கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல்! பகுதி – 2

கம்பவாரிதிக்கு அன்பு வணக்கம்!

பாவத்தைப் பார்த்திருப்பதும் பாவம் என்ற மார்ட்டீன் லூதர் கிங்கின் மெய்யுரையின் அடிப்படையில் தமிழ்மக்களுக்கு அரசியல்வாதிகளால் இழைக்கப்படும் அநீதிகள், ஏமாற்றங்கள் தொடர்பில் தமிழ்மக்கள் பலரும் வெறுப்புக்கொண்டிருந்தனர். போர் தந்த இழப்புக்கள் எழுந்து நின்று துணிந்து பேசுகின்ற எங்கள் வீரத்தை வீழ்த்தியிருந்தது. இத்தகையதோர் சூழ்நிலையில் பக்கத்திருப்பவர் துன்பந்தனை பார்க்கப் பொறாதவன் புண்ணியமூர்த்தி என்ற பாரதியின் வரிகள் எங்கள் இதயத்தைத் தொட்டுத் துளைத்தன.

அரசியல் என்ற எல்லைக்குள் நின்றால் மட்டுமே மக்களுக்கு உதவ முடியும் என்ற நினைப்புகளைக் கடந்து ஒரு நல்ல நோக்கில் தமிழ்மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் வலியுறுத்தவும் கூடியதான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நினைப்போடு சிலர் செயற்பட்டோம். அதற்காகப் பலருடனும் சந்திப்புக்களை ஏற்படுத்தினோம். அந்தச் சந்திப்பின் விளைவு தான் தமிழ்மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாகக் காரணமாயிற்று.

அன்புக்குரிய கம்பவாரிதி அவர்களே!
உண்மைகள் எந்தக் காலத்திலும் உறங்கிவிடக்கூடாது என்பதை தாங்கள் பல இடங்களில் வலியுறுத்தியுள்ளீர்கள். எனவே ஓர் உண்மைக்குப் பங்கம் வந்தபோது நாம் பேசாமல் இருந்தால் அது மிகப் பெரும் பழியும் பாவமும் என்று அஞ்சுகின்றோம். அதனால் தான் இந்தப் பகிரங்கமடலைத் தங்களுக்கு எழுத வேண்டியதாயிற்று. அதற்காக மன்னித்தருள்க. பீஷ்மர் மீது அம்பு எய்துவது அருச்சுனனுக்கு நீதியன்று. எனினும் தர்மமே வெல்லவேண்டும் என்று மனத்தால் நினைக்கின்ற பீஷ்மர் தன்மீது எய்தப்படும் அம்பையும் சிரித்த முகத்தோடு ஏற்பார். தன் ஆத்மார்த்தமான ஆசியையும் அள்ளிக் கொடுப்பார் என்ற உண்மை நீங்கள் அறியாததன்று.

தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களை விடுத்து சிவில் சமூகப் பிரதிநிதிகளும் மதத்தலைவர்களும் இணைந்து தயாரிக்கின்ற தீர்வுத் திட்டத்தால் எந்தப் பயனும் கிடையாது என்று உணர்ந்தமையால் தமிழ் அரசியல் தலைவர்களின் பிரசன்னம் தமிழ் மக்கள் பேரவையில் கட்டாயம் என்றுணர்ந்தோம். எங்கள் நினைப்பை தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். எல்லாச் சந்திப்புகளும் நிறைவேறிய பின்னர் வடக்கின் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்மக்கள் பேரவையில் இணைப்பது தொடர்பில் சந்திக்க முனைந்தோம்.

மின்னஞ்சல் மூலமாக சந்திப்புக்கான அனுமதியை அவரிடம் கேட்டிருந்தோம். கூடவே தமிழ்மக்களின் நலன் தொடர்பில் ஓர் அமைப்பை உருவாக்க வேண்டியதன் தேவை பற்றிய சிறு குறிப்பையும் சந்திப்புக்கான அனுமதிகோரும் மின்னஞ்சல் செய்தியில் இணைத்திருந்தோம். சந்திப்புக்கான அனுமதியை முதலமைச்சர் தந்திருந்தார். சந்திப்பு நடந்தது. முதலில் எங்களை அறிமுகம் செய்தோம். அரசியல் என்ற எல்லை கடந்து தமிழ்மக்களின் நலன்கள் கவனிக்கப் படவேண்டும் என்று கூறினோம். அரசியல் கட்சி, மாற்றுத் தலைமை பற்றியதாக இருந்தால் என்னிடம் யாரும் பேசாதீர்கள். அதேநேரம் தமிழ்மக்களின் பொதுநலன் என்ற விடயத்தை நாம் ஓரங்கட்டி விடமுடியாது என்றும் முதலமைச்சர் கூறினார்.

இந்த உண்மை நீங்கள் நம்பும் கம்பன் மீதும் நான் வணங்கும் நல்லூர்க்கந்தன் மீதும் சத்தியம். அன்புக்குரிய கம்பவாரிதி அவர்களே! தமிழ்மக்கள் பேரவை அமையப் பெற்ற பின்னர் அந்த அமைப்புத் தொடர்பில் பலரும் தமது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். எங்கள் எதிர்பார்ப்புக்களைக் கடந்து தமிழ்கூறும் நல்லுலகம் முழுவதும் தமிழ் மக்கள் பேரவை என்பதே பேச்சாகியுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்பில் உகரம் என்ற இணையத்தளத்தில் தங்களால் எழுதப்பட்ட நீண்ட கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. நெஞ்சு அடைத்துவிட்டது.

தமிழ்மக்கள் பேரவை பற்றி யார் யாரெல்லாம் ஏற்றுவார்கள் போற்றுவார்கள் என்று எதிர்பார்த்திருந் தோமோ அந்த எதிர்பார்ப் பிற்கு மாறாக உங்களின் கருத்து இருந்தமை மிகப்பெரும் வலியைத் தந்தது. 14 ஆண்டுகள் இராமர் காடேக வேண்டும் என்று கைகேயி தசரதனிடம் வரம் கேட்ட போது தசரதன் பட்ட வேதனை எத்துணை என்பதை இப்போது எங்களால் உணரமுடிகின்றது.

ஏற்பாட்டுக்குழுவே கோரிக்கை விடுத்தது

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அரசியல் தலைமையில் ஆசைவந்துவிட்டது என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். இதற்கு தமிழ் மக்கள் பேரவையில் இணைத் தலைமையை அவர் ஏற்றுக் கொண்டதை காரணமாக்கினீர்கள். உண்மையில் தமிழ்மக்கள் பேரவையின் இணைத்தலைமையில் இணையுமாறு தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக்குழுவே முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருந்தது. வடக்கின் முதலமைச்சர் என்ற அடிப்படையில் ஏற்பாட்டுக்குழுவின் கோரிக்கையை அவர் ஏற்றுக் கொண்டார். நடந்தது இதுவே.

வடக்கின் முதலமைச்சர் வலிந்துபோய் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பதவி கேட்டவர் அல்ல. மாறாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரே வடக்கு மாகாண சபையின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுமாறு விக்னேஸ்வரன் அவர்களைக் கேட்டுக்கொண்டார். இதற்கு நீதியரசர் விக்னேஸ்வரன் கூறியது; கூட்டமைப்பில் இருக்கக்கூடிய கட்சிகள் விரும்பினால் உங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்க முடியும் என்பதாகும். எனவே இதிலிருந்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் பதவி ஆசை இல்லை என்பது தெரிகிறதல்லவா?

தமிழ்மக்கள் பேரவையின் இணைத் தலைமையை முதல்வர் விக்னேஸ்வரன் ஏற்றுக்கொண்டதால் அவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உடைக்க முற்பட்டுள்ளார் என்ற தங்களின் கருத்து நிலை சரிபார்க்கப் பட வேண்டும் என்பது நம் தாழ்மையான கோரிக்கை. வடக்கின் முதல்வர் பதவிக்குத் தக்கவர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் நீதியரசர் விக்னேஸ்வரனை அழைத்து வந்தபோது, அதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட்டமைப்பின் அனைத்து கட்சிகளும் பூரண ஆதரவு வழங்கி இருக்க வேண்டும். இந்த ஆதரவு கூட்டமைப்பை பாதுகாப்பதாக இருந்திருக்கும்.

ஆனால் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருசிலர் விக்னேஸ்வரன் அவர்களை எதிர்த்தனர். இந்த எதிர்ப்பு எந்த வகையில் நியாயமாகும். வடக்கின் முதல்வராக விக்னேஸ்வரனை நிறுத்துவதில் உடன்பாடு இல்லாமல் இருந்திருந்தால், கூட்ட மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரா. சம்பந்தரையே எதிர்த்திருக்க வேண்டும். அப்படியான எதிர்ப்பு நியாயமாக இருந்திருக்கும்.

இதைவிடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்டபின், தேர்தலில் போட்டியிட வந்த நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களை தேர்தல் காலத்தில் எதிர்ப்பதாக இருந்தால் கூட்டமைப்பைப் பிளவுபடுத்த முற்படுபவர்கள் யார் என்பதை அறம் உரைக்கும் உங்களால் தெரிந்து கொள்ள முடியாமல் இருக்காது.

தொடரும்… –புருசோத்தமன்- (வலம்புரி)