OPERATION விக்கி!

புரட்சி நாயகன் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் எல்லோரும் எதிர்பார்த்தது போல கிளம்பிவிட்டார். சிங்களதேசத்தின் மீது படையெடுப்பு நடத்துவதற்காக குதிரையின் மீது ஏறிவிட்டார். கட்சியும் காட்சியும் அவர் தலைமையில் விரிந்தெழும்ப, அவரை குதிரையில் ஏற்றிவிட்டவர்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பி ஆரவாரிக்க, தனது வெண்ணிற கேசத்தை தடவி விட்டபடி புதுயுகம் படைக்கப்புறப்பட்டிருக்கிறார்.அவர் “அரசியல் ஞானஸ்தானம்” பெற்றதை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று வாசித்த உரையை கிட்டத்தட்ட ஏழுபேர் எனக்கு தனிப்பட அனுப்பிவைத்தார்கள். வாசித்துப்பார்த்தேன். சவுதி ஊடகவியலாளர் ஜமால் கொலை தொடர்பாக சவுதி விட்டுக்கொண்டிருக்கும் அறிக்கைகளை விட கொடூரமாக இருந்தது. கோபப்பட்டேன். ஆனால், கடைசியில் “நான் உங்கள் வீட்டுப்பிள்ளை” என்று கீச்சுக்காட்டும் விதமாக நகைச்சுவையோடு நிறைவு செய்திருப்பதை வாசித்து என்னை அறியாமலேயே சிரித்துவிட்டேன். அது, விக்னேஸ்வரன் என்பவர் ஈழத்து எம்.ஜிராக வரப்பார்க்கிறார் என்பதால் அல்ல. “திரும்பவும் பார் இந்த மனுசன் ‘வீடு’ என்று கொண்டு வருகிறதே” – என்பதை நினைத்துத்தான்.

விக்னேஸ்வரனின் ஞானஸ்தான உரையிலுள்ள உட்கிடக்கை ஒன்றுதான். அதாவது, சிங்கள ஆட்சியாளர்களின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து தமிழ் மக்கள் விடுபடுவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. தமிழ் தேசியக்கூட்டமைப்பினர்தான் அந்த வழிகளை அடைத்துக்கொண்டு நிற்கிறார்கள். அவர்களை மாத்திரம் மக்கள் தூக்கியெறிந்துவிட்டால் தமிழ் மக்களுக்கு சுபீட்சமான சூப்பர் வாழ்வு கிடைத்துவிடும். வாக்குப்போட்ட மக்களுக்கு கூட்டமைப்பினர் ஒன்றுமே செய்யவில்லை என்பதற்கு அப்பால், இனிமேலும்கூட ஒன்றுமே செய்யப்போவதில்லை என்பதும் உறுதி. ஆகவேதான் தான் அரசியலுக்கு வரவேண்டியிருக்கிறது என்கிறார்.

நெடுங்காலமாக கூட்டமைப்பின் தலைமைக்கும் தனக்கும் பாரிய நெருடல்கள் – பிரச்சினைகள் – இருந்தது என்கிறாரே தவிர அவற்றையெல்லாம் ஏன் மக்களிடம் கூறவில்லை என்றோ “மிஸ்டர் சாம்” என்று தலைப்பிட்டு ஏன் கடிதம் எழுதி விளையாடிக் கொண்டிருந்தார் என்றோ ஐயா தனது உரையில் எதுவும் கூறவில்லை. அத்தோடு, உட்கட்சிப்பூசல்களை வைத்து உருட்டி விளையாடி தனக்கு அனுதாபத்தை தேடும் விதமாக கூட்டமைப்பினை தான் ஏன் பயன்படுத்திக்கொண்டார் என்ற கேவலம் தொடர்பாகவும் அவர் எதுவுமே பேசவில்லை.

கூட்டமைப்பு அது செய்யவில்லை. இது செய்யவில்லை என்று சொல்கிறாரேதவிர, அவற்றுக்கெல்லாம் தன்னிடம் என்ன திட்டமிருக்கிறது என்றும் அவர் எதுவுமே சொல்லவில்லை.

தமிழர் தாயக அரசியல் என்பதை யாழ்ப்பாணம் என்று மாத்திரம் இன்றுவரை விளங்கிவைத்திருக்கும் தனது நீதிபூர்வமான புத்தியில் உள்ள கிழக்கு தொடர்பான புரிதல் என்ன – தனது அரசியல் நிலைப்பாடு என்ன என்று மறந்தும் பேசிவிடவில்லை.

நிர்வாகத்திறனும் சாணக்கிய அறிவும் அரசியல் தெளிவுமுடைய ஒருவர்தான் மக்கள் கூட்டமொன்றுக்கு தலைமைதாங்கும் தகுதியை அடைகிறான் என்ற உலகப்பொதுவிதியில் தான் எந்த விதத்தில் தமிழ் மக்களுக்கு பொருத்தமானவர் என்றோ இவற்றில் தனக்கு எந்த விடயத்தில் அதிக ஆற்றல் உள்ளது என்பது குறித்தோ அல்லது இந்த விடயங்களில் தான் இவ்வளவு காலத்தில் சாதித்து காட்டியது என்ன என்பது குறித்தோ மூச்சுக்காட்டவில்லை.

மொத்தத்தில், இவ்வளவு காலமும் கஜேந்திரகுமார் தரப்பு பேசுவது போல தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பற்றி குதறிவிட்டுப் போயிருக்கிறார். போற போக்கில், சம்பந்தன் – சுமந்திரன் – தவராசா என்று எல்லோருக்கும் பெயர் குறிப்பிடாமலே நல்ல அடி கொடுத்திருக்கிறார். “மிஸ்டர் குரே! நீர்தான் ஆவா குழுவுக்கு பொறுப்போ” – என்றுவேறு மறைமுகமாக கேட்டிருக்கிறார். அவர் பாவம் “சொன்னது நீதானா” – என்று பாட்டுப்பாடப்போகிறார். அதைவேறு தமிழ்மக்கள் கேட்கவேண்டியதாக இருக்கப்போகிறது. இவர் அரசியலுக்கு வந்ததுதான் கொடுமையென்றால் இனி அடுத்து குரேயின் பாட்டைக்கேட்கவேண்டியது இன்னொரு கொடுமையாகப்போகிறது. கொஞ்சமாவது நினைத்துப்பார்த்தாரா இந்த விக்கியர்?

மொத்தத்தில் விக்னேஸ்வரனின் பேச்சில் எல்லாமே கேள்விதான். ஒரு பதிலும் இல்லை. இன்னொரு வகையில் கூறப்போனால், தனிக்கட்சி தொடங்கும் செயலானது மிகத்துரோகமானது என்பதை உள்ளுர உணர்ந்துகொண்டு, அதனை நியாயப்படுத்தும் ஒரு குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்போலத்தான் விக்னேஸ்வரனின் உரை அமைந்திருக்கிறதே தவிர, அவர் கூறுகின்ற மக்களை வழிப்படுத்தும் ஒரு தலைவனின் உரையாகவோ – ஒரு தேர்ந்த அரசியல்வாதியின் உரைபோலவோ, அட்லீஸ்ட் ஒரு கட்சியின் அறிக்கை போலக்கூட இல்லை.

இந்த ஊழிக்கூத்தினால் இடம்பெற்றிருப்பது ஒன்றுதான். அதாவது –
விக்னேஸ்வரனின் பிரிவினால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தூய்மைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதற்கு அப்பால் , தமிழ் தேசியக்கூட்டமைப்பு நியாயப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதாவது, கூட்டமைப்பினை எதிர்த்து வெளியேறிய தரப்பினரால்கூட கூட்டமைப்பை எதிர்த்து – ஒற்றுமையாக நின்று – அரசியல் செய்யமுடியாமல் நாற்பது கட்சிகளாக பிளந்து கிடக்கிறார்கள் என்றால் இவர்கள் கூட்டமைப்பிலிருந்தபோது என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்பதை தாங்களாகவே மக்கள் முன் காண்பித்துவிட்டார்கள். அந்த வகையில், கஜேந்திரகுமாருடனோ – சுரேசுடனோ – அனந்தியுடனோ சேரமால் தானும் ஒரு தனிக்கட்சியை தொடங்கியதன் மூலம், இவர்கள் இவ்வளவு காலமும் சம்பந்தரைப்போட்டு என்ன பாடல்லாம் படுத்தியிருக்கிறார்கள் என்பதை மக்களின் முன்பாக ஒப்புவித்திருக்கிறார்கள்.

இந்தப்பின்னணியில் –

ஈழத்தில் மாற்று அரசியல் – மாற்றுத்தலைமை என்றவாறு உச்சாணியில் நின்று குழறுபவர்களை பார்க்கும்போது மிகுந்த பரிதாபமாகவும் அயர்ச்சியாகவும் உள்ளது.

ஏதோ “அம்மாச்சி” கடையை திறந்து வைப்பதுபோல அரசியல் செய்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். அரசியல் என்பது மர்ம சூத்திரம். அதனை இன்றுவரைக்கும் சம்பந்தனின் நிழலில் நிற்கின்ற சுமந்திரனால்கூட முழுதாக பயில முடியவில்லை. ஆனால், விக்னேஸ்வரன் ரெடிமேட் நூடில்ஸ்போல தயாரித்து சாப்பிட்டுவிடாலாம் என்று எண்ணுகிறார். பத்து வருடங்களுக்கு முன்னர் கஜேந்திரகுமார் செய்து – ஏதுவுமே செய்துகொள்ளமுடியாதுபோன – காலாவதியான காண்டீபத்தை – இன்று விக்கியர் தூக்கிப்பிடித்துக்கொண்டு நிற்பதை பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது.

அரசியலில் அணிகள் முக்கியம்தான். ஆனால் அதற்கு முதல் ஆளுமை முக்கியம்.

இதுவரை விக்னேஸ்வரன் செய்துவந்த அரசியல் என்ன? மாகாணசபையை விட்டுவிடுவோம். அதனை அவர் கூறியதுபோல ஊனமான சபை என்று ஏற்றுக்கொள்வோம்.

தனிப்பட அரசியல் முதிர்ச்சி பெற்றவராக அவர் காண்பித்திருக்கும் ஆளுமைத்திறன் என்ன? இதனை அவர் குறித்து குற்றப்பத்திரமாக இங்கு வாசிக்கவில்லை. அவர் குறித்து ஒரு stocktake எடுப்பது இங்கு அத்தியாவசியமானது.

தன்னை அரசியலுக்குள் கொண்டுவந்த கூட்டமைப்புடன் முரண்படுகிறார். தன்னை சந்திக்கவருகின்ற வெளிநாட்டு தலைவர்களுடன் முரண்படுகிறார். தான் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டு பணிபுரிந்த அரசுடன் முரண்படுகிறார். “கூடவாருங்கள்” என்று இன்றும்கூட கை நீட்டுகின்ற கூட்டமைப்பின் அதிருப்தி கட்சிகளுடனும் முரண்படுகிறார்.

அப்படியானால், யாருடன்தான் இவர் இணைந்து அரசியல் செய்யப்போகிறார். மக்களிடம்போய் “நான் உங்கள் வீட்டுப்பிள்ளை” என்று சொல்லிவிட்டால் எம்.ஜி. ஆர் வந்துவிட்டார் என்று சரோஜாதேவியைத்தூக்கி தருவார்கள் என்று இவர் எதிர்பார்க்கிறாரா? யாரோடு சேர்ந்து அரசியல் செய்யப்போகிறார் என்றாவது கோடிகாட்டி தன்மீதொரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கவேண்டாமா?

கூட்டமைப்பின் அதிருப்தி குழுவினரால் உசுப்பேத்திவிடப்பட்டிருக்கும் பந்தயக்குதிரைதான் தான் என்பதை இவர் எப்போது உணரப்போகிறார்?

விக்னேஸ்வரன் பாடுகின்ற “உங்கள் வீட்டுப்பிள்ளை” பாடலையே முழுமையாக கேட்டால் அதிலொரு வரி வரும். அதாவது –

“உனக்கொரு பங்கும் எனக்கொரு பங்கும் நிச்சயம் உலகில் உண்டு
ஒவ்வொரு மனிதன் உழைப்பினாலும் உலகம் செழிப்பதுண்டு”

ஆக, அவரது உழைப்பை கொஞ்சம் இந்த மக்களிடம் காட்டினாலே பெரிய புண்ணியமாகப்போகும்.

மற்றும்படி, அவரது புதிய கட்சியும் அதன் பாதையும் அவர் நம்புகின்ற எல்லாம் வல்ல பிரேமானந்தாவின் அருளோடு வெற்றிநடை போடட்டும்.

(ப. தெய்வீகன்)