M உம் நான் உம்

(Saakaran)

மனோகரனும் நானும் மூர்த்தியும் நானும்……

2018 ஜுன் 02 மதியம் 12 மணி, இடம் கிளிநொச்சி. மல்லாவி சென்று வருவோம் ஆட்டோவில் என்ற முடிவுடன் பலராலும் அறியப்பட்ட எழுத்தாளருடன் நான். எம்(ன்) விருப்பப்படி குறிபிட்ட ஆட்டோவை அழைத்துவிட்டு கிளிநொச்சி அரசியல் பிரமுகர் ஒருவரின் அலுவலகத்தில் காத்திருப்பு. கிடைத்த இடைவெளியில் அரசியல் பிரமுகருடன் ஒரு சரியான மாற்றுத்தலமையை கட்டியமைக்க வேண்டும் என்பது தற்போதைய அவசியமான தேவையாக உள்ளது என்பது பற்றி கலந்துரையாடல். அவரின் செயற்பாடுகளுக்கு இடையில் எழுத்தாளரால் இவர்தான் கிளிநொச்சி பகுதியில் அடிமட்ட மக்களிடன் செல்வாக்கை பெற்றுவரும் அந்த அரசியல் பிரமுகருக்கு அடுத்த நிலையில் அவருடன் இணைந்து செயற்படுபவர் என்ற அறிமுகம்.

நான் மனோகரன்…. நான்….. என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அருகருகே அமர்ந்து சாதாரணமாக ஆரம்பமானது உரையாடல். கார்த்திகேசன் மாஸ்ரருடன் 1970 களின் பிற் கூற்றில் ஏற்பட்ட அறிமுகம் தன்னை ஒரு இடதுசாரியாக வளர்த்துகொண்டு பொதுவாழ்வில் இன்றுவரை பயணிக்க வைப்பதற்கு ஆரம்ப புள்ளியை ஏற்படுத்தியது என்று தனது அரசியல் வாழ்விற்கான அறிமுகத்தை ஆரம்பித்தார்.
நானும் என்தரப்பிற்கு தமிழ் இளைஞர் பேரவையுடன் இதே காலப்பகுதியில் ஆரம்பித்தது எனது சமூகத்திற்கான பொதுவாழ்வு என்றும் ஆனால் மிகக் குறுகிய காலப்பகுதியிலேயே இந்த இரத்தத் திலகம் இடலில் இருந்து விலகிவிட்டேன் என்ற எனது ஆரம்ப புள்ளியை சுட்டிக்காட்டினேன். யாழ் புகையிரத நிலையத்திற்கு பின்பாக அமைந்திருந்த மக்கள் பிரசுராலியத்தில் பாடப் புத்தகங்களுக்கு உறைபோட வாங்கிய சீன மாத இதழில் இருந்த ஒரு படம்(கடலிற்கு மேலாக பலகை அடித்து மண்பரப்பி நெற் பயிற் செய்ததை விபரிக்கும் படம்) அந்த இதழை உறை போடுவதற்கு அப்பால் வாசிக்க தூண்டியது கூடவே எனது பால்ய நண்பன் நரேந்திரனின் ‘இடதுசாரி’க் கருத்துக்கள் கம்யூனிச சித்தாந்தத்திற்கான தேடலை ஏற்படுத்த யாழ் இந்துக்கல்லூரியில் உயர்தரவகுப்பு ஆங்கில பேராசான் அதிபர் கார்த்திகேசனின் கருத்துக்களும் காரணமாக இருந்தன என்று ஆரம்பித்து அது இன்றுவரை கம்யூனிசத்தை நம்பும் செயற்பாட்டளனாக தொடர காரணமாக இருந்தது என்றேன்.

எமது அறிமுக ஆரம்பத்தில் எழுத்தாளர் எனது பொதுவாழ்கையில் நான் பாவிக்கும் சங்கேதப் பெயரைச் சொல்லியே மனோகரனுக்கு அறிமுகம் செய்திருந்தார்…..சற்று நேர மௌத்தின் பின்பு திடீரென மனோகரன் என்னைப் பார்த்து நீங்கள் ‘ஈஸ்வரமூரத்தி’தானே என்று கேட்டார். ஆம் என்றேன். கூடவே என்னைத் தெரியவில்லையா என்றார் நான்தான் பரந்தன் மனோகரன் உன்னோடு யாழ் இந்துக்கல்லூரியில் ஒரே வகுப்பில் ஒரே விடுதியில் தங்கியிருந்து படித்த நண்பேண்டா என்றார். 46 வருடங்களின் பின்பு பல்வேறுவிதமான வாழ்கைப் பயணத்தின் பின்பு ஆட்டோ வருவதில் ஏற்பட்ட தாமதம் எம்மை சந்திக்கை வைத்தது. அந்தக் கணத்தில் எனக்குள் ஏற்பட்ட உணர்வுகளை…கேள்விகளை… விடைகளை… ஊகங்களுக்கே விட்டுவிடுகின்றேன்.

கல்வியே முதன்மையானது என்றும் இதற்கு அப்பால் சிந்திப்பவர்கள் செயற்படுபவர்கள் ஒன்றுக்கும் பிரயோசம் இல்லாவர்கள் என்ற வகையில் மனோகரன் போன்றவர்கள் என்னாலும் அவ்வாறு அன்று பார்க்கப்பட்டாலும் ஏதோ எமக்குள் ஒரு நட்பு அன்றைய காலகட்டத்தில் ஆழமாகவே இருந்தது. எனது உயர்தரவகுப்பு இணைவு இதனைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக வாழ்வு இதற்குள் அகப்படாத மனோகரனை மாணவப் பிராயத்து நண்பனாக மட்டும் நிறுத்திவிடவே வாய்பை ஏற்படுத்திவிட்டது. தொடர்ந்து விடுதலைப் போராட்டம் யுத்தம் பலரினதும் இடம் பெயர்வு சந்திக்கும் வாய்புக்களை இல்லாமல் எனக்கும் மனோகரனுக்கும் இடையில் ஏற்பட்டது போல் பலருக்கும் ஏற்படுத்தியே இருந்திருக்கின்றது. ஆனால் பொது வெளியில் ஒருமித்த நோக்கத்திற்கான பயணம் மீண்டும் ‘எம்’ ஐ என்னுடன் இணைத்துள்ளது.

மூன்று வருடங்களுக்கு முன்பு இதே எழுத்தாளரை சந்தித்து முள்ளிவாய்கால் ஆனந்தபுரம் நந்திக்கடல் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றேன். இன்னும் ஒரு தடவையா என்று ஆச்சரியத்துடன் வினாவிய எழுத்தாளர் ஒரு ஆட்டோவை அழைத்துவிட்டு எனது 13 கேள்விகளில் முதலாது கேள்வியிற்கு பதிலளிக்க ஆரம்பித்துவிட்டார். ஆட்டோவுடன் மூர்த்தி என்பவர் அளந்து வைத்த உடல்வாகுடன் புன்னகையுடன் அறிமுகமானார் இயக்கத்திடம் சம்பளத்திற்கு வேலை செய்தவர் என்ற அறிமுகம் வேறு. நானோ அந்த இயக்கத்தின் மீது கடுமையான விமர்சனத்தைக் கொண்டவன் அவர்களின் துப்பாக்கி குண்டொன்று எனக்காகவும் தயார் நிலையில் எப்போதும் இருந்ததை அறிந்தவன்.

கிளிநொச்சியில் ஆரம்பித்து பல்வேறு 2009 இறுதிக்கட்ட யுத்த களங்களினூடான பயணத்தில் இறுதிக்கட்டத்தில் என்ன ஏன் நடைபெற்றது என்ற மூர்த்தியின் அனுபவப்பகிர்வு இவரும் எழுத்தாளரரை விட எந்த வகையிலும் சளைத்தவர் அல்ல என்ற செய்திகளை இவரின் அனுபவப் பகிர்வு சொல்லியே வந்தன இதனை என்னால் மிக ஆழமாக உணரப்பட்டது. கூடவே யுத்தம் முடிவுற்று கடந்து போன 2016 வரையிலான 7 வருடங்களில் சமூகத்தின் மீள் இணைவு புதிய புனர்வாழ்கை ஆரம்பம் போன்றவற்றில் ஏற்பட்டுவரும் கலாச்சாரப் பிறழ்வு பற்றி கண்ணோட்டமும் இதற்கு பின்னால் உள்ள சமூகப் பின்னணி போன்றவை சம்மந்தமான இவரின் பார்வை சீர்தூக்கிப்பார்கப்பட வேண்டியவை. ஏன்ற உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது.

“நீங்கள் கூறும் குற்றச்சாட்டுகள் உங்கள் தாய் மகள் மனைவி சகோதரி பற்றிதே…” என்ற எனது வாதங்களை மறுதலிக்க சம்பவங்கள் மூலம் நீருபிக்க முயலும் இவரின் வாதங்களுக்கு பின்னால் பல்தேசியக் கம்பனிகளின் நவீன நுகர்வுக் கலாச்சாரத்தின் சீரழிவுகள் இருப்பதை இவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை. கூடவே இயக்க காலத்தில் இந்த பிறழ்வுகள் குறைந்த அளவில் இருந்தன என்பதை புள்ளிவிபரங்களுடன் எடுத்துரைதார். ஆனாலும் மாற்றுக் கருத்தாளர்களின் கருத்துக்களுக்கும் செயற்பாடுகளுக்கும் மறுதலிக்கும் வாதங்கள் எதனையும் இவரிடம் காணக் கிடைக்காதது பிழையான வழி நடத்தல் தவறுகளுக்கும் தோல்விகளுக்கும் காரணமாக அழைந்து விட்டன. மாறாக உளசுத்தியுடன் தாங்களால் நம்பப்பட்ட ஒரு தலைபட்ச கருத்துக்கள் மக்களுக்கான விடுதலையை பெற்றுத் தந்துவிடும் என்று அர்பணிப்புடன் செயற்பட்ட பல ஆயிரம் ‘வேலை ஆட்களின்’ ‘சிப்பாய்களின்’ செயற்பாடுகளை வீணாகப்பட்ட விசுவாசம் என்று மட்டும் என்னால் நொந்து கொள்ளவே முடிந்தது.

இம்முறையும் மனோகரின் சந்திப்பிற்கு பின்னர் இதே எம் என்னுடன் மல்லாவியிற்கான வழிகாட்டியாக சாரதியாக. கிளிநொச்சியில் ஆரம்பித்து மல்லாவி துணுக்காய் கொக்காவில் இரணைமடு என்று நீண்ட எமது பயணத்தில் மீண்டும் 2016 எற்பட்ட பல அனுபவப் பகிர்வுகள். அது கொக்காவில் புகையிரத நிலையம் மாங்குளத்தைவிட ‘வசதியுள்ளதாக’ அமைக்கப்படுகின்றது என்பதற்கு பின்னால் உள்ள இரணைமடு இராணுவ விமான நிலையம் இதற்கு பின்னால் உள்ள குடியிருப்பு என்பதில் இருந்து ஆரம்பித்து மீள் கட்டுமானம் செய்யபட்ட இரணைமடு குளம் மதவாச்சியிற்கு அப்பால் இருந்து ஆரம்பமாகும் நீர் ஆதாரம் இதன் நீர் பயன்பாடு என்பதுடன் கூடிய புத்தர் சிலை விவகாரம் குளத்து வான் கதவுக்கு அருகில் இருந்து இராணுவம் அகன்றதும் வழிபாட்டுத் தேவை இல்லாதவிடத்து நிறுவப்பட்டவர்களாலேயே அகற்றப்படும் என்று எழுத்தாளரால் சுட்டிக்காட்டப்பட்ட நிகழ்வுகள் வரை நீண்டது. கூடவே 30 வருடங்களின் பின்பு மல்லாவியில் இடைக்காடு வீதியில் சந்தித்த நண்பன் மைத்துனர் அப்பனுடனான சந்திப்பும் முன்னாள் ஈரோஸ் எம்பி தில்லையுடனான சந்திப்பும் நீண்ட காத்திருப்புகளில் பொறுமை காத்தது பல வேளைகளில் எமது கலந்துரையாடல்களில் இணைந்தது என்பது அடுத்த தடவையும் மூர்த்தியுடனேயே பயணிக்க வேண்டும் என்பதை இப்போதே தீர்மானிக்க வைத்துவிட்டது.

எழுத்தாளர் சந்திப்பாளர்களை சரியாக தெரிவு செய்வதன் மூலம் என் தேடலுக்கான தளங்களை களங்களை உருவாக்கியிருக்கின்றார் என்ற நிறைவுடன் இரவு 8 மணியிற்கு இலங்கை போக்குவரத்து பஸ் இல் ஏறி ‘எம்’ இன் நினைவுகளுடன் யாழ்ப்பாணம் பயணமானேன்.