9/11: 19 ஆண்டுகளின் பின்னர் இலங்கை

அத்தாக்குதலின் பின்னர், அமெரிக்கா உருக்கொடுத்த ‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்’ என்ற எண்ணக்கரு, உலகெங்கும் எதிரொலித்தது; விடுதலைப் போராட்ட இயக்கங்களைத் தின்று துப்பியது. “ஒன்றில், நீங்கள் எங்களோடு இருக்கிறீர்கள்; அல்லது, பயங்கரவாதிகளோடு இருக்கிறீர்கள்” என்று, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் உதிர்த்த வார்த்தைகள், இன்றைய உலக நிலைவரங்களுடனும் சாலப்பொருந்துகின்றன.

இலங்கை என்ற தென்னாசியாவின் மூலையில் உள்ள குட்டித்தீவுக்கும், இதற்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் யோசிக்கக் கூடும். அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போரே, இலங்கையில் 2002இல் போர் நிறுத்த உடன்படிக்கையைச் சாத்தியமாக்கியது.

இலங்கையில் தற்காலிகமாகவேனும் அமைதி யாருக்குத் தேவைப்பட்டதோ இல்லையோ, அமெரிக்காவுக்குத் தேவைப்பட்டது. ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலில், அமெரிக்க விமானப் படைகளுக்கு எண்ணெய் மீள்நிரப்புத் தளமாக இலங்கை தேவைப்பட்டது. அதே ஆண்டு முற்பகுதியில், கட்டுநாயக்க விமானநிலையத்தின் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல், பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்பியிருந்தது.

ஒருபுறம், போராட்ட அமைப்புகள் அனைத்தையும் பயங்கரவாதிகளாக அமெரிக்கா அறிவித்தது. மறுபுறம், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், கைகோர்ப்பதாக இலங்கை தெரிவித்தது. இவையனைத்தும், இலங்கையில் 2002ஆம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கை சாத்தியமாவதில், செல்வாக்குச் செலுத்திய காரணிகள் ஆகும்.

போர்நிறுத்த காலத்தில், இலங்கையின் மீதான அதீத கவனத்தை, ‘சர்வதேச சமூகம்’ காட்டியது. தமிழ் மக்களுக்குத் தீர்வைப் பெறுவதற்காகத்தான் இந்தக் கவனம் என்று பேசியும் எழுதியும் வந்தோர் பலர். ஆனால், சர்வதேச சமூகத்தின் நடத்தை வேறுவகையாக இருந்தது. விடுதலைப் புலிகள் எதிர்பார்த்தது போல, அமெரிக்கா தடையை நீக்கவில்லை.

மாறாக, இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் சந்திப்பு, வொஷிங்டன் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டது. விடுதலைப் புலிகள், அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகையால், அதில் கலந்துகொள்ள விடுதலைப் புலிகளால் முடியாது போனது. இது தற்செயலானதல்ல. அப்போது, அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவராயிருந்த அஷ்லி வில்ஸ், “நாங்கள் எந்தப்பேச்சு வார்த்தைகளின் போதும் அவர்களோடு அமரவோ, கை குலுக்கவோ மாட்டோம்” என்று கூறியிருந்தார்.

பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்தினுடைய தடைவிதிப்பு வந்தது. ஆனால், இவை வெறுமனே தனி நிகழ்வுகளாகவே நமக்குச் சொல்லப்பட்டன. இவற்றில், நாம் செய்திருக்கக் கூடியவை எவை, கவனித்திருக்கக் கூடியவை எவை என்பன இன்று காலங்கடந்த கேள்விகள்.

இரட்டைக் கோபுரத் தாக்குதலின் விளைவுகள், இலங்கையையும் பாதித்தன. ஆப்கானிஸ்தானிலும் அதைத் தொடர்ந்து ஈராக்கிலும் தொடுக்கப்பட்டவை போர்களல்ல; அவை ‘விடுவிப்புக்கான’ நடவடிக்கைகள் எனப்பட்டது. மக்களை விடுவிப்பதற்கான நடவடிக்கை என்ற பெயரிலேயே, நியாயம் தேடும் வழிமுறை கைக்கொள்ளப்பட்டது.

இப்போரியல் கலைச் சொற்களில், 90களின் கடைசிப் பகுதியில் பயன்படுத்தப்பட்ட சொற்களுக்கும், 9/11க்குப் பின்பு, குறிப்பாக பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் உருவாக்கப்பட்ட பின்பு பயன்படுத்தப்படுகின்ற சொற்களுக்கும் இடையே பெரிய வேறுபாடுகள் உள்ளன.

முன்னர், போர்க்களம் (Battlefield) என்று சொல்லப்பட்டது. இன்று, செயல் அரங்கு (Theatre of action) என்று சொல்லப்படுகிறது. அந்தச் சொல்லே, இலங்கையிலும் பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதும் போது ‘போர்க்களம்’ என்று எழுதுவது குறைந்து, ‘செயல் அரங்கு’ எனும் பதம் பயன்படுத்தப்படுகிற காரணம், பார்வையாளர்கள் திரையரங்கிலிருந்து திகிலூட்டும் திரைப்படமொன்றைப் பார்ப்பது போல, அதைப் பார்க்க வேண்டும். அது, ஒரு மனோநிலையைக் கட்டமைத்தல் செயற்பாடு.

அவ்வாறே, தாக்குதல் (Attack) இடம்பெறுவதில்லை. மாறாக, நடுநிலைப்படுத்தல் (Neutralization) இடம்பெறுகிறது. இவ்வாறான புதிய சொற்கள், பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தின் போது, அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டன.

எனவே, யாரும் தாக்குவதில்லை; மாறாகச் சமநிலைப்படுத்துகின்றனர். ஏனெனில், சமநிலைப்படுத்தல் எனும் போது, மனித உரிமை மீறல்கள், கொலைகள் தொடர்பாக எவ்விதமான கேள்விகளையும் கேட்பதற்கான வாய்ப்புகள் குறைவு. விடயம் என்னவென்றால், சமநிலைப்படுத்தும் தேவையால், சமநிலைப்படுத்தல் நடக்கிறதே ஒழியத் தாக்குதல் அல்ல. அவ்வாறே, யுத்தமும் இல்லை; மனிதாபிமான நடவடிக்கைதான் இடம் பெறுகிறது. ஈராக் மீதான நடவடிக்கையாயினும் இலங்கை உட்பட அதற்குப் பின்பான நடவடிக்கைகள் எதுவாயினும், இடம்பெறுவது மனிதாபிமான நடவடிக்கையே அன்றி யுத்தமல்ல. இவ்வாறு போரின் மொழிகள் மாறியமையானது, 9/11இன் பின்னரான முக்கியமான விளைவாகும். அதேமொழி, இலங்கையிலும் பயன்படுத்தப்பட்டது.

19 ஆண்டுகளுக்கு முன், எங்கோ நடந்ததை இன்று இங்கு ஏன் பேசவேண்டும்? ஆனால், எங்கோ நடந்ததின் விளைவுகள், இன்றும் இங்கு உள்ளவர்களைப் பாதிக்கிறது என்பதை, உரத்துச் சொல்லவேண்டியிருக்கிறது. தமிழர்கள் மத்தியில், சர்வதேச சமூகம் மீதான அளவுகடந்த நம்பிக்கைகள், இன்னமும் இருக்கின்றன. சர்வதேச சமூகத்தை நம்பி, தீர்வைப் பெற்றுவிடலாம் என்ற எதிர்பார்ப்பு வலுவாக இருக்கிறது.

இலங்கை இனமுரண்பாடு தொடர்பில், கடந்த இரண்டு தசாப்தங்களாக, சர்வதேச சமூகத்தின் நடத்தையை மீட்டுப்பார்த்தால் அதன் யோக்கியம் விளங்கும். சர்வதேச சமூகம், தற்போது போரை விற்கிறது; போரை ஊக்குவிக்கிறது; போரை நடத்துகிறது. அதேவேளை, மனிதாபிமான உதவிகள், மனித உரிமை மீறல் கண்காணிப்பு போன்ற போர்வைகளில் தேசிய இனங்களையும் அரசாங்கங்களையும் மிரட்டிக் கட்டுப்படுத்துகிறது. மக்களுக்கு உதவுவது போன்று பாசாங்கு செய்து, நாடுகளின் சந்தை, நுகர்வு, இலாபம், இராணுவ ஆதிக்கம் போன்றவற்றை நிலைநாட்டுகிறது.

அரசியல் என்பது சமூக அறம் சார்ந்திருந்த காலம் மலையேறி விட்டது. ஆனால், அறம் பிழைப்படும் போது, அரசியல் சீரழிகிறது. இதை ஒரு சமூகம் பொறுக்குமாயின், அச்சமூகம் தனது அழிவுப் பாதையைத் தானே தேடுகிறது.

அழிவுப் பாதையில் பயணப்படும் சமூகம், அதற்காக வருந்தத் தொடங்கும் போது அது, அப்பாதையில் மீளமூடியாத தொலைவுக்குச் சென்றிருக்கும். வரலாறு சொல்லும் இப்பாடம், விடுதலைப் போராட்டத்துக்கும் பொருந்தும் என்பதை நாம் மறக்கலாகாது.

இலங்கை மீதான ஆதிக்கத்துக்கான போட்டியின் புதிய கட்டம், அமெரிக்காவின் ‘பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்’ என்ற போர்வையில் தொடங்கியது. அமெரிக்காவின் இந்த யுத்தத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதன் மூலம், தென்னாசியாவின் மீதான ஆதிக்கத்தில் அமெரிக்காவுடன் இந்தியா கைகோர்த்தது. இது, பிராந்தியத்தில் சீனாவின் வளர்ச்சியால் வலுப்பட்ட உறவு என்றும் பொருள்கொள்ளவியலும்.

ஆனால், நெடுங்காலமாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் திருகோணமலைத் துறைமுகத்தின் மீது ஆவல் உள்ளமையை அறிவோம். அடுத்து, ஹம்பாந்தோட்டையில் சீன உதவியோடு அமைந்த துறைமுகம், இலங்கை மீதான அமெரிக்க, இந்திய அக்கறையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. சீனாவின் ‘ஒரு பட்டி; ஒரு பாதை’ திட்டத்தில் இலங்கையின் பங்கேற்பு என்பது, இலங்கையை மய்யப்படுத்திய புவிசார் அரசியல் நிகழ்வுகளாகும்.

அமெரிக்க மய்ய உலக ஒழுங்கில் நிகழ்ந்த ‘இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதல்’, இராணுவரீதியில் அமெரிக்கா உலகைக் கட்டுப்படுத்துவதற்கு நல்லதொரு வாய்ப்பைக் கொடுத்தது. அதன்வழி அமெரிக்கா கட்டியமைத்த உலகஒழுங்கை, இப்போது, பொருளாதார வலுகொண்டு சீனா தகர்க்கிறது. இந்தச் சவாலை எதிர்நோக்க, அமெரிக்கா புதிய வழிகளைத் தேடவியலாமல், தனக்கு நன்கறிந்த பழைய வழிகளையே நாடுகிறது.
இன்று, ஒரு பிரதான களமாக ஆசியா மாறியுள்ளது. இராணுவ வலிமையால், ஆசியாவில் ஆதிக்கத்தை நிறுவ, அமெரிக்கா முயல்கிறது. இங்கு, “அமெரிக்கா, தனக்குள் கட்டமைத்து வைத்திருக்கின்ற ‘வீரப்பண்பு’தான் அமெரிக்காவின் பெரிய பிரச்சினையே ஒழிய, அது தீர்வல்ல” என்ற நோம் சோம்ஸ்கியின் வரிகள் நினைவூட்டத்தக்கவை.
தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம், தமிழ் மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. அது புதுடெல்லியிலோ, மேற்குலகத் தலைநகரிலோ இல்லை. 2002இல் கொண்டுவரப்பட்ட சமாதானமும் எமக்கானதல்ல; நடத்தப்பட்ட போரும் எமக்கானதல்ல; பறிக்கப்பட்ட உரிமைகளும் இழக்கப்பட்ட உயிர்களும் எஞ்சிய அவலங்கள் மட்டுமே எமக்கானவை. இந்தப் புரிதலுடன் முன்செல்லாவிடின், ‘சாண் ஏற முழம் சறுக்கிய கதை’தான்.