டக்ளஸ் கருணா எதிர்காலம் என்ன ? பகுதி 4

(மாதவன் சஞ்சயன்)

கருணா தன் குடும்பம் வாழும் வெளிநாட்டில் அவர்களுடன் இணைந்தாலும் நிம்மதியாக காலத்தை செலவிட புலத்து புலி பினாமிகள் விடாது. ஏதாவது குடைச்சல் கொடுத்து கொண்டே இருப்பர். டக்ளசின் நிலை அதை விட மோசம். எந்த குடும்பத்துடன் போவது என்பது முதலாவது பிரச்சனை. மேலும் அவருக்காக தேர்தல் காலங்களில் பறந்து வரும் பறவைகள் கூட அவரை கௌரவமாக காப்பாற்ற முடியாது. விடாது கறுப்பு என்பது போல சூளை மேடு வழக்கு அவரை மீண்டும் சென்னைக்கு அழைக்கலாம். அதனால் இருவரின் இருப்பும் இங்குதான். தம் இருப்புக்காக தேர்தல் காவடி தூக்கித்தான் ஆகவேண்டும். கருணா அதற்கான வழிகளை தேடிக்கொண்டிருக்க டக்ளஸ் தன் கட்சி இழப்புக்கான பழியை கட்சி உறுப்பினர்கள் மீது போட தொடங்கிவிட்டார். தொலைக்காட்சி பேட்டியில் மட்டுமல்ல அண்மையில் அவர் நடத்திய கிளிநொச்சி சந்திப்பிலும் உங்கள் உழைப்பு போதாது என பழி போட்டதால் மனம் நொந்துபோன பலர் முணு முணுத்தது ஜே வி பி இணையத்துக்கு தீனியாக “விலகுகிறார் சந்திரகுமார்” என செய்தி போட்டுள்ளது.

என்னதான் கூட்டமைப்பும் சிறிதரனும் சவாலாக இருந்தாலும் கிளிநொச்சியில் சந்திரகுமார் செயல்பாடு அவரை முன்னிலைப் படுத்தியது. தன்னை முந்துவோரை பிடிக்காத டக்ளஸ் தன்னை முன்னிலைப் படுத்த தனது கட்டவுட்டுகளை கிளிநொச்சியிலும் வைக்க சொன்னாதால் தான் சந்திரகுமாருக்கு சனி பிடித்தது. அதனால் தான் சிறிதரன் மேடைதோறும் அவரை டக்ளசின் குட்டிச்சாத்தான் என திட்டித் தீர்த்தார். கிளிநொச்சி பயனாளிகள் சந்திரகுமார் செயலுக்கு தான் வாக்களித்தனர். முன்னாள் அமைச்சருக்கல்ல.

விருப்பு வாக்கில் டக்ளசுக்கு மிக மிக நெருக்கமாக வந்தவர் இனியும் நெருக்கமாக இருப்பாரா அதை டக்ளஸ் மட்டுமல்ல அவரது சுப்ரபாத குழு அனுமதிக்குமா என்பதும் கேள்விக்குரியது. கருணா சற்று இறங்கிப் போனால் பிள்ளையானும் பங்குதாரர் ஆகலாம். தனது தென்னிலங்கை கட்சி உறுப்புரிமையை விட்டு விட கருணா தயாரானால் அருணும் அமைப்பாளர் பதவியை விட்டு விலகக்கூடும். ஆட்டம் கண்டிருக்கும் கூட்டமைப்பில் அதுவும் தமிழரசு கட்சியில் ஏற்பட்டிருக்கும் சலசலப்பு இவர்களுக்கு சாதகமாகலாம்.

தேசிய கட்சிகளை விடுத்து கிழக்கில் தனித்துவமான கட்சி அமையவேண்டும் என செயல்பட தொடங்கி உள்ளவர்களின் ஆதங்கம் இம்முறை பட்டிருப்பு தொகுதிக்கான எம் பி பதவி பறிபோனதே. அவர்கள் குற்றம் சாட்டுவது கணேசலிங்கத்தை. யுஎன்பி யில் அவர் கேட்டு ஓட்டமாவடி அமீர் அலியை வெல்லவைத்து பட்டிருப்பு பறிபோக காரணமானார். பிள்ளையானும் இம்முறை அதே தவறை செய்து காத்தான்குடி ஹிஸ்புல்லா தோற்றாலும் தேசிய பட்டியல் மூலம் எம் பி ஆகிவிட்டார்.

கிழக்கில் தேசிய கட்சிகளில் போட்டியிடும் தமிழர்கள் மாற்று இனத்தவருக்கு தம் உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டிய நிலையே காணப்படுகிறது. கூடவே தமிழரசு கட்சி தலைமை தலையாட்டிகளுக்கே பதவி கொடுப்பதாக குறைப்படுவோர் மாற்று வழியாக கிழக்கின் உதயம் பற்றி பரவலாக பேசுவதால் விரைவில் அங்கு ஏற்படும் மாற்றம் அடுத்து வரும் உள்ளூராட்சி தேர்தலில் பரீட்சிக்க படலாம். சாதகமான நிலை தோன்றினால் அது மாகாண சபை தேர்தல் முடிவின்படி பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கலாம். கருணாவின் எதிர் காலம் அதில் தான் உள்ளது.

நவம்பரில் வரும் என எதிர்பார்த்த உள்ளூராட்சி தேர்தல் அடுத்த வருடம் மார்ச்சில் தான் நடக்கும் என கூறப்படுகிறது. இந்த கால அவகாசம் டக்ளசுக்கு தேவை. மீண்டு வர எப்படியாவது ஒரு சபையை ஆவது கைப்பற்ற வேண்டும். அல்லது எதிர்கட்சியாக வந்தே ஆகவேண்டும். இல்லை என்றால் சங்கூதி விடுவார்கள். இத்தனை காலமும் அரச ஆதரவு, அமைச்சர் அதிகாரம் அவரை தேர்தல் வெற்றிக்கு முன்னிலைப் படுத்தியது. இப்போது அங்கஜன் வரவு அவரது வாக்கு வங்கியில் தான் கைவைக்கும்.

அங்கஜனுக்கு எம்பி பதவி கொடுத்ததை விரும்பாத கூட்டமைப்பு ரணிலிடம் முணு முணுத்து மைத்திரி காதில் எந்த அமைச்சும் கொடுக்க வேண்டாம் என கோரிக்கை வைத்ததாக கேள்வி. கூடவே விஜயகலாவுக்கு அமைச்சரவை அமைச்சர் கொடுப்பதை தடுத்ததும் அவர்கள் தானாம். இதனால் பலனடைந்தது டக்ளஸ் தான். விஜயகலா அமைச்சரவை அமைச்சராகாததால் மாவட்ட அபிவிருத்தி குழு கூடத்தில் டக்ளஸ் அணிக்கு தண்ணீர் போத்தலால் எறிந்து சண்டையிட தேவையில்லை. சிவாஜிலிங்கத்தின் மைக்கை புடுங்க தேவையில்லை.

அங்கஜன் மந்திரி இல்லை என்பதும் ஆறுதலான செய்திதான். மாகாண சபை தேர்தலில் பெண் மேயரின் முடியை இழுத்து தலையில் துப்பாக்கி வைத்தவர் மந்திரியானால் என்னவெல்லாம் செய்திருப்பார். தேர்தல் காலத்தில் டக்ளஸ் ஓடி ஓடி தேங்காய் உடைத்த கோவில் தெய்வங்கள் அருள், தேடிச் சென்று தரிசித்த இந்து / வேத மத குருமார் ஆசீர்வாதம் தான் டக்ளசின் தாடியை காப்பாற்றி உள்ளது. அங்கஜனால் ஆபத்தில்லை ராஜாங்க அமைச்சரால் தொல்லையும் இல்லை.

20 வது திருத்தம் டக்ளசை பொறுத்தவரை விருப்பத்துக்கு உரியதல்ல. சிறுபான்மை கட்சிகள் சிறு கட்சிகள் கூட்டத்தை சிறி டெலோ உதயராசா ஊடாக அனைவருக்கும் அழைப்பு விட்டு மாற்று வழி தேடுவார். தனித் தொகுதியில் போட்டியிட தற்சமயம் அவருக்கு ஒரு தொகுதியும் இல்லை. கோட்டையாக இருந்த தீவகமும் கைமாறிவிட்டாது. அங்கு முன்பு தெரிவான உதயன் இம்முறை பெற்ற வாக்கே அதற்கு சாட்சி. முன்னாள் எம்பி தன் தொகுதியில் கட்சிக்கு பெற்று கொடுத்த வாக்குகள் 3 ஆயிரம்.

டக்ளஸ் தன்னோடு இருப்பவர்களை பழி பேசி விலத்தி செல்ல வைக்காமல் இழப்புகளுக்கு ஈடுகட்ட அவர்களை சுதந்திரமாக செயல்ப்பட விடவேண்டும். எல்லோரையும் சந்தேகிக்கும் பிரபாகரனுக்கு இருந்த பரனொய்ட் எனும் நோயில் இருந்து விடுபட்டால், இரண்டாம் கட்ட தலைமைகளை ஊக்குவித்தால் ஏதோ ஒரு கதவு திறக்கும். இல்லை என்றால் சொல்லாமல் போய் தஞ்சம் கேட்டவரை தாஜா பண்ணி கூட்டிவந்து அவர் மாகாண சபை தேர்தலில் தோற்றாலும் அடுத்தவன் மனைவி மேல் கொண்ட மையலில் கொலை செய்தவர் இடத்துக்கு எதிர்க்கட்சி தலைவராய் நியமிக்க பட்டவரும் மீண்டும் UL 503 கொழும்பு லண்டன் விமானம் ஏறுவார்.

மாதவன் சஞ்சயன்