புதுப்புது அரசியல் குழப்பங்கள்

மிகுந்த எதிர்பார்ப்புடன், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டு வரப்பட்டது. பொருளாதார அபிவிருத்தியையும் பயங்கரவாதத் தாக்குதலால் உயிரிழந்த மக்களுக்கான நீதியையும், ராஜபக்‌ஷர்கள் தலைமையிலான அரசாங்கம் பெற்றுத்தரும் என்று சிங்கள மக்கள் திடமாக நம்பினார்கள்.

அது, அந்த நேரத்தில் நியாயமானதொரு முன்கணிப்பாகவும் இருந்தது. ஆனால், இதுபோன்ற காரியங்களில் வல்லவர்களான ராஜபக்‌ஷர்கள், இவ்விடயங்களில் முனைப்புடன் செயற்பட்டாலும், அண்மைக்காலத்தில் மேலெழுந்த நெருக்கடிகளால், அந்த விம்பம் உடைந்து விடுமோ என்ற நிச்சயமற்ற நிலைமை தோன்றியுள்ளது.

‘கொரோனா வைரஸ் பரவலும் அதனுடன் தொடர்புபட்ட ஜனாஸா எரிப்பு விவகாரம் போன்ற நெருக்கடிகள் இல்லையென்றால், நாட்டில் பாரிய அபிவிருத்தியை அரசாங்கம் நிகழ்த்தியிருக்கும்’ என்ற தோரணையிலேயே ஆளும் கட்சியினர் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.

ஆளும் குடும்பத்துக்குள்ளும் கூட்டுக் கட்சிகளுக்கு இடையிலும் உள்ளகப் புகைச்சல் ஏற்பட்டிருக்கின்றது என்பதை அரசியல் நோக்கர்கள் ஆய்ந்தறிந்து கூறியிருந்தனர். 2005-2010 வரையான பொற்காலம் போல இது அமையுமா என்பதில், அப்போதே சந்தேகங்களும் முன்வைக்கப்பட்டன.

ஆனால், முன்னைய பத்தி ஒன்றில் நாம் குறிப்பிட்டிருந்ததைப் போல, கொவிட்-19 நெருக்கடிதான் ஏனைய விவகாரங்களை எல்லாம் தற்காலிகமாக மறைத்துக் கொண்டு இருந்துள்ளது என்பது, இப்போது படிப்படியாகப் புலனாகத் தொடங்கியுள்ளது. இதனால், தேசிய அரசியலில் பலமானதோர் அதிர்வு உணரப்படுகின்றது என்பதை மறைக்க முடியாது.

ஆளும் ராஜபக்‌ஷ குடும்பத்துக்குள் எந்தக் கருத்து வேற்றுமையும் இல்லை என்பதை எப்படியோ சமாளித்து விட்டார்கள். இருப்பினும், அதைவிடப் பெரிய, சிக்கலான அரசியல் குழப்பங்கள், இப்போது தேசிய அரசியலில் முன்கை எடுத்துள்ளன.

குறிப்பாக, மாகாண சபை முறைமை, மாகாண சபைகளுக்குத் தேர்தலை நடத்துதல், கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் உள்ளிட்ட விடயங்களில் கடுமையான கருத்து மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் அரசாங்கத் தரப்பில் இருந்து கடுந்தொனியில் விளக்கம் அளிக்கப்படுகின்றமை, பல்வேறு விமர்சனங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளன.

இந்தக் குழப்பங்கள் முன்னொருபோதும் இல்லாத ஒரு பரிமாணத்தை எடுத்திருப்பதாகத் தெரிகின்றது. ஆளும்கட்சி, அவர்களை விமர்சிக்கும் அரசியல்வாதிகள், பௌத்த தேரர்கள் என முத்தரப்பினருக்கு இடையிலான ஒரு முக்கோண முறுகலாக, இந்தக் குழப்பங்கள் உருமாற்றம் பெற்றிருக்கின்றன.

இதேவேளை, பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் கத்தோலிக்க மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கும் அரசாங்கம் கடுகதியில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இது பாராட்டத்தக்க விடயமாகும்.

ஆனால், உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறியாமை தொடர்பில், கத்தோலிக்க சமூகம் கடும் அதிருப்தியுற்று உள்ளது. அரசாங்கம் என்னதான் வியாக்கியானம் கூறினாலும், பேராயரின் கருத்துகள் கத்தோலிக்க சமூகத்தின் மனோநிலையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. மே தினக் கூட்டங்களைத் தனித்தனியாக நடத்த இருப்பதாகவும் மாகாண சபைத் தேர்தலில் தனிவழியில் பயணிக்க இருப்பதாகவும் பல செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதையடுத்து, மாகாண சபை தொடர்பான சர்ச்சைகள் ஏற்பட்டன. மாகாண சபை முறைமையை நீக்குவதற்கே அரசாங்கம் பெரிதும் விரும்பியது; விரும்புகின்றது. ஆனால், இந்தியாவின் அழுத்தம் காரணமாகவும் வேறுபல நடைமுறைச் சிக்கல்கள் காரணமாகவும் மாகாண சபை முறைமையை முற்றாக நீக்க முடியாத யதார்த்த நிலை காணப்படுகின்றது.

எனவே, புதிய அரசியலமைப்பைக் கொண்டுவந்து, அதில் சூட்சுமமாக ஏதாவது ஏற்பாட்டைக் கொண்டு வருவோம் என்று ஆட்சியாளர்கள் நினைத்தாலும், இப்போதிருக்கின்ற அரசியல் சூழலில், அரசியலமைப்பு மறுசீரமைப்பொன்றை சில மாதங்களுக்குள் கொண்டு வருவது இலகுவான காரியமாகவும் தெரியவில்லை.

ஆனால், அதுவரையில் மாகாண சபைத் தேர்தலை இழுத்தடித்துக் கொண்டு செல்லவும் முடியாது. சரி! தேர்தலை நடத்துவோம் என்ற நிலைப்பாட்டுக்கு அரசாங்கம் வந்தாலும், எந்த முறையில் நடத்துவது என்பது, அடுத்த பிரச்சினையாகக் காணப்படுகின்றது.

இதற்கிடையில், மாகாண சபை முறைமையை முற்றாக நீக்க வேண்டும் என்று அரசியல்வாதிகளும் துறவிகளும் கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர். அத்துடன், “தேர்தலை நடத்த வேண்டாம்; தோல்வியைச் சந்திக்க விரும்பினால் நடத்துங்கள்” என்று இன்னுமொரு தேரர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

தேர்தலை நடத்த வேண்டாம் என்று கூறுவதற்குப் பின்னணியில், பிரதானமாக இரு காரணிகள் இருப்பதாக ஊகிக்கலாம்.

ஒன்று, வெற்றி பற்றிய நிச்சயமின்மை.

இரண்டாவது, மீண்டும் மாகாண சபை முறைமையை உயிர்ப்பிப்பதானது, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் இதுவரை நடைமுறைப்படுத்தாத விடயங்கள் (காணி, பொலிஸ் அதிகாரம்) பற்றிய அழுத்தங்கள் எழலாம்.

இந்தச் சிக்கலுக்குள் அரசாங்கம் மாட்டிக் கொண்டிருந்த நிலையில், அது போதாது என்று, இப்போது கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு பற்றிய விவகாரம் சூடுபிடித்துள்ளது.

கொழும்புத் துறைமுக நகரை கிட்டத்தட்ட சீனாவின் ஆதிக்கத்துக்குள் கொண்டு வருவதற்கு எடுக்கப்படும் எத்தனங்கள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. இது தனிநாட்டுக்குச் சமமானது என்றும், சீனாவின் கொலனித்துவத்துக்குள் கொண்டு வரும் முயற்சி என்றும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

அண்மைக்காலமாக, கிழக்கு முனையத்தையும் அதேபோன்று துறைமுக நகரையும் மையமாக வைத்து, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான அதிகாரப் போட்டிக்குள் இலங்கை சிக்கித் திணறுவதன் ஒரு வெளிப்பாடாகவும் இதைக் கொள்ளலாம்.

கொழும்புத் துறைமுக நகர் திட்டமானது, தனிநாடு வழங்குவதற்குச் சமமமான ஒன்று என்று முன்னாள் நீதி அமைச்சரும் பௌத்த துறவிகளோடு நெருக்கமான உறவைக் கொண்டவராக அடையாளப்படுத்தப்பட்டவருமான விஜேதாஸ ராஜபக்‌ஷ எம்.பி, சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

அதிலிருந்து இரு தினங்களுக்குள், ஊடகங்களை அழைத்த அவர், ஜனாதிபதி தம்மை அச்சுறுத்தும் தொனியில் தொலைபேசியில் உரையாடியதாகப் பகிரங்கமாகவே சொன்னார். இது பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.

முன்னதாக, துறைமுக நகர் திட்டமும் அதற்கான சட்டமூலமும் சீன கொலனித்துவம் மேலோங்குவதவற்கு வழிவகுக்கும் என்று முறுத்தொட்டுவே ஆனந்த தேரர் கூறியிருந்தார். இந்நிலையில், ஜனாதிபதி அச்சுறுத்தியதாக விஜேதாஸ கூறியதும் இவ்விவகாரம் கொதிநிலையை அடைந்துள்ளது என ஊகிக்கலாம்.

“அச்சுறுத்தலால் எம்மை அடக்க முடியாது; தேவையேற்படின் வீதிக்கு இறங்குவோம்” என்று ஆனந்த தேரர் என்றும் எச்சரித்துள்ளார். வேறுபலரும் துறைமுக நகர சட்டமூலத்துக்குக் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, விசாரிக்கப்படுகின்றன.

“விஜேயதாஸ ராஜபக்‌ஷவுக்கு ஜனாதிபதி அச்சுறுத்தல் விடுக்கவில்லை. மாறாக, தெளிவுபடுத்தினார்” என்று ஆளும் தரப்பு கூறுகின்றது. துறைமுக நகர், சீனாவின் கொலனித்துவத்துக்குள் வராது என்று விளக்கமளிக்கப்படுகின்றது. ஆயினும், எதிர்ப்புக் குரல்கள் அடங்கிய மாதிரித் தெரியவில்லை.

அரசியலில் அல்லது ஓர்ஆட்சியில் இவ்வாறான நெருக்கடிகள் வருவதோ, எதிர்ப்புகள் ஏற்படுவதோ சர்வ சாதாரணமானதுதான். கொவிட்-19 நெருக்கடிக்குப் பின்னரான காலத்தில், இவ்வாறான சவால்களை எதிர்பார்த்திராத அரசாங்கம், சற்றுத் தடுமாறுவதும் ஆச்சரியமானதல்ல.

ஆனால், இதுவரை காலமும் எதிரணியே ஆளும் தரப்பை விமர்சித்து வந்த நிலையில் இப்போது, உள்ளகக் குழப்பங்கள் பீறிட்டு வெளிக் கிளம்பியுள்ளன. அரசாங்கத்துக்கு உள்ளேயே ஆளுக்காள் விமர்சனங்களை முன்வைப்பதும் கவனிப்புக்குரிய விடயமாகும்.

மிக முக்கியமாக, பிக்குகள் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கான காரணம் எதுவாக இருந்தாலும், அது சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடிய ஓர் அறிகுறியல்ல!இலங்கையின் கடந்தகால வரலாற்றைத் தெரிந்தவர்கள், இத்தகைய சூழலை நன்கு அறிவார்கள். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்குப் பின்னால், துறவிகளுடன் தொடர்புடைய சக்திகள் இருந்தன என்பது நாடறிந்த சமாச்சாரமாகும்.

எது எவ்வாறிருப்பினும், இதில் ஏதாவது ஒரு பிரச்சினைக்கு சுமூகமாகத் தீர்வு காண்பதற்கோ, கொதிநிலையை சற்றுத் தணிய வைப்பதற்கோ ஆளும் தரப்போ, ஏனைய சக்திகளோ முயற்சிகளை எடுப்பதாகத் தெரியவில்லை.

பல அரசியல்வாதிகளும் ஆளும், எதிர்த்தரப்பில் சிலரும், பரஸ்பரம் எதிர்வினையாற்றுவதிலும், தம்மை நியாயப்படுத்துவதிலும், ‘தாம் பிடித்த முயலுக்கு மூன்றுகால்’ என்று நிரூபிப்பதிலும் காட்டுகின்ற அக்கறையை, நாட்டின் நலனுக்காக வெளிப்படுத்த வேண்டிய தேவை கடுமையாக உணரப்படுகின்றது.

அரசியல்வாதிகளின் அரசியல் சண்டைகள், குழிபறிப்புகளில் மக்கள் பலிக்கடாவாகிவிடக் கூடாது என்பதே யாவரினதும் எதிர்பார்ப்பாகும்.