பத்மநாபா பற்றிய தகவல் ? என் பார்வையில் !

சூத்திரம் இணையத்தில் வந்த [“”மாகாண அரசிற்கான அதிகாரங்களை தாருங்கள் இல்லாவிட்டால் நாங்கள் அதை எடுத்துகொள்வோம் பத்மநாபா ( 1989 ல் )”” ] என்று தலைப்பிட்டு சுதர்சன் சரவணமுத்து எழுதிய கட்டுரையில் [“” 1985 திம்பு பேச்சுகளுக்கு பின்னரான காலப்பகுதியில் திரு பத்மநாபா அவர்கள் அவரது அமைப்பை சேர்ந்த ஒரு சில முக்கியமானவர்களை வருடத்திற்கு ஒரு தடவை அல்லது இரு தடவைகள் நட்சத்திர ஹோட்டல்களுக்கு உணவருந்த அழைத்துச் செல்வது வழக்கம்””] என எழுதியுள்ளார். என்ன நோக்கில்? எந்த ஆதாரத்தில்? இவ்வாறு எழுதப்பட்டது என்பது எனக்கு புரியவில்லை. என்வரையில் நாபாவை 1978 ல் சந்தித்தது முதல் 1990 ல் பறிகொடுத்தது வரை அவருடனான நேரடி தொடர்பில் அவர் பணித்த இயக்க மற்றும் கட்சி வேலைத்திட்டத்தில் ஈடுபட்டவன், அவருடன் இலங்கையில், இந்தியாவில் நீண்ட பயணங்கள் செய்தவன் என்பதால் பின் வரும் தகவலை பதிவு செய்கிறேன்.

1974 முதல் கொழும்பு வாசியான நான் என் பல்கலைகழக காலம் முடிந்த 1981 முதல் 1987 முற்பகுதி வரை கொழும்பில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்ததால் என் வருமானத்தில் இந்தியா சென்று நாபாவை சக்காரியா கொலனி 19ம் இலக்கத்தில் அல்லது ஞானம் (பரந்தாமன் – எவர்சில்வர் சாப்பாட்டு தட்டு வாங்கினால் இயக்கநிதி வீணாகும் என மலிவான அலுமினிய தட்டை வாங்கும் தோழர்) குடியிருந்த தொடர்மாடி வீட்டில் சந்திப்பேன். நாபா ஒன்றில் ஞானம் வீட்டில் அல்லது 19ம் இலக்கத்தில் தோழர்களுடன் சாப்பிடுவார். அந்த உணவு ருசிக்கல்ல பசிக்கு நன்றாக இருக்கும். நான் தகவல்களை தனிமையில் கூறும் சாட்டில் அவரை வெளியே போய் பேசுவோம் என அழைப்பேன். பாதிவழியில் என்னிடம் பணம் இருக்கிறது வாருங்கள் நல்ல ஹோட்டலில் புரியாணி சாப்பிடுவோம் என அழைப்பேன்.
சிரித்தபடி தலலையாட்டுவார். கோடம்பாக்கம் மேம்பாலம் வந்ததும் தெருவோர கையேந்திபவனில் சாப்பிடுவோம் என்பார். பணத்தை வீணாக்காமல் மாலிக்கு (அப்போது என் காதலி இப்போது மனைவி) ஏதாவது வாங்குங்கள் என்பார்.. நாபாவிடம் 10 ரூபா இருப்பது கூட அரிது. அப்படிபட்டவர் எப்படி ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விருந்து கொடுத்தார்?. அவர் பாவித்த கார் கூட ரெலோ சிறி சபாரத்தினம் கொடுத்தது. ஏசி வைத்த வாகனம் வேண்டாம் என கூறி சாதாரண வாகனத்தில் பயணித்தவர் ஏன் தனக்கு நெருக்கமானவருக்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலை காட்ட முனைந்தார்?. டெல்லிக்கு முக்கியமானவரை சந்திக்கும் போது அணிய என ஒரு சோடி ஆடை மட்டும் வைத்திருந்தவர் நாபா. அந்த மென் பச்சை நிற உடையை அவர் எடுத்தால் தங்கை யாமினி (தற்போது உருத்திரன் மனைவி) எஸ்.ஜி (S.G) டெல்லி போகிறார் என கூறுவார்.

காங்கேசன்துறையில் 1, யாழ் பெருமாள் கோவிலடியில் 1, கொழும்பு சென்றல் வீதியில் 1 என மூன்று வீடுகள் வைத்திருந்த சுங்கத்திணைக்கள அதிகாரியின் ஒரே மகனும் லண்டனில் படிக்கும்போது ஈரோஸ் இயக்கத்தில் இணைந்தவருமான பத்மநாபாவும், பிரபல தொழிற்சங்கவாதி கே.சி.நித்தியானந்தாவின் பிரத்தியேக உதவியாளராக பனை அபிவிருத்தி சபையில் இருந்து, காலை ஒரு ஆடை மாலை ஒரு ஆடை என வாழ்ந்தும் விடுதலை போராட்டத்தில் கெஸ் (G.U.E.S) ஊடாக ஈரோசில் இணைந்து பாலஸ்தீனத்தில் பயிற்சி முடித்த தேவானந்தாவும் சென்னையில் நிதி இன்மையால் தம் இரத்தத்தை விற்று செயல்பட்ட வேளை, ஹோட்டல் சோழா ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியருந்த ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்தது. அழைத்தவர் லண்டனில் இருந்து வந்த ஈரோஸ் அமைப்பின் தலைவர். அன்று ரட்ணா என அழைக்கப்பட்ட இன்று அமரராகிவிட்ட ரட்ணசபாபதி.

உண்பதற்கே வழி இல்லை நல் உடைக்கு ஏது வழி என, இருந்த உடையில் சென்றவருக்கு, ரட்ணா இம்மாதிரியான இடங்களுக்கு எம்மாதிரியான ஆடை அலங்காரம் தேவை என புரட்சிகர விளக்கம் கொடுத்தார். கையில் இரத்தத்தை சூடேற்றும் விஸ்கி எனும் மது ஏந்தியவர் கூறியதை கேட்டபோது, இரத்தத்தை விற்று இயக்க வேலை செய்தவர் இரத்தம் மது இன்றியே சூடானது. மதி கெடுக்கும் மது அருந்தும் தலைமை எமக்கு விடிவை தராது என எண்ணத் தூண்டியது அந்த சூழ்நிலை. நாமார்க்கும் குடியல்லோம் என நாபாவும் தேவாவும் ( இருவரும் மது அருந்துவது இல்லை. தேவா தேநீர், கோப்பி, பால் கூட குடிப்பதில்லை) இனியும் வேண்டாம் இவர் தலைமை என எடுத்த முடிவு தான் ஈபி.ஆர்.எல்.எப் இயக்க உதயம். அப்படிப்பட்ட நாபாவா ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விருந்து வைத்தார்?

இங்கிலாந்து மன்னரை சந்திக்க சென்ற காந்தி மன்னருடன் பேசிவிட்டு திரும்புகையில், இடுப்பில் கொடுக்கு வைத்து கட்டிய வேட்டி, மேல் துண்டு அணிந்து வந்த அவர் தோற்றத்தை பார்த்து, அவரை அரைநிர்வாண பக்கிரி என ஆட்சியாளர் எள்ளிநகையாடிய போதும், அதை சட்டை செய்யாது வந்த காந்தியின் அரைகச்சை ஆடையை பார்த்த பத்திரிகையாளர் மன்னரை சந்திக்க ஏற்ற ஆடை ஏன் அணியவில்லை என கேட்க, இதுதான் இந்தியனின் நிலை. எம் மண்ணை சுரண்டியது தான் உங்கள் மன்னர் அணியும் படாடோப ஆடை என்றார் காந்தி. முன்பு மதுரைக்கு வந்தபோது அங்கு எம் தமிழர் வறுமையில் உடுத்தி இருந்த ஆடை பார்த்து அதுவரை தான் அணிந்த தலைப்பாகை ஜிப்பா ஆடையை களைந்தவர் காந்தி. அதுபோல் ஐந்து நட்சத்திர ஹோட்டல் சோழாவில் இருந்து சோசலிசம் பேசியவர் செயல் தவறென்று பிரிந்த நாபாவா ஐந்து நட்சத்திர ஹோட்டலை அறிமுகம் செய்தார்?.

அவரது திருமணம் மட்டும் ஸ்டாலின் அண்ணா ஏற்பாட்டில் அண்ணா சாலை ஹோட்டல் ஸ்ரீலேகாவில் நடந்தது. றோ அதிகாரி சந்திரன் வந்திருந்தார். முதலிரவு தங்க தனது தி நகர் ஹோட்டல் கீதாஞ்சலியில் அறைகளை நாபாவுக்கு இலவசமாக கொடுத்தார் அதன் உரிமையாளர். திருமணம் முடித்து வந்தவர் திருகோணமலையில் எனது உத்தியோக பூர்வ இல்லத்தில் தான் மனைவி மற்றும் பாதுகாவலருடன் தங்கினார். ஒருதடவை திடீரென சில தினங்கள் மட்டும் தங்க எனது மனைவியின் பெற்றோர் வந்துவிட்டனர். இடவசதி பற்றி யோசித்த நாபா, மாலி தன் பெற்றோருடன் சுதந்திரமாக தங்கட்டும் என மனைவி ஆனந்தி மற்றும் பாதுகாப்பு தோழர்களுடன், ஜோர்ஜின் தாய் தம்பி தங்கியிருந்த கடற்கரையோடு அமைந்த பழைய வீட்டிற்கு சென்றுவிட்டார். திருமலையை விட்டு வெளியேறும் வரை அவர் அந்த வீட்டில் தான் தங்கினார்.

சென்னை சூளைமேடு வகாப் வீதியில் வசதியான சொந்த வீட்டில் கடைசி பெண்ணாக வாழ்ந்த ஆனந்தி, கடல் உப்பு காற்றால் காரை பெயர்ந்து சுவர் வண்ணம் கூட அடிக்காத, எப்போது எந்த ஓடு கடல் காற்றில் கிளம்பும் என்ற பயத்துடன் அந்த வீட்டில் வாழ்ந்தார். அப்போது திருமலையில் இயங்காத நிலையில் இருந்த எத்தனையோ உல்லாச விடுதிகள் இருந்தன. அங்கெல்லாம் சென்று தாங்காமல் நாபா தங்கிய வீட்டை பார்த்த, நாபாவுடன் நெருங்கி பழகிய எவரும் அவர் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தனக்கு நெருங்கியவர்களுக்கு விருந்து கொடுத்தார் என்ற செய்தியை உறுதிப்படுத்த முடியுமானால் எழுதுங்கள். நான் 1986ல் இருந்து 1990 வரை இயக்கம் பின் கட்சி என ஈபி.ஆர்.எல்.எப் உள் நடந்த சம்பவங்களை, நாபாவை முக்கியமானவர் நடத்திய விதம் பற்றிய தகவல்களுடன் எழுதி கொண்டிருக்கும் “”நான் கடந்து வந்த பாதை”” எனும் புத்தகத்தை தீயிட்டு கொழுத்தி விடுகிறேன்.

திருமலையில் அவர் பாவனைக்கு முதலில் வெள்ளை நிற டிபண்டர் வாகனத்தை ஜோர்ஜ் ஒழுங்குசெய்தார். அவர் தங்கி இருந்த வீதியில் 10 நிமிடங்கள் நடந்தால் மாகாணசபை (நகரசபை கட்டிடம்) காரியாலயம் மற்றும் பேரவை செயலகம் வந்து விடும். நாபா வாகனத்தை கடற்கரையில் நிறுத்திவிட்டு பேரவை அமர்வை பார்ப்பதற்கு மட்டும் வருவார். மற்றப்படி அவர் ஈ.பி.ஆர்.எல்.எப் காரியாலயத்தில் அல்லது முதலமைச்சரின் உத்தியோக இல்லத்தில் தான் கட்சி சார்ந்த, மாகாணசபை செயல்ப்பாடு, மத்திய அரசின் நிலைப்பாடு போன்ற விடயங்களை கலந்தாலோசிப்பார். மாகாணசபை காரியாலத்துக்கு அவர் செல்வதில்லை. அதிகாரிகளை சந்திப்பதில்லை. அவை அனைத்தையும் அவர் முதலமைச்சர், அமைச்சர்கள், பேரவை தலைவர் வசம் தான் விட்டு வைத்திருந்தார்.

உறுப்பினர்களுக்கு பஜரோ வாகனங்கள் வழங்கப்பட்ட போது அதில் ஒன்று நாபாவின் பாவனைக்கு ஒதுக்கப்பட்டது. அதன் ஓட்டுனர் தம்பலகாமத்தை சேர்ந்த விஜயன் (சொந்தப் பெயர் ஞாபகத்தில் வரவில்லை) ஜோர்ஜ் நாபா இருவர்மீதும் அதீத அன்பு கொண்டவர். ஒருதடவை புலிகள் இயக்கத்தில் இருந்த அவரது தம்பியை நேரடி மோதலில் ஈபி.ஆர்.எல்.எப் தோழர்கள் கொன்றுவிட்டனர். அன்று தான் யாழ் சென்று திருமலை திரும்பிய நாபா விஜயனை உடனே தம்பலகாமம் சென்று உறவுகளை பார்த்து வரசொல்லி பஜரோவை கொடுக்க விஜயன் வாகனம் வேண்டாம் என கூறி தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை ஒப்படைத்து சென்றவர் திரும்பி வரவில்லை. அவர் இந்திய ராணுவ வெளியேற்றத்தின் பின் புலிகளில் இணைந்து புதுக்குடியிருப்பில் இருந்த வேளை பாம்பு தீண்டி இறந்தார் என்ற செய்தியை என் வாழ்வில் மாற்றம் தந்த ஆசிரியை மூலம் அறிந்து விழி நீர் சிந்தினேன்.

காரணம் அந்த கறுத்த மெலிந்த உடம்புக்குள் இருந்த அவரின் வலிமையான இதயம். விஜயன் நினைத்திருந்தால் தம்பிக்காக தான் வைத்திருந்த துப்பாக்கியை நாபாவுக்கு எதிராக நீட்டி இருக்கலாம். அல்லது பஜரோவுடன் போயிருக்கலாம். சகலதையும் தோழர்களுடன் பங்குபோட்ட ஒருவரை, உண்ணும் உணவிலும், உறங்கும் இடத்திலும் பேதைமை பார்க்கதவரை கொல்லும் மனம் அவனுக்கு வரவில்லை. இந்திய பணம் வந்ததும் அதை தமதாக்க நினைத்தவர் தான் நாபாவை பலி கொடுத்தனர். மாகாண நிர்வாகத்தில் எந்த இடத்திலும் தன்னை உட்படுத்தாமல் கட்சி ரீதியான் செயல்களில் மட்டுமே ஈடுபட்டவர் நாபா. முதல்வர் முதல் மந்திரிகள் உட்பட பேரவை தலைவர் வரை எங்களின் செயற்பாட்டில் என்றுமே தலையிடாதவர் நாபா. எங்களை சுதந்திரமாக அவர் செயல்ப்படவிட்டு எமக்கு அரணாக நின்றார் நாபா.

தயான் ஜயதிலக்கவை தலைவராக கொண்ட பி.ஆர்.எப் (P.R.F) எனும் தென்னிலங்கை அமைப்புடன் நாமும் இணைந்து செயல்பட்ட காலம். அப்போது தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத்முதலி இரத்மலானையில் உள்ள அவரது இரகசிய காதலியை சந்திக்க பாதுகாப்பு எதுவும் இன்றி செல்லும் செய்தி காதிரி இஸ்மாயில் எனும் பத்திரிகையாளர் மூலம் கிடைத்தது. தயான், திரணகம (முறிந்த பனை எழுதி பிரபாகரனால் பரலோகம் போன ரஜனி யின் கணவர்), முத்து, ராம் மாணிக்கலிங்கம், பியல், சாந்த, சிந்தண்டி சில்வா, சிறில் என முக்கியமானவர்களுடன் இப்ராகிம் (சிவகரன் – இவர் தேவானந்தாவின் தம்பி பிரேமானந்தாவுடன் புலிகளால் இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் கடத்தபட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்.) இணைந்து அத்துலத்முதலியை கடத்தும் திட்டம் உருவானது.

அப்போது ராம் மாணிக்கலிங்கம் உட்பட ஒரு சிலர் பிடிபட கடத்தல் திட்டம் இரகசிய பொலிசாருக்கு தெரியவர இப்ராகிம் ஈ.பி.ஆர்.எல்.எப் இல் அப்போது இருந்ததால் (பின்பு அவர் ஈ.பி.டி.பி) அதன் தலைவர் பத்மநாபாவை இணைத்து கடத்தல் சதிவழக்கு பதிவு செய்யப்பட்டது. இலங்கை இந்திய ஒப்பந்தப்படி வடக்கு கிழக்கு பகுதிகளில் மேற்கொண்ட அரசுக்கு எதிரான நடவடிக்கைக்கு மட்டும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. அதனால் தான் தென் இலங்கை சதி வழக்கில் நாபாவையும் சேர்த்ததால் அவரால் கொழும்பில் இருந்த அவரது தாய் சகோரிகளை கூட சென்று பார்க்க முடியவில்லை. ஒரு தடவை மட்டும் இந்திய தூதரகத்தில் முக்கியமானவரை சந்திக்க இந்திய அமைதிப்படை ஜெனரல் கல்கட்டின் பாதுகாப்பில் நாபா கொழும்பு வந்தார். தாஜ் சமுத்திர ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இந்திய தூதுவராலயத்தால் தங்கவைக்கப்பட்டார்

அவரை கைது செய்ய பொலிசாருக்கு அறிவுறுத்தல் வந்ததாக எழுதப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணம் முழுவதும் பொலிஸ் அதிகாரம் டி.ஐ.ஜி ஆனந்தராஜா தலைமையில் முதலமைச்சரின் கீழ் இயங்கிய காலம், அதனால் தான் இறுதியில் கல்முனை சம்மாந்துறை உட்பட ஐந்து பொலிஸ் நிலையங்களை தமிழ் தேசிய ராணுவம் தாக்கிய போது ரஞ்சன் விஜயரத்தின தனது பொலிசாரையே வரதராஜபெருமாள் தாக்கி அழிக்கிறார் என அறிக்கை விட்டார். அப்படி பொலிஸ் அதிகாரம் இருந்த போது நாபாவை தேடி வலை வீசியதாகவும் அவர் மாகாணசபை முன்பாக இருந்த பொலிஸ் நிலையம் முன்பாக தனியே நடந்து மாகாணசபை காரியாலயம் சென்றதாகவும் எழுதப்பட்டுள்ளது.

மாகாணசபை முன்பு இருந்தது பிரிகேடியர் சிவாஜி பட்டேல் தலைமையிலான இந்திய அமைதிப்படை. அருகில் இருந்தது முதல்வரின் உத்தியோக வாசஸ்தலம். சந்திக்கு சந்தி இந்திய ராணுவம். மேலதிகமாக சி.வி.எப் எனும் மாகாண பொலிஸ் படை. நாபா எப்போதும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரியம் செய்பவர். நடப்பதில் மிகவும் விருப்பு கொண்டவர். படை பட்டாளம் தன்னை சுற்றி இருக்கவேண்டும் என எதிர்பார்க்காதவர் அதே வேளை மாகாணசபை காரியாலயத்தில் புகுந்து செயல்பாடுகளில் தலையிடாதவர். அவர் தனது நிலை தாழ்ந்து வாய் சவால் விடும் சவடால் பேர்வழி அல்ல. மத்தியுடன் மோதியது முதல்வர். பிரேமதாசாவின் தேர்தல் வெற்றிக்கு இந்திய உயர்ஸ்தானிகர் டிக்சிட் முன் உதவி கேட்ட ரஞ்சன் விஜயரத்தின பின் வார்த்தை தவறி நடந்ததால் அவருக்கு சவால் விட்டவர் முதல்வர்.

கட்டுரையின் கடைசி பந்தியில் அடைப்பு குறியிட்டு “”அவர் பின்னால் ஓட்டமும் நடையுமாய் சென்றது அன்றைய பத்மநாபாவின் தனிப்பட்ட உதவியாளராக இருந்த தோழர் ஜேம்ஸ் என்ற நான் மட்டும் தான் என குறிப்பிடபட்டுள்ளது””. என் கணிப்பு சரியானால் மக்கள் ஆய்வு பிரிவு {MAP) அமைப்பின் யாழ் பொறுப்பாளராய் நான் முதன் முதல் யாழ் பல்கலைகழகத்தில் சந்தித்த வெள்ளை வெட்டி சேட்டில் பண்டிதர் போல் தோன்றிய ஜேம்ஸ் (முழுப் பெயர் பற்றிய தெளிவில்லை) தான் இவர் என்றால் இந்த கட்டுரை எழுதியவர் நாபாவை பற்றி அவரிடம் “” 1985 திம்பு பேச்சுகளுக்கு பின்னரான காலப்பகுதியில் திரு பத்மநாபா அவர்கள் அவரது அமைப்பை சேர்ந்த ஒரு சில முக்கியமானவர்களை வருடத்திற்கு ஒரு தடவை அல்லது இரு தடவைகள் நட்சத்திர ஹோட்டல்களுக்கு உணவருந்த அழைத்துச் செல்வது வழக்கம்”” என எழுதியதை தயவு செய்து உறுதி செய்யவும். மேலதிகமாக பேரவை செயலகத்தில் ஜேம்ஸ் பொறுப்பான பதவியை சிறப்பாக செய்த காலத்தில் நாபாவின் தலையீடு இருந்ததா என்பதையும் உறுதி செய்யவும்.

திருகோணமலையில் இருந்து தோழர்களோடு ஒரிசா சென்று பின் திருப்பதி திருமலையில் சிறிது காலம் தங்கி இருந்து (அங்கும் படிகளில் மலைஏறி இறங்குவது தினம் நடக்கும். நான் அங்கு அவரை பார்க்க சென்றபோது எனக்கும் அந்த பாக்கியம் கிடைத்தது.) பின் சென்னை வந்து, பணம் கேட்டு அனுப்ப நிதி நிலைமை பூச்சியம் என சுரேஸ் கூறியதாக நிவாஸ் ( நேசராசா – மட்டக்களப்பை சேர்ந்தவர் – கடைசி காலத்தில் சுரேசுடன் ஏற்பட்ட பிணக்கால் தேவானந்தாவுடன் இணைந்து புலிகளால் கொல்லப்பட்டவர்) வந்து சொல்ல, மனம் நொந்து என்னை தொலைபேசியில் அழைத்து, நான் இந்தியா சென்று அவர் பலிகொடுக்கபட்ட அதே தொடர்மாடி வீட்டில் இரண்டு லட்சம் கொடுத்துவிட்டு வந்தது தான் அவருடனான எனது இறுதி சந்திப்பு. அவரா ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விருந்து வைத்தார்?.

என் திருமண எழுத்துக்கு பட்டுசேலை அனுப்ப தன் மோதிரத்தை விற்றவர் நாபா. அதே போல் ராபிக் தன் மனைவிக்கு வைத்தியம் பார்க்க பணம் கேட்ட போது நான் என் திருமண மோதிரத்தை விற்கும்படி மடிப்பாக்கத்தில் யசீர் (லோங்ஸ்ரன்) வீட்டில் வைத்து கழட்டி கொடுத்தேன். அதற்கு முன்பு சிவபுரம் முகாமில் இரவு சென்றியில் கையில் கடிகாரம் இல்லாது நின்ற செஞ்சி(திருமலை சம்மாட்டியார்) யிடம் நான் கட்டியிருந்த கடிகாரத்தை கொடுத்தேன். நாபா தோழர்களுக்கு தியாகத்தை அறிமுகம் செய்தவர். அவர் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விருந்து கொடுத்தாரா? நாபா மரணித்ததும் தோழமையும் மரணித்து விட்டது என்பதை அண்மையில் நடந்த தோழமை தினம் கோடிட்டு காட்டியது. அப்போது யாழில் நின்ற நான் குண்சி (குணசேகரம் – இடைக்காடு) யிடம் கதைத்த போது தனக்கு அழைப்பு வரவில்லை என்றார். ஈ.பி.டி.பி தவராசவுடன் பேசும் போது தோழமை தினத்தில் சந்திக்கலாம் என்றார். நான் என்னை அழைக்கவில்லை என்றேன்.

இந்த கட்டுரையாளர் எங்கு வசிக்கிறார் என்பது தெரியவில்லை. அவரிடம் என் தாழ்மையான வேண்டுகோள் நீங்கள் வசிப்பது கனடா என்றால் ஞானம், ஜேம்ஸ், வளவன், ரவி, சேகர், கெஸ் ரவி. லண்டன் என்றால் சாந்தன், மனோ(சுரேஸ் அண்ணர்) பேள் மெற்றல் ரவி, வெற்றி, இலங்கை என்றால் குண்சி, தேவா (ஈ பி டி பி தலைவர்) மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசிப்பவர் உட்பட சென்னையில் வசிக்கும் தாஸ் (மலையகத்தில் இருந்து தமிழகம் திரும்பி பஸ் டிப்போவில் வேலை செய்து சம்பளம் எடுத்ததும் நாபாவை தேடிசென்று உதவி செய்தவர்) போன்றவர்களிடம் நீங்கள் எழுதிய “” 1985 திம்பு பேச்சுகளுக்கு பின்னரான காலப்பகுதியில் திரு பத்மநாபா அவர்கள் அவரது அமைப்பை சேர்ந்த ஒரு சில முக்கியமானவர்களை வருடத்திற்கு ஒரு தடவை அல்லது இரு தடவைகள் நட்சத்திர ஹோட்டல்களுக்கு உணவருந்த அழைத்துச் செல்வது வழக்கம்”” எனும் செய்தியை உறுதி செய்யுங்கள் அல்லது உங்களால் உறுதி செய்ய முடியுமானால் தயவு செய்து சிரமம் பாராமல் எனது rajmali@hotmail.co.uk விலாசத்துக்கு அனுப்பிவையுங்கள். நான் எழுதிவரும் புத்தகம் பதிவேறாமல் தீக்கு விருந்தாகட்டும். [ ஐந்து நட்சத்திர ஹோட்டல் விருந்து போல் ]

(ராம்)

(நான் அறிந்த வகையில் ஜேம்ஸ் மக்கள் ஆய்வுப் பிரிவின் ஈழத்தின் பொறுப்பாளராக இருந்தவர். மற்றும் தோழமை தினம் பற்றி தவறான மதிப்பீடு(அழைக்கப்பட்டவரகள் பற்றி) உள்ளதை அறிகின்றேன் மற்றயபடி கட்டுரையாளரின் ஏனைய கருத்துக்களையும் இந்தக்கருத்துக்களையும் மாற்றம் இன்ற பிரசுரிக்கின்றேன் – ஆர்)