த்துச் செல்வதற்கு பெரும் நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

கூடவே சந்தைப்படுத்தலிலும் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. தனியார்துறையினர் இதையிட்டுத் தொடர்ந்து தங்கள் குற்றச்சாட்டுகளையும் அதிருப்தியையும் வெளியிட்டு வருகின்றனர்.

இதற்குக் குறிப்பான உதாரணங்களைச் சொல்வதாக இருந்தால், போர் முடிந்த கையோடு, நாட்டில் பல்வேறு தொழில்துறைகளில் முதலீடுகளைச் செய்வதற்குப் பலரும் ஆர்வமாக இருந்தனர்.

ஆனால், அதற்கு அவர்களுக்குத் தடையாக அல்லது ஆர்வக்குறைப்பாக இருந்தது, அரசாங்கத்தின் விதிமுறைகளும் அரசியல்வாதிகளின் நடத்தைகளுமாகும்.

முதலீட்டாளர்களிடம் அரசியல்வாதிகள், அமைச்சு மட்டத்திலிருந்தோர் வெளிப்படையாகவே தரகுப்பணத்தைக் கேட்டது பகிரங்கமான விடயம். இதனால் தனியார்துறையின் வளர்ச்சியிலும் பெருங்குறைபாடுகளே உள்ளன. இதற்கெல்லாம் யார் பதில் சொல்வது? இதை யார் திருத்திக் கொள்வது?

கல்விக்கான வாய்ப்பை அளிப்பதே அரசாங்கத்தின் கடமை. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திப் படித்தவர்கள், தாங்கள் பெற்றுக் கொண்ட கல்வி அறிவின் மூலமாகப் புதிய தொழில்துறைகளை உருவாக்கவேண்டியது அவர்களுடைய கடமை. அதற்காகவே கல்விக்குரிய வாய்ப்பை அரசாங்கம் அவர்களுக்கு வழங்குகிறது.

அதற்கப்பால், அரசாங்கம் எதுவுமே செய்ய முடியாது. படித்தவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்றால், அவர்கள் சுயமாகச் சிந்திக்கவும் சுயமாக இயங்கவும் வேண்டும்.

அரசாங்கத்துக்குச் சுமையாக இருக்கக்கூடாது. இலவசக் கல்வியில் காட்டும் சலுகையைப்போல தொழில்வாய்ப்பிலும் அரசாங்கத்தின் சலுகையை எதிர்பார்க்க முடியாது என்று ஒரு பொறுப்பு நிலை அரச பிரதிநிதி கூறுகின்றார்.

இது, அவர் தரப்பு நியாயமாக இருக்கலாம். ஆனால், இந்த நாட்டிலே சுயமாக தொழில்முயற்சியை உருவாக்குவதற்கான ஏது நிலைகள் குறைவாக இருக்கின்றன, சவாலாக இருக்கின்றன என்பதை இந்தப் பத்தி உட்பட, பொதுவாகவே அனைவரும் தொடர்ந்து கூறிக் குறைப்பட்டு வருகின்றனர். இதற்கான பதில் என்ன?

இன்று மிகச் சாதாரணமாக ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவைப்படும் பொருட்களைக்கூட நாம் வெளியிலிருந்தே இறக்குமதி செய்து கொள்கிறோம்.

உடைகள், சமையல் பாத்திரங்கள். கடதாசி மற்றும் எழுது பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொம்மைகள், பானங்கள், உணவுப்பொருட்கள், பழவகைகள், அலங்கார, அழகுப்பொருட்கள் என அத்தனையையும் நாம் வெளிநாடுகளிலிருந்தே பெறுகிறோம்.

ஒரு சைக்கிளைக்கூட எம்மால் உற்பத்தி செய்ய முடியவில்லை. இப்படிப் பட்டியலிட்டால் அது நீண்டதொரு கோர்வையாக இருக்கும்.

இவற்றையெல்லாம் வெளியிலிருந்து பெறாமல் நாமே உற்பத்தி செய்தால் எமது நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சியடையும் இந்த உற்பத்திகளில் ஏராளமானவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் கிடைக்கும். இதற்குரிய வழிவகைகளைச் செய்வது யார்? அரசாங்கத்துக்குத்தானே இதில் பொறுப்புண்டு.

குண்டூசியைக்கூட நாம் வெளியிலிருந்தே இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். எங்கள் வீடுகளில் இருக்கும் பொருட்களில் எத்தனை பொருட்கள் எங்கள் நாட்டின் உற்பத்தி என்று பார்ப்பதற்கு, நீங்கள் அவற்றை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு, ஏனைய வெளிப்பொருட்களை ஒரு பக்கமாக ஒதுக்கிப் பாருங்கள். எத்தனை பொருட்கள் எங்களுடையவை என்று தெரியும்.

ஐந்தில் ஒன்று கூட எங்களுடையதாக இருக்காது. அந்தளவுக்கு நாம் பிறருக்கு எங்கள் பணத்தைக் கொடுக்கிறோம். பதிலாக தொழில் இல்லாமல் இருக்கிறோம்.

எங்களுக்குப் பொருட்களை உற்பத்தி செய்து விற்போர் வருமானத்தோடு, தொழில்வாய்ப்பையும் தங்கள் நாடுகளில் பெற்றுக்கொள்கிறார்கள். மட்டுமல்ல, நாங்கள் இந்த வெளிப்பொருட்களை வாங்கும்போது அவற்றுக்கு ஏற்றுமதி, இறக்குமதிச் செலவையும் வரிகளையும் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

இதில் இன்னொரு சுவாரசியமான விடயமும் உண்டு. வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் தரமானவை என்ற ஒரு மனப்பதிவு பொதுமக்களிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுகூட ஒரு திட்டமிட்ட தந்திரோபாயமே.

வெளிப்பொருட்களைப் பற்றிய உயர்வான மதிப்பை உண்டாக்கும் தரகுப் பொருளாதாரக் கொள்கையின் வெளிப்பாடு இது.
உண்மையில் இந்தப் பிரச்சினை பல கோணங்களில் விரிவாக ஆராயப்பட வேண்டியது.

ஏனென்றால், பொருளாதாரமும் தொழில்வாய்ப்பும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது. அதிலும் படித்த இளைய தலைமுறை இதில் முக்கியமாகச் சம்மந்தப்பட்டிருப்பது. அவர்களே வினைத்திறன் மிக்க புதிய உற்பத்திச் சக்திகள். இதை இந்தப் பத்தி முன்னரும் ஒரு சந்தர்ப்பத்தில் வலியுறுத்தியிருக்கிறது.

ஒரு நாட்டின் வளமாக இருக்கும் படித்த, இளைய தலைமுறையே, அந்த நாட்டின் முன்னேற்றத்தையும் பாதுகாப்பையும் முன்கொண்டு செல்லும். நாட்டின் உற்பத்தியிலும் வளர்ச்சியிலும் இவர்களே உச்சமான பயனைத் தரக்கூடியவர்கள்.

அப்படியானவர்கள் ஒரு வேலைக்காகப் போராட்டத்தையே நடத்தும் அளவுக்கு இருக்கிறார்கள் என்றால், அது அந்த நாட்டின் கொள்கை சார்ந்த, நடைமுறை சார்ந்த குறைபாடாகும். நிச்சயமாக இது தவறான ஒரு நிலைமையின் வெளிப்பாடே.
உலகெங்கும் இன்று தொழில்வாய்ப்புப் பிரச்சினைகள் உருவாகியிருக்கின்றன.

காரணம், மனித வளத்தையும் வலுவையும் பயன்படுத்திய உலகம் இப்பொழுது இயந்திரங்களின் வலுவைப் பயன்படுத்துகிறது. ஓர் இயந்திரம் ஆயிரம் பேருடைய வேலை வாய்ப்பைப் பறிக்கிறது என்று சொல்லப்படுவது உண்டு. அறிவியல் வளர்ச்சியும் முதலாளித்துவத்தின் போக்கும் இவ்வாறான விளைவுகளை உண்டாக்கும். இலங்கையில் நிகழ்ந்து கொண்டிருப்பதும் இதுவே.

15 ஆண்டுகளுக்கு முன் நெல் அறுவடையில் இலட்சக்கணக்கானவர்கள் ஈடுபட்டனர். இப்போது அதையெல்லாம் சில ஆயிரம் இயந்திரங்கள் மட்டும் செய்கின்றன. இதைப்போலவே நிர்மாணப்பணிகள், பிற தொழில்துறைகள் எனப் பலவற்றிலும் இயந்திரங்கள் ஏராளமானவர்களின் தொழில்வாய்ப்புகளைப் பறித்து விட்டன.

இந்தச் சவால், வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் உண்டு. ஆனால், அந்த நாடுகள் இந்த இயந்திரங்களை உற்பத்தியாக்கும் வேலைகளையும் செய்கின்றன.

ஆகவே, அவற்றை உற்பத்தியாக்குவதில் ஒரு குறிப்பிட்டளவான வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. மட்டுமல்ல, மிகப் பெரிய பொருளாதார வளத்தையும் வளர்ச்சியையும் பெற்ற அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகள் அப்பிள் பழத்தை உற்பத்தி செய்து இலங்கைச் சந்தைக்குக்கூட அனுப்புகின்றன.

இன்று இலங்கை மற்றும் ஆபிரிக்கச் சந்தைகளில் மிகச் சாதாரணமான பொருட்களை விற்பனை செய்கின்ற நாடுகளாக சீனா உள்ளிட்ட வல்லரசுகளே உள்ளன என்பதை இந்த இடத்தில் நாம் நினைவிற்கொள்ள வேண்டும்.

வல்லரசுகள் பழ உற்பத்தி தொடக்கம் மிக எளிய, சாதாரணமான அத்தனையையும் செய்கின்றன. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அனைத்து உற்பத்தித்துறைகளும் அவசியம் என்பதே இதன் அர்த்தமாகும். ஆனால், எமது நாட்டில்?

படித்தவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டியது அரசாங்கத்தினுடைய பொறுப்பா, இல்லையா என்பது தொடர்பாகத் தொடர்ந்து விவாதங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றன. இந்த விவாதங்கள் அர்த்தமற்றவை. எல்லோரும் வேலை செய்யக்கூடிய பொருளாதாரக் கொள்கையையும் உற்பத்தி முறைக்கான களச்சூழலையும் உருவாக்குவதே இதற்கு மாற்றாகும்.

ஆனால், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழி அரசாங்கத்திடம் இல்லை. அரசாங்கத்தைக் கேட்டால், அது கையை விரிக்கும் நிலையிலே உள்ளது.

படித்தவர்கள் அரசாங்கத்துடன் மோதிப் பயனில்லை என்று, வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். துறைசார்ந்தவர்கள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதோ, ஆலோசனை வழங்குதோ இல்லை. இதைக் கடந்து சிலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்தாலும் அவர்கள் படித்த பாடங்களுக்குப் பொருத்தமான வேலைகள் கிடைப்பதில்லை.

மருத்துவம், கணக்கியல் போன்ற மிகக்குறைந்த துறையினரைத் தவிர்ந்தவர்களின் நிலை மிகப் பரிதாபகரமானது. என்ன வேலையென்றாலும் பரவாயில்லை. ஏதோ ஒன்று கிடைத்தால் போதும். சம்பளம் வந்தால் சரி என்று, எண்ணிக்கொண்டு பலரும் வேலைகளில் இணைகிறார்கள். இப்படியான நிலையில் அவர்களால் எத்தகைய பயனைச் சமூகத்துக்கும் நாட்டுக்கும் உருவாக்க முடியும்.

ஆகவே, அடிப்படையிலேயே பெருங்குறைபாடுகளே உள்ளன. இது தனியே ஒரு பக்கமாக நோக்கப்படக்கூடிய சிறிய சாதாரணமான, எளிய பிரச்சினையல்ல. நாட்டின் உயிர்ப் பிரச்சினையாகும்.

“வடமாகாணத்தில் வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டியுள்ளது. ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில், வடக்கில் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கிறார்கள்.

அவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று, மனிதவலு, தொழில்துறை இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, வவுனியாவில் தொழில் வாய்ப்புத் தொடர்பான ஆராய்வுக்கூட்டமொன்றில் தெரிவித்திருந்தார்.

ஆனால், நிலைமையில் எந்த மாற்றமும் முன்னேற்றமும் ஏற்பட்டதாக இல்லை. வேலைகோருவோர் தனியே பட்டதாரிகள் மட்டுமல்ல, இந்த நாட்டிலுள்ள ஏராளமான தரப்பினர். இவர்கள் அனைவருக்கும் தன்னுடைய பணிமனையில் மட்டுமல்ல தன்னுடைய வீட்டிலும் வேலை கொடுக்க முடியாது.

அவர் உட்பட அரசாங்கம் செய்ய வேண்டியது நாட்டுக்குத் தேவையான பொருளாதாரக் கொள்கையை உருவாக்குவதே. இதைக்குறித்துச் சிந்திக்க வைப்பது புத்திஜீவிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், சிந்னையாளர்களின் பொறுப்பாகும்.