எதிரி அல்லாத, எதிர்ப்பு இல்லாத எதிர்க்கட்சியா?

எதிர்கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இரா சம்பந்தன் ஐயாவுக்கும் த.தே.கூ க்கும் வாழ்த்துக்களைக் கூறிக்கொண்டு அரசியல் புலத்தினுள் நுளைவோம். ஈழத்தமிழர்களின் அரசியல் வரலாற்றில் ஜீ.ஜீ க்குப் பின் தொடக்கி வைக்கப்பட்ட அரசியல் தான் உணர்ச்சியரசியல், எதிர்ப்பரசியல் என்பன. நாம் தமிழர்கள் என்ற ஒற்றை அடிப்படைக் காரணியைக் கொண்டு நடத்தப்பட்ட அரசியல் விபச்சாரமே இவ்வரசியல்களின் மூலாதாரமாகும். இது தமிழீழப் பிரகடனத்தினூடாக புலிகள் வரை தொடர்ந்தது. புலிகளின் அழிவுடனும், பசி, துன்பம், போரின் அழிவுகளுடன் உணர்ச்சி அரசியல் நின்றுபிடிக்க முடியாது அழிய முயன்ற போதும் ஒருசிலரும், கட்சிகளும் எஞ்சியிருந்த உணர்ச்சியரசியலையும் எதிர்ப்பரசியலையும் காப்பாற்ற முயன்றனர். இதன் ஒரு வடிவம்தான் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுமாகும்.

சரி பிரபாகரன்தான் உயிருடன் இருக்கட்டுமே. படைகளுடன் இருந்த பிரபாகரனால் எதைச்சாதிக்க முடிந்தது? ஈழத்தின் ஒரு துண்டைதானும் தமிழர்களுக்கு என நிரந்தரமாகத் தொடர்ந்து வைத்திருக்க முடிந்ததா? அரசியல் இல்லாத ஆயுதம் வெறும் வெத்து வேட்டே.

ஆயுதப் போராட்டத்தால் மட்டும் விடுதலையை அடைய முடியாது. அரசியலால் மட்டுமே விடுதலையை அடைய முடியும். அரசியலில் ஆயுதம் என்பது வெறும் கருவியே தவிர முடிவும் விடுதலையும் ஆயுதமல்ல.

இனி படையே இல்லாத பிரபாகரன் வந்து என்ன ஆகப்போகிறது இன்றைய யதார்த்த அரசியலின் முன் உணர்ச்சியரசியலும், எதிர்ப்பரசியலும் தோல்வியடைந்தன என்பதை நடந்து முடிந்த தேர்தல்கள் குறிகாட்டி நிற்கின்றன.

வயிறு பசிக்கும் போது நாம் தமிழர் என்று மூச்சுப்பிடித்து உணவு கூடக் கிடைக்கப் போவதில்லை என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள் என்பதை அறிக. தமிழர்களுக்கு என ஒரு நிரந்தர, நின்மதியான எதிர்காலம் தேவை என்றால், நிச்சயம் இராஜதந்திர அரசியலே ஒரேவழி.

இந்த அரசியலை சம்பந்தர் அழகாகவே செய்து வந்துள்ளார் என்பதை கடந்த தேர்தல்களும், நடவடிக்கைகளும் கட்டியம் கூறி நிற்கின்றன.

சம்பந்தர் என்பவர் வயது முதிர்ந்த கிழமா? அரசியலில் பழுத்த பழமா? இந்த இரா.சம்பந்தன் அவர்கள் உணர்ச்சி அரசியல் பேசி தமிழரசுக் கட்சியில் இருந்து கூட்டணி ஊடாக கூட்டமைப்புக்கு
வந்தவர்.

இவர் அரசியலில் நடந்து வந்த பாதையில் கடந்து வந்து அனுபவங்கள் இவரை யதார்த்த, இராஜதந்திர அரசியலில் ஈடுபடச் செய்தது என்பதே நிஜமாகும். ஆக சம்பந்தர் கிழம் மட்டுமல்ல அரசியல் பழமுமே.

1977ல் உணர்ச்சியரசியல் நடத்தி எதிர்க்கட்சித் தலைவரானவர் திரு.அமிர்தலிங்கத்துடனும் இருந்தவர் இரா சம்பந்தர். உணர்ச்சி அரசியலும், சந்தர்ப்ப அரசியலும் கொண்டவர் மேல் இத்தேர்தல் புழுதிவாரி இறைத்தது.

இலங்கைக் கொடியை சிங்கள அரசியல் கட்சிகளுடன் சம்பந்தரும் தூக்கிப் பிடித்தார் என்பதை தூக்கிப் படித்தும், அரசுடன் இரகசியப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார் என்பதைக் காரணம் காட்டியும் சம்பந்தரை துரோகியாக்கி, சேறுவாரி எறிந்து அரசியல் இலாபம் தேட முயன்றவர்கள் மூக்குடைந்தனர்.. இரு யதார்த்தமான உண்மைகளை நாம் புரிந்து கொள்வது அவசியம்.

சிங்கள அரசியல் கட்சிகளுடன் சம்பந்தர் இரகசியப்பேச்சு வார்த்தை நடத்தினார் என்று குற்றம் சாட்டும் உணர்ச்சி அரசியல் பட்டாளங்களே சிந்தியுங்கள். உணர்ச்சி அரசியல் நடத்திய புலிகளும் இதை செய்தார்கள். எதிரியைப் போருக்கழைப்பது என்றாலும் அவர்களுடன் பேசியே ஆகவேண்டும். இராஜதந்திர அரசியலில் பேச்சுவார்த்தை என்பது உயரிய இடத்தைப் பெறுகிறது என்பதை அறிக.

சம்பந்தர் இலங்கைக் கொடியை சிங்கள அரசியல்வாதிகளுடன் தூக்கிப் பிடித்தார், இலங்கைச் சுதந்திரதினத்துக்கு போனார் என்று குற்றம் சாட்டுபவர்களே! இலங்கை என்பது ஒற்றைநாடு என்பது தான் இந்தநிமிடம் வரை சர்வதேசத்தால் அங்கிகரிக்கப்பட்ட உண்மை.

சர்வதேசிய விளையாட்டுக்கோ, வெளிநாடுகளில் உங்களை அறிமுகம் செய்யும் போதோ, நாம் இலங்கையர் என்பதைத் தவிர வேறு எந்த முறையிலும் அறிமுகம் செய்ய முடியாது.

தமிழீழம் என்பது இற்றைவரையில் கற்பனையான ஒன்றே. உலகில் அங்கிகரிக்கப்படாத கற்பனைத் தமிழீழத்தை வைத்து உங்களை நீங்களே அறிமுகப்படுத்த முடியாது என்பதே உண்மை. த.தே.கூ செய்வது யதார்த்த அரசியலே.

எமக்குத் தேவையான ஒருபொருள் வேறு ஒருவரிடம் இருக்கிறது என்றால் இரத்தம், வெட்டுக்கொத்து என்று இல்லாமல் பரிவாகப் பேசியோ, ஏமாற்றியோ தட்டிப் பறிக்கலாம். இப்படியான
இலகுவான முறை இருக்கும்போது எதற்காக சக்தியை விரையமாக்கி, உயிர்களைப் பறித்து அப்பொருளைப் பெறவேண்டும்?

இப்போ தமிழர்களின் நலன், விடுதலை, நின்மதியானவாழ்வு மனதில் கொள்ளப்பட்டதா என்பதுகேள்விக் குறியாகிறதல்லவா? ஜி ஜி 50க்கு 50 கேட்ட போது செல்வா கேட்டது சமஸ்டி. எதற்காக என்று வினாவிய போது அவர் சொன்ன பதில் ஜி ஜி யை விழுத்துவதற்கு எனக்கு வேறு வழியில்லை என்றார் செல்வா. இங்கே ஒரு தனிமனிதனான தமிழ் ஜி.ஜியை விழுத்துவதில் இருந்த அக்கறை மக்களில் இருக்கவில்லை என்றாகிறது. இதையேதான் அவர்கள் வழிவந்த புலிகளும் செய்தார்கள்.images (39)
மக்களுக்காக போராடும் புலி கெரில்லாக்கள் எப்படி மக்களுக்குள் ஒழித்தார்கள்? மக்களைக் காவு கொடுத்தார்கள்? கேடயமாக்கி மறைந்தார்கள்? தமிழர்களின் நலனுக்காக அவர்கள் செய்ததும், கொடுத்ததும் அவலவாழ்வே என்பது கண்கூடு.

நிலத்துப்புலி தான் இப்படி நடந்தார்கள் என்றால் புலத்துப் புலிகள் அதைவிட மோசமாக நடந்து கொண்டார்கள்.

மலசலகூடம் கழுவி மக்கள் பலரிடம், விடுதலையின் பெயரில் கப்பம் கேட்டுப் பெற்ற பணத்தை தமது நலன்களுக்காக அசையும், அசையாப் பொருள்களாக மாற்றினார்கள். இன்றும் அவற்றை அவர்களே அனுபவிக்கிறார்கள்.

இது புலிகளுக்கோ அன்றி அவலப்பட்ட எம்மக்களுக்கோ போய் சேரவில்லை. பிரபாகரன் வந்தால் கொடுப்பார்களாம். வரமாட்டார் என்பது நிச்சயம் தெரியும்.

பிரபா இருக்கிறார் வருவார் என்றால் மட்டுமே பதுக்கியதைப் பத்திரமாகப் பாதுகாக்கலாம் என்பதையும் அறிவர். இவற்றைப் பதுக்குவதற்காகவே பல புலத்துப் சருகுபுலிகள் மறைமுகமாக புலிகளுக்குத் துரோகியாகி, பிரபாகரனைக் கொன்றபின், அரசின் கைக்கூலிகளாக மாறினார்கள் இவர்கள் என்பதை இத்தருணத்தில் ஆணித்தரமாக முன்வைக்க வேண்டியுள்ளது

இராஜதந்திர அரசியல்…

இராஜதந்திர அரசியல் என்றால் என்ன? பொதுமேடை அமைத்து, இரகசியங்களை ஒலிபெருக்கியில் கத்திவிட்டு எதிரியுடன் பேசுவதா? உணர்ச்சி அரசியலின் எதிரியே இராஜதந்திர அரசியல். வெட்டிக் கொத்துவதை விடுத்து தட்டிப் பறிப்பதே இராஜதந்திரம். இந்த உணர்ச்சி அரசியல்வாதிகள் இராஜதந்திர அரசியல் செய்வோரை துரோகிகள் என்று வர்ணிப்பதும் வளக்கம். அதற்காக கருணா போன்றோரை இராஜதந்திரிகள் என்று எண்ணக்கூடாது.

ஒரு மாவியா அமைப்புக்கும், கெரில்லா விடுதலை அமைப்புக்கும் எந்த வித்தியாசமும் இல்லையோ அதே போன்றது தான் துரோக அரசியலும், இராஜதந்திர அரசியலும். இது சிலவேளை குழப்பமாகவே இருக்கும். முதலில் மாவியா அமைப்புகளுக்கும் கெரில்லா விடுதலை அமைப்புகளுக்குள் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பார்ப்போம்.

கெரில்லா அமைப்பினர் என்றும் ஆயுதங்களைப் பாவிப்பார்கள், கொலைகள் செய்வார்கள். கொள்ளை அடிப்பார்கள், மக்களுடன் மக்களாக இருப்பார்கள். ஆயுத, பொருள், பணம் கடத்தல்கள்
அசைவுகள், அனேகமாக இரவில் இருக்கும். சரியாக மாவியாக்களும் இப்படியே இயங்குவார்கள்.

மாவியா அமைப்புகளுக்கும் மக்களின் ஆதரவும் இருக்கும் அது உண்மை ஆதரவாகவும் பயத்தின் ஆதரவாகவும் இருக்கலாம். அப்படியாயின் இருவமைப்புகளுக்கும் இடையிலுள்ள வித்தியாசம் என்ன? நோக்கம் ஒன்றே வித்தியாசமானது. இவர்களின் இயங்குதன்மை ஒரேமாதிரி இருந்தாலும், மக்களுக்காகப் போராடும் கெரில்லா அமைப்பு மக்களை நேசிக்கும், அக்கறை கொள்ளும், அவர்களின் உரிமைக்காகப் போராடும். ஆனால் மாவியா இயக்கமோ தமக்காக, தம்வளர்ச்சிக்காக, தம்வாழ்வுக்காக, பெயருக்காக, அனைத்தையும் செய்யும். ஆக இவ்விருவமைப்புகளுக்கும் உள்ள வித்தியாசம் ஒரு மயிரிழை அளவே.

இனி புலிகள் கெரில்லாவிடுதலை அமைப்பா அல்லது மாவியாவா என்பதை நீங்களே முடிவு செய்யலாம்

துரோகி? இராஜதந்திரி?..

இவை இரண்டும் வெளிப்பார்வைக்கு ஒரேமாதிரியானவை. இருவரும் எதிரியுடன் இணைந்து பேசுவார்கள், பழகுவார்கள், நட்பும் பாராட்டுவார்கள். ஆனால் நோக்கம் மட்டும் எதிர்மாறாக இருக்கும்.

துரோகி தன் நலனுக்காக மாவியாபோல் இனம் மதம் சாதி அனைத்தையும் காட்டிக் கொடுப்பான். ஆனால் இராஜதந்திரியோ விட்டுக் கொடுப்பது போலவும் தட்டிக் கொடுப்பது போலவும் தம் மக்களுக்குரியதைத் தட்டிப் பறிப்பான்.

இனியாவது இராஜதந்திர அரசியல் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்

ஜனநாயக அரசியல் அமைப்பு…

ஜனநாயக அரசயில் அமைப்பில் எடுத்தோம் கவிழ்தோம் என்று எதையும் செய்ய இயலாது. உங்களது ஒருசிறு முன்மொழிவானது முதலில் பாராளுமன்றவரை கொண்டு சொல்ல முன்னர் பல
அறிவுரைஞர்களால் பரிசீலிக்கப்படும். அதன்பின் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும்.

அங்கேயும் அது ஆராயப்பட்டால் மந்திரிசபைக்கு அனுப்பப்பட்டு கருத்துப் பரிமாறப்படும் நடைமுறைப்படுத்துவதற்கான அனுசரணைகள் கண்டறியப்படும். அதன்பின்னர் அது மந்திரிசபைகளில் இருந்து நடைமுறை திட்டத்துடன் ஆணையகங்களுக்கு அனுப்பப்பட்டு
நடைமுறைப்படுத்துப்படும்.

இப்படி பல கட்டமைப்புகள் தாண்டியே ஒரு கட்சியின் முன்மொழிவு ஜனநாயகமுறையில் முன்னெடுக்கப்படுகிறது என்பதை அறிக. இதற்குள் பல தடைகளும் காலதாமதமும் ஏற்படச் சந்தர்பம் உண்டு. நாம் வோட்டுப் போட்டோம் தமிழீழத்தையோ சமஸ்டி அரசையோ காணவில்லை என்று கேட்கக் கூடாது.

எதிர்கட்சி..

இலங்கை பாராளுமன்றத்தில் த.வி.கூட்டமைப்பு எதிர்கட்சியாக அமைந்தது என்றால் இலங்கை முழுவற்கும் எதிர்க்கட்சி என்பதே பொருள். இதில் சிங்கள, தமிழ், முஸ்லிம், பேகர், மலையக
மக்களின் பிரதி நிதிகளாகவே இவர்கள் தொழிப்பட வேண்டியிருக்கும். பெரும்பான்மை இனத்தின் நலமும் இவர்கள் கருத்துக் கொள்ள வேண்டும்.

அப்படியானால் தமிழ்மக்கள் நிலை, அபிலாசைகள், விருப்பு வெறுப்புக்கள், யுத்தமீறல்கள், காணாமல் போனோர் நிலை என்பன தள்ளி வைக்கப்படலாம் என்ற அச்சம் பலர் மனதில் எழுந்துள்ளமை அறியத்தக்கதே.

ஐக்கிய இலங்கை என்ற அரசியல் அமைப்புக்குள் இருந்து கொண்டு தனித்தமிழர்கள் நலனை மட்டும் பேசிக் கொண்டிருப்பது நியாயமா? நாம் எமது புரிந்துணர்வை பெரும்பான்மை இனத்துக்குக் காட்டுவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாகவும், உலகநாடுகளில் நான் ஐக்கியத்தை விரும்புகிறோம், சமாதானமே எனது நோக்கம் என்பதை வெளிப்படையாகக் காட்டுவதற்கும் இது ஒரு வாய்ப்பாக
அமைந்துள்ளது என்பதை மறுக்க இயலாது.

போரும், அவலங்களும், சாக்களும் நிறைந்து இருந்த போதும் கூட பெரும்பான்மை இனத்தில் பெரும்பாலானோருக்கு தமிழர்கள் பயங்கரவாதிகள் என்ற படமே காட்டப்பட்டது. இதற்கான காரணம் எமது பக்கத்திலிருந்தான விளக்கம் அவர்களுக்குக் கிடைக்கப்படவில்லை. எமது நியாயங்களை பரிசீலிக்கும் திறனற்ற பெரும்பான்மையாகவே சிங்களம் இருந்தது. பிழை எமது பக்கத்திலும் உள்ளது என்பதை நாம் ஒத்துக் கொண்டே ஆகவேண்டும்.

எமது அரசில்வரலாற்றை எடுத்து நோக்கினால் நாம் குறுந்தேசிய அரசியலையே என்றும் முன்னெடுத்து வந்துள்ளோம். சிங்களப் பெரும்பான்மை கட்சிகளும் அதைச் செய்தாலும் நாமே தொடக்கி வைத்தவர்கள் என்பதை மறுக்க இயலாது.

கட்சிகளின் பெயர்களை எடுத்துக் கொள்ளுங்கள். சிங்கல கெல உருமய (ஆரம்பித்துசிலவருடங்கள் மட்டுமே) வைத்தவிர சிங்களத்தை மட்டம் முதன்மைப்படுத்தும் ஒரு சிங்கள அரசியல் கட்சிகளைக் காட்டுங்கள். தமிழ் என்ற சொல் இல்லாத எமது அரசியல் கட்சியைக் காட்டுங்கள்.

வெள்ளையன் வெளியேறும் போது நாட்டைப் பிரிக்கலாம் என்ற முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்ட போது, இல்லை ஐக்கிய இலங்கையே உசிதமானது என்று கை உயர்த்தியவர்கள் நடேசன், மகாதேவா போன்றவர்கள். இவர்கள் பரம்பரை கேம்பிரிஜ் பல்கலைக்கழக சிங்கள அரசியல்வாதிகளின் நண்பர் குலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய இலங்கையை கை உயர்த்தி எடுத்தபின்னர் வெறும் குறுந்தேசியவாதம் பேசிப் பிரயோசனம் இல்லை. சுயவிமர்சனம் இல்லாதவரை யாரும் தம்மைத் திருத்திக் கொள்ளப் போவதில்லை.

எதிர்கட்சித் தலைவராக தமிழர் ஒருவர் இருப்பது இது முதற்தடவை அல்ல. அப்பதவியை வைத்து எதைச் சாதிக்க முடிந்தது என்ற கேள்விகளும் தொடர்ந்து எழவே செய்கிறது. பதவியமைந்த காலம், தேவைகள், அரசியல் நிலமைகள், ஆளுங்கட்சியின் குணாம்சங்கள் எனப்பல காரணிகள் எதிர்கட்சியின் செயற்பாட்டுக்கு முக்கியமாகிறன

வெறுமையாகக் கத்துவதை விட வலுவுள்ளவர்களாக, பதவியுள்ளவர்களாக கத்தும்போது சிங்களமோ உலகமோ செவிமடுக்கும் நிலை அதிகரிக்கும். யுத்தகுற்றங்கள், சர்வதேச விசாரணை முடிபுகள் வெளிவரும் வேளை தமிழ்கட்சி ஒன்று எதிர்கட்சியாக அமைவது எனது குரல்களுக்கு ஒரு அதிகாரத்தைக் கொடுக்கும் என்பது திண்ணம்.

இனவழிப்பு, இனவழிப்பு எனப்பெருங்குரல் எழுப்பும் நாம் சிந்திக்க வேண்டியன பல உண்டு. அனைத்து சிங்களவர்களும் தமிழர்களைக் கொன்றார்களா? அனைத்து கட்சிகளும் இதற்கு உடன்பட்டனவா? அன்று இருந்த அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த இராணுவம் அதைச் செய்தாலும் அதே இராணுத்தில் இருந்துதான் இந்த யுத்தமீறலுக்கான ஆதாரங்கள் வெளிவந்தன.

உண்மை என்னவெனில் ஒரு சிங்களப் பேரினவாத அரசு இந்த யுத்தமீறலைச் செய்தது என்ற பதத்தை நாம் பாவிக்கும் போதுதான் எமது கருத்துக்கள் உலகநாடுகளில் கூர்மைப்படுத்தப்படும். இது இனவழிப்பல்ல பயங்கரவாதிகளைக் களையெடுப்பு என்று மகிந்த அரசு தப்பிக் கொள்ள முயல்வதற்கு நான் பயன்படுத்தும் சொற்பதங்கள் காரணமாக அமைந்து விடக்கூடாது

இன்று ஐக்கியத்துடன் சில முன்னெடுப்புக்களை யுத்தமீறலுக்கு எதிராக செய்ய முடியும் என்றால் அதைச் செய்வதில் என்ன தவறு?. கஜேந்திரகுமாரின் கட்சி வந்திருந்தால் மீண்டும் ஒரு
எதிர்ப்பரசியலும், உணர்ச்சி அரசியலும் உருவாக்கப்பட்டு பழையகுருடி கதவைத் திறவடி என்றநிலை உருவாகியிருக்கும்.

எதிர்கட்சி, ஆளுங்கட்சி என்றபதங்கள் இன்றுள்ள பாராளுமன்ற அமர்வில் உள்ளதா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதில் கிடைக்கப் பெறலாம். எதிர்கட்சி என்றதும் நாம் எதிர்த்தே ஆகவேண்டும் என்று பொருள் கொள்வது தவறு. அரசு தன்கொள்ளை கோட்பாடுகளின்படி எடுக்கும் முடிவுகள் பிழையானது, மாற்றுக்கருத்துண்டு என்பதை முன்வைக்கும் கட்சியே எதிர்கட்சியாகும்.

எடுக்கப்படும் முடிவு தேசியத்தைப் பாதிக்காத முறையில் மக்களுக்கு நன்மை தரும்போது அதை ஆதரிப்பதும் எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டும். இம்முறையை ஐரோப்பாவில் அழகாகக் காணலாம். நாட்டின், மக்களின் நன்மை நோக்கி எதிர்கட்சி அரசகட்சியுடன் இணைந்து செயற்படும். எதிர்கட்சி என்பது எதிர்க்கும் கட்சி அல்ல என்பதை அறிக

சர்வதேச விசாரணையை சம்பந்தர், சுமந்திரன் எதிர்கிறார்கள் உள்நாட்டுப் பொறிமுறையையே விரும்புகிறார்கள் என்பதை பலர் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை. முள்ளிவாய்கால் இனவழிப்பு என்பது பலபொறிமுறைகளை, கட்டமைப்புகளைத் தாண்டிச் செல்ல வேண்டியது. நாம் பாவிக்கும் சொற்பதங்கள் ஆங்கிலத்தில் இருந்து மொழிமாறுவதால் மயக்கமாக இருக்கலாம்.

சர்வதேச விசாரணை உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை, போர்குற்ற விசாரணை, சர்வதேச போர்குற்ற நீதிமன்று, சர்வதேச குற்றவியல் சிறப்பு மன்று என்பன பலவேறுபட்ட செயற்பாடுகளைக் கொண்டன.

ஏற்கனவே சர்வதேச விசாரணை நிகழ்த்தப்பட்டு அதன் முடிவும், முன்மொழிவுகளும் வெளிவர இருக்கிறது. இதில் அவர்கள் என்ன விடயங்களை முன்மொழிகிறார்கள் என்பதைப் பொறுத்தே மீதி நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படும்

காணாமல் போனவர்கள் பிரச்சனை, பிரதேச மாநிலப் பிரச்சனைகள், இயக்கங்களின் உட்கொலைகள், இராணுவத்தின் சில போர் முறைகேடுகள், அத்துமீறல்கள் என்றும் உள்நாட்டுப் பொறிமுறைக்குள் தான் விசாரிக்கப்படும். இவற்றை சர்வதேசம் என்றும் கணக்கில் எடுக்காது.

ஒரு அரசு தன் இயந்திரமான இராணுவத்தைப் பயன்படுத்தி அப்பாவி மக்களைக் கொன்றார்கள் என்பது அந்த அரசுக்கெதிரான சட்ட நடவடிக்கையாகும். அதன் பொறுப்பை ஏற்கவேண்டியது மகிந்த அரசே ஆகும். வெளிவரவிருக்கும் சர்வதேசவிசாரணை முன்மொழிவுகள் அதைக் குறிகாட்டி நிற்கும். அது எமது கருத்துக்கும் தமிழர்களுக்கும் பாதகமாக இருக்கும் பட்சத்தில் எதிர்கட்சி பதவில் இருந்தபடி இன்றைய அரசின் அனுசரணையுடன் எமது எதிர்ப்பும், மறுப்பும் சர்வதேசத்தின் செவிப்புலன்களில் ஓங்கி அறையும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

தமிழ்மக்களின் நலனுக்காக பேரினவாதக் கட்சியான ஐதேக இணைந்தோ, வேறுகட்சிகளுடன் பகிர்ந்தோ, புரிந்துணர்வுடனோ செயற்பட வேண்டிய காலமிது.

எதிர்பரசியலும், உணர்ச்சியரசியலும் தோல்வியைக் கண்டபின்னரும் கெடுகிறேன் பிடி பந்தயம் என்று நாம் நின்றால் எம்மினம் தான் அழியும். தட்டிப்பறிக்கும் தந்திரம், கொடுத்து எடுக்கும் பொறிமுறை, எதிர்ப்பை அழித்து நட்புடன் நல்லரசியல் தீர்வை எட்டும் மனத்திறனே இன்று நாம் மேற்கொள்ள வேண்டியவை

பழங்கதைகளை புலம்பிக் கொண்டு எதிர்பரசியலையும், உணர்ச்சியரசியலையும் முன்நிறுத்துவீர்களாயின் மீதியிருக்கும் தமிழ்மக்களையும் காவு கொடுக்கும் நிலை ஏற்படும்.

இன்று தமிழ்மக்களால் ததேகூ க்குக் கொடுக்கப்பட்ட ஆணை அவர்களை எதிர்கட்சி பதவியில் இருத்தியுள்ளது. சந்தர்ப்பம், சூழ்நிலை, உலகவரசியல், பிராந்தியநலன், பிராந்திய அரசியல், பொருளாதாரம், உலக உள்நாட்டுப் பொருளாதாரம், உலகமயமாதல் போன்ற காரணிகள் அலசி ஆராயப்பட்டு தீர்க்கதரிசனமாக தீர்மானங்களை முன்வைத்து சாத்தியமான அனைத்து நல்முடிவுகளும் எட்டப்படவேண்டும். இதுவே ஆரோக்கியமான தமிழ் அரசியலுக்கும் எம்மக்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்கும் வழிவகுக்கும்.

தமிழீழம் என்பது இன்றைய நிலையில் சாத்தியமற்ற ஒன்று என்பதை யாவரும் உணர்ந்ததே. சமஸ்டி கூட சிலவேளைகளில் அமையாது போவதற்கும் சந்தர்ப்பம் உண்டு. ஆனால் பிரதேச, மாநில உரிமைகளை உயர்த்தியும், நிலைநிறுத்தியும், ஸ்திரமாக்கியும் சட்ட மாற்றங்களையாவது முதற்கட்டமாகக் கொண்டு வரமுயற்சிக்கலாம். அதற்கான சாத்தியக் கூறுகள் கனிந்துள்ளமை உணரத்தக்கதே.

மேலும் விபரித்தால் கட்டுரை நீண்டு கொண்டே போகும். அதனால் இத்துடன் நிறுத்துகிறேன்…
(நோர்வே நக்கீரா.)