Still I Love you Rahul !

மானசீகன்***

ராகுலை கிண்டல் செய்கிற எல்லோரும் ரகசியமான பிஜேபி ஆதரவாளர்கள்தான் . நான் ஏற்கனவே சொன்னதைப் போல் ‘2K மனங்களுக்கான நவீன தேசிய அரசியல்வாதி ‘ ராகுல் மட்டும்தான். அவரை வட இந்திய மனங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை . அவர்கள் உள்ளங்கள் அந்த அளவுக்கு விஷமாகியிருக்கின்றன .மிகச்சரியாக அவரை அடையாளம் கண்டு தமிழ்நாடு கொண்டாடியது .அவருடைய பல கருத்துகள் முற்போக்கானவை .

இந்துத்துவாவின் செல்வாக்கு , Rss மற்றும் பிஜேபியின் பலமான கட்டமைப்பு ஆகியவையே பிஜேபியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம். நேருவின் காலத்திலும் கூட காங்கிரஸிற்குள் நிறைய Rss காரர்கள் இருந்தார்கள் ( நேருவே’ என் சட்டைப் பைக்குள் ஒளிந்திருக்கும் வகுப்புவாதிகள்’ என்று அவர்களை விமர்சனம் செய்திருக்கிறார் ) சோனியாவை கடுமையாக எதிர்த்தவர்கள் அவர்களே . ஆனால் அவர்களின் இருப்பு இந்தியாவிற்கு எதிராக இருந்தாலும் வட இந்திய மாநிலங்களில் காங்கிரஸிற்கு உதவியாக இருந்தது. நேருவின் குடும்பத்தில் சு . சாமி உள்ளிட்ட Rss காரர்களுக்குப் பிடித்த ஒரே தலைவர் ராஜீவ் மட்டும்தான் .அவர்களுக்கு சோனியாவையும் , ராகுலையும் சுத்தமாகப் பிடிக்காது .சோனியா பொறுப்பேற்ற தருணத்தில் பிஜேபி அலை இந்தியாவெங்கும் உச்சத்தில் இருந்தது. மிக நீண்ட காலமாக காங்கிரஸை ஆதரித்துக் கொண்டிருந்த பல Rssகாரர்கள் பிஜேபியின் பக்கம் சென்று விட்டனர். உலகிலேயே அரச ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கமான Rss ன் கட்டமைப்பும் , வட இந்தியாவில் அது மக்களிடம் ஊடுருவியிருக்கிற விதமும் நாம் கற்பனை செய்தே பார்க்க முடியாதது . அதுதான் ராகுலை படுமோசமாக வீழ்த்தியிருக்கிறது . அதற்கு புல்வாமா , 10% இட ஒதுக்கீடு , மோடி எதிர்ப்பு வாக்குகளின் சிதறல் ஆகியவையும் கூடுதல் வினையாற்றியிருக்கின்றன . இலங்கை குண்டு வெடிப்பும் கூட மறைமுகமாக ஒரு தாக்கத்தை உண்டாக்கியிருக்கலாம் . இந்த மாதிரியான அரசியலை Rss நுட்பமாக மக்களிடத்தில் பரப்பும். பொதுமக்களிடம் பயத்தை விதைத்து அதை தமக்கான அறுவடையாக மாற்றிக் கொள்வது Rss க்கு கை வந்த கலை .

காங்கிரஸ் கட்சியின் குறுநில மன்னர்கள் ராகுலை ரசிக்கவில்லை. உலகமயமாக்கலின் கொடும் விளைவை மிகச்சரியாகப் புரிந்து கொண்ட கம்யூனிஸ்ட் அல்லாத முதல் தேசியத் தலைவரும் ராகுல்தான் . அவரை தமக்கான அச்சுறுத்தலாகவே பல காங்கிரஸ் பெருந்தலைகள் எண்ணிக் கொண்டிருக்கின்றன .ராகுலிடம் இருக்கிற ஜனநாயகப் பண்பை அவர்கள் தமக்கு சாதகமாக்கிக் கொண்டு தங்களை மாற்றிக் கொள்ளாமலேயே பயணித்து வருகின்றனர் . அவர்களின் இருப்பால்தான் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிய முடியவில்லை. இந்தியாவில் நாம் ஆயிரம் பேசினாலும் யார் பிரதமர் ? என்கிற கேள்விக்கான விடையாகவே மக்கள் தேர்தலை பார்க்கின்றனர் . மோடிக்கு மாற்று யார் ? என்கிற கேள்வியே குழப்ப நிலையில் இருந்த சிலரையும் இந்தப் பக்கம் திருப்பியிருக்கலாம் .

மோடி எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்க ராகுல் எடுத்த முயற்சிக்கு எவருமே கை கொடுக்கவில்லை ( காங்கிரஸூம் கூட ) மம்தா, லாலு, முலாயம், மாயாவதி , கெஜ்ரிவால் சந்திரசேகர் ராவ் , நவீன் பட்நாயக், ஏன் இடதுசாரிகளுக்கும் கூட பிஜேபி என்கிற மாபெரும் அபாயத்தைத் தடுப்பதை விட அவர்களின் பிராந்திய அதிகார நலன்களே முக்கியமாக இருந்தன . ( அவர்கள் இந்தத் தேர்தலில் பிஜேபி இருநூறைத் தாண்டாது என்கிற மிதப்பில் இருந்தனர்) . சந்திரபாபு நாயுடு முயற்சியெடுத்தும் கூட பிறர் ஒத்துழைக்கவில்லை. ஆனால் அதைச் சரியாகக் கணித்துச் செயல்பட்டு வெற்றி பெற்றிருப்பவர் ஸ்டாலின் மட்டுமே . இந்தத் தேர்தலில் திமுக பெற்ற பெருவெற்றிக்குக் காரணம் தமிழகத்தில் சுழன்றடித்த மோடி எதிர்ப்பலையே . அதை மிகச்சரியாகப் புரிந்து கொண்டு மோடிக்கு எதிரான ஒரு வாக்கு கூடப் பிரிந்து விடக்கூடாது என்கிற அக்கறையோடு சகலருக்கும் இடங்களை வாரி வழங்கி அந்த எதிர்ப்பை அவர் அறுவடை செய்திருக்கிறார். காங்கிரஸிற்கு 9 இடங்கள் கிடைத்தற்கும், கேரளம், வங்கத்தில் பூஜ்யம் வாங்கிய போதும் இடதுசாரிகள் இங்கிருந்து நான்கு இடங்களை பெற்றதற்கும் ஸ்டாலினின் ஒருங்கிணைப்பே காரணம்! இதைப் பிறர் செய்யாமலிருந்து விட்டு ராகுலின் மீது பழி போடுவது அபத்தமானது . அத்தனை கட்சிகளும் ஒருங்கிணைந்து ராகுலை பிரதமர் வேட்பாளராக நிறுத்திய பிறகு தோற்றிருந்தால் இப்படிக் கேட்க நியாயம் இருக்கிறது. ஒருவேளை அப்படி நிகழ்ந்திருந்தால் கண்டிப்பாக இவ்வளவு பெரிய வெற்றியை பிஜேபி பெற்றிருக்காது . காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியே மலர்ந்திருக்கும் .

தேர்தல் தோல்வியை வைத்து ஒரு கட்சியை முடிந்து விட்டதாகக் கருதுவதோ , தலைவரை எள்ளி நகையாடுவதோ தேர்தலை வெறும் சூதாட்டமாகப் பார்க்கிறவர்களின் மனநிலை. காங்கிரஸ் கண்டிப்பாக மீண்டெழும். சகலரும் ராகுலை நோக்கி ஓடிவருவார்கள் . அதற்கான நியாயங்களை மோடி இந்த ஐந்தாண்டு காலத்தில் செய்து முடிப்பார் . இந்த ஐந்தாண்டு காலம் ராகுலுக்கு சோதனைகள் நிறைந்தது. கட்சிக் கட்டமைப்பை பலப்படுத்தி மக்களை சந்தித்துக் கொண்டிருந்தாலே போதும். எல்லாம் தானாகவே நிகழும்.

வெறுப்பிற்கு எதிராக அன்பையும் , ஆரவாரத்திற்கு எதிராக நிதானத்தையும் , பகட்டிற்கு முன்னால் எளிமையையும் , சூளுரைகளுக்கு மாற்றாக உரையாடலையும் முன்வைத்த நேருவின் பேரனை நான் வணங்குகிறேன்.

நீ பப்புதான். தென்னிந்தியர்களின் மனதிலும், மடியிலும் ஏறி அமர்ந்திருக்கிற பப்பு. உன் அரசியலைப் புரிந்து கொள்கிற பக்குவம் இன்னும் வட இந்தியர்களுக்கு வாய்க்கவில்லை . காலம் மாறும்…எல்லாம் மாறும் . அதுவரை சளைக்காமல் செயல்படுவதற்கான வல்லமையை உன் பெயருக்குப் பின்னால் இருக்கும் ‘காந்தி’ தந்து கொண்டிருக்கட்டும் .

கடவுளின் தேசத்திலிருந்து நாடாளுமன்றம் செல்லப் போகிறவனே ! நீ தெற்கைப் புரிந்து கொண்ட நிலா . பல்லாயிரம் வாட்ஸ் பல்புகள் ஃபீஸ் போன பிறகு காரிருளில் நிற்கப் போகும் வட இந்தியக் கண்கள் உன்னைத் தேடப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Still I Love you Rahul !