ஒரு புகையிரதப் பயணம்போல் அரசியல் கட்சி ஒன்றின் பயணத்திலும் பலர் வருவார்கள் போவார்கள் – தோழர் டக்ளஸ் தேவானந்தா ஈபிடிபி செயலாளர் நாயகம்

ஒரு புகையிரதப் பயணம்போல் அரசியல் கட்சி ஒன்றின் பயணத்திலும்பலர் வருவார்கள் போவார்கள். ஒரு ஜனநாயகக் கட்சியில் இவையெல்லாம் சகஜமானவைதான். புகையிரதம் அதன் இலக்கை நோக்கி பயணத்தை தொடர்வதைப்போல், கட்சியின் பயணமும் அதன் இலக்கு நோக்கி தொடரும்.

எம் சந்திரகுமார் (அவர்) முன்னெடுத்த கட்சிப் பணிகள் தொடர்பாகவும், அவரது முயற்சிகள் தொடர்பாகவும், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதது தொடர்பாகவும் கட்சிக்குள் எழுந்திருந்த கேள்விகள் தொடர்பாகவும் அவர் தன்னை விமர்சனம், சுயவிமர்சனத்திற்கு உட்படுத்தியிருப்பதாகவே நான் கருதுகின்றேன்.

கிளிநொச்சி மாவட்டத்தில் நாம் வரையறுத்துக்கொண்ட எமது கட்சியின் இணக்க அரசியல் வழிமுறையில் நின்று இதுவரை நாம் பாரிய பணிகளை ஆற்றிவந்திருக்கின்றோம். யுத்தத்தால் அதிகம் சிதைவடைந்த பிரதேசங்களில் கிளிநொச்சியும் ஒன்று என்பதால் அங்கு வாழும்; மக்களுக்கு பணிகளையாற்றுவதற்காக ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் அங்கு தேவை என்பதற்காகவே எமது கட்சி சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களை நான் தெரிவுசெய்து அங்கு அனுப்பியிருந்தேன். அவருடைய விலகலுக்கு பிறகும் கூட எமது கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தோழர் தவநாதன் அவர்கள்; தலைமையில் கட்சிப் பணிகள் வழமைபோல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் மக்களை உசுப்பேற்றி வாக்குகளை அபகரிக்கும் கபடத்தனமான அரசியல் நாடகத்தை ஈ.பி.டி.பி ஒருபோதும் செய்யவில்லை.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான நடைமுறைச்சாத்தியமான அணுகுமுறையையும், எமது மக்களை மேலும் அழிவுகளுக்குள் தள்ளிவிடாமல் அவர்களை பாதுகாத்து கௌரவமாக வாழ வைப்பதற்கும், தவறான அணுகுமுறைகளால் அழிந்துபோன எமது தாயகத்தை மீண்டும் அபிவிருத்தியால் கட்டியெழுப்புவதற்குமான வழிமுறைகளையே எமது அரசியலாக முன்னெடுத்துவருகின்றோம்.

எமது அரசியலை விமர்சிப்பவர்கள்; தமிழ் மக்களை பாதுகாக்கவும் இல்லை, அழிவுகளைத் தடுத்து நிறுத்தவும் இல்லை. அரசியல் உரிமையைப் பெற்றுத்தரவும் இல்லை, அதுமட்டுமல்ல 2000ஆம் ஆண்டு தமிழ் மக்கள் சார்பில் ஈ.பி.டி.பி முன்வைத்த பரிந்துரைகளையும் ஏற்றுக்கொண்டு சந்திரிக்கா அம்மையார் கொண்டுவந்த தீர்வுப் பொதியை எதிர்க்கட்சியுடன் சேர்ந்து எரித்தும் எதிர்த்தும் குழப்பியடித்தவர்களும் இவர்கள்தான். இவ்வாறு தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க ஆக்கபூர்வமான முயற்சிகளிலும் ஈடுபடவும் இல்லையென்பதும் வெளிப்படையானது.

ஈ.பி.டி.பியின் தீர்க்கதரிசனமான அரசியல் பாதையிலேயே இன்று கூட்டமைப்பும் வந்து நிற்கின்றது. நாங்கள் மத்திய அரசுகளுடன் முன்னெடுத்த இணக்க அரசியல் போக்கையே இன்று கூட்டமைப்பும் பின்பற்றியிருக்கின்றார்கள். ஆனால் நாங்கள் அரசுகளுடன் இணக்க அரசியல் செய்தது மக்களுக்கு பணியாற்றுவதற்காக, கூட்டமைப்பினர் இன்று இணக்க அரசியல் நடத்துவது, தமது தனிநபர் பெருமைகளுக்காகவும், பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவுமே இணக்க அரசியலை செய்கின்றார்களே தவிர, மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் அவர்கள் முயற்சிக்கவில்லை. இவற்றைப்போல் பல உதாரணங்களை நாம் தீர்க்க தரிசனமாக கூறியதையும் அதுவே பின்னர் நடந்தவையையும் கூறமுடியும்.

கடந்த 18.04.2016 அன்றைய தினம் தினக்குரல் பத்திரிகையின் தலைப்புச் செய்தியில், இன்று அரசுடன் இணக்க அரசியல் நடத்துவோர் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை தனிப்பட்ட கணிப்பு என்று கூறி குத்துக் கரணம் அடித்ததை தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தியிருந்தது. அப்படிப்பார்த்தால் ஈ.பி.டி.பியின் அரசியல் நிலைப்பாடு சரிதான் என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. எமது வழிமுறையை ஏற்று இணக்க அரசியலுக்கு வந்திருப்பவர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பொறிமுறைகளை இன்னும் புரிந்துகொள்ளவில்லை. நாம் கொண்டிருக்கும் கொள்கைகளும், அதற்கான திட்டங்களும்; மக்களிடம் முழுமையாக சென்றடையவில்லை என்பது ஒரு பாரிய குறைபாடு.

நாம் நீண்டகாலமாக அமைச்சரவை அந்தஸ்துள்ள பல அமைச்சுப் பொறுப்புக்களை பொறுப்பேற்று எமக்கு கிடைத்த அரசியல் பலத்துக்கு ஏற்றவகையிலும், தற்துணிவோடும் செயற்பட்டு எமது மக்களின் பொருளாதார மற்றும் வாழ்வாதார கோரிக்கைகளுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம். அதுபோல் எமது இளைஞர், யுவதிகளுக்கு ஆயிரக்கணக்கில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றேன். பாதுகாப்புக் காரணங்களுக்காகவென்று படையினர் கையகப்படுத்திய நிலங்களையும், காணிகளையும் முடியுமானவரை அர்த்தபூர்வமாக விடுவித்துள்ளோம். அதேபோல் தமிழ் மக்கள் போராடிப்பெற்ற அரசியல் உரிமைகளை பாதுகாப்பதற்கும்இ தமிழ் மக்கள் பெறவேண்டிய அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கும் நடைமுறைச்சாத்தியமாக முன்னெடுத்து வருகின்றோம்.

இப்போது அரச அதிகாரங்களுக்கு வெளியில் நின்று நிலைமையை அவதானிக்கின்றோம். கடந்த காலத்தில் நாங்கள் செய்த பணிகளை சீர்தூக்கிப் பார்க்கவும், எதிர்காலத்தில் செய்யவேண்டிய பணிகளை ஆய்வு செய்வதற்கும், எமது மக்களி தற்போதைய அபிப்பிராயங்களை ஆராய்ந்து அறிந்து கொள்ளவும் தற்போது கால அவகாசம் கிடைத்திருப்பதாகவே கருதுகின்றேன்.

புதிய அரசுடன் அரசியல் உறவுகளும், தொடர்புகளும் இருக்கின்றது. இல்லாவிட்டால் புதிய அரசியலமைப்பு சபையின் வழி நடத்தும் குழுவுக்கு பிரதமர் என்னையும் ஒரு உறுப்பினராக நியமித்திருக்கமாட்டாரல்லவா? இது தவிரவும் புதிய அரசாங்கம் தமிழ் மக்களின் நிலங்களையும், காணிகளையும் விடுவிக்க வேண்டும் என்பதையும், சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்பதையும், காணாமல் போனவர்கள் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பதையும் புதிய அரசுக்கு தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றேன். அரசு முன்னெடுக்கும் தேசிய நல்லிணக்க முயற்சிகளுக்கும்இ மக்கள் நலன்சார்புத் திட்டங்களுக்கும் ஈ.பி.டி.பி பூரணமான ஆதரவை வழங்கும் என்பதையும் கூறியிருக்கின்றேன்.

இதேவேளை ஈ.பி.டி.பியை பங்கெடுக்குமாறுபிரதான தேசியக் கட்சிகள்கோரிக்கைவிடுத்து வருவது உண்மைதான். ஆனாலும் அவர்களுடன் ஈ.பி.டி.பி தொடர்ந்து எமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைக்கும்இ வாழ்வாதார பிரச்சனைக்கும் தீர்வு காண்பது தொடர்பாகவும் ஏனைய முக்கிய பிரச்சனைகள் தொடர்பாகவும் தீர்வுகள் தேவை என்பதை வலியுறுத்தி பேச்சுக்களை நடத்திவருகின்றோம்.

மேலும் வருகின்ற மே மாதம் 7ஆம், 8ஆம் திகதிகளில் கட்சியின் தேசிய மாநாடு இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கின்றது. 8ஆம் திகதி எமது தீர்மானங்களை மக்கள் முன்னிலையில் பிரகடனங்களாக அறிவிக்கும் தேசிய எழுச்சி மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இது திடீர் முடிவு அல்ல. கடந்த காலத்தில் வேலைப்பளு அதிகமாக இருந்ததால் சாத்தியப்படாமல் இருந்தது. சக அரசியல் தலைமைகள் இதுவரை விட்டுவந்த வரலாற்று தவறுகளினால் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப்பிரச்சினை தீர்வின்றி நீடித்துத்தொடர்கின்றது. ஆகவே எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான வரலாற்று கடமை என்பது எமது கட்சியின் மீதே சுமத்தப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் எமது மக்களின் நிரந்தர விடிவிற்காக எமது கட்சியை புடம்போட்டு மேலும் பலப்படுத்தவேண்டியுள்ளது. அதற்காகவே இந்த தேசிய எழுச்சி மாநாடு.

(ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஊடகங்களின் கேள்விக்கு வழங்கிய பதில்களின் தொகுப்பு.)