ஹலாயிப் முக்கோணம்: யாருடைய கதியால்? யாருடைய வேலி?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
வேலிச்சண்டைகளுக்கு நம்மூர் பெயர்போனது. வீட்டுக்கோடியின் எல்லைக்கு உரிமை கொண்டாடி, கதியாலைத் தள்ளிப் போட்டு, பூவரசம் தடிகளை எட்டி நட்டு, நடந்த சண்டைக்கு உரியோர் கடல்கடந்து நாட்கள் பல ஆச்சு. ஆனால், வேலிச்சண்டைகளுக்கு முடிவில்லை. இது உலக அரசியலுக்கும் பொருந்தும். எல்லைத் தகராறுகள் எப்போதுமே இக்கட்டானவை. அவை, நாடுகளிடையே நடக்கும் போது, அதன் தீவிரம் மிக அதிகம். உலகின் ஏராளமான போர்கள், தீர்க்கக்கூடிய எல்லைப் பிரச்சினைகளால் மூண்டவை. சில எல்லைப் பிரச்சினைகளுக்கு, நூற்றாண்டு காலப் பழைமையும் பெருமையும் உண்டு.

கடந்தவாரம், “எங்களுக்குச் சொந்தமான நிலப்பரப்பை, எகிப்து முற்றுகைக்குள்ளாக்கிக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது” என்று ஐக்கிய நாடுகளில், சூடான் செய்த முறைப்பாடானது, எகிப்து-சூடான் இடையேயான எல்லைப் பிரச்சினையை இன்னொரு தளத்துக்குத் தள்ளியுள்ளது.

மிக நீண்டகாலமாக, சர்ச்சைக்குரிய பகுதியாக இப்பகுதி விளங்கியபோதும், இப்பகுதியின் உரிமை தொடர்பான நெருக்கடி இதுவரை எழவில்லை. ஆபிரிக்காவில், இன்னொரு நீண்டகால நெருக்கடியை உருவாக்கும் வல்லமையை உடையதாகக் கருதப்படும் இந்நெருக்கடி தீவிரமடைந்திருப்பது, பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இவ்வாறு, ஹலாயிப் முக்கோணம் என அழைக்கப்பட்ட பகுதியே, நெருக்கடிக்குரிய பகுதியாகவுள்ளது. 20,580 சதுர கிலோமீற்றர்களை உடைய இப்பிரதேசம், செங்கடலை ஒட்டிய, ஆபிரிக்கக் கரையோரம் உள்ள பகுதியாகும்.

19ஆம் நூற்றாண்டில், இப்பகுதியின் மீது ஏகபோக உரிமை கொண்டிருந்த பிரித்தானிய கொலனியாதிக்க ஆட்சி, 1899ஆம் ஆண்டு ஆங்கிலோ-எகிப்திய உடன்படிக்கையின் கீழ், சூடானுக்கு உரிய பகுதியைப் பிரித்தது. அதன்படி, 22ஆவது சமாந்தரக் கோட்டின் அடிப்படையில் எகிப்துக்குச் சொந்தமான பகுதியாக இப்பகுதி விளங்கியது.

இருந்தபோதும், 1902ஆம் ஆண்டு, பிரித்தானியா வரைந்த நிர்வாக எல்லைக்கோட்டின் அடிப்படையில், இப்பகுதியின் முக்கிய பகுதிகள், சூடானின் பகுதிகளாயின. இந்நிலையில், 1956ஆம் ஆண்டு, சூடான் சுதந்திரமடைந்ததும் இப்பகுதியை சூடானின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதியாக அறிவித்தது.

இதை மறுத்த எகிப்து, இப்பகுதிக்கு உரிமை கோரியது. 1958ஆம் ஆண்டு, இப்பகுதியில் தேர்தல்களை நடாத்த சூடான் திட்டமிட்டிருந்த வேளை, எகிப்திய ஜனாதிபதி கமால் அப்தெல் நஸீர், இப்பகுதிக்குப் படைகளை அனுப்பினார். இதைத் தொடர்ந்து, இப்பகுதியை இருநாடுகளும் இணைந்து மேற்பார்வை செய்து வந்தன.

1992ஆம் ஆண்டு, இம்முக்கோணத்தை அண்டிய கடற்பரப்பில், எண்ணெய் அகழ்வுக்கான அனுமதியை, கனடா நாட்டு நிறுவனமொன்றுக்கு சூடான் வழங்கியதைத் தொடர்ந்து, அப்பகுதி மீதான தனது உரிமையை, எகிப்து நிறுவும் என எகிப்து தெரிவித்ததை அடுத்து, அப்பகுதி யாருக்குரியது என்று முடிவாகும் வரை, அப்பகுதியில் எண்ணெய் அகழ்வில் ஈடுபடுவதில்லை என கனடா நாட்டின் அந்நிறுவனம் முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து, வலுக்கட்டாயமாகத் தனது இராணுவத்தை எகிப்து அங்கு நிறுத்தியுள்ளது. அங்குள்ள மக்கள், தங்களைச் சூடானியர்களாகக் கருதுகிறார்கள். ஆனால் எகிப்து, ஆயுத வலிமையால் இப்பகுதியின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது.

இவ்விடத்தில், கடந்தாண்டு இறுதியில் சமூக வலைத்தளங்களில் பிரபல்யம் பெற்ற செய்தியொன்றை இங்கு நினைவூட்டல் தகும். சுயஷ் தீக்ஷித் என்ற இந்திய இளைஞனொருவர், ஹலாயிப் முக்கோணம் போன்றே சர்ச்சைக்குரிய இன்னொரு பகுதியான ‘பீர் தவீல்’ என்ற பகுதியில் கொடியை ஏற்றியவாறு இருக்கும், தனது புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட சுயஷ், தன்னை இப்பகுதியின் மன்னனாக அறிவித்ததோடு, தனது நாட்டின் பெயர் ‘கிங்டம் ஒஃப் தீக்ஷித்’ என்று சுயமாகப் பெயர் சூட்டினார்.

இந்நாட்டுக்குப் பிரத்யேக இணையத்தளம் ஒன்றை உருவாக்கி, தனியார் முதலீடு கோரியிருந்தார் சுயஷ். தனது நாட்டில் குடியுரிமை வேண்டுமெனில், விண்ணப்பம் செய்யவும் என்றும் கோரியிருந்தார்.

கொஞ்சகாலம் சமூக வலைத்தளங்களில் இவ்விடயம் சலசலப்பை உண்டாக்கினாலும் பின்னர், இது தொடர்பில் எதுவித கருத்துகளும் உலாவவில்லை. இருந்தபோதும், ஹலாயிப் முக்கோணம் பற்றிப் பேசும் போது, பீர் தவீல் பற்றியும் பேச வேண்டும்.

பீர் தவீல், 2,060 சதுர கிலோமீற்றர் பரப்பளவில், எகிப்துக்கும் சூடானுக்கும் இடையில் பரந்து விரிந்திருக்கும் நிலப்பரப்பாகும். இப்பகுதி எந்தவொரு தனி நபருக்கும் சொந்தமில்லாதது. எந்தவொரு நாடும் இந்தப் பகுதிக்கு உரிமை கோருவதில்லை.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில், பீர் தவீலுக்கு உரிமை கோரும் முதல் நபர் சுயஷ் இல்லை. இதற்கு முன்னரும் பல நபர்களும் அமைப்புகளும் இந்த இடத்துக்கு உரிமை கோரியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், சர்வதேச அளவில் இந்த உரிமைகோரல்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. எகிப்தும் சூடானும் கூட, இந்தக் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கவில்லை. உரிமைகோரல்கள் பற்றிக் கருத்துத் தெரிவிப்பது, ஹலாயிப் மீதான தங்கள் உரிமைகோரலைப் பலவீனமாக்கும் என்று, இரு நாடுகளும் கருதுகின்றன.

பீர் தவீல் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொண்ட அலிஸ்டர் போனெட், தனது ‘Unruly Places: Lost Spaces, Secret Cities, and Other Inscrutable Geographies’ என்ற புத்தகத்தில் பீர் தவீலைச் சூழ்ந்துள்ள அரசியலை, அழகாக விளக்குகிறார்.

பூமியில் மனிதர்கள் வாழ்வதற்குத் தகுந்த இடமாக இருந்தாலும், எந்த நாடும் உரிமை கோராத ஒரே இடம் இதுதான் என்று அவர், தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அதேவேளை, இங்கு மனிதர்கள் வசிப்பதில்லை என்ற கூற்றை, தான் முழுமையாக மறுப்பதாகக் கூறும் போனெட், பல தசாப்தங்களுக்கு முன்னர் அங்கு, விவசாயம் நடைபெற்றதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என எழுதுகிறார்.

அதேவேளை, ஏன் இதுவரை பீர் தவீல் யாராலும் உரிமை கோரப்படவில்லை என்பதற்கான காரணங்களை, அவர் விரிவாக ஆராய்கிறார்.

அவரது கருத்துப்படி, 1899இல் இரு நாடுகளுக்கும் இடையே வகுக்கப்பட்ட எல்லைக்கோட்டின் படி, பீர் தவீல் மற்றும் ஹலாயிப் முக்கோணம் என்ற இரு நிலப்பரப்புகளும் தனித்தனிப் பகுதிகளாகும்.

1899ஆம் ஆண்டின் எல்லை உடன்பாட்டை, எகிப்து ஏற்கத் தயாரானதுடன், சூடானுக்கு பீர் தவீலை ஒப்படைக்க ஒப்புக்கொண்டது. பொருளாதார ரீதியாக நன்மையளிக்கும் ஹலாயிப்பை, தன்னுடன் தக்கவைத்துக் கொள்ள எகிப்து விரும்பியது.

1902இல் நிர்ணயிக்கப்பட்ட புதிய எல்லையோ, முன்பு உருவாக்கப்பட்ட எல்லைக்கு நேர்மாறானதாக இருந்தது. புதிய எல்லை பகுப்பின்படி, பீர் தவீல் எகிப்துக்கும், ஹலாயிப் முக்கோணம் சூடானுக்கும் வழங்கப்பட்டது. 1899இல் உருவான எல்லை நிர்ணயத்தின்படி, ஹலாயிப் முக்கோணத்துக்கு உரிமை கோரும் எகிப்து, அந்த எல்லை ஒப்பந்தத்தின்படி பீர் தவீலை உரிமை கோருவதில்லை.

பீர் தவீலுக்கு சூடான் உரிமை கோரினால், அது ஹலாயிப் மீதான எகிப்தின் உரிமை மற்றும் 1899ஆம் ஆண்டில் எல்லை நிர்ணய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாகப் பொருள் கொள்ளப்படும். பீர் தவீல் பற்றி எகிப்து பேசினால், அந்நாட்டுக்கு எதிர்மறையான விளைவுகளே ஏற்படும். எனவே, பீர் தவீல் யாராலும் உரிமை கோரப்படாத பகுதியாகத் தனித்து நிற்கிறது.

இப்போது, மீண்டும் சூடுபிடித்துள்ள எகிப்து-சூடான் நெருக்கடி பல்பரிமாணமுடையது. துருக்கிய ஜனாதிபதி ஏர்டோவானின் அண்மைய சூடான் பயணத்தின் போது, செங்கடலில் அமைந்துள்ள சுவாகின் என்கிற வடகிழக்கு சூடான் தீவில் இராணுவத் தளமொன்றை அமைப்பதற்கான உடன்படிக்கை, இருநாடுகளுக்கும் இடையே எட்டப்பட்டது.

அதேகாலப்பகுதியில், கட்டாரின் இராணுவத்தளபதியும் சூடானில் இருந்தார். இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

சுவாகின் தீவானது, ஓட்டோமன் சாம்ராச்சியத்தின் பிரதானமான துறைமுகமாக இருந்தது. இத்துறைமுகத்தின் கட்டுப்பாட்டுக்காக, ஓட்டோமன் சாம்ராச்சியத்துக்கும் அக்காலத்தின் பிரதான சக்தியாக இருந்த போர்த்துக்கல்லுக்கும் இடையில் தொடர்ச்சியான போர்கள் இடம்பெற்றன.

சுவாகின் தீவைச் சுற்றிய கடற்பரப்பானது, இராணுவ ரீதியாகவும் பொருளாதார வர்த்தக நோக்கங்களுக்காகவும் முக்கியமான பகுதியாகத் திகழ்கின்றது. இப்பகுதியின் மீதான துருக்கியின் கவனமானது, எகிப்தின் மூலோபாய மற்றும் பாதுகாப்பு நலன்களுக்குச் சவாலானது.

துருக்கிய ஜனாதிபதியின் இந்நடவடிக்கையானது, துருக்கிக்கு வெளியே, கட்டார் மற்றும் சோமாலியாவுக்கு அடுத்தபடியாக, சூடானில் இராணுவத் தளமொன்றை நிறுவும் முயற்சி என நோக்கப்படுகிறது.

ஆனால், சிதைவடைந்துள்ள சுவாகின் தீவை மீளக் கட்டியெழுப்புவதன் மூலம், அதையொரு சுற்றுலாத்தளமாகவும் செங்கடலைக் கடந்து, மக்காவுக்குப் பயணம் செய்யும் யாத்திரிகர்களுக்கான இடைத்தங்கல் நிலையமாகவும் உருவாக்கவுள்ளதாக சூடான் தெரிவிக்கிறது.

அதேவேளை, இப்போதைய எகிப்திய ஆட்சியாளர்கள், சூடான் மீதான துருக்கியினதும் கத்தாரினதும் செல்வாக்கை, நேரடியான சவாலாக நோக்குகின்றார்கள். 2013ஆம் ஆண்டு, எகிப்தில் நடாத்தப்பட்ட இராணுவச் சதி மூலம், இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதோடு, ஜனாதிபதி மொஹமட் மூர்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

இவ்வாட்சிக் கவிழ்ப்பை துருக்கியும் கட்டாரும் வன்மையாகக் கண்டித்தன. இதைத் தொடர்ந்து, எகிப்திய ஆட்சியாளர்களுக்கும் இவ்விரு நாடுகளுக்கும் நல்ல உறவுகள் இல்லை. சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா முடியாட்சிகள் கட்டாருடன் உறவை முறித்துக் கொள்வதற்குச் சொல்லப்பட்ட காரணங்களில் ஒன்று, இஸ்லாமிய சகோதரக் கட்சிக்கான கட்டாரின் ஆதரவும் நிதியுதவியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

துருக்கி மற்றும் கட்டாரின், சுவாகின் தீவு மீதான அக்கறையை வன்மையாகக் கண்டித்துள்ள சவூதி அரேபியா, அமைதிப்பூங்காவாகத் திகழும் இப்பகுதியை, துருக்கி-ஈரான்-கட்டார் முக்கூட்டானது, குழப்பத்தை விளைவிக்க முயல்கிறது எனக் குற்றஞ்சாட்டியதோடு, இந்நடவடிக்கையானது முற்போக்கான சவூதியின் தலைமையிலான சுன்னிக் கூட்டுக்கு, அச்சுறுத்தல் விடுக்கிறது என்றும் தெரிவித்தது.

சூடானின் இந்நடவடிக்கைக்கு ஒரு முன்கதையுண்டு. 20ஆம் ஆண்டு, எகிப்து தனக்குச் சொந்தமான டிரான் மற்றும் சனாபிர் ஆகிய தீவுகளை உடன்படிக்கையின் ஊடாக, சவூதி அரேபியாவுக்குக் கையளித்தது. மூலோபாய ரீதியில், செங்கடலில் அமைந்துள்ள முக்கிய தீவுகளாக இவை விளங்குகின்றன. எகிப்துக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே எட்டப்பட்ட உடன்படிக்கையானது, ஹலாயிப் முக்கோணம், எகிப்தின் பகுதி என்பதை அங்கிகரிக்கிறது. இதுவே புதிதாக மீண்டுள்ள நெருக்கடியின் தொடக்கம்.

இதைத் தொடர்ந்து, ஹலாயிப் முக்கோணம் மீதான தமது உரிமையை, சூடான் நிலைநாட்ட முனைகையில் அதற்கெதிரான அச்சுறுத்தலைப் பல வழிகளில் எகிப்து முன்னெடுத்தது.
அதில் பிரதானமாக, சூடானின் அண்டை நாடான எரிட்டரியாவில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராணுவத் தளமானது, சூடானின் எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது.

அத்தளத்துக்குத் தனது இராணுவத்தை எகிப்து அனுப்பியது. எகிப்தின் இந்நடவடிக்கையைக் கண்டித்த சூடான், உடனடியாக எகிப்தியப் படைகள் வெளியேற வேண்டும் என எரிட்ரியாவிடம் கோரியது.
எரிட்ரியா, ஐக்கிய அரபு இராச்சிய இராணுவத் தளத்தில் எகிப்தியப் படைகள் இல்லை எனச் சாதித்தது. இதையடுத்து, எரிட்ரியாவுடனான எல்லையை மூடிய சூடான், இருநாடுகளுக்கும் இடையிலான எல்லையில் தனது படைகளை நிறுத்தியது.

எகிப்துக்கும் சூடானுக்கும் இடையில் யுத்தம் மூள்வதற்கான தொடக்கப்புள்ளியாக ஹலாயிப் முக்கோணம் உள்ளது. ஆனால், கடந்த ஒரு தசாப்த காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள், இருநாடுகளுக்கும் இடையிலான தீராத பகையாக உருவெடுத்து உள்ளன. இதில் குறிப்பாக மூன்று விடயங்கள் முக்கியமானவை.

முதலாவது, எகிப்தின் இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சிக்கான சூடானின் வெளிப்படையான ஆதரவு, எகிப்துக்கு எரிச்சலூட்டுகிறது. அதேவேளை, மொஹமட் மூர்சியைத் தூக்கியெறிந்து ஆட்சிக்குவந்த அப்டெல் ஃபட்டா அல்-சிசியின் ஆட்சியைக் கவிழ்க்க சூடான் முனைகிறது என்று எகிப்து குற்றஞ்சாட்டுகிறது. இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சியின் கிளைபோல் தோற்றம் பெற்ற பிரிவின் உதவியுடனேயே சூடானின் ஜனாதிபதி ஓமர் அல்பஷீர் 1989ஆம் ஆண்டு பதவிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது, கட்டார் நெருக்கடியில், ஏனைய அரபு முடியாட்சிகள் கட்டாருடனான உறவைத் துண்டிக்க, சூடானை வற்புறுத்திய போதும், அதைச் செய்ய சூடானின் ஜனாதிபதி ஓமர் அல் பஷீர் மறுத்துவிட்டார். மேற்குலகினதும் அமெரிக்காவினதும் நெருக்குவாரங்களுக்கு உட்பட்டுள்ள அல் பஷீர், தனது அயலுறவுக் கொள்கையை ரஷ்யா – சீனா ஆகியவற்றை மையப்படுத்தியதாக மீளமைக்கிறார்.

அவ்வகையில் கட்டாருடன் நெருக்கத்தைப் பேணுவது, பொருளாதார ரீதியில் பலமானது எனச் சூடான் நினைக்கிறது. இதில், கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில், கட்டார் நெருக்கடி, மத்திய கிழக்கைத் தாண்டி, ‘ஆபிரிக்காவின் கொம்பு’ என அழைக்கப்படுகின்ற நாடுகளிலும், நைல்நதிப் பள்ளத்தாக்கு நாடுகளிலும் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கியுள்ளது.

மூன்றாவது, எதியோப்பியாவில் கட்டப்படுகின்ற ‘பெரும் எதியோப்பிய அணைத் திட்டமானது’ இரண்டு நாடுகளுக்கு இடையிலான நெருக்கடியை அதிகரித்துள்ளது. இவ்வணை கட்டி முடிக்கப்படும் நிலையில், உலகின் ஏழாவது மிகப்பெரிய நீர்மின் நிலையமாக இருக்கும். இவ்வணை உருவாக்கப்படுவது, எகிப்தில் நீர்ப்பற்றாக்குறையை உருவாக்கும் என எகிப்து அஞ்சுகிறது. இதனால், இத்திட்டத்தைத் தடுத்து நிறுத்துவதில் குறியாயுள்ளது. அதேவேளை, எதியோப்பியாவின் அண்டை நாடான சூடான், இத்திட்டத்தால் பலனடையும். இதனால், இத்திட்டத்தை சூடான் ஆதரிக்கிறது. இவ்வணைத்திட்டமானது, அதன் பிராந்திய மூலோபாய மற்றும் தந்திரோபாய நோக்கில் தனியே ஆராயப்பட வேண்டியது.

இன்று, இருநாடுகளுக்கு இடையேயும் முற்றியுள்ள நெருக்கடியின் அடையாளமாக, ஹலாயிப் முக்கோணம் மாறியுள்ளது. இதற்கு யாரும் வேலியிடலாம்; வேலியைத் தள்ளிப் போடலாம்; கதியாலை நடலாம்; அதை அரக்கலாம்; கதியாலைத் தூக்கியெறியலாம்; அனைத்தும் அடையாள நடவடிக்கைகளே. இதை வெறும் அடையாள நடவடிக்கை என்று புறந்தள்ளவியலாது.

ஏனெனில் கதியாலுக்கான சண்டையிட்டு கிழிந்த சட்டைகள், உடைந்த மண்டைகள் பற்றிய பலகதைகள் எம்மண்ணில் உண்டு. வேலிச்சண்டை வில்லங்கமானது.