துக்ளக் இல் வெளி வந்த கட்டுரை பற்றி….

எத்தனையோ கட்டங்களில், எத்தனையோ தீர்வுகளுக்கு யார் யாரோ உதவ முன் வந்தனர். புலிகளால் இலங்கைக்கு நல்ல தீர்வு எந்தக் காலத்திலும் அமையாது .ராஜபக்ஷவை ஜெயிக்க வைத்த தமிழர்கள்!இலங்கையில் துக்ளக் இந்தக் கட்டுரைத் தொடர் திட்டமிட்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் எழுதப்படுவதாகச் சிலர் விமர்சனம் செய்கிறார்கள். முதலில் இந்தக் கட்டுரைத் தொடர் உருவான பின்னணியை அவர்கள் தெரிந்து கொள்வது நலம்.

இலங்கைப் பிரச்னை துவங்கிய காலம் முதலே நமது ஆசிரியர் எடுத்த நிலைப்பாடு என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். அன்றைக்கு தமிழகம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவும் விடுதலைப் புலிகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்துக் கொடுத்தபோதே, அதை எதிர்த்து எழுதியவர் நமது ஆசிரியர். “1983-லேயே உங்கள் ஆசிரியர் சோ, புலிகளுக்கு எதிராக எழுதினார். ‘இவர்களை ஆதரித்தால் அழிவுதான் வரும். இவர்களை சப்போர்ட் செய்வது தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் நல்லதல்ல. புலிகளால் இலங்கைக்கு நல்ல தீர்வு எந்தக் காலத்திலும் அமையாது’ என்றெல்லாம் அப்போது அவர் எழுதியபோது, என்னைப் போன்ற, இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் கோபப்பட்டோம். ஆனால், அவரது தீர்க்கதரிசனம்தான் இப்போது பலித்துள்ளது” என்று எங்களிடம் பேசும்போது குறிப்பிட்டார் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதி கருணா.
இப்படி, தமிழக வெகுஜனக் கருத்து புலிகளுக்கு ஆதரவாக இருந்த காலம் தொட்டே, புலிகளுக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் உறுதியாகத் தொடர்ந்து இருந்து வருகிறார் ஆசிரியர். ‘துக்ளக்’ அலுவலகத்திலும் கூட இவ்விஷயத்தில் ஆசிரியரின் கருத்துக்கு எதிரான கருத்து நிலவியதுண்டு. இலங்கைப் பிரச்னை தமிழகத்தில் அவ்வப்போது சூடு பிடிக்கும் போதெல்லாம், ‘பேசாமல் இலங்கைக்குச் சென்று பார்த்து ஒரு நேரடி ரிப்போர்ட் தந்தால் என்ன’ என்ற விவாதம் துக்ளக் அலுவலகத்தில் நடப்பதுண்டு. அந்த விவாதம் நிறைவடையும் முன்னரே, தமிழகத்தில் அந்தச் சூடு அடங்கிப் போய், வேறு பிரச்னை சூடு பிடித்து விடும். இந்த முறை பாலகன் பாலச்சந்திரனின் படங்கள் வெளியாகி, அதைத் தொடர்ந்து தமிழகத்தில் மாணவர் போராட்டம் சூடு பிடித்து, எதற்காகவும் பதவியை விட்டுக் கொடுக்காத தி.மு.க.வே மத்திய அரசிலிருந்து வெளியேறிய தருணத்தில், ‘இலங்கைக்கு நிருபர்களை அனுப்பி விடலாம்’ என்று முடிவெடுத்தார் ஆசிரியர்.

காரணம், இலங்கையில் ஆசிரியருக்கு இருக்கும் தமிழ்த் தொடர்புகள் தரும் செய்திகள் வேறாகவும், தமிழகத்தில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் வேறாகவும் இருந்தன. எங்களை இலங்கைக்கு அனுப்பும் முன் எங்களுக்கு ஆசிரியர் சொன்னது இதுதான்: “துக்ளக்கின் தனிப்பட்ட நிலைப்பாடு எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். எனக்குத் தேவை அங்குள்ள உண்மை நிலவரம். இங்கு வைக்கப்படுகிற குற்றச்சாட்டுகளைத் தொகுத்துக் கொள்ளுங்கள். அவற்றின் உண்மை நிலை அங்கு எப்படியிருக்கிறது என்பதைப் பார்த்து வாருங்கள். இலங்கைத் தமிழர்களின் மனவோட்டம் என்னவென்பது தெரிய வேண்டும். உங்கள் விருப்பப்படி யாரை வேண்டுமானாலும் சந்தியுங்கள். என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்டுப் பதில் வாங்கி வாருங்கள்.”

இப்படித்தான் எங்களைச் சுதந்திரமாக ஆசிரியர் அனுப்பி வைத்தார். இத்தனைக்கும் நாங்கள் இருவரும் ஈழத் தமிழர்கள் மீது அனுதாபம் கொண்டவர்கள் என்பதும் ஆசிரியருக்குத் தெரியும். “ஒருவேளை நாங்கள் சேகரித்து வரும் கட்டுரை முழுக்க, முழுக்கப் புலிகளுக்கு ஆதரவான கட்டுரையாக அமைந்து விட்டால் என்ன செய்வது?” என்ற கேள்வியை நாங்கள் ஆசிரியரிடம் வைத்தோம். “ஒட்டுமொத்த இலங்கையே புலிகளை ஆதரித்துக் கருத்துச் சொன்னாலும், அந்த இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்ற எனது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படாது. அந்த இயக்கத்தை ஆதரித்து என்னால் எழுத முடியாது. உங்கள் இருவரையும் இலங்கைக்கு இலவச சுற்றுலா அனுப்பி வைத்ததாக நினைத்துக் கொள்வேனே தவிர, கட்டுரையைப் பிரசுரிக்க மாட்டேன். ஆனால், அதே நேரம் இலங்கை மக்கள் எல்லாம் உண்மையிலேயே புலிகளைத்தான் ஆதரிக்கிறார்கள் என்ற உண்மையை நான் மனதில் வைத்துக் கொள்வேன். புலிப் பிரசாரம் செய்ய என் மனசாட்சி இடம் கொடுக்காது. அப்படி ஒரு மனநிலை அங்கு நிலவினால், அதற்காக, அதை மாற்றி பொய்யான ஒரு கட்டுரையைப் பிரசுரிக்க வேண்டிய எந்த அவசியமும் நமக்கில்லை. எனவே, அங்குள்ள உண்மை நிலையை மட்டும் படம் பிடித்து வாருங்கள். மற்றவற்றைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று பதில் தந்தார்.

இப்படித்தான் நாங்கள் இலங்கைக்குப் பயணமானோம். இலங்கையில் கால் பதிக்கும் வரையிலும் நாங்கள் இருவரும், ‘பெரிய அளவில் கட்டுரைகள் எழுத வேண்டி வராது. ஆதாரங்கள் இல்லாமல் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இந்தளவுக்குக் குற்றச்சாட்டுகளைத் தைரியமாக வைக்க மாட்டார்கள். நமது இந்தப் பயணம் ஆசிரியருக்கு ஏமாற்றமாக அமையவே வாய்ப்புகள் அதிகம்’ என்கிற ரீதியில்தான் பேசிக் கொண்டு போனோம்.

ஆனால், இலங்கையில் இறங்கிய நிமிடம் முதலே, நாங்கள் பார்த்ததும், கேட்டதும் எங்களைத் தூக்கி வாரிப் போட வைத்தது. ‘ஹிந்து கோவில்கள் அழிப்பு, தமிழ் பெயர்கள் அழிப்பு, சிங்களக் குடியேற்றம், சீனர் ஆதிக்கம், இன அழிப்பு, முள்வேலி முகாம்கள், புலிகளுக்கான சித்திரவதைக் கூடங்கள்…. என்று தமிழகத்தில் கிளப்பி விடப்பட்ட அத்தனை புகார்களும் பச்சைப் பொய் என்பதை நாங்கள் நேரடியாக அறிந்தபோது, ஏமாற்றமாகத்தான் உணர்ந்தோம். புலிகளை, தமிழகத்தில் சிலர் காவல் தெய்வமாக வழிபடும் நிலையில், அங்குள்ள ஈழப் பகுதி மக்கள் புலிகளைப் புழுதிவாரித் தூற்றுவதைப் பார்த்தபோது, முன்பு சில தருணங்களில் ஆசிரியரிடம் புலிகளுக்கு ஆதரவாகச் சில வாதங்கள் செய்ததை எண்ணி வெட்கமாகக் கூட இருந்தது.

ஆகவே, இந்தக் கட்டுரைத் தொடர், ஆசிரியரின் விருப்பத்திற்கேற்ப உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. இலங்கையில் நிலவும் உண்மையின் உரைகல். ‘துக்ளக்’ வாசகர் ஒருவர் ‘டியர் மிஸ்டர் துக்ளக்’ பகுதியில் குறிப்பிட்டதுபோல, இந்தக் கட்டுரைத் தொடர் ‘துக்ளக்’கிற்கு ‘தமிழ் துரோகி, இலங்கை அரசின் கைக்கூலி’ உள்ளிட்ட பட்டங்களை ஒரு சிலரிடம் பெற்றுத் தரலாம். ஆனால், அது இலங்கையின் உண்மை நிலையை மாற்றி அமைத்து விடாது.
கட்டம் இடப்பட்ட செய்தி 2
பிரபாகரன் மீண்டும் வருவார்?

எங்களுடன் சில நிமிடங்கள் மட்டுமே பேசிய புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த ஒருவர், அந்த ஓரிரு நிமிடத்திற்குள்ளாகவே அநியாயத்துக்குக் கொந்தளித்துத் தீர்த்து விட்டார். மிகவும் உணர்ச்சிவசப்பட்ட அவரை நாங்கள் சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று. அப்படி ஏன் கொந்தளித்தார் அவர்?

“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ராணுவ ஆட்சி நடக்கிறது என்ற குற்றச்சாட்டு ஒன்று வெளிநாட்டில் உள்ள தமிழர்களால் வைக்கப்படுகிறது.
இங்குள்ள மக்கள் எல்லோர் முகத்திற்கு நேராகவும் துப்பாக்கி இருப்பதுபோன்ற ஒரு சித்தரிப்பு அது. ஆனால், அப்படி ஏதும் இங்கு இல்லை. முன்பு புலிகள் துப்பாக்கியுடன் நடமாடினார்கள். இப்போது ராணுவத்தினர் நடமாடுகிறார்கள். அப்போது வேலை கிடையாது. சாலை கிடையாது. மின்சாரம் கிடையாது. பயணம் கிடையாது. இப்போது எல்லாம் இருக்கிறது. 2009-ல் இறுதிப் போர் முடிந்த சில காலத்திற்கு ராணுவ நெருக்கடி இருந்தது உண்மை. ஆனால், இப்போது அந்த அளவு இல்லை. படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் சிறிது காலம் கழிந்தால், இலங்கையின் பிற மாகாணங்களைப் போல் நாங்களும் முழுச் சுதந்திரமாக இருக்க முடியும் என்று நம்பி கொண்டிருக்கிறோம்.

“அந்த நம்பிக்கையில் மண் அள்ளிப் போடுவது புலம் பெயர்ந்த தமிழர்களும், தமிழகத்திலுள்ள சில அரசியல்வாதிகளும்தான். அவர்களுக்கெல்லாம் இலங்கைத் தமிழர் என்றால், அது புலிகள் மட்டும்தான். அவர்கள் எடுத்த எல்லா மடத்தனமான முடிவுகளுக்கும்
ஜால்ரா தட்டியவர்கள். இங்குள்ள வெகுஜனத்தின் கருத்து மீது அக்கறையில்லாதவர்கள். சண்டை போட வலு இல்லாதவர்கள். சினிமா ஹீரோ சண்டை போட்டால் விஸில் அடிப்பார்களே, அதைப் போன்ற விஸிலடிச்சான் குஞ்சுகள். அடிமைகளைச் சிங்கத்தோடு சண்டை போடவிட்டு, ‘சபாஷ்… அப்படித்தான்’ என்று உற்சாகக் குரல் எழுப்பிய சில கொடுங்கோல் மன்னர்களுக்கு இணையானவர்கள் அவர்கள். புலிகளின் சண்டையை ‘தமிழனின் வீரம்’ என்று சிலாகித்து விட்டு, அவரவர் நாடுகளில் பத்திரமாக இருப்பவர்கள். இங்கே பெற்றோர்களையும், பிள்ளைகளையும், சகோதர, சகோதரிகளையும் இழந்து நிற்பது நாங்கள். சுமார் 30 ஆண்டுகள் இருட்டிலும், பதுங்கு குழிகளிலும் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் நாங்கள்.

“எங்கள் நிம்மதியைத் தொலைத்தவர்கள் புலிகள்.
எத்தனையோ கட்டங்களில், எத்தனையோ தீர்வுகளுக்கு யார் யாரோ உதவ முன் வந்தனர். ஆனால், எதற்கும் புலிகள் உடன்படவில்லை. மயானத்தில் அமைதி என்கிற மாதிரி, அவர்களின் அழிவுக்குப் பிறகுதான் ஓரளவு அமைதி திரும்பியிருக்கிறது. இப்போதுதான் எல்லோரையும் போல நாங்களும் சகஜமான ஒரு வாழ்க்கையைத் தேடிக் கொண்டிருக்கிறோம்.
அதையும் மேற்சொன்ன நபர்கள் குலைக்கப் பார்க்கிறார்கள். புலிகளின் தோல்வியை ஜீரணிக்க முடியாத அவர்கள், ‘பிரபாகரன் பத்திரமாக இருக்கிறார். மீண்டும் வருவார். மீண்டும் தமிழீழம் மலரும்’ என்று தங்களுக்குத் தாங்களே ஆறுதல் சொல்லிக் கொள்கிறார்கள். நள்ளிரவில் காட்டு வழி போகிறவர்கள், பயத்தில் விஸிலடித்துக் கொண்டே போவதைப் போன்ற அவர்களின் இந்த வீரவசனம், எங்களைத்தான் மேலும் பாதிக்கும் என்பதை அவர்கள் கொஞ்சமும் உணரவில்லை.

“படிப்படியாகக் குறைந்து வரும் ராணுவ நெருக்கடி, மென்மேலும் குறைந்து நாங்கள் சுதந்திரமாக வாழ வழி செய்யாமல், ‘பிரபாகரன் திரும்பி வருவார். ஈழம் மலரும்’ என்று சொல்வதன் மூலம், ‘ராணுவமே! அதற்கு இடம் கொடுக்காமல், தமிழர்களை எச்சரிக்கையோடு கண்காணித்துக் கொண்டே இரு. அவர்களுக்கு மேலும் நெருக்கடி கொடுத்துக் கொண்டே இரு’ என்று மறைமுகமாக ராணுவத்துக்குச் சொல்வது போலத்தான் இருக்கிறது. ராணுவ ஆட்சி நடக்கிறது என்று முதலை கண்ணீர் விடுக்கும் அவர்கள்தான், ராணுவ நடவடிக்கை குறைந்து விடக்கூடாது என்று பாடுபட்டு வருகிறார்கள்” என்று கொந்தளித்தார் அவர்.
கட்டம் இடப்பட்ட செய்தி 3
இந்தியாவில் தனி நாடு சாத்தியமா?
இப்போது தமிழ் ஈழம் கோரி எந்தத் தமிழரும் இலங்கையில் கோஷமிடவில்லை என்பதுதான் உண்மை. அரை வயிறு கஞ்சியோடு உயிர் வாழ்ந்தால் போதும் என்று நினைப்பவர்கள் அநேகம். யாழ்ப்பாணத்தில் எங்களிடம் பேசிய ஒருவர் இப்படிச் சொன்னார்: “இந்தியாவில் தமிழகத்தின் நிலை என்ன? கேரளா தண்ணீர் தராது. கர்நாடகா தண்ணீர் தராது. ஆந்திரா தண்ணீர் தராது. அதற்கு மத்திய அரசும் உதவாது. ஆனால், நெய்வேலியிலிருந்து பிற மாநிலங்களுக்கு மின்சாரம் போகும். கூடன்குளம் அணு உலை, அப்பகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி தமிழகத்தில் அமையும். ஆனால் மின்சாரம் அயல் மாநிலத்திற்குப் போகும்.

“தமிழக மீனவர்கள் தாக்குதல் மீது, மத்திய அரசு நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை என்ற புகார் பலரிடம் இருக்கிறது. ‘தமிழகத்திற்குப் போதிய அளவு நிதி ஒதுக்குவதில்லை, மண்ணெண்ணெய் அளவைக் குறைக்கிறது’ என்று வாரம் ஒரு முறையாவது மத்திய அரசு மீது மாநில அரசு புகார் பட்டியல் வாசிக்கிறது. இந்த நிலையில் தமிழகம் என்ன செய்கிறது? தனி நாடா கேட்கிறது? தொடர்ந்து மத்திய அரசிடம் போராடுகிறது. சட்டங்களின் மூலம் நீதிமன்றத்தை அணுகுகிறது. பிரிந்து சென்றால் இதைவிட பெரிய பிரச்னைகள் பல உருவாகும் என்பதைத்தானே நீங்கள் இலங்கை தமிழருக்கும் உபதேசிக்க வேண்டும்?

“இந்தியாவில் தெலுங்கானா என்ற ஒரு மாநிலத்தை பிரித்துத் தருவதிலேயே உங்களுக்கு எவ்வளவு நெருக்கடி இருக்கிறது? அப்படியிருக்கும்போது ஒரு நாட்டைப் பிரித்து தருவது என்பது எவ்வளவு பெரிய விஷயம்? வன்முறையால் ஒரு நாட்டைப் பிரித்து விட்டால், எல்லா நாடுகளிலும் அதுபோன்ற நிலை தோன்றி விடும் என்றுதான் எந்த நாடும் பயப்படும். எனவே, இதை ஆதரிக்கக்கூடாது என்றுதான் எந்த நாடும் மனதளவில் சிந்திக்கும். எனவே, உலகளவில், தனி நாட்டிற்காக இனிமேல் ஆதரவு திரட்ட முடியாது.”
கட்டம் இடப்பட்ட செய்தி 4
சிறப்பாகப் பராமரிக்கப்படும் வள்ளுவர் சிலை!
இலங்கை ராணுவம் தமிழர் அடையாளங்களை அழித்து வருகிறது என்பது தமிழகத்தில் வைக்கப்படும் பிரதான குற்றச்சாட்டுகளில் முக்கியமானது. ஆனால், வவுனியா நகரில் நாங்கள் பார்த்த காட்சி அந்தக் குற்றச்சாட்டுக்கு நேர் எதிரிடையாக இருந்தது. வவுனியா நகரில் பல தமிழ் அறிஞர்களின் சிலைகளை நாங்கள் பார்க்க முடிந்தது. குறிப்பாக, ஒரு முக்கிய சாலையின் சந்திப்பில் இருந்த வள்ளுவர் சிலை பெயிண்ட் அடிக்கப்பட்டு ‘பளிச்’சென்று இருந்தது. நாங்கள் பார்த்த நேரத்தில், அந்தச் சிலையைச் சுற்றி பராமரிப்புப் பணிகளும் நடந்து கொண்டிருந்தன. இங்கு தமிழக மக்களிடையே எப்படியெல்லாம் பொய்கள் அள்ளி வீசப்படுகின்றன என்பதற்கு இது ஒரு மிகப் பெரிய உதாரணம்.thuglak8

இலங்கையில் ஆறு நாட்கள் தங்கி, செய்திகள் சேகரித்த நமது நிருபர்கள், எஸ்.ஜே. இதயா மற்றும் ஏ.ஏ. சாமி ஆகியோர் இலங்கையில் தாங்கள் பார்த்தவற்றையும், பலரிடம் பேசியவற்றையும் பகிர்ந்து கொள்கிறார்கள்….

இலங்கை அரசாங்கங்கள் தமிழருக்கு எதிராகச் சில நிலைப்பாடுகளை எடுத்ததால்தான், 1970-களின் இறுதியில் அஹிம்சை முறையிலும், பின்னர் ஆயுதம் ஏந்தியும் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் ஆரம்பமாகின. குறிப்பாக, ஜே.ஆர். ஜெயவர்த்தன தமிழருக்கு எதிரியாக இருந்தார் என்று பலர் எங்களிடம் குறிப்பிட்டனர்.

மேலும் அவர்கள் கூறியவை: “ராஜீவ் காந்தி ‘பூமாலை ஆபரேஷன்’ என்ற பெயரில் இலங்கை வானில் அத்துமீறி நமது போர் விமானங்களை அனுப்பி, உணவுப் பொட்டலங்களை தமிழர் பகுதிகளில் வீசியபோதே, ஜெயவர்த்தன முற்றிலுமாகப் பணிந்து விட்டார். ராஜீவ் காந்தியின் ஆலோசனைப்படி அரசியல் சாஸனத்தில் 13-ஆவது சட்டத் திருத்தத்தையும் அவர் கொண்டு வந்தார்.

“ஆனால், அந்த இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைப் புலிகள் ஏற்கவில்லை. அன்று அவர்கள் இந்தியாவின் ஆதரவோடு, அந்த ஒப்பந்தத்தை ஏற்றிருந்தால், இந்தியாவின் நிர்பந்தங்களுடன், தாங்கள் நினைத்ததை எல்லாம் படிப்படியாகச் சாதித்து, தமிழர்களை நல்ல நிலைக்குக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. ஆயுதம் ஏந்திப் போரிட்ட பிற தமிழ் அமைப்புகள் எல்லாம் இந்த அரசியல் தீர்வை வரவேற்றன. ஆனால், புலிகள் இயக்கமோ இலங்கை அரசை எதிர்ப்பதை விடத் தீவிரமாக, சக தமிழ்ப் போராளி அமைப்புகளையே தாக்கி அழிக்கத் துவங்கியது.

“இதனால், இந்திய அமைதிப் படை இலங்கைக்குச் சென்றபோது, பல போராளிக் குழுக்கள் இந்திய ராணுவத்தின் பக்கம் நின்றன. புலிகளோ இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டதுடன், திடீரென்று தங்கள் நிலைப்பாட்டை மாற்றி, அதிபர் பிரேமதாஸவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு இந்திய ராணுவத்தை வெளியேற்றினார்கள்.

“இன்று இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவான நிலையை எடுத்திருக்கும் தமிழர்களான டக்ளஸ் தேவானந்தா, கருணா, கே.பி. உள்ளிட்ட பலரையும் ‘தமிழ்த் துரோகிகள்’ என்று முத்திரை குத்தும் புலிகளின் ஆதரவாளர்கள், ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். தேவைப்படும் தருணத்தில், தங்கள் நலனுக்காக இலங்கை அரசாங்கத்துடன் கூட்டணி வைத்தால், தப்பில்லை என்று பலருக்கும் சொல்லிக் கொடுத்ததே புலிகள்தான். இலங்கை அரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, ‘இது இலங்கை நாட்டின் சகோதரர் பிரச்னை. இதில் அயல் நாடான இந்தியா தலையிடத் தேவையில்லை’ என்று இந்தியாவைத் துரத்தியது புலிகள்தான்.

“தமிழருக்கு விரோதமாகச் செயல்பட்ட பல இலங்கை அரசாங்கங்கள் கூட, நாட்டின் அமைதி கருதி புலிகளுடன் பல தருணங்களில் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தன. இந்தியா, நார்வே உள்ளிட்ட பல நாடுகள் சமரசத்துக்கு வந்தன. அப்பேதெல்லாம் அதைப் பயன்படுத்தி, தமிழர்கள் எதிர்பார்த்த தீர்வுகளைத் தாண்டி, பல சலுகைகளைப் புலிகள் பெற்றிருக்கலாம். ஆனால், தனி நாடு, தனி நாடு என்று பேசியே தங்களையும் அழித்துக் கொண்டு, பல ஆயிரம் அப்பாவித் தமிழர்களையும் அழித்து விட்டார்கள் புலிகள்.

“இலங்கையின் பல்வேறு அரசாங்கங்கள் – ஜெயவர்த்தன, பிரேமதாஸ, சந்திரிகா, ராஜபக்ஷ ஆகிய அதிபர்கள் தலைமையில் புலிகளுக்கு எதிராகப் போர் நடத்தி வந்தன. அதில் இறுதியாக, 2009-ல் அரசுக்கு வெற்றி கிடைத்தது. 30 ஆண்டு கால போரின் வெற்றியைத் தனது வெற்றியாக ராஜபக்ஷ கொண்டாடுவதால், போர்க்குற்றங்கள் என்ற குற்றச்சாட்டும் ராஜபக்ஷ மீதுதான் விழுகிறது. இது இயற்கையே. கடந்த 2005 தேர்தலில் ரனில் விக்ரமசிங்கவின் கட்சி, புலிகளின் ஆதரவைக் கோரியது. அப்போதுதான் ராஜபக்ஷவைத் தோற்கடிக்க முடியும் என்று தமிழர்கள் பலரும் வாதிட்டனர். ஆனால், புலிகள் அதை ஏற்கவில்லை. தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது என்று உத்திரவு போட்டனர். இதனால் ராஜபக்ஷ ஒரு கூட்டணி ஆட்சியை அமைத்து விட்டார். பல உலக நாடுகளின் உதவியோடு, புலிகளையும் அழித்து விட்டார். ராஜபக்ஷவை அதிபராகக் கொண்டு வந்ததே புலிகள்தான். தங்கள் அழிவைத் தாங்களே தேடிக் கொண்டனர்” என்று, கொழும்புவிலுள்ள பல தமிழர்கள் எங்களிடம் குறிப்பிட்டனர்.

கடந்த இதழில் ஒரு பெரியவர் குறிப்பிட்டதைப் போல, இலங்கை ராணுவம் ஒரே இரவில் அத்தனை அப்பாவித் தமிழர்களையும் புலிகளையும் கொன்று அழித்து விடவில்லை. 30 வருடங்களாகத் தொடர்ந்து போராடி, படிப்படியாகத்தான் புலிகளை அழித்துள்ளது. ஒரு பயங்கரவாதத்தை அழிக்க இதை விடப் பொறுமையான கால இடைவெளி இருக்க வாய்ப்பில்லை. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளாக இருந்தால், ஒரே வருடத்தில் பயங்கரவாதக் குழுவை உண்டு – இல்லை என்று ஆக்கியிருப்பார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

“1980-களுக்கு முன்பு இலங்கை ராணுவம் என்றால், காலையில் நடைப்பயிற்சி, மாலையில் வாலிபால், இரவில் மது என்று, ஜாலியான ஒரு பணியாகத்தான் இருந்தது. வீரர்களுக்குப் போர் நுட்பங்களே தெரியாது. புலிகள் உருவான பிறகுதான், அவர்கள் சண்டைக்கான பயிற்சிகளைப் பெற ஆரம்பித்தனர். ராணுவ வீரர்கள் போரில் எல்.கே.ஜி. படிக்கத் துவங்கியபோது, புலிகளோ அதில் பி.ஹெச்.டி. முடித்திருந்தனர். பல உலக நாடுகளில் பயிற்சி எடுத்து வந்துதான், இலங்கை ராணுவத்தினர் புலிகளுடன் போரிட்டனர்” என்றார் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழரான ஆடிட்டர் ஒருவர்.

இலங்கை ராணுவம் நிறைய இழந்துதான் இந்த வெற்றியைப் பெற்றுள்ளது. இழந்தது என்பது ராணுவ வீரர்களின் உயிர்கள் மட்டுமில்லை; அரசின் சொத்துக்கள், பொருளாதாரம், சுற்றுலா… என்று பல விஷயங்களை அந்த நாடு இழந்துள்ளது. எனவேதான், புலிகளை அழித்த ராஜபக்ஷவை இலங்கை மக்கள், குறிப்பாக வர்த்தகர்கள் கொண்டாடுகிறார்கள். இதனால்தான் 2010 பொதுத் தேர்தலில் ராஜபக்ஷவும், அவரது கூட்டணிக் கட்சிகளும் பெருவாரியான வெற்றியைப் பெற்றுள்ளனர். இன்று அரசியல் சாஸசனத்தைத் திருத்தக் கூடிய அளவிற்கு, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமும் ராஜபக்ஷ அரசுக்குக் கிடைத்துள்ளது.

ஏதோ சிங்களர்கள்தான், தமிழர்களை அழித்த ராஜபக்ஷவைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடி, அவரை ஜெயிக்க வைத்தார்கள் என்று நினைக்க முடியாது. புலிகள் தங்கள் ஈழ நாட்டின் ஒரு பகுதியாகக் குறிப்பிட்ட கிழக்கு மாகாணத்தில் கூட, ராஜபக்ஷ கூட்டணிதான் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் ராஜபக்ஷ கூட்டணி மூன்று எம்.பி. ஸீட்டுகளை வென்றுள்ளது. யாழ்ப்பாண கார்ப்பரேஷனையும் ராஜபக்ஷ கூட்டணிதான் பிடித்துள்ளது. ஆக, தமிழ் மக்களே கூட ராஜபக்ஷ கூட்டணிக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றால், அதற்கு என்ன அர்த்தம்? அங்குள்ள தமிழ் மக்களே போரை முடிவுக்குக் கொண்டு வந்த ராஜபக்ஷவைப் பாராட்டுகிறார்கள் என்றுதானே அர்த்தம் கொள்ள முடியும்? (ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தைக் கண்டித்து, யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் தமிழில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களையும் நாங்கள் பார்த்தோம். பார்க்க: படம்)

அதே நேரம், புலிகளால் அடையாளம் காட்டப்பட்ட தமிழ் தேசியக் கூட்டணியும் குறிப்பிடத்தக்க வெற்றிகளைத் தமிழ்ப் பகுதிகளில் பெற்றுள்ளது. ஆனால், போரின் போது அவர்கள் பெற்ற வெற்றியை விட, போர் முடிந்த பின் அவர்கள் பெற்ற வெற்றி குறைந்து போனதையும் நாம் கவனிக்க வேண்டும்.

இதையெல்லாம் சொல்லும் தருணத்தில், ராஜபக்ஷ மீது தமிழர்கள் சொல்லும் குறைகளையும் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. ராஜபக்ஷ பற்றி இலங்கை வாழ் தமிழர்கள் என்ன குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள் என்பதை அடுத்த இதழில் பார்க்கலாம்.