இலங்கை அரசியல் அமைப்பு மாற்றம்

புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் பங்களிப்பு

கடந்த 13-03-2016ம் திகதி லண்டனில் புலம்பெயர் இலங்கைத் தமிழர் அமைப்பினால் Non Rresident Tamils of SriLanka (N R T S L) ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல் அமைப்பு மாற்றம் தொடர்பான கலந்துரையாடல் பற்றிய விபரங்கள் அதன் முக்கியத்துவம் கருதி இங்கு வழங்கப்படுகிறது.

பின்னணி

இலங்கையில் புதிய அரசியல் மாற்றம் ஒன்றிற்கான கருத்துப் பரிமாற்றம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இலங்கை சுதந்திரமடைந்து 68 ஆண்டுகள் ஆகின்றன. இக் காலத்தில் மூன்று அரசியல் அமைப்புகள் நடைமுறைக்கு வந்திருந்தன. ஆனால் இம் மூன்று அரசியல் யாப்புகளும் நாட்டு மக்களின் முழுமையான அபிப்பிராயத்தைப் பெறத் தவறியுள்ளன. குறிப்பாக 1972 ம், 1978 ம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட 1ம், 2ம் குடியரசு யாப்புகள் நாட்டின் தேசிய சிறுபான்மை இனங்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கவில்லை. இதன் காரணமாக தேசிய இனப் பிரச்சனை மிகவும் கூர்மை அடைந்து ஆயுதப் போராட்டமாக பரிமாணம் பெற்று தேசத்தின் ஜனநாயக கட்டுமானம் படிப்படியாக பலவீனமாகி ராணுவ ஆதிக்கம் அதிகரித்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை சர்வாதிகார ஆட்சியை நோக்கிப் பயணித்தது.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாகவும், சிங்கள தேசியத்தை முதன்மைப்படுத்துவதாகவும் கூறி கட்டமைக்கப்பட்ட இவ் ஆட்சிமுறை எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. பதிலாக குறிப்பிட்ட அதிகார வர்க்கத்தினர் தேசிய செல்வத்தைச் சுரண்டவும், சிறுபான்மைத் தேசிய இனங்களிடையே மிக மோசமான பகைமைகளைத் தூண்டவும் காரணமாக அமைந்தது. தேசத்தின் எதிர்காலத்தை, முன்னேற்றத்தை நேசிக்கும் மக்களிடையே, அறிவு ஜீவிகளிடையே இது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இதன் விளைவாக ஆளும் கட்சியான சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் ஏற்பட்ட பிளவு புதிய மாற்றத்தை 2015ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி ஏற்படுத்தியது. இந்த மாற்றத்தில் தேசத்தின் சகல இனங்களும் இணைந்து ஒருமானதாக செயற்பட்டது பலருக்கு வியப்பை அளித்தது. எந்தவிதமான கட்டமைப்பும் இல்லாத நிலையில் மக்கள் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது ஆட்சியாளர் மீதான வெறுப்புணர்வின் எல்லையை அடையாளப்படுத்தியது.

ஜனவரி 8ம் திகதிய தேர்தல் இலவச அரசிக் கோஷங்களை வைத்து, அல்லது இலங்கையை இன்னொரு சிங்கப்பூராக மாற்றும் கோரிக்கையை முன்வைத்து நடத்தப்படவில்லை. நல்லாட்சி, தேசிய நல்லிணக்கம் என்பனவே தேர்தல் கோஷங்களாக அமைந்தன. அதன் பின்னணியில் 2015ம் ஆண்டு ஆகஷ்ட் 18ம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தல் இன்னொரு வரலாற்றைப் படைத்தது. இலங்கையின் எதிரும் புதிருமாக செயற்பட்ட பிரதான கட்சிகளான சிறீலங்கா சுதந்திரக்கட்சி, ஐ தே கட்சி என்பன தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தன. இத் தேசிய அரசாங்கத்தின் பிரதான நோக்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது, தேர்தல் முறையை மாற்றுவது, தேசிய இனப் பிரச்னையை தீர்ப்பது என பிரகடனம் செய்தன.

அதன் அடிப்படையிலேயே தற்போது பாராளுமன்றம் அரசியல் அமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்த கருத்துக்கள் மக்களிடம் பெறப்பட்டு வருகிறது. இத் தருணத்தில் தேசிய இனப் பிரச்சனையில் காத்திரமான பங்கை வகித்த புலம்பெயர் மக்கள் தமது கருத்துக்களையும் வெளிப்படுத்துவது அவசியமானது. இப் பிரச்சனை ஏதாவது ஒரு காரணத்தால் மீண்டும் ஏமாற்றப்படுமானால் அதனை உலகத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் பாரிய பொறுப்பு அவர்களுக்கு உண்டு. எனவே இன்னொரு ஏமாற்றத்தைத் தவிர்க்க வேண்டுமெனில் புலம்பெயர் தமிழர்கள் தமது கருத்துக்களை தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளுக்கூடாக வழங்குவதும், இப் பேச்சுவார்த்தைகளில் அவர்கள் இன்னொரு ஏமாற்றத்தை அடையவிடாமல் பலமான பின்னணியை வழங்குவதும் புலம்பெயர் மக்களின் பாரிய கடமையாகும்.

தற்போதைய அரசியல் நிலமை

சமீப காலமாக தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வாக அரசியல் அமைப்பின் 13வது திருத்தம் வழங்கியுள்ள உரிமைகள், அதற்கு அப்பாற் செல்லல் எனவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அவர்களால் 2000ம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட தீர்வுப் பொதி தீர்வாக அமையலாம் என்ற விபரங்கள் வெளியாகியிருந்தன. எனவே தற்போது 13வது திருத்தத்தின் நிலை, அதில் காணி, பொலீஸ் அதிகாரம் என்ன? என்பது போன்ற விபரங்கள் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக 13வது திருத்தத்திற்கு அப்பாலும் செல்லப் போவதாக ரணில் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் ஆராயப்பட்டன.

ரணில் அவர்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 11ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் தற்போது நடைமுறையில் உள்ள 13வது திருத்தத்தினை மேலும் செழுமைப்படுத்தும் நோக்கில் நல்லிணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஓற்றை ஆட்சிக்குள் மேலும் அதிகாரப் பரவலாக்கத்தினை மேற்கொள்ள இருப்பதாகவும், எத் துறைகளில் அதிகாரங்கள் மேலும் பரவலாக்கம் அவசியம் என்பது குறித்து ஆய்வுகள் நடப்பதாகவும் தெரிவித்திருந்தார். மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அவை மத்திய அரசினால் மீளப் பெறமுடியாது எனவும், எதிர்காலத்தில் மாகாண சபைகள் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ஏன் பயன்படுத்தவில்லை? என்பதே விவாதமாக அமையும் எனவும் தெரிவித்தார்.

மாகாணசபைகள் சட்டம் இயற்றுவதில் போதுமான அனுபவம் அற்ற நிலையில் உள்ளதாக தெரிவித்த அவர் அவ்வாறான அனுபவங்களைப் பெறுவதற்கு ஒஸ்ரியா போன்ற நாடுகளின் அனுபவம் பொருத்தமானது எனவும் குறிப்பிட்டு பாராளுமன்றம் தேசியப் பிரச்சனைகள் குறித்தே சட்டங்களை இயற்றும் எனவும், பிராந்தியங்கள் அவற்றின் தேவைக்கேற்ற சட்டங்களை ஆக்க முடியும் எனவும், மிகவும் விரிவான நிறைவேற்று அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கலாம் எனவும் தெரிவித்தார்.

எமது பார்வை

இதனைக் கருத்தில் கொண்டே புலம்பெயர் இலங்கைத் தமிழர் அமைப்பு (N R T S L)அரசியல் அமைப்பு கலந்துரையாடலை ஆரம்பித்தது. இரண்டாவது சந்திப்பாக அமைந்த இக் கலந்துரையாடலில் தாயகத்தில் செயற்படும் முக்கியமான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள், சமூக சேவையாளர்கள், சட்டத்தரணிகள் என பல தரப்பினரும் கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கியது சிறப்பம்சமாகும். அரசியல் அமைப்பு பல்வேறு அம்சங்களைத் தொட்டுச் செல்கின்ற போதிலும் இச் சந்திப்பில் பிரச்சனையின் முக்கியத்துவம் கருதி தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு குறித்த அம்சங்கள் சில குறித்தே பேசுவதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மிகவும் விரிவான வகையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடல் பின்வரும் தலைப்புகளில் கவனத்தைச் செலுத்தியது.

சமஷ்டி அல்லது ஒற்றை ஆட்சி

இதுபற்றிய விவாதங்கள் பெயரில் கவனம் செலுத்தாது அதன் உள்ளடக்கம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என வற்புறுத்தப்பட்டது. இவ் ஆட்சி முறை குறித்த விவாதங்களின் போது பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் காணப்படும் பிரிவினை பற்றிய அச்சங்களும், அதே போன்று வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீளவும் பறிக்கப்படலாம் எனக் காணப்படும் சிறுபான்மையினரின் அச்சங்களும் நீக்கப்பட வேண்டும் என வற்புறுத்தப்பட்டது.

அதிகார பரவலாக்க அலகு

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது 13வது திருத்தத்தில் இருந்தபோதிலும் அது எதிர்கால வாக்கெடுப்பின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என்பது அதன் உள்ளடக்கமாகும். எனவே இணைப்பு என்பது எதிர்காலம் சம்பந்தப்பட்டது என்பதால் அரசியல் யதார்த்தத்தினைக் கவனத்தில் கொண்டு மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குவது தொடர்பாக கவனத்தைச் செலுத்துவதே பொருத்தமானது. எனவே செயற்பாட்டிற்கு உகந்ததான தீர்வுகள் குறித்து செயற்படுவது அவசியம்.

இவ் விவாதங்களின் போது முஸ்லீம் மக்களுடன் இவை குறித்து புரிந்துணர்வுக்குச் செல்வது அவசியம் எனவும் வற்புறுத்தப்பட்டது.

காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்கள்

அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்தின் பிரகாரம் மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள போதிலும் அவை மட்டுப்படுத்தப்பட்டதாக, வௌ;வேறு விதமான வியாக்கியானங்களுக்கு உட்பட்டதாக, அரசியல் விருப்பம் அற்றதாக உள்ளது. இவை குறித்து மேலும் முக்கிய விபரங்கள் 2000ம் ஆண்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கபட்ட மசோதாவில் மேலும் பல விபரங்கள் இருப்பதால் அவைபற்றி மேலும் ஆராய தீர்மானிக்கப்பட்டது.

ஆளுநரின் அதிகாரங்கள்

ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வருமாயின் ஆளுநர் பற்றிய பதவி அல்லது அதிகாரங்கள் குறித்த மாற்றங்கள் ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது. இருப்பினும் நிதி வழங்குதல், கட்டுப்படுத்துதல் என்பவை பற்றி பேசப்பட்டன.

தேசிய இனப் பிரச்சனையை தீர்ப்பதற்கான பொறிமுறைகள் குறித்தும் பேசப்பட்டன. குறிப்பாக வழங்கிய அதிகாரங்களை மீளப் பெறாமல் இருப்பதற்கு அரசியல் அமைப்பு மூலமான பாதுகாப்பு, இரண்டாவது சபை அல்லது செனட் சபை ஒன்றைத் தோற்றுவித்தல் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இக் கலந்துரையாடலை மேலும் விஸ்தரித்துச் செல்ல பல தளங்களில் உள்ள செயற்பாட்டாளர்களின் பணி ஒன்றிணைக்கப்படுவது அவசியமானது. உலகம் முழுவதும் விரவி வாழும் அரசியல் ஆர்வலர்கள் இப் பணியில் எம்முடன் இணைவது அவசியம்.

புகலிட மக்கள் சார்பில் அவர்களது விருப்புகளை தனியாக சமர்ப்பிக்கும் பொருட்டு தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக் குழுவினர் மேலும் பல அபிப்பிராயங்களைத் திரட்டி அறிக்கை ஒன்றைத் தயாரித்து அரசியல் அமைப்பு பிரதிநிதிகள் குழுவிற்கு அல்லது கூட்டமைப்பு மூலமாக வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

இவ் அபிப்பிராயங்களைப் பெற்று அறிக்கை ஒன்றினை எதிர்வரும் ஏப்ரல் 20ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிப்பதென ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இவ் அறிக்கையில் மேலும் இணைக்கப்ட வேண்டிய யோசனைகள் பலரிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன. புலம்பெயர் தேசங்களில் வாழும் எமது மக்கள் இப் பிரச்சனையில் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள அல்லது இணைந்து கொள்ள, அல்லது எழுத்து மூலமான யோசனைகளை இணைத்துக்கொள்ள கீழ்க்கண்ட மின் அஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளுமாறு விநயமாக வேண்டுகிறோம்.

nrtamilssl@hotmail.com