2009ம் ஆண்டு வரை யுத்தம் நீடித்தமை நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் அழிவை ஏற்படுத்தியது

2004 இல் ஏப்ரல் மாதம் முடிவுக்கு வந்திருக்க வேண்டிய யுத்தம் விடுதலைப்புலிகளின் பூரண செயலிழப்புடன் 2009 ல் மே மாதம் வரை ஐந்து ஆண்டுகள் எவ்வாறு நீடித்தது? யுத்தத்தின் விளைவால் பல்வேறு இனங்களைச் சார்ந்த அப்பாவி பொதுமக்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கொல்லப்பட்டார்கள் என்பது இரகசியமல்ல. யுத்தம் முடிந்தவுடன் ஒர் ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தால், தேசத்துரோகம் உட்பட பல்வேறு குற்றங்களுக்கு ஆளாகவேண்டியவர்கள் தாம் பெரும் வீரர்கள் என எடுத்துக்காட்ட மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.

யுத்தத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 50-60 ஆயிரம் வரையில் இருக்கலாம். ஆனால் சிலர் அந்த எண்ணிக்கை அதிகமானதென்றும் சிலர் குறைவானதென்றும் கூறுகின்றனர். சுய இலாபத்தில் அக்கறை கொண்ட சிலர் மேற்கொண்ட புத்திசாதுரியமற்ற தீர்மானத்தினால் எம்மை நாடி வந்த நல்லதொரு சந்தர்ப்பத்தை நாம் இழந்துவிட்டோம். 2004ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்திருந்தால் நிலைமை முற்றுமுழுதாக மாறுபட்டிருந்திருக்கும். துரதிஷ்டவசமாக 2004ம் ஆண்டு இனப்பிரச்சினை தீர்வுக்கு கிடைத்த சந்தர்ப்பம் கைநழுவியது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைகூட வெகுவாக குறைந்திருக்கும்.

இன்றைய சூழ்நிலையில் தராக்கி என அழைக்கப்படும், ஊடகத்துறையில் மிகவும் பிரபல்யமான தர்மரட்ணம் சிவராம் என்பவரை ஒவ்வொருவரும் நன்கு அறிந்திருப்பது நல்லது. அவர் விடுதலைப்புலிகளின் சார்பானவரும், துணிச்சல் மிக்க ஊடகவியலாளரும் ஆவார். ஆனால் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவர வேண்டுமென மிகவும் ஆர்வமுடன் செயற்பட்டவர். ஆகவே தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லீம்கள் என்ற பேதமின்றி அனைவரும் இலங்கையர்கள் என்ற அடிப்படையில், “தமிழ் கட்சிகள் மூலை முடுக்குகளில் இருந்து ஒளித்து விளையாட முடியாது” என அவரால் எழுதப்பட்டு, ஆங்கில தினசரியில் 11-02-2004 அன்று வெளியான கட்டுரையின் மீது உங்களுடைய கவனத்தை செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நீண்ட நாட்களாக இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பல விடயங்கள் இவருடைய அந்த கட்டுரை மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தராக்கியின் இக்கட்டுரை வெளிவந்த நேரத்தில் அதனை வாசித்தவர்கள் அக்கட்டுரையின் முக்கியத்துவத்தை பற்றி தீவிரமாக பரிசீலிக்க தவறிவிட்டனர். விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கைவிட தயாராக இருந்தனர் என்பதையும் சகல தமிழ் அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைக்க முயற்சிக்கின்றார்கள் என்பதையும் உணர்ந்திருந்தால் யுத்தத்தால் ஏற்பட்ட பெரும் அனர்த்தத்திலிருந்து நாட்டை காப்பாற்றியிருக்கலாம்.

இக்கட்டுரையின் சாராம்சம் தராக்கியினுடைய “மரணசாசனத்திற்கும் உயிலுக்கும்” ஒத்ததாகும். அக்கட்டுரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பை பற்றி பின்வருமாறு கூறுகின்றது. “தமிழ் தேசிய கூட்டமைப்பு உண்மையில் எப்படியோ அதிலும் பார்க்க கூடுதலாக மிகைப்படுத்தியே காட்டப்படுகிறது. பலவிதமான பிற அழுத்தங்கள் கொடுக்கப்படாமல் இருந்திருந்தால் அது ஆரம்பத்திலேயே உள்ளுக்குள்ளே வலுவிழந்து அற்றுப்போயிருக்கும்.

விடுதலைப் புலிகளாலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு வழிநடாத்தப்படுகின்றது என்ற பெரும் மாயைக்கு முரணாக சில முன்னணி தமிழ் அரசியல்வாதிகள் மனச்சாட்சிக்கு விரோதமாக, பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகின்றார்கள். அவர்களே மனச்சாட்சிக்கு விரோதமாக தங்களின் இலாபம் கருதி புத்திசாலித்தனமான முறையில் புலிகளின் பெயரை பயன்படுத்துகின்றனர். என்னைக்கேட்டால் அவர்களில் சிலர் தமிழ் மக்களுடைய போராட்டங்கள் அபிலாசைகள் ஆகியவற்றில் எவ்விதமான அக்கறையும் இல்லாதவர்கள் என்றே கூறுவேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியாலேயே ஆரம்பிக்கப்பட்டது என்பதை தராக்கி மிகத் தெளிவாக கூறியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் என்ற கோதாவில் கௌரவ.இரா.சம்பந்தன் அவர்களே கையெழுத்திட்டார் என்பதையும், ஏனைய மூன்று கட்சிகளின் செயலாளர்கள் திருவாளர்கள். என். குமரகுருபரன், என்.பிரசன்னா, சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் முறையே அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈ.பிஆர்.எல்.எப் சார்பில் கையெழுத்திட்டிருந்தனர். தராக்கியின் இக்கட்டுரைக்கு மறுப்பு தெரிவிக்க எவருக்கும் தைரியம் இருக்காது.

தராக்கி தனது கட்டுரையில் “வடக்கு கிழக்கைச் சேர்ந்த ஆர்வமுள்ள சில குழுக்கள் குறிப்பாக மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழர் மறுமலர்ச்சி கழகத்துடன் புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்புக்கள், வர்த்தகர்கள், மட்டக்களப்பு, யாழ்ப்பாண பல்கலைகழக மாணவ தலைவர்கள் ஆகியோர் பல மாதங்களாக மிகவும் சிரமப்பட்டு, தமிழ் அரசியல் கட்சிகள் ஒரே குடையின் கீழ், ஒரே கொள்கை, பொது சின்னமான ‘உதயசூரியன்’ சின்னத்தின் கீழ் 2004ம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட வேண்டுமென விரும்பியிருந்தனர் எனக் கூறியுள்ளார்.

அவர் மேலும், வடக்கில் இவ்வாறு ஆதரவு தேடும் குழுக்கள், தமிழ் கட்சிகள், அமைப்புக்கள் ஆகியன தங்களுக்கிடையே காணப்படும் ஆழமான வேறுபாடுகளை மறந்து, நீண்டகாலம் இராணுவத்துடன் தொடர்புகளை கொண்டிருந்ததையும், உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களையும் பொருட்படுத்தாது ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார். அவரின் கூற்றுப்படி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் பொதுச்சின்னம் விடயத்தில் தயக்கம் காட்டிய போதும் கடைசி நேரத்தில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரிவித்தது. அத்தோடு தராக்கியின் கூற்றுப்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு பொதுச்சின்னம், பொதுக்கொள்கையின் அடிப்படையிலும் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்பது தமிழ் தேசியவாத குழுக்களினதும் பெரும்பாலானவர்களின் ஒன்றுபட்ட கருத்தும் ஆகும் எனக் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் இந்த அபிப்பிராயம் திங்கட்கிழமை திருகோணமலையில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளைக்கூட்டத்தில் ஏகமனதாக மேற்கொண்ட தீர்மானத்தில் அது பிரதிபலித்தது. இதுதான் விடுதலைப்புலிகளின் முடிவும் ஆகும். இந்த விடயத்தில் கிளிநொச்சி மௌனம் சாதித்தது. தராக்கியின் கட்டுரையில் “திருகோணமலை மாவட்டக்கிளை இதனை ஏகமனதாக ஆதரித்ததென்றும், விடுதலைப்புலிகளின் நிலைப்பாடும் அதுவே என்றும் கிளிநொச்சி மௌனம் சாதித்தது” என்றும் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார்.

வடக்கு கிழக்கில் தமிழர்களை பெரும்பான்மை கொண்ட மாவட்டங்கள் எட்டு ஆகும். ஆனால் சகல தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டுமென அயராது உழைத்த தராக்கி எதற்காக திருகோணமலை மாவட்டத்தையும், கிளிநொச்சி மாவட்டத்தை பற்றி விசேட அபிப்பிராயம் தெரிவித்து, ஏனைய ஆறு மாவட்டங்களை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. உண்மை யாதெனில் தமிழ் கட்சிகளை ஒரே குடையின் கீழ் கொண்டுவர வேண்டுமென்று மேற்கொண்ட முயற்சிக்கு எதிராக கிளிநொச்சியில் ஓர் சதித்திட்டம் தீட்டப்பட்டு இருந்ததை நன்கு அறிந்திருந்தார்.

என்னை ஒதுக்கி வைப்பதே இந்த சதித்திட்டத்தின் நோக்கமாகும். அதுவே தமிழ்மக்களின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்ததோடு, தமிழ் மக்களின் பெரும் அழிவுக்கும் முன்னோடியாக அமைந்தது. கிளிநொச்சியில் இயங்கிய உண்மையான குற்றவாளிகள் தன்னல நோக்கத்துடன் தமிழ் குழுக்கள், அரசியல் கட்சிகள், விடுதலைப்புலிகள் அதுபோல தராக்கி ஆகியோருடைய தீர்மானத்துக்கு முரணாக செயற்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவர் மற்றொருவரின் ஆதரவுடன் தமிழரசு கட்சியையும் அதன் சின்னத்தையும் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

ஆனால் தராக்கியின் கூற்றுப்படி வெறும் பேப்பரில் மட்டுமே காணப்பட்ட தமிழரசு கட்சியின் சின்னத்தையும் 2004ம் ஆண்டு தேர்தலுக்கு பயன்படுத்தினர். அச்சமயத்தில் ஒரே கட்சி, பொதுக்கொள்கை உதயசூரியன் சின்னம் ஆகியவற்றின் கீழ் தேர்தலில் ஆதரவு வழங்குவதென்ற முடிவுக்கு விடுதலைப்புலிகள் தயாராக இருந்த நிலையில் இவர்கள் பொறுப்பற்ற விதத்தில் விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அறிவித்தனர்.

அக்கறையுடன் செயற்பட்ட குழுவினரின் விருப்பப்படி 2004ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் மிகப்பெரும்பான்மை வாக்குகளோடு 22 ஆசனங்களும் கைப்பற்றப்பட்டிருக்கும். யுத்தம் நிறுத்தப்பட்டு தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்கும். பொதுமக்களும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு அன்றாட வாழ்க்கையினை தொடர்ந்திருப்பார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக ஒரு சிலரின் சுயநலத்துக்காக யுத்தம் நீடிக்கப்பட்டு முழு தமிழ் சமூகமும் சொல்லமுடியாத கஷ்டங்கள், பெருமளவிலான உயிரிழப்புக்கள், சொத்தழிவுகளுக்கும் முகம் கொடுக்க நேர்ந்தது. 2004ம் ஆண்டு தொடக்கம் இறுதி ஐந்து ஆண்டு காலத்தில் இவர்கள் பட்ட துன்ப துயரங்கள் பற்றி நிறைய எடுத்துக் கூறலாம். நடந்த எல்லா சம்பவங்களுக்கும் பொறுப்புக்கூற வேண்டிய இந்த இரு நபர்களை மக்கள் இலகுவாக அடையாளம் காண்பார்கள்.

நாம் மறக்கக்கூடாது என தராக்கி கூறுவது தமிழ் காங்கிரஸ் கட்சியும், தமிழரசு கட்சியும் இணைந்த அரசியல் அமைப்பே தமிழர் விடுதலைக் கூட்டணியாகும் என்பதே. 1976ம் ஆண்டு தமது தனிப்பட்ட அடையாளங்களை இன ஒற்றுமைக்காக விட்டுக்கொடுக்கும்படி தமிழ் கட்சிகள் கேட்கப்பட்டன என தராக்கி கூறியுள்ளார். அதனை நாம் செய்தும் உள்ளோம்.

இலங்கை தமிழரசு கட்சியின் நிலைப்பாடு பற்றி தராக்கி குறிப்பிடுவதாவது, “தமிழரசு கட்சி நீண்டகாலமாக கொண்டிருந்த தனது வீட்டுச்சின்னத்தை கைவிட்டு வட்டுக்கோட்டை தீர்மானத்தினால் உருவாகிய தமிழ் தேசிய ஒற்றுமையின் காரணமாக தீர்மானிக்கப்பட்ட உதயசூரியன் சின்னத்தை ஏற்றுக்கொண்டது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும், தமிழரசு கட்சியும் சக்திமிக்க ஓர் பெரும் அமைப்பாக ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய அரசியல் அடையாளத்தை ஏற்றுக்கொண்டன. அதனால்தான் ஒருகாலத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான. திருவாளர்கள் மு.சிவசிதம்பரம், வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் ஏற்கனவே இருந்த அரசியல் அடையாளத்தை கைவிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியை தமது புதிய அரசியல் அடையாளமாக ஏற்றுக்கொண்டனர். இன்று தமிழரசு கட்சி பெயரளவில் வெறும் பேப்பரில் மட்டும்தான்”. தமிழ் கட்சிகள் தமது அரசியல் வேறுபாடுகளை கைவிட்டு ஒரே அணி, ஒரே சின்னத்தின் கீழ் ஒன்றுபடுமாறு தூண்டப்படுகின்றனர்.

இலங்கையர்கள் தமது இன வேறுபாடுகளை கைவிட்டு, தாங்கள் ஆழ்ந்த நித்திரையிலிருந்து விழித்தெழுந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு என்னும் அங்கியை அணிந்து செயற்படுகின்ற மிகவும் ஆபத்தான ஒரு நபரிடமிருந்து, குறிப்பாக தமிழ் மக்களையும், பொதுவாக இலங்கையர்களையும் காப்பாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. பொதுவாக தமிழ் மக்களுக்காகவோ அல்லது நாட்டின் நன்மைக்காகவோ அல்லாமல் கூடுதலாக தனது இலாபத்தை கருத்திற்கொண்டு, எதுவித தார்மீக உரிமையுமின்றி தமிழ் தேசிய கூட்டமைப்பை தவறாக பயன்படுத்துகின்ற கௌரவ இரா.சம்பந்தன் அவர்களையே குறிப்பிடுகின்றேன்.

எதுவித சந்தேகமுமின்றி திரு.இரா.சம்பந்தன் அவர்கள் மிகவும் திறமைசாலி மட்டுமல்ல விவேகமுள்ளவர். அவருக்கு எங்கே, எப்போது, எப்படி செயற்படவேண்டுமென்பதை பற்றி நன்கு அறிந்தவர். சுமார் 40 ஆண்டுகளாக அவரைப்பற்றி நான் நன்கு அறிந்தவன். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அங்கியை பாவித்து நன்றாக அனுபவித்தது மட்டுமல்ல, அதன் ருசியை அறிந்து தான்தோன்றித்தனமாக, அல்லது தனது கட்சியை சார்ந்த ஒருசிலருடன் சேர்ந்து ஏனைய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்களாளி கட்சி உறுப்பினர்களை புறக்கணித்து தீர்மானங்களை எடுத்து வருகிறார். ஆனால் அண்மையில்கூட தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டுமென்று புளுகியுள்ளார். தமிழ் மக்களிடமிருந்து கிடைத்துள்ள ஆதரவு அனைத்து பிரிவு மக்களும் தம்மை ஏற்றுக்கொண்டார்கள் என்றும், அந்த நிலைப்பாட்டை தொடர்ந்தும் காப்பற்றப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். உண்மை நிலைமையை அறியாமல் மிக்க தன்நம்பிக்கையோடு இருப்பது மிகவும் அனுதாபத்துக்குரிய விடயமாகும். மக்களை எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிகளும் இவருடைய தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கின்றார்கள்.

2004ம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது தமிழர் விடுதலைக் கூட்டணியை பிரச்சாரம் எதுவும் செய்யவிடாது 22 ஆசனங்களை முறையற்ற வகையில் கைப்பற்றி தமிழர் விடுதலைக்கூட்டணியை அழித்தமையை சிலர் மட்டும்தான் அறிவர். முறையாக நடைபெறாத அத்தேர்தலில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு தலைதூக்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டது. இத்தேர்தலில் சில வேட்பாளர்கள் அதிசயபடக்கூடிய வகையில் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளனர். ஏனைய சிலர் காலையில் தோற்கடிக்கப்பட்டு மாலையில் வெற்றி பெற்றுள்ளனர்.

பாராளுமன்றத்தின் கால எல்லையை ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் ஆறு ஆண்டுகள் நீடித்தமையை ஆட்சேபித்து அவர் உட்பட தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த 18 பேர் தங்கள் பாராளுமன்ற பதவியை துறந்து சர்வதேச மட்டத்தில் பெரும் நன்மதிப்பை தமிழர் விடுதலைக் கூட்டணி பெற்றது. இதுவே தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாரம்பரியம். ஏறக்குறைய அவர் வகிக்கும் பதவி அபகரிக்கப்பட்ட ஒன்றாகையால் ஜனநாயகம் பற்றி பேசுவதற்கான தார்மீக உரிமை அவருக்கு இல்லை. அவர் வகிக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை பதவியும் அதே போன்றதே.

2009 ஜனவரி மாதம் வன்னியில் அகப்பட்டுள்ள அப்பாவி மக்களை காப்பாற்றுமாறு கேட்டுக்கொண்டபோது அதற்கு அவர் செவிமடுக்கவில்லை. இந்திய வெளியுறவு செயலர் புதுடெல்லிக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தபோது வேண்டுமென்றே மக்களை காப்பாற்றுவதற்கு தேடிவந்த சந்தர்ப்பத்தை பிரயோகிக்க தவறிவிட்டார். வன்னி இறுதி யுத்தத்தில் அகப்பட்டிருந்த மக்கள் விடுத்த அவலக்குரலுக்கு செவிமடுக்கவில்லை. அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பரிகாரம் தேடாமை எதிர்கட்சி பதவியை துறப்பது நியாயப்படுத்தக்கூடிய ஒன்றாகும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற பதவியின் ஊடாக மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய தவறியமையால் தனது பாராளுமன்ற பதவியையும், எதிர்கட்சி பதவியையும் துறப்பது கௌரவமான நடவடிக்கையாகும்.

தமிழ் மக்கள் மட்டுமின்றி சகல இன மக்களினதும் இன்றைய கடமை யாதெனில், காலம் கடந்தாலும் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்கள் அனுபவித்த துன்ப துயரங்களுக்கும் தொடர்ந்து படும் அல்லல்களுக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க ஓர் ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுப்பதே. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாதகமான செயல்களை அம்பலப்படுத்துவதற்கு எமக்கு கிடைத்துள்ள இறுதி சந்தர்ப்பம் இதுவாகும்.

– வீ.ஆனந்தசங்கரி செயலாளர் நாயகம் – த.வி.கூ