தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அங்குசமா தமிழ் மக்கள் பேரவை ?

2013ல் வட மாகாண சபை தேர்தல் முடிந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சிக்கு வந்ததும், “அமைந்தது தமிழர் அரசு” என முதன்மை செய்தியாக உதயன் பத்திரிகையில் வந்தது. இன்று 2015ல் “உதயமானது தமிழ் மக்கள் பேரவை” என முதன்மை செய்தியாக வலம்புரி பத்திரிகையில் வந்துள்ளது. தமிழ் அரசியலின் பரிணாம வளர்ச்சி என இதனை பார்க்கலாமா? எதிர்பார்த்த படி பூனை கூடையில் இருந்து வெளியே வந்து விட்டது (The cat is out of the bag). இனி அறிக்கைகளுக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிக்கும் பத்திரிகை பலம் ஒரு வரப்பிரசாதம். உதயன், வலம்புரி இரண்டும் வாங்கினால் தான் தகவல்களை சீர்தூக்கி பார்த்து முடிவெடுக்கலாம் என்ற நிலை வாசகனுக்கு நிச்சயம் ஏற்படும்.

முதல்வரை இணைத்தலைவராக கொண்டு தமிழ் மக்கள் படும் துன்ப துயரங்களை தீர்த்தல். அவர்தம் உரிமைகளை வென்றெடுத்தல், கலை கலாச்சாரத்தை பேணல், சமூக சீரழிவை கட்டுப்படுத்தல் என இன்று காணப்படும் இழிநிலையை ஒட்டுமொத்தமாக புரட்டி போட்டு எழுச்சி பெற்ற சமூகமாய் எம் இனம் மாற புரட்சி செய்யவே இந்த பேரவையாம். மூத்த அரசியல்வாதிகள், வைத்திய நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், கல்விமான்கள், துறைசார் அறிஞர்கள், சிவில் சமூகத்தினர், நல்லை ஆதீன முதல்வர் உட்பட மத தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என ஒட்டு மொத்த சமூக கட்டமைப்பில் உள்ளவர்களுடன் காலப் போக்கில் பெண்ணியல் வாதிகளும் இணைக்கப்படுவர் என்பது மேலதிக அறிவிப்பு.

இதற்கு மேலாக சில அரசியல் கட்சிகளும் இணைக்கபட வேண்டிய தேவை இருப்பதாக அவர்களின் அறிக்கை கூறுகிறது. தமிழ் அரசு கட்சியின் சிற்றம்பலம், ஈபிஆர்எல்எப் பிரேமசந்திரன், புளட் சித்தார்த்தன் (இவர்கள் மூவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணை கட்சி தலைவர்கள்) தமிழ் தேசிய மக்கள் முன்னணி கஜேந்திர குமார் ஆகிய அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்கனவே உள்வாங்க பட்டுள்ளனர். எஞ்சி இருப்பவர்கள் ஈபிடிபி தலைவர் தேவானந்தா, தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி, பத்மநாபா ஈபிஆர்எல்எப் தலைவர் சிறிதரன், அகில இலங்கை தமிழர் மகா சபை தலைவர் விக்னேஸ்வரன். இவர்கள் அனைவரும் உள்வாங்க பட்டால் தமிழ் மக்கள் பேரவை முழுமை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் மக்கள் பேரவை ஆரம்பித்த நோக்கம் பின் வருமாறு……

[“இன்று தமிழ்மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு என்பது சர்வதேச சமூகத்தின் காத்திரமான வகிபங்குடன் மட்டுமே சாத்தியமாகும் என்ற நிஜம் வெளிப்படுகிறது. எனினும் அந்தத் தீர்வு என்பது நடந்து முடிந்த யுத்தத்தின் இழப்புகளுக்கான சமாளிப்புக்களாகவோ அல்லது இனப்பிரச்சினைக்கான தீர்வு தேவை என்று வலியுறுத்துகின்ற அரசியல் தரப்புகளை சாந்தப்படுத்துகின்ற சம்பிரதாயங்களாகவோ இருந்து விடக்கூடாது.

அத்தகையதொரு தற்காலிக ஏற்பாடுகள் தமிழ் மக்களின் எதிர்கால நிலைமைகளை மிகவும் மோசமானதாகவே ஆக்கிக் கொள்ளும். ஆகையால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என்பது தமிழ் மக்களின் அபிலாசைகளை, அவர்களின் வாழ்வியலுக்கான உரிமைகளை, சுயநிர்ணயத்தின் பண்புகளை தாராளமாகக் கொடுப்பதாக இருத்தல் வேண்டும். இத்தகையதொரு நிலைமையில் தனி மனிதர்களின் தீர்மானங்களை, ஒரு சில அரசியல்வாதிகளின் ஒத்தோடலை நிரந்தர தீர்வாக்கிக் கொள்வது அர்த்தமற்றது.

இத்தகையதொரு நிலைமையில் பொதுமுடிவை எடுப்பதில் அரசியல் என்ற எல்லை கடந்து ஒட்டுமொத்தத் தமிழினத்தின் பிரதிபலிப்பை நிர்ணயம் செய்யக்கூடியதான அமைப்பு தேவைப்படுகிறது. அந்த இலக்கை ஈடு செய்யக்கூடியது என்ற நம்பிக்கையோடு மதபீடங்கள், அரசியல் தலைமைகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்த ஓர் அமைப்பாக தமிழ் மக்கள் பேரவை உருவாகியுள்ளது.”]

மேலே உள்ளது தமிழ் மக்கள் பேரவையின் அறிக்கையின் ஒரு பகுதி. இதனை வாசித்த போது இது தமிழ் மக்கள் ஒற்றுமை பேண உருவான சபை தானா என்ற கேள்வி எழுகிறது. ஏற்கனவே உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்கருத்து முரண்பாடு இருந்த போதும் தேர்தலில் மட்டும் கூடி குலவி வெற்றியை நிச்சயிக்கும் கடந்த கால அனுபவங்களின்படி பார்த்தால் தோற்று போனவர் கூட்டு இது எனவும் இதனை கொள்ளலாம்.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வித்திட்டவர் பத்திகையாளர் தராகி சிவராம். பின்னணியில் பலர் செயல்பட்டபோது அதனை முன்னணிக்கு கொண்டு வந்தது புலிகள். புலிகளின் ஆசீர்வாதம் பெற்றதால் தான் பிரேமசந்திரன் இரண்டாம் தடவை பாராளுமன்றம் போகும் பிராப்தம் பெற்றார். புலிகள் இல்லாது போனதும் ஏற்பட்ட உள் பிரச்சனைகளை தீர்க்க மன்னார் ஆயர் உதவினார். ஒவ்வொரு தேர்தலிலும் பத்திரிகையாளரும் சிவில் சமூகத்தவரும் மத தலைவர்களும் கல்விமான்களும் துறைசார் அறிஞர்களும் கூட்டமைப்பு வெற்றிக்கு தம் பங்களிப்பை செய்தனர்.

அப்படி இருக்கையில் இன்று உருவாகி உள்ள தமிழ் மக்கள் பேரவை உள்வாங்க முயலும் அரசியல்வாதிகள், கட்சி தலைவர்கள், புத்திஜீவிகள், சிவில் சமூகத்தவர், துறைசார் அறிஞர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு விலக தயாராகி விட்டார்களா? அல்லது அவர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் ““தனி மனிதர்களின் தீர்மானங்களை, ஒரு சில அரசியல்வாதிகளின் ஒத்தோடலை நிரந்தர தீர்வாக்கிக் கொள்வது அர்த்தமற்றது”” என அவர்களுக்கு எதிராக செயல்பட புதிய அணி தேவை என இவர்களுடன் இணையப் போகிறார்களா?

அப்படி ஒன்று படும்போது தேவானந்தாவின் வகிபாகம் என்ன? சிறிதரன் உள்வாங்க படுவாரா? என்ற கேள்வி எழுகின்றது. காரணம் தேவானந்தா தனி நிலைப்பாடு கொண்டவர். தன்னை முன்னிலைப் படுத்திய அரசியலை தான் அவர் செய்வார். இன்று இருக்கும் நிலையில் பத்மநாபா ஈபிஆர்எல்எப் என தம்மை உள்வாங்கும் படி சிறிதரன் கேட்டால் அதனை பிரேமசந்திரன் ஏற்பாரா? ஒற்றுமை வேண்டும் என்ற நோக்கில் மூத்தவர்களான ஆனந்தசங்கரியும் டாக்டர் விக்னேஸ்வரனும் அனுசரித்து போகலாம்.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்கும் சிவில் சமூகம், துறைசார் அறிஞர், புத்திஜீவிகள் கல்விமான்கள், சமய பெரியார் மட்டுமல்ல, முன்னாள் புலி போராளிகளை முன்னிலைப்படுத்தி தேர்தல் களம் கண்ட வித்தியாதரன் உட்பட முதல்வர் ஆதரித்த கஜேந்திர குமார், அரசின் துணையில் வாக்கு கேட்ட அங்கஜனை விடுத்து, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தங்கள் பேராதரவை தந்த வாக்காளர்கள் புதிதாய் தோன்றிய தமிழ் மக்கள் பேரவையில் தம்மை இணைப்பார்களா?

தோற்று போனவர் கூட்டு இது என கூறுவதன் காரணம் முதல்வராக மாகாண சபையில் இதுவரை எதனையும் வென்றெடுக்க முன்நாள் நீதி அரசரால் முடியவில்லை. புலம்பெயர் அமைப்புகளின் பெரும் பலம் இருந்தும் கஜேந்திர குமார் அணி தோற்று போனது. சுமந்திரனை சீண்டுவதே செயலாய் கொண்ட சுரேஸ் வெற்றி பெற முடியவில்லை. கூட்டமைப்பில் இணைந்ததால் தான் சித்தார்த்தனால் வெல்ல முடிந்தது. எனவே வாக்கு அரசியலில் வாக்களர் மனநிலை அறியாத எந்த புதிய அமைப்பும் நினைப்பது சாத்தியமாகுமா?

தனி நபர்கள் விருப்பு, தேவை என்பதை நிறைவேற்ற மக்களை மேய்ப்பவர்களாக தம்மை மாற்ற விரும்பும் எவரும் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். நல்ல மேய்ப்பன் யார் என்று தெரிவு செய்யும் அறிவும் அனுபவமும் வாக்காளருக்கு உண்டு. வாக்கு சாவடிக்கு செல்லும் வரை அவர்களும் முதல்வர் போல் ஊமையாகவே இருப்பர். கையில் மையை பூசியதும் புத்திசாலித்தனமாய் புள்ளடி இடுவர். இன்று இது அரசியல் கட்சி அல்ல மக்கள் இயக்கம் என்பவர் தேர்தல் அறிவிப்பு வந்த பின் என்ன செய்வர் என்பதை எதிர்பார்த்து காத்திருப்போம் (let the cat out of the bag).

-ராம்-