கொள்ளிக்கட்டையால் முதுகு சொறிகின்றாரா வடக்கு முதலமைச்சர்?

கடந்த வாரம் வடக்கு மாகாணசபையில் ஆளும் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து முறன்பாடுகளும் அதனைத் தொடர்ந்து தன்னுடைய அமைச்சர்கள் தொடர்பில் வடக்கு முதல்வர் வெளியிட்டுள்ள கருத்துக்களும் முதலமைச்சர் தொடர்பான பல்வேறு கேள்விகளை தோற்றுவித்துள்ளன. கடந்த வார வடக்கு மாகாணசபை அமர்வுகளில் கலந்துகொண்ட ஆளும் கட்சி (தமிழரசுக்கட்சி) உறுப்பினர்கள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் மீது பல்வேறு ஊழல் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சபையை முடக்குமளவுக்கு செயற்பட்டிருந்தனர். உண்மையில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்கள் சரியா? ? ஆல்லது அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா? போன்ற கேள்விகளுக்குச் செல்வதற்கு முன் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் தன்னுடைய கட்சிக்காரர்களாலேயே கேள்விக்கு மேல் கேள்வி கேட்குமளவுக்கு இப்போது அப்படி என்ன நிகழ்ந்து விட்டது என்ற கேள்விக்கு விடை கண்டுபிடிப்போமானால் மிகுதி கேள்விகள் யாவற்றுக்கும் இலகுவில் விடைகளைக் கண்டுபிடித்துவிடலாம். ஐங்கரநேசன் ஏன் இலக்கு வைக்கப்பட்டார்?


வடக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டதன் பின்னர் அதற்கான அமைச்சர்களை கூட்டமைப்பின் கட்சிகளின் தலைவர்கள் ஒண்றுகூடி தெரிவு செய்யாமல் தமிழரசுக்கட்சி தன்னுடைய எதோச் சதிகார திமிருடன் நான்கு அமைச்சர்களையும் தெரிவு செய்தது. இதனால் கட்சிகளின் ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்பட்ட நிலையில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒண்றான ஈ பி ஆர் எல் எவ் தனக்கு கிடைக்கவேண்டிய அமைச்சுப் பதவியையும் தமிழரசுக் கட்சியே எடுத்துக் கொண்டாதாகவும் அதனால் தமது கட்டுப்பாட்டுகளை மீறிய ஐங்கரநேசன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அறிவித்து ஐங்கரநேசனை தமது கட்சியை விட்டு நீக்கியிருந்தது. இந்தநிலையில் ஐங்கரநேசன் தமிழரசுக்கட்சியின் செல்லப் பிள்ளையாக மாறியதுடன் மாவைசேனாதிராசாவின் நம்பிக்கைக்குரியவராகவும் மாறினார்.
ஐங்கரநேசன் மாவைசேனாதிராசாவின் மேல்கொண்ட பற்ருறுதியின் வெளிப்பாட்டின் உச்சகட்டமாக 25 வருடங்களுக்கு மேலாக தான் சார்ந்து நின்ற ஈ பி ஆர் எல் எவ் கட்சியை இழிவு படுத்தும் வகையில் தான் ஈ பி ஆர் எல் எவ் கட்சியிலிருந்து வெளியேறியதன் ஊடாக புனிதமடைந்விட்டதாக அறிக்கை விட்டிருந்தார். அப்போது ஐங்கரநேசன் இவ்வாறு செயற்பட்டதற்கு காரணம் தனக்கு அமைச்சுப்பதவி தந்த மாவைசேனாதிராசா தொடந்தும் தன்னைப் பாதுகாப்பார் என்ற நம்பிக்கையே. ஆனால் இப்பொழுது ஐங்கரநேசனின் நிலை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாணசபை செயற்படத் தொடங்கி ஏறக்குறைய இரண்டரை வருடங்கள் கடந்து விட்ட நிலையில் மாகாண அமைச்சர்கள் நான்கு பேரும் தத்தமது அமைச்சுக்களுக்கு உட்பட்ட பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளனர்.

இவ்வாறான வேலைத்திட்டங்களின் ஊடாக ஒவ்வொரு அமைச்சர்களும் தனிப்பட்ட வகையில் தமது வருமானங்களை பெருக்கிக்கொண்டனர் இதில் எவரும் விதிவிலக்கல்ல. இவ்வாறு தமது தனிப்பட்ட முறையில் தங்களுடைய வருமானங்களை அமைச்சர்கள் உயர்திவருகின்றனர் என்ற விடயம் இவர்கள் சார்ந்திருக்கின்ற கட்சிகளுக்கோ அல்லது முதலமைச்சருக்கோ தெரியாது என்று சொல்வது அர்த்தமற்றது. அப்படியானால் இவர்கள் மீது குறித்த கட்சிகளின் தலைமையோ அல்லது முதலமைச்சரோ ஏன் நடவடிக்ககை எடுக்கவில்லை என்ற கேள்வி இயல்பானதே. குறித்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பது கட்சி ரீதியாக தத்தம் கட்சிகளை பலவீனப்படுத்தும் என்பதுடன் அமைச்சர்களின் உதவி தங்களுக்கு எப்போதும் இருக்கவேண்டும் என கட்சித்தலைமை நம்பியது.

உதாரணமாக தேர்தல் காலங்களில் குறித்த நான்கு அமைச்சுக்களின் அனுசரைணகளை கட்சித்தலைமைகள் மிதமிஞ்சியவகையில் பயன்படுத்திக்கொண்டன. இதில் மாகாண அமைச்சுக்களுக்கு சொந்தமான வாகனங்கள், ஆளணி, எரிபொருள் என அனைத்து வழங்களும் பயன்படுத்தப்பட்டன. இந்த விடயம் முதலமைச்சருக்கும் தெரியும். ஆனால் அந்தவேளை இது தொடர்பில் யாரும் கேள்வியெழுப்பவில்லை. ஆனால் இப்போது ஏனைய அமைச்சர்களைவிட்டுவிட்டு ஐங்கரநேசனின் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை ஆளும் கட்சியே முன்வைப்பதற்கு என்ன காரணம்? இதில் பிரதானமானது தற்போதைய தமிழரசுக்கட்சியின் தலைமைக்கும் (சுமந்திரன்) ஐங்கரநேசனுக்குமிடையிலான இடைவெளி. அதாவது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் தொடர்பில் சுமந்திரனால் ஏற்படுத்தப்பட்ட பல்வேறு முட்டுக்கட்டைகளுக்கு உடன்படாத வகையில் ஐங்கரநேசன் செயற்பட்டிருக்கிறார்.

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டங்களில் முதலமைச்சரை பங்குகொள்ளவேண்டாம் என சுமந்திரன் அணியினால் விடுக்கப்பட்ட கோரிக்கை கடிதத்தில் ஐங்கரநேசன் ஒப்பமிடவில்லை, முதலமைச்சரின் செயற்பாட்டிற்கு தடைகளை ஏற்படுத்த எத்தனித்த தமிழரசுக்கட்சியின் அத்தனை செயற்பாடுகளுக்கும் எதிராக செயற்பட்டமையும், ஐங்கரநேசனுக்கும் முதலமைச்சருக்கு மிடையில் இருக்கின்ற நெருக்கமான உறவும், முதலமைச்சருக்குப்பதிலாக இணைத்தலைவர்கள் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக முதலைமச்சரால் ஐங்கரநேசன் தெரிவு செய்யப்பட்டமை போன்ற காரணங்கள் ஐங்கரநேசன் மீதான ஆளும் கட்சியினரின் குற்றச்சாட்டுக்களுக்கு பிரதான காரணங்களாகின்றன.

வடக்கு மாகாண அமைச்சர்கள் நால்வர் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப் பட்டிருந்த போதும் ஏனைய அமைச்சர்களின் ஊழல் மோசடிகளை கண்டுகொள்ளாத தமிழரசுக்கட்சியின் சுமந்திரன் அணியினர் ஐங்கரநேசன் மீதான குற்றச்சாட்டுக்களை அவிழ்த்துவிடுவதற்கான சரியான நேரம் இதுவாக இருப்பதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்ட செய்தியை உதயன் பத்திரிகை இவ்வாறு வெளியிட்டிருந்தது. அதாவது கூட்டமைப்பிற்கு குடைச்சல் கொடுப்பதற்கு தமிழ் மக்கள் பேரவை ஆரம்பம் என உதயன் தலைப்பிட்டிருந்தது. உண்மையில் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் பேரவை குடச்சல் கொடுக்கிறதோ இல்லையோ சுமந்திரன் சம்பந்தன் போன்றோருக்கு அது குடைச்சல் கொடுப்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த நிலையில் தான் தமிழ்மக்கள் பேரவைக்கு குடைச்சல் கொடுப்பதற்காகவே முதலமைச்சர் மீதான நெருக்குவாரங்களை தமிழரசுக்கட்சி அதிகரிக்கத் தொடங்கியது.

இதன் முதல் கட்டமாக முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது என தெரிவித்து மகாணசபை உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கையை தமிழரசுக்கட்சியின் சுமந்திரன் அணியினர் மேற்கொண்டனர். இந்தக் கையெழுத்துப் பெறும் நடவடிக்கைக்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசவின் உத்தியோகபூர்வ வாகணம் பயன்படுத்தப்பட்டது. குறித்த வாகணத்தில் உறுப்பினர்களின் வீடுகளுக்குச் சென்ற ஆனோல்ட், அஸ்மின், கஜதீபன் சுகிர்தன் பரஞ்சோதி போன்றோர் ஏனைய உறுப்பினர்களையும் முதலமைச்சருக்கெதிராக திருப்பிவிடும் கைங்கரியத்தில் இறங்கியிருந்தனர். ஆனால் ஒரு சில உறுப்பினர்கள் இவர்களின் தந்திரங்களைப் புரிந்துகொண்டு குறித்த கடிதத்தில் ஒப்பமிட மறுத்து விட்டனர்.

இதில் ஐங்கரநேசனும் ஒப்பமிடவில்லை. தாம் திட்டமிட்டதைப் போன்று காரியம் கைகூடாமல் போனதால் சுமந்திரன் அணி மீண்டும் புதிய வடிவில் முதலமைச்சருக்கு குடைச்சல் கொடுக்கத் திட்டமிட்டனர். இதற்கான திட்ட முன்மொழிவை சுமந்திரன் வழங்க சயந்தன் ஆனோல்ட் போன்றோர் நேரடியாக களமிறங்கினர். அப்போது தான் முதலமைச்சருக்கு குடைச்சல் கொடுப்பதற்கு சரியான ஆளாக ஐங்கரநேசன் தெரிவு செய்யப்பட்டார். திட்டங்கள் அனைத்தையும் யாழ்ப்பாணதிலுள்ள பிரபல ஹொட்டேலான யு எஸ் ஹொட்டேலில் மாகாணசபை உறுப்பினரகளான ஆனோல்ட், சயந்தன்.பரஞ்சோதி,கஜதீபன் அஸ்மின் ஆகியோர் போட்டனர். இவர்களின் திட்டப்படி ஐங்கரநேசனிடம் கேள்வி கேட்டு பிரச்சினையை ஆரம்பிப்பதற்கு முதலில் தெரிவு செய்யப்பட்டவர் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம்.

ஆனால் விந்தன் கனகரத்தினத்திடம் இவர்கள் தமது திட்டத்தை தெரிவித்தபோது விந்தன் அதற்கு மறுப்புத் தெரிவிக்க இரண்டாவதாக தெரிவு செய்யப்பட்டவர்தான் லிங்கநாதன். லிங்கநாதனை சுமந்திரன் அணியினர் தமது வலைக்குள் விழுத்துவதற்கு ஐங்கரநேசனின் ஊழல்களைச் சுட்டிக்காட்டி அதனூடாக ஐங்கரநேசனை அமைச்சுப்பதவியிலிருந்து இறக்கி அந்த அமைச்சுப்பதவியை சுந்திரனின் அனுசரணையுடன் லிங்கநாதனுக்கு வழங்குவதாக தெரிவித்தே லிங்கநாதனுக்கு கொம்பு சீவிவிட்டு மாகாணசபைக்குள் மோதவிட்டனர். சுமந்திரன் அணியின் திட்டப்படி முதலில் லிங்கநாதன் கேள்வி கேட்கவேண்டும் அதை ஐங்கரநேசன் மறுக்கும் சந்தர்ப்பத்தில் எதேற்சையாக மற்ற உறுப்பினர்களும் கேள்வி கேட்பதைப்போலவே திட்டம் தீட்டப்பட்டது. சுமந்திரனின் பணிப்பிற்கமைய குறித்த திட்டம் சுமந்திரன் அணியினால் மாகாணசபையில் அரங்கேற்றப்பட்ட நேரம் அங்கு ஆளும் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களும் அமைச்சர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

கூடவே முதலமைச்சரும். இருந்தவேளையில் சுமந்திரன் அணியினரால் ஐங்கரநேசனை நோக்கி பல்வேறு ஊழல் மோசடிகளைக் காட்டி திட்டமிட்டபடி கேள்விக்குமேல் கேள்வி கேட்கத் தொடங்கினர். அந்த வேளை அவர்களின் கேள்விக்கு ஐங்கரநேசனிடம் பதில் இருக்கவில்லை. ஆதற்கான காரணம் ஏற்கனவே சபையில் தனக்கெதிரான தீர்மானமொண்று கொண்டுவரப்பட இருகின்றது என்பதை ஐங்கரநேசன் அறிந்திருக்கவில்லை. அதைவிடவும் வடமாகாண அவைத்தலைவர் சீவீகே சிவஞானமும் சுமந்திரன் அணிக்கு ஆதரவு வழங்கியதும் ஐங்கரநேசனை திக்குமுக்காடச் செய்துவிட்டது. இந்த நிலையில் சபையிலிருந்த சுமந்திரன் அணி தவிர்ந்த ஏனைய உறுப்பினர்களில் எவரும் ஐங்கரநேசனுக்காக பேசவில்லை என்பதும். அல்லது சுமந்திரன் அணியின் நயவஞ்சகத்தை எதிர்கவோ இல்லை. என்பதும் ஐங்கரநேசன் மீது ஏனைய உறுப்பினர்களுக்கும் சந்தேகம் இருக்கின்றது என்பதுதான் காட்டுகின்றது.

இந்த நிலையில் தான் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஐங்கரநேசனை காப்பாற்றுவதற்கு குரல் கொடுத்தார். பின்னர் ஐங்கரநேசனுக்கெதரான பிரேரனையுடன் அன்றைய சபை அமர்வு நிறைவு பெற்றது. இந்த சம்பவம் நடந்தேறி ஒரு சில நாட்களில் வடக்குமாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரனின் ஏற்பாட்டில் முழங்காவில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தை திறந்துவைத்து உரையாற்றிய முதலமைச்சர் ஐங்கரநேசனையும் ஏனைய அமைச்சர்களையும் புகழ்ந்து தள்ளியது நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஏனைய மாகாணசபை உறுப்பினர்களை முகம்சுழிக்கவைத்தது. அதாவது முதலமைச்சர் தனது உரையில் ஐங்கரநேசனை அவர் ஒரு பனங்காட்டு நரி சலசலப்பிற்கு அஞ்சமாட்டார் எனப் புகழ்ந்ததோடு ஏனைய அமைச்சர்களையும் புகழ்ந்து பேசியிருந்தார்.

உண்மையில் வடக்குமாகாண அமைச்சர்கள் தொடர்பில் எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் விசாரணை செய்யவேண்டியது அல்லது விசாரணைக்கான பணிப்புக்களை வழங்கவேண்டியது முதலமைச்சரின் கடமையாகும். வடக்குமாகாண விவசாய அமைச்சரில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களைவிட பன்மடங்கு அதிகமான குற்றச்சாட்டுக்கள் ஏனைய மூன்று அமைச்சர்களிலும் ஆதாரங்களுடன் உறுப்பினர்களால் முன்வைக்கப்ட்டுள்ளன. உதாரணமாக சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் மீது உறுப்பினர் சர்வேஸ்வரனினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை முதலமைச்சரும் அவைத் தலைவரும் நிராகரித்ததுடன் சர்வேஸ்வரன் அமைச்சுப்பதவிக்கு ஆசைப்பட்டுத்தான் இவ்வாறு அமைச்சர்கள் மீது குற்றஞ்சாட்டுவதாக முதலமைச்சரே நாகரீகமற்றமுறையில் குறிப்பிட்டிருந்தது இங்கு நினைவில் கொள்ளப்படவேண்டும்.

அமைச்சர்களின் மீது பாரிய குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் உறுப்பினர்களும் பொது மக்களும் தெரிவிக்கும் போது அதனை விசாரணை செய்யாமல் அவர்களை வாழ்த்துவது குறித்த அமைச்சர்களை பாதுகாக்கும் நடவடிக்கையே ஆகும். முதலமைச்சரின் இந்த நடவடிக்கையானது அவரது ஆழுமையையும் கேள்விக்குரியதாக்கும். முதலமைச்சர் ஒண்றை சிந்திக்க வேண்டும் வடக்கு மாகாணசபையில் வெறுமனே நான்கு அமைச்சர்கள் மட்டும்தான் இல்லை அங்கு 32 உறுப்பினர்களும் இருக்கின்றனர். முதலமைச்சர் நான்கு அமைச்சர்களையும் பாதுகாப்பதினூடாக ஏனைய உறுப்பினர்கள் முதலமைச்சரை விட்டு விலகிச் சென்றுவிடுவார்கள். சிலவேளை முதலமைச்சர் யோசிக்கலாம் மாகாணசபையில் சுமந்திரன் அணியினால் தனக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுமாக இருந்தால்
தன்னுடைய நான்கு அமைச்சர்களும் தன்னைப் பதுகாப்பார்கள் என்று எண்ணலாம்.

ஆனால் தமிழரசுக்கட்சி தன்னுடைய உறுப்பினர்களுக்கு இறுக்கமான கட்டுப்பாட்டை விதிக்குமாகயிருந்தால் முதலமைச்சர் தற்போது காப்பாற்றும் அமைச்சர்களில் ஐங்கரநேசனைத்தவிர மற்ற அனைவரும் கட்சிக்கு கட்டுப்பட்டு முதலமைச்சருக்கெதிராகவே செயற்படுவார்கள். இதற்கு மிக நல்ல உதாரணம் முதலமைச்சருக்கெதிரான கையெழுத்து வேட்டைக்கு கல்வி அமைச்சர் குருகுலராசாவின் வாகனம் பயன்படுத்துப்பட்டது. இந்த விடயங்கள் அனைத்தும் முதலமைச்சருக்கு தெரியாத விடயமல்ல தெரிந்திருந்தும் முதலமைச்சர் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யாமல் அமைச்சர்களை நம்பி அவர்களைப் பாதுகாப்பதென்பது கொள்ளிக்கட்டையால் தலை சொறிவதற்கு ஒப்பானதாகும்.

(கும்கி)