தமிழினியின் மரண நிகழ்வு…….!

தமிழினியின் மரண நிகழ்வு ஒப்பற்ற ஒரு நாடகமாக நடந்திருக்கிறது. ஏறக்குறைய டேவிட் ஐயாவின் மரணச் சடங்கும் அப்படித்தான் நடந்தது. மரணச்சடங்கிற்காகவே காத்தும் பார்த்தும் இருக்கிறது ஒரு கூட்டம். செத்தவீட்டு அரசியல். தமிழினி சரணடைந்ததைப்பற்றியும் அவர் புனர்வாழ்வு முகாமில் இருப்பதைப் பற்றியும் தூற்றியவர்கள் பலர். அவருடைய வழக்கை தொடர்ந்து நடத்தாமல் இடையில் கைவிட்டவர்கள் சில தமிழ்த்தேசியவாதிகள். பின்னர் அந்த வழக்கை ஒரு சிங்களப் பெண் சட்டவாளரே முன்வந்து எடுத்து நடத்தி தமிழினியின் விடுதலைக்கான வழிகளைக் காட்டினார்.

தண்டனைக்காலம் முடிந்து வெளிவந்த தமிழினியைப் பற்றிக் கண்டபடி எழுதித்தள்ளினார்கள். பின்னர் கடந்த வடக்கு மாகாணசபைத்தேர்தலின்போது தமிழினியும் தேர்தலில் போட்டியிடலாம் என்று ஊகங்களோ கசிந்த வதந்திகளைப் பின்தொடர்ந்து அவரைத் தூற்று தூற்றென்று தூற்றினார்கள். ஆனால், அவர் தன்னுடைய கடந்த காலத்தை மீள்பார்வை செய்தவாறு மிக அமைதியாக தன்னுடைய வாழ்வை ஒழுங்கு படு்த்திக்கொண்டிருந்தார். அந்த மீள்ஒழுங்கில் அவருடைய கணவர் ஜெயக்குமாருக்கு அதிகளவில் பங்குண்டு. ஆனால் அதற்கிடையில் அவருக்கு நோய்கண்டு மரணம் சம்பவித்து விட்டது. இதற்கிடையிலான காலப்பகுதியில் தமிழினியைப்பற்றி எதிர் நிலைப்பாட்டோடும் சந்தேகங்களோடும் இருந்தவர்களில் சிலர், அவருடைய மரணச் சடங்கில் கலந்து கொண்டு ஆடிய நாடகம்… மிகக் கேவலமானது.

தமிழினியின் மீது பற்றும் பாசமும் இருந்திருந்தால், அவர்மீது அக்கறையிருந்திருந்தால் அவருடைய வீட்டிற்கு எப்போதோ இவர்கள் போயிருக்க வேண்டும். அவருடைய தாயாரும் சகோதரிகளும் படுகின்ற பாட்டையும் அவர்களுடைய வாழ்க்கையையும் அறிந்திருக்க வேண்டும். அவர்களைப் போல அந்தக் குடியிருப்பில் இருக்கின்ற நூற்றுக்கணக்கானவர்களின் நிலையை அறிந்திருக்க வேணும். அதற்கான மாற்றங்களை உண்டாக்கப்பாடு பட்டிருக்க வேணும். இதெல்லாத்தைப் பற்றியும் கவலைப்படாதவர்கள், இவற்றைப்பற்றிச் சிந்திக்காதவர்கள் எந்தக் கூச்சமுமி்லலாமல் வந்து இறுதி நிகழ்வில் வெழுத்துக்கட்டினார்கள். பாவம் மக்கள்.
-கருணாகரன்-