20ஆவது திருத்தமும் கொள்கையற்ற அரசியலும்

ஜனாதிபதி தமது நிறைவேற்று அதிகாரங்களை எதேச்சாதிகார முறையில் பாவிக்காது தடுப்பதற்காக, அரசமைப்புச் சபையும் சுயாதீன ஆணைக்குழுக்களும், அந்தத் திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தன. சந்திரிகா தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அந்தத் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தது.

ஜனாதிபதி மீதான அந்தக் கட்டுப்பாடுகளை நீக்கி, ஜனாதிபதி ஒரு சர்வாதிகாரியைப் போல் செயற்படும் வண்ணம், 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில், 18ஆவது அரசமைப்புத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அப்போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர், அதனை நிறைவேற்றவும் வாக்களித்தனர்.

பின்னர், ஜனாதிபதியின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், மீண்டும் அரசமைப்புச் சபையும் சுயாதீன் ஆணைக்குழுக்களும், 2015ஆம் ஆண்டு 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலசுக அதற்கும் ஆதரவளித்தது. அக்கட்சியே அதற்கு ஆதரவாக, ஆகக் கூடுதலான வாக்குகளையும் வழங்கியிருந்தது.

அதே ஸ்ரீலசுகவினர், இப்போது மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் இயங்கி வருகின்றனர். அந்தப் பொதுஜன பெரமுன அரசாங்கம், மீண்டும் ஜனாதிபதிக்கு சர்வாதிகார அதிகாரங்களை வழங்கும் வகையில், 20ஆவது அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவந்திருக்கிறது. அதற்கும் அவர்கள் வாக்களிக்கத்தான் போகிறார்கள்.

சுருக்கமாகக் கூறின், இந்த அரசியல்வாதிகள், அரசமைப்பின் 17ஆவது திருத்தத்தை ஆதரித்தார்கள். அதற்கு எதிரான 18ஆவது திருத்தத்தையும் ஆதரித்தார்கள். அதற்கு எதிரான, 19ஆவது திருத்தத்தையும் ஆதரித்தார்கள். இப்போது, அதற்கும் எதிரான 20ஆவது திருத்தத்தையும் ஆதரிக்கப்போகிறார்கள். இவர்களுக்கு வெட்கம் என்று ஏதாவது இருக்கிறதாகத் தெரிகிறதா, இவர்கள் அரசியல்வாதிகளா, இவர்கள் இந்நாட்டு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த அருகதையுடையவர்களா?

இவர்கள், எதுவும் விளங்காத, கல்வியறிவு இல்லாதவர்கள் அல்லர். இவர்களுள், பேராசிரியர்கள், சட்டத்தரணிகள் போன்றவர்களும் இருக்கிறார்கள். தமது பிழைப்புக்காக அவர்கள் எதையும் செய்யத் தாயார் என்பதையே இது காட்டுகிறது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் பொதுத் தேர்தலின் போதும், அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை இரத்துச் செய்வதாகக் கூறி வந்தனர். ஆனால், அதனை இரத்துச் செய்துவிட்டு அதற்குப் பதிலாக தாம் எவ்வாறான பிரமாணங்களை அரசமைப்பில புதிதாகச் சேர்க்கப் போகிறோம் என்பதை மக்களுக்குக் கூறவில்லை.

இப்போது அவர்களுக்கு, அரசமைப்பை மாற்றி அமைக்க, மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள். எனவே, மக்கள் விரும்பாவிட்டாலும் தமது விருப்பப்படி, அரசமைப்பை மாற்ற முடியும். அதுதான் நடைபெற்று வருகிறது.

1978ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசமைப்பின் மூலம், நிறைவேற்று ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், அதற்கு எதிராகப் பலர் போராடினார்கள். ஸ்ரீலசுக, ஆரம்பத்திலிருந்தே அந்த ஆட்சி முறைமையை எதிர்த்தது. ஸ்ரீலசுக தலைவி என்ற முறையில், சந்திரிகா குமாரதுங்க, 1994ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போது, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதே அவரது பிரதான வாக்குறுதியாகியது.

ஆனால் அவருக்கு, அதற்கான மூன்றில் இரண்டுப் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. பதவிக்கு வந்ததன் பின்னர், அவர் அதற்காக முயற்சி எடுக்கவும் இல்லை.

அதனை அடுத்து, 1999ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும், சந்திரிகா போட்டியிட்டார். அப்போதும், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதே அவரது பிரதான வாக்குறுதியாகியது. ஆனால், அதற்காக அவருக்கு அந்த முறையும் போதிய நாடாளுமன்ற அதிகாரம் கிடைக்கவில்லை. அவர் அதற்காக, எதிர்க் கட்சிகளை நாடவும் இல்லை.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீலசுக சார்பில் மஹிந்த ராஜபக்‌ஷவே போட்டியிட்டார். அவரும், அதே வாக்குறுதியை முன்வைத்தே போட்டியிட்டார். அவருக்கும் மூன்றில் இரண்டுப் பெரும்பான்மை பலம் இருக்கவில்லை. 2010ஆம் ஆண்டும் அதே வாக்குறுதியை முன்வைத்தே, மஹிந்த மீண்டும் போட்டியிட்டார்.
அதே ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஸ்ரீலசுக உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு, 144 ஆசனங்கள் கிடைத்தன. வேறு பல கட்சிகளும் மஹிந்தவை ஆதரித்ததால், அம்முறை மஹிந்தவிடம் மூன்றில் இரண்டுப் பெரும்பான்மை இருந்தது.

ஆனால், அவர் அதைப் பாவித்து, நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதற்குப் பதிலாக, ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் அதிகரிக்கும் வகையில் அரசமைப்பின் 18ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்தார். இரண்டு முறைக்கு மேல் ஜனாதிபதிப் பதவியில் இருக்கும் வகையில், 18ஆவது அரசமைப்புத் திருத்தத்தில் அவர் சட்டப் பிரமாணங்களைச் சேர்த்தார்.

தமக்கு அதிகாரம் கிடைப்பதால், மஹிந்த அவ்வாறானதொரு நடவடிக்கையை மேற்கொள்வதை விளங்கிக்கொள்ளலாம். ஆனால், 1978ஆம் ஆண்டு முதல் அதுவரை, 32 ஆண்டுகளாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை எதிர்த்துப் போராடிய ஸ்ரீலசுகவினரும் ஏனைய தலைவர்களும், அதனோடு தொடர்ந்துச் செயற்பட்டு வந்த இடதுசாரி கட்சிகளினது தலைவர்களும் ஏன் அதனை ஆதரிக்க வேண்டும்?
ஆனால், அவர்கள் அதனை ஆதரித்தார்கள். அதன் மூலம், 18ஆவது அரசமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறாத, சட்டத்தால் கட்டுப்படாத ஒரு பதவியாகவே, அவர்கள் அதுவரை நிறைவேற்று ஜனாதிபதி முறைமையைப் பார்த்தார்கள். உண்மையும் அதுவே. அதனால்தான், அவர்கள் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை 32 ஆண்டுகளாக எதிர்த்தார்கள்.

அவ்வாறாயினும், திடீரென அக்கட்சியினருக்கும் அக்கட்சியின் துணைக் கட்சிக்காரர்களுக்கும், அம்முறைமை நல்லதோர் ஆட்சி முறைமையாக எவ்வாறு விளங்கிவிட்டது? இது கொள்கையே இல்லாத அரசியல்.

தற்போது அரசாங்கம் தயாரித்துள்ள 20ஆவது அரசமைப்புத் திருத்தமானது, 2010ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட 18ஆவது அரசமைப்புத் திருத்தமே தவிர வேறொன்றுமல்ல. அந்த இரண்டுக்கும் இடையே, அடிப்படை வேறுபாடுகள் இல்லை. சில சிறு வேறுபாடுகள்தான் இருக்கின்றன.

18இல் தகவல் அறியும் உரிமைக்கான சட்டப் பிரமாணங்கள் இருக்கவில்லை. 19 மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட அவ்வுரிமை, 20லும் தொடர்ந்து இருக்கிறது. ஜனாதிபதியினதும் நாடாளுமன்றத்தினதும் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் என, 18இல் குறிப்பிடப்பட்டு இருந்தது. 19 மூலம் அது ஐந்து ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. அதுவும் 20இல் தொடர்ந்து இருக்கிறது.

ஜனாதிபதியே முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், நாடாளுமன்றச் செயலாளர் நாயகம், நாடாளுமன்றக் குறைகேள் அதிகாரி (ஒம்புட்ஸ்மன்), உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் போன்ற உயர் பதவிகளுக்கான ஆட்களையும் பொலிஸ், நீதி, அரச சேவைகள் போன்ற ஆணைக்குழுக்களுக்கான ஆணையாளர்களையும் தவிசாளர்களையும் நியமிப்பார் என, 18இல் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதுவும் 20இல் தொடர்கிறது.

அரசமைப்பின் 17, 19ஆவது திருத்தங்களின்படி, ஜனாதிபதி அப்பதவிகளுக்கான ஆட்களை அரசமைப்புச் சபைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அச்சபையின் அங்கிகாரம் பெற்றால் மட்டுமே, அவர் அவர்களை அப்பதவிகளுக்கு நியமிக்க முடியும்.

18இல் போலவே, 20இலும் அந்த அவசியம் இல்லை. ஜனாதிபதி, நேரடியாகவே அவர்களை நியமிக்க முடியும். அரசமைப்புச் சபைக்குப் பதிலாக, 18 மற்றும் 20 ஆகிய திருத்தங்களில் நாடாளுமன்றச் சபை என்ற ஒரு சபை இருக்கிறது. அது, அந்த நியமனங்கள் விடயத்தில் ஜனாதிபதிக்கு தமது அபிப்பிராயத்தைத்தான் தெரிவிக்க முடியும். அந்த அபிப்பிராயத்தை, ஜனாதிபதி ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனவே, சகல உயர் பதவிகளுக்கும் நியமிக்கப்படுவோர், ஜனாதிபதி நில் என்றால் நிற்கவும் இரு என்றால் இருக்கவும் வேண்டிய நிலையே மீண்டும் உருவாகப்போகிறது.

20இன் மூலம், ஆணைக்குழுக்கள் ஒழிக்கப்படவில்லை என்று, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறியிருக்கிறார். உண்மைத்தான், ஆணைக்குழுக்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றை ஜனாதிபதியே நியமிப்பார். அவரே, ஆணையாளர்களை நீக்கவும் முடியும். எனவே, அவை சுயாதீன ஆணைக்குழுக்கள் அல்ல. அந்த ஆணைக்குழுக்களின் அதிகாரங்களும் குறைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான பிரமாணங்கள், 19ஆவது திருத்தத்தில் இருந்தன. அதன்படியே, 2018ஆம் ஆண்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தைக் கலைத்த போது அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், 20இல் அந்தப் பிரமாணம் இல்லை. எனவே, இறுதியில் 20ஆவது திருத்தத்தின் மூலமும், 18ஆவது திருத்தத்தைப் போலவே, ஏறத்தாழ ஒரு சர்வாதிகாரி உருவாகப் போகிறார்.