50 ஆண்டுகளுக்குப் பின் பழைய இடத்துக்கு வந்துசேரப் போகின்ற தமிழ் தலைமை!

அன்று 1965இல் டட்லி சேனநாயக்க தலைமையில் அமைந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசில் தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்திருந்துவிட்டு தமிழ் மக்களுக்காக எதையும் பெறாமல் வெளியேறி வந்தனர். அதேபோல, கடந்த ரணில் தலைமையிலான ஐ.தே.க. அரசை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை ஏதுமின்றி ஆதரித்துவிட்டு குறைந்தபட்ட கோரிக்கைகளைக் கூட பெறாமல் வெறுங்கையுடன் வெளியேறி வந்திருக்கின்றனர்.

இந்த நிலைமையில், தமிழ் மக்கள் எப்படி 1970இல் தமிழரசு – காங்கிரஸ் கட்சிகளுக்கு பாடம் புகட்டினரோ அதேபோல இம்முறை தேர்தலிலும் நிச்சயமாகப் பாடம் புகட்டுவர்.

1965இல் டட்லி அரசில் சேர்ந்திருந்ததிற்காக தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான ஜீ.ஜீ.பொன்னம்பலம், மு.சிவசிதம்பரம், தா.சிவசிதம்பரம் ஆகியோர் முறையே யாழ்ப்பாணம், உடுப்பிட்டி, வவுனியா தொகுதிகளில் தோற்கடிக்கப்பட்டனர்.

அதேபோல, தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த அ.அமிர்தலிங்கம், ஈ.எம்.வி.நாகநாதன், மு.ஆலாலசுந்தரம், எஸ்.எம்.இராசமாணிக்கம் ஆகியோர் முறையே வட்டுக்கோட்டை, நல்லூர், கிளிநொச்சி, பட்டிருப்பு ஆகிய தொகுதிகளில் தோற்கடிக்கப்பட்டனர்.

காங்கேசன்துறை தொகுதியில் தமிழரசுக் கட்சி தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் 13,520 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தாலும், 1965 தேர்தலில் அவர் பெற்ற 14,735 வாக்குகளுடன் ஒப்பிடுகையில் குறைவானதாகும். அதுமாத்திரமின்றி, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வி.பொன்னம்பலம் (கம்யூனிஸ்ட் கட்சி), சி.சுந்தரலிங்கம் (சுயேட்சை), ரி.திருநாவுக்கரசு (தமிழ் காங்கிரஸ்) ஆகிய மூவரும் சேர்ந்து எடுத்த மொத்த வாக்குகளின் தொகை 17,003 ஆகும்.

யாழ்ப்பாணத் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட சி.எக்ஸ்.மார்ட்டின் தன்னை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிட்ட அல்பிரட் துரையப்பாவை விட வெறுமனே 56 வாக்குகள் மட்டுமே அதிகமாகப் பெற்று வெற்றியீட்டினார். அதேநேரத்தில் வழமையாக இங்கு வெற்றியீட்டும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

மன்னார் தொகுதியில் தமிழரசுக் கட்சியின் வி.அழகக்கோன் வழமைபோல வெற்றி பெற்றாலும், தன்னை எதிர்த்து ஐ.தே.க. சார்பாகப் போட்டியிட்ட ஏ.எச்.ரஹீமை விட 69 வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.

தமிழரசுக் கட்சியின் கோட்டை என வர்ணிக்கப்படும் கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டிருப்புத் தொகுதியில் தமிழரசுக் கட்சியின் எஸ்.எம்.இராசமாணிக்கம் ஐ.தே.க. வேட்பாளர் எஸ்.தம்பிராசாவிடம் தோற்றுப் போனார். 1965 தேர்தலில் 1,472 வாக்குகள் மட்டுமே இத்தொகுதியில் பெற்ற ஐ.தே.க., 1970 தேர்தலில் 13,370 வாக்குகள் பெற்று வெற்றியீட்டியது.

இப்படி 1970 தேர்தல் களம் தமிழரசு – காங்கிரஸ் கட்சிகளின் பழைய தலைவர்களுக்கு ஒரு மரணக்குழியாக அமைந்தது. அதற்குக் காரணம் அவர்களுக்கு ஐ.தே.க. மீது ஏற்பட்ட பந்தபாசம்தான். அதே பந்தபாசம் சம்பந்தன் – மாவை – சுமந்திரன் என்ற மும்மூர்த்திகளும் கடந்த ரணில் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்டதால் இன்றும் 1970இல் ஏற்பட்ட நிலை ஏற்பட்டால் ஆச்சரியப்பட ஏதும் இல்லை.