தமிழ் – முஸ்லிம் கூட்டு அரசியல் தீர்வுகள் சாத்தியமா?

அரசாங்கம், புதிய அரசியலமைப்பொன்றை தயாரிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதேவேளை, தமிழர்களின் பிரதான அரசியல் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம்களின் பிரதான கட்சியாகக் கருதப்படும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் இந்த விடயத்தில் கூட்டாகச் செயற்படுவதற்காக பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன. இந்த முயற்சிகள் எந்தளவு நடைமுறை சாத்தியமானவை என்பதை சற்று ஆராய்வது பொருத்தமாகும்.

புதிய அரசியலமைப்பொன்றை முன்வைப்பதற்கான அரசாங்கத்தின் இந்த முயற்சியோடு, கடந்த 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலத்தின் இரண்டாவது ஆண்டு, அரசாங்கத்துக்கு மட்டுமல்லாது நாட்டுக்கும் மிகவும் முக்கியமானதாகியுள்ளது.

பதவிக்கு வரும் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், நாட்டு மக்களுக்கு நல்லாட்சி தொடர்பாகவும் ஊழல், ஒழிப்பு தொடர்பாகவும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாகவும் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேறுமா என்ற பலத்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அந்த நிலையிலேயே, புதிய அரசியலமைப்பொன்றை வரைவதைப் பற்றிய முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.

எனினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகார, ஊழல் நிறைந்த, இனவெறியர்களுக்கு பொருத்தமான ஆட்சியோடு ஒப்பிடும் போது, தற்போதைய அரசாங்கம் இன்னமும் சிறந்த அரசாங்கமாகவே தெரிகிறது. ஆயினும் போகிற போக்கைப் பார்த்தால் தற்போதைய ஆட்சி, மஹிந்தவின் ஆட்சியை விஞ்சினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது போன்ற மிகவும் உணர்ச்சிகளை தூண்டக் கூடிய விடயங்களோடு சம்பந்தப்பட்டுள்ளதால், புதிய அரசியலமைப்பொன்றை வரையும் முயற்சியானது ஒரு வகையில் அரசாங்கத்தின் இருப்பையே தீர்மானிக்கக்கூடிய பாரதூரமான விடயமாகும்.

அரசியலமைப்பை மாற்றி அமைப்பதற்காக, அரசாங்கம் அமுலாக்கப் போகும் அரசியலமைப்புச் சபையென்ற பொறிமுறையை அறிமுகப்படுத்த முன்னரே, விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன மற்றும் உதய கம்மன்பில போன்ற எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு – கிழக்கு இணைக்கப்படப் போகிறது என்றும் பௌத்த மதத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் முக்கிய இடம் இல்லாமல் போகப் போகிறது என்றும் ஒற்றை ஆட்சி முறை இல்லாதொழிக்கப்படப் போகிறது என்றும் கூறி சிங்கள மக்கள் மத்தியல் பீதியை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள்.

இந்தப் பின்னணியில் தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம்

காங்கிரஸும் இரு சமூகங்களையும் பாதிக்கும் விடயங்கள் சம்பந்தமாக ஆராய்ந்து, இனப்பிரச்சினை விடயத்தில் ஒருமித்த கருத்துடன் அரசாங்கத்தின் அரசியலமைப்பு தயாரிப்புப் பணியை எதிர்நோக்கப் போகின்றன. ஏற்கெனவே, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான

இரா. சம்பந்தனின் தலைமையிலான கூட்டமைப்பின் தூதுக்குழுவொன்றும், அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமின் தலைமையிலான

தூதுக்குழுவொன்றும் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

நிச்சயமாக சிங்கள மக்களும், குறிப்பாக பேரினவாதக் கட்சிகளின் தலைவர்களும் இந்த முயற்சியை சந்தேகக் கண் கொண்டே பார்ப்பார்கள். அதேவேளை, பல தமிழ், முஸ்லிம் அமைப்புக்களும் தமிழ் ஊடகங்களும் இந்த முயற்சியை பாராட்டியுள்ளன. உண்மையிலேயே எடுத்த எடுப்பிலும் மேலோட்டமாகவும் பார்த்தால் இது சிறந்த முயற்சியாகவே தெரிகிறது. ஆனால், இம் முயற்சி நடைமுறைச் சாத்தியமா என்பது சந்தேகமே. இந்த முயற்சி அநாவசியமானது என்பது இதன் அர்த்தமல்ல. ஆனால், வரலாற்று அனுபவங்களின் படி இது சாத்தியமா என்ற கேள்வியையே எழுப்புகிறோம்.

தமிழ் அரசியல் கட்சிகளும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் கூட்டாகச் செயற்பட முயற்சித்த முதலாவது முறை இதுவல்ல. அரசாங்கங்கள்,

அப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண முற்பட்ட 1980களில் இருந்தே இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. அவை எதுவுமே வெற்றிபெறவில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.

அதனால் இனி ஒருபோதும் தமிழர்களும் முஸ்லிம்களும் அரசியல் ரீதியாக ஐக்கியமாக செயற்பட முடியாது என்றோ அல்லது அவ்வாறு செயற்படக் கூடாது என்றோ முடிவுக்கு வர வேண்டியதில்லை. ஆனால், கடந்த கால முயற்சிகள் ஏன் தோல்வியடைந்தன. அந்த முயற்சிகளின் போது அந்தந்த தரப்பினரின் எந்தெந்தக் குறைகள் தோல்விக்கு காரணமாயின, அந்த குறைகளை தவிர்க்க முடியுமா என்பனவற்றை ஆராய்ந்தே, இனி ஐக்கியத்துக்கான அவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இங்கு வலியுறுத்தப்படுகிறது.

தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் கூட்டாக இணைந்து, இனப்பிரச்சினைக்கு தீர்வாக ஆலோசனைகளை முன்வைக்க எடுத்த முதலாவது முயற்சியாக, முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் காலஞ்சென்ற எம்.எச்.எம். அஷ்ரபும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் முன்னாள் தலைவர் காலஞ்சென்ற குமார் பொன்னம்பலமும் 1988ஆம் ஆண்டு முற்பகுதியில் மேற்கொண்ட முயற்சியை சுட்டிக் காட்டலாம்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு தனியானதோர் மாகாண சபை உருவாக்கப்பட வேண்டும் என்ற கோஷத்துடனேயே 1986ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது.

1988ஆம் ஆண்டிலும் மு.கா. அந்த நிலைப்பாட்டிலேயே இருந்தது. தமிழர்கள் அப்போது வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தனர். இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழ் அம் மாகாணங்கள் அப்போது ‘தற்காலிகமாக’ இணைக்கப்பட்டும் இருந்தன.

இந்த நிலையில் தான், பொன்னம்பலமும் அஷ்ரபும் பேச்சுவார்த்தை நடத்தினர். பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இரு சாராரினதும் நிலைப்பாடுகளும் வெகுவாகப் பாதிக்கப்படாது, அவற்றுக்கிடையே ஒருவித சம நிலையை ஏற்படுத்தும் வகையில் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டது. அதன்படி, வட மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் இணைக்கப்பட்டு, தமிழ் மாகாண சபையொன்றையும் இரு மாகாணங்களிலும் ஒன்றோடொன்று ஒட்டியில்லாத முஸ்லிம் பகுதிகளை நிர்வாக ரீதியாக இணைத்து நிலத் தொடர்பற்ற முஸ்லிம் மாகாண சபையொன்றையும் உருவாக்குவதென முடிவு செய்யப்பட்டது.

அதற்கு முன்னர் அதிகாரப் பரவலாக்கலின் போது முஸ்லிம்களுக்கும் தனியானதோர் அலகு இருக்க வேண்டும் என்றும் அதற்கு அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்றும் எந்தவொரு தமிழ் தலைவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனை ஏற்றுக் கொண்ட முதலாவது தமிழ் தலைவர் குமார் பொன்னம்பலமே.

1988ஆம் ஜனாதிபதித் தேர்தலுக்காக இவ்விரண்டு கட்சிகளும் உள்ளிட்ட 8 அரசியல் கட்சிகள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் தலைமையில் கூட்டணியொன்றை அமைத்தன. ஜனநாயக மக்கள் முன்னணி என்ற அந்தக் கூட்டணியும், பொன்னம்பலம் -அஷ்ரப் ஒப்பந்தத்தை ஏற்று அதன் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சேர்த்துக் கொள்ள இணங்கியது.

ஆயினும், தேர்தல் கூட்டணியை உருவாக்கும் ஒப்பந்தத்தில், 8 கட்சிகளும் கைச்சாத்திடவிருந்த நாளன்று காலையில், இணங்கப்பட்ட ஒப்பந்தத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதை அஷ்ரப் கண்டு பிடித்தார். அத்தோடு, அவரும் பொன்னம்பலமும் அக் கூட்டணியிலிருந்து விலகிவிட்டனர். எஞ்சிய 6 கட்சிகளும், பொன்னம்பலம் – அஷ்ரப் ஒப்பந்தத்தை தமது வேலைத் திட்டத்திலிருந்து நீக்கிவிட்டு அதில் கைச்சாத்திட்டன.

1988ஆம் ஆண்டு, பொன்னம்பலம்- அஷ்ரப் ஒப்பந்தத்துக்;கும் ஜனநாயக மக்கள் முன்னணியை அமைக்கும் முயற்சிக்கும் இடைப்பட்ட ஒரு சில மாத காலத்தில், மேலும் இரண்டு தமிழ் முஸ்லிம் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. அதில் ஒன்று இலங்கையில் உருவாகிய இரண்டாவது முஸ்லிம் கட்சியாக எம்.ஐ.ஏம். மொஹிதீனின் தலைமையில் உருவான முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே செய்து கொள்ளப்பட்டன. அதற்காக காலஞ்சென்ற கலாநிதி பதியுதீன் மஹ்மூதின் தலைமையில் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின்

தூதுக்குழுவொன்று 1988ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னைக்குச் சென்றது.

எதிர்க்கால, வட கிழக்கு மாகாண சபையொன்றிலும் அதன் அமைச்சரவையிலும் முஸ்லிம்களுக்கு 30 சதவீத இடம் ஒதுக்கப்படும் என புலிகள் அப்போது இணக்கம் தெரிவித்தனர். வடக்கு – கிழக்கில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முஸ்லிம் மக்களுக்கான காணி உரிமையின் விகிதாசாரமும் அறிவிக்கப்பட்டது. அவ்வாறெல்லாம் இணக்கம் தெரிவித்த புலிகள், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வட மாகாணத்தில் இருந்து அத்தனை முஸ்லிம்களையும் விரட்டிவிட்டனர்.

புலிகளுடனான ஒப்பந்தத்துக்கு ஓரிரு வாரங்களுக்குப் பின்னர், முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் மற்றொரு

தூதுக்குழுவொன்று சென்னைக்குச் சென்று காலஞ்சென்ற எம். சிவசிதம்பரத்தின் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தூதுக்குழுவொன்றுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதிலும், புலிகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையொத்த ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. ஆனால், அதனை இரு சாராரும் விரைவிலேயே மறந்துவிட்டனர்.

புலிகளும் புளொட்டும் தவிர்ந்த சகல தமிழ் கட்சிகள் மற்றும் இயக்கங்களும் 1987ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்டன. ஆயினும், புலிகளுக்கும் இந்திய படையினருக்கும் இடையிலான போர் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் புதிய தீர்வுகளைத் தேட அவை முற்பட்டன. அதன் பிரகாரம் 8 தமிழ் கட்சிகளும் முஸ்லிம்

காங்கிரஸும் 1990ஆம் ஆண்டு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தனர்.

அதன்படி, வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ்ப் பிரதேசங்களை இணைத்து, தமிழ் மாகாண சபையொன்றையும் நிலத் தொடர்பற்ற முஸ்லிம் பிரதேசங்களை நிர்வாக ரீதியாக இணைத்து முஸ்லிம் மாகாண சபையொன்றையும் உருவாக்கி அவற்றுக்கு மேலாக இரண்டையும் நிர்வகிக்கும் உயர் சபையொன்றையும் (யுpநஒ ஊழரnஉடை) உருவாக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இரண்டு இனவாரி சபைகளின் எல்லைகளை நிர்ணயிக்க முற்பட்டபோது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக, அந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், 1996ஆம் ஆண்டு இனப் பிரச்சினையை தீர்ப்பதற்காக, அப்போதைய அரசியலமைப்புத்துறை அமைச்சராகவிருந்த பேராசிரியர் ஜீ.எல். பீரிஸின் தலைமையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. அப்போதும் இதே தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் பொதுவான நிலைப்பாடொன்றை முன்வைப்பதற்காகவென ஒன்று சேர்ந்து பேச்சுவார்த்ததை நடத்தினர்.

அப்போதும் 1990ஆம் ஆண்டைப் போலவே இரண்டு இனவாரி சபைகளும் அவ் இரண்டுக்கும் மேலால் உயர் சபையொன்றும் (யுpநஒ உழரnஉடை) உருவாக்கப்படுமென தமிழ் – முஸ்லிம் கட்சிகள் முடிவு செய்தன. ஆனால், அப்போதும் இரண்டு இனவாரி சபைகளின் எல்லைகளை நிரணயிக்க முற்பட்டபோது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன.

2012ஆம் ஆண்டும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் கூட்டு நிலைப்பாடொன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என சம்பந்தன் கூறியிருந்தார். ஆனால், அதற்காக எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

இனி மேலும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் பொது நிலைப்பாட்டை காண முற்படுவதாக இருந்தால் இந்த கசப்பான வரலாற்றை மறக்காது, அதிலிருந்து பெற வேண்டிய பாடங்களை பெற்று அவற்றை முறையாக பாவித்தே முன் நகர வேண்டும். அத்தோடு, என்ன பொது நிலைப்பாட்டை உருவாக்கிக் கொண்டாலும் அதனை சிங்களத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் முன்வைப்பதற்கான உத்திகளையும் கண்டறிய வேண்டும்.

அவ்வாறில்லாது தமது கருத்தை சிங்களத் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என அவர்களைத் திட்டி தமிழ் – முஸ்லிம் மக்களிடையே அரசியல் இலாபம் தேட முற்படுவதிலும் அர்த்தமில்லை.
(எம்.எஸ்.எம்.ஐயூப்)