2011ம் ஆண்டில் வெளியான வாகை சூட வா படத்தின் வெற்றிக்கு அதன் பாடல்களும் இசையும் ஒரு முக்கிய காரணம், இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு இது முதல் படம். படத்தின் பாடல்களை வைரமுத்துவும், கார்த்திக் நேதாவும் எழுதியிருந்தார்கள். இதில் வைரமுத்து எழுதியதாக வெளியான சரசர சார காத்து வீசும் போது பாடல் FILM FARE மற்றும் விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளையும், உயரிய அங்கீகாரங்களையும் அவருக்கு பெற்று தந்தது. இந்த விருதுகள் வாங்கும் தருணங்களில் பல மேடைகளில் வைரமுத்து இப்படி சொல்லி வந்தார்.“இயக்குனர் சற்குணம் என்னிடத்தில் ஒரு காட்சியை கூறினார். படிக்காத ஒரு கிராமத்து தேநீர் கடைக்காரி, அங்கு பணிக்காக வரும் ஒரு ஆசிரியரிடம் மையல் கொள்கிறாள், அவள் அவரை சார் சார் என அழைப்பது தான் வழக்கம், இந்த வார்த்தையை கொண்டு அவள் காதலை வெளிப்படுத்துவது போல ஒரு பாடல் வரைய முடியுமா என கேட்டார். ஒரு வினாடி தான். சரசர சார காத்து வீசும் போதும் சார பாத்து பேசும் போதும் சார பாம்பு போல மனசு சத்தம் போடுதே என எழுதி கொடுத்து விட்டு இப்படி சொன்னேன். நீ கேட்டது ஒரு சார், நான் கொடுத்தது மூன்று சார், போதுமா என்றேன் “.
இவர் இப்படி சொல்வதை கேட்டு, விருதுகள் பெறுவதை பார்த்து, மெய் சிலிர்த்து சில்லறை சிதற நாம் கை தட்டியிருப்போம், இந்த படத்தின் இன்னொரு பாடலாசிரியர் கார்த்திக் நேதாவிற்கு இது முதல் படம், போறானே ..போறானே பாடலுக்கு மட்டும் இவருக்கான க்ரெடிட் தரப்பட்டது. இப்போது , 2018ம் ஆண்டின் மிகசிறந்த பாடலாசிருக்கான விருதை கார்த்திக் நேதா 96 படத்துக்காக பெற்றிருக்கிறார். அது தொடர்பான பேட்டியில் சரசர சார காத்து பாடலையும் தான் தான் எழுதியதாகவும், அதன் வரிகளை மட்டும் மேலும் கீழுமாக மாற்றி தனது பெயரில் வெளியிட செய்தார் வைரமுத்து என்று கூறியுள்ளார்.
“தம்பி நீங்க எழுதினது தான் , ஆனா சார் கொஞ்சம் சேஞ் பண்ணி அவர் பேர் போட சொல்லிட்டார், சாரி தம்பி என தயாரிப்பாளர் அழைத்து வருத்தம் தெரிவித்ததாக கூறும் கார்த்திக், இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு இந்த திருட்டு தெரியாதா என்ற கேள்விக்கு, தெரியும் , ஆனால் அது அவரது முதல் படம், அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை என கூறியுள்ளார். தன் பாடல் திருடப்பட்டதும் இல்லாமல், அது பல விருதுகளை வாங்கி குவிக்கும் போதும், மக்கள் இந்த பாடலை கொண்டாடும் போதும் இந்த கலைஞனின் நிலையை சற்று நினைத்து பாருங்கள், அவர் மனது எப்படி துடித்திருக்கும். அதுவும் முதல் படம், யாரிடம் சொல்ல முடியும். யார் நம்புவார், அந்த இறைவனை தவிர..
திருடப்பட்டாலும் சரி, திறமை வெல்லும், வென்றே ஆக வேண்டும் என்பது தான் காலத்தின் விதி. அதற்கு ஏழு வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. இப்போது 96ன் காதலே காதலே பாடலை இதயத்தின் அருகில் வைத்து கொண்டாடுகிறது தமிழகம். காதலை கரைத்து வார்த்தைகளாக வடிக்கும் இந்த மாயத்தை நிகழ்த்தியவன் யார் என தேடல் நிகழ்கிறது. மக்களின் அன்பு என்பது விருதுகளை கடந்த அங்கீகாரம், சற்று தாமதமாயினும், கார்த்திக் நேதாவிற்கு கிடைத்ததில் மகிழ்ச்சி.
வைரமுத்து அவர்களிடம் ஒரு கோரிக்கை, விக்கிபீடியா உட்பட ஏனைய தளங்களிலும் இந்த பாடலை எழுதியவர் கார்த்திக் என மாற்றப்பட்டுவிட்டது, இயக்குனர் ஒரு சார் கேட்டு நீங்கள் மூணு சார் எழுதிய கதை இப்ப சகல சனத்துக்கும் தெரியும் சார், இதன் பிறகும் இந்த பாடலுக்கான விருதுகளை நீங்கள் வைத்து கொண்டிருப்பது அழகல்ல சார். உங்கள் பாணியில் சொல்வதென்றால், எழுத்தால் இதயங்களை திருடலாம், ஆனால் எழுத்தாளனிடம் திருட கூடாது.நீங்கள் சின்மை யிடம் தப்பலாம், ஆனால் உண்மையிடம் தப்ப முடியாது. திருந்துங்கள், விருதுகளை திருப்பி தந்து விடுங்கள் வைரமுத்து.
(Hariharasuthan Thangavelu)