புனர்வாழ்வு ஒன்றுதான் வழியென்றால்?

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் 12 வது நாளாக தொடர்கின்றது. இன்று வரை, அவர்களின் உடலநிலை மோசமாக பாதிக்கப்படவில்லை என சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறைச்சாலை வைத்தியசாலை மருத்துவர்கள் கைதிகளின் உடல் நிலையை அடிக்கடி அவதானித்து வருகின்றனர். உண்ணாவிரதமிருக்கும் கைதிகள் எவரும் உயிரிழக்க நேரிட்டால் அரசாங்கத்திற்கு அது சிக்கலை ஏற்படுத்தும் என்பதாலும் இவ்விடயத்தில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

கைதிகளின் உடல் நிலை மோசமடையா விடினும், அவர்களின் குடும்பத்தினரின் மனநிலை மோசமாகவே பாதிப்படைந்துள்ளது. புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் ஏற்பட்ட நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் தற்போது தளர்வடைந்து வருவதாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. கைதிகளின் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட, கைதிகளிடம் வலியுறுத்துமாறு தமிழ் அரசியல்வாதிகளிடம் அரசாங்கத் தரப்பினர் கோரி வருகின்ற போதும், கடந்த தடவை அரசாங்கத்தின் வாக்குறுதியை நம்பி, அவர்களின் உண்ணாவிரதத்தை நிறுத்திய நிலையில், வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இம்முறை எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

இந்த கைதிகள் விவகாரத்தை கையாள மூன்று வழிகள் உள்ளன. பொதுமன்னிப்பு – பிணைவழங்கி வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவது- புனர்வாழ்வளித்து விடுவிப்பது ஆகியவையே இவ்வழிகளாகும். கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதை சர்வதேச நடைமுறைகள் ஏற்றுக்கொள்வதில்லை என்று அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் ராட் அல் உசைன் கூறியதன் பின்னர், அந்த வழி இப்போது மூடப்பட்டு விட்டது. பொதுமன்னிப்பின் மூலமே விடுதலை செய்யப்பட வேண்டும் என முன்னர் கைதிகளும் அவர்களின் அனுதாபிகளும் வலியுறுத்தி வந்த நிலையில், இப்போது அது குறித்த கோரிக்கை இல்லாமல் போய்விட்டது. இப்போது போராட்டம் நடத்தும் கைதிகளும் பொதுமன்னிப்பு என்ற கோரிக்கையை கைவிட்டுள்ளனர்.

அனைவரையும் பிணையில் விடுதலை செய்வதென்பதிலும் சட்டப் பிரச்சினைகள் உள்ளதாக அரசாங்கத் தரப்பில் கூறப்படுகின்றது. பிணையில் அவர்களை விடுவித்து அவர்கள் மீதான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதில் என்ன பிரச்சினை என்பது புரியவில்லை. தற்போது இவ்விவகாரத்தில் சட்ட மா அதிபரின் அறிக்கையினையே அரசாங்கம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. சட்ட மா அதிபரின் அறிக்கையின் பிரகாரமே அரசியல் கைதிகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என மீள் குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கடந்த 2ம் திகதி புதன்கிழமை அவரை சந்தித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்திருக்கின்றார்.

அனைத்து கைதிகளும் சம்மதித்தால் புனர்வாழ்வளிப்பது குறித்து ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்திருக்கின்றார். புனர்வாழ்வு பெற்றுக்கொள்ள சிலர் சம்மதிக்கின்றனர், சிலர் மறுப்புத் தெரிவிக்கின்றனர் எனவும், இவ்விடயம் தமக்கு பிரச்சினையாக இருக்கின்றது எனவும் அமைச்சர் கூறியுள்ளார். அவ்வாறெனில், சம்மதிக்கின்ற கைதிகளையாவது புனர்வாழ்விற்கு உட்படுத்துவது குறித்து முடிவொன்றை எடுக்கலாம். அவ்வாறு செய்வதில் என்ன சிக்கல் இருக்கின்றது என்பதயும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏதோவொரு சாதகமான முடிவை உறுதியாக முன்வைப்பதன் மூலமே கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வருவதோடு, இப்பிரச்சினைக்குஒரு நிரந்தர தீர்வினையும் காண முடியும்.

வட மாகாண அமைச்சர் டெனீஸ்வரனிடம் கைதிகள் தெரிவித்திருக்கின்ற கருத்தினையும் இங்கு குறிப்பிட வேண்டும். தாங்கள் புனர்வாழ்விற்கு தயாராக இருப்பதாக பல கைதிகள் அவரிடம் தெரிவித்ததாக உண்ணாவிரதமிருக்கும் கைதிகளை சந்தித்த டெனீஸ்வரன் கூறுகின்றார். ஒரு சில கைதிகள் மட்டும் புனர்வாழ்விற்கு செல்ல விரும்பாத நிலையில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோருகின்றனர் என்றும் அவர் குறிப்பிடுகின்றார். ஆகவே, பொதுமன்னிப்பு, பிணைவழங்குதல் போன்றைவை சட்டச் சிக்கலை ஏற்படுத்துமானால், புனர்வாழ்வளித்து அவர்களை விடுவிப்பதே தற்போது காணப்படும் ஒரே வழியாகும்.

அமைச்சர் சுவாமிநாதனும், அனைவரும் ஒப்புக்கொண்டால் புனர் வாழ்விற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்கின்றார். கைதிகளில் பலரும் புனர்வாழ்விற்கு தயார் என்று தெரிவிக்கின்றனர். இதனையே முடிவாக எடுத்து நடவடிக்கைகளில் இறங்குவதே இப்போதுள்ள சாதகமான வழியாகத் தெரிகின்றது. பல வருடங்கள் சிறைவாழ்வைக் கழித்தவர்கள் ஒரு வருடம் புனர்வாழ்வு முகாமிலிருப்பது மோசமானதாக அமையப் போவதில்லை. வேறு வழிகள் இல்லாத போது இந்த வழியை நாடுவதே சரியானது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் தற்போது 4 பெண்கள் உட்பட 168 தமிழ் கைதிகள் சிறைகளில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரின் விடுதலைக்கும் புனர்வாழ்வு ஒன்றே வழி என்றால் அது தொடர்பில் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பொதுமன்னிப்பு சாத்தியமில்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்ததையடுத்து கருத்து வெளியிட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும், எதிர்கட்சியினதும் தலைவரான இரா.சம்பந்தன் கைதிகளின் விடுதலைக்கு வேறு வழிகள் உள்ளன என்று தெரிவித்திருந்தார். ஆனால்,அவ்வழிகள் குறித்து அரசாங்கத்திடம் உடனடி பேச்சுவார்த்தைகள் எதனையும் அவர் மேற்கொண்டதாக தெரியவில்லை. தற்போது புனர்வாழ்வளித்தல் என்பது சாத்தியப்படும் போல் தோன்றுவதால் அது குறித்து அரசாங்கத்திடம் பேசி உறுதியான முடிவொன்றை அவர் எடுக்க வேண்டும். புனர்வாழ்விற்கு விரும்பாத கைதிகள் சிலர் இருக்கின்ற போதும் அவர்களிடம் இவ்வழிமுறையே இறுதியானது என்பதை உணரச்செய்து, கைதிகள் விவகாரத்தில் ஒருமித்த தீர்வு ஒன்றை காணவேண்டும்.

– விஸ்வா –