மீட்பர் பிறந்த மாதத்தில் சிந்திய குருதிகள்!!!

பாவிகளுக்காய் சிலுவை சுமந்த மீட்பர் பிறந்த மார்கழி மாதத்தை கொண்டாடும் வேளையில் ஈழ தமிழ் மக்களை பேரினவாத சாத்தானின் ராணுவத்திடம் இருந்து காக்க ஆயுதம் ஏந்தி போராட புறப்பட்ட எம் இனமான போராளிகள் தம்முள் மோதி “தெரிந்த சாத்தான் தெரியாத தேவதையை விட மேல்” என எண்ணி எதிரியின் பாசறையில் தம் உயிர் காக்க தஞ்சம் புகுந்த மாதமும் மார்கழி மாதம் தான்.

மாக்சிச கம்யூனிஸ சித்தாந்ததை விரும்பி ஏற்று, தோழர் என தம்மை அழைத்து மாக்சையும் லெனினையும் கனவில் சுமந்து திரிந்தவரை பாசிச சித்தாந்த பிரபாகரன் குருதிசிந்த செய்தது மார்கழி 13 1986. பிரபாகரனுக்கு விசுவாசமாய் பிரமாணம் எடுத்த புலி போராளிகளை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது என் நோக்கம் அல்ல. எல்லா மந்தையிலும் கறுப்பாடுகள் இருக்கும். நல்ல மேய்ப்பன் அமைந்தால் அவை வழி தவறாது. மேய்ப்பனே தடம் புரளும் போது நல்ல ஆடுகளும் தறிகெட்டு நடக்கும்.

அதே வேளை கறுப்பாடுகளாய் மந்தையில் புகுந்து தம் வக்கிரங்களை தீர்துக்கொண்டவர் பற்றி முறிந்த பனை புத்தகத்தில் கோடிட்டு காட்டிய ரஜனி திரணகம போல எழுத்தில்வராத எத்தனையோ சம்பவங்கள் எம் ஈழ போராட்ட வரலாற்றில் உண்டு. எவராவது தொகுத்து எழுதினால் ரஜனி போலவும் தொகுத்து எழுத முற்பட்டால் சபாலிங்கம் போலவும் கவிதை பாடினால் செல்வி போலவும் சிலுவை ஏறுவர்.

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாய வேண்டும். அதன்படி இயேசு பாலன் பிறந்த தினத்தில் ஆராதனை நடந்த தேவாலயத்தில் வைத்து முன்பு தாம் ஒன்றாய் இருந்த போது தம்மை போற்றி புகழ் பாடியவர் தாம் வன்னி புலி கிழக்கு புலி என பிரிந்தபின் உலகமெல்லாம் கிழக்கு புலிகளை கொச்சை படித்தினார் என கூறி ஜோசப் பரராசசிங்கத்தின் குருதியை காணிக்கை பெற்றது மார்கழி 25 2005.

ஆயுதங்கள் மௌனிக்கபட்ட பின் அரசியல் தலைமைகள் சன்னதமாட தொடங்கின. கூட்டமைப்பு என கூறி உள்ளே பல கும்மாங்குத்துகள் நடந்தேறி இருந்தவர் வெளியேற புதியவர் புகுந்து தலைமைக்கு சவால்விட, காத்திருந்த கழட்டிவிடப்பட்டோர் தமக்கு கிடைத்த மீட்பர் என அவர் பின் அணி திரண்டு பேரவை கண்டு பெருமிதம் கொண்டு முன்னுக்கு பின் அறிக்கை விட்டது மார்கழி 19 2015.

இன விடுதலை கனவில் இணையும் இயக்கம் எது என பாராமல் இணைந்தவர் பலர். அங்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தில் ஒரு சிலர் விட்டு விலகினாலும் வேறு இயக்கங்களில் இணைந்து மீட்சி பெற்றாலும் இயக்க விதிப்படி இன்னுயிர் ஈந்தவரும் உண்டு. பயணம் ஒன்று பாதை வேறு என பயணித்தவர் எதிரியை விட்டு எம்மவரை கொன்ற ஈன செயலை செய்த மாதம் பாலன் பிறந்த மார்கழி.

அரசியல் தலைமைகளை ஒன்றிணைத்தால் மட்டுமே எம் ஈழ தமிழ் இனத்துக்கு விமோசனம் உண்டு என நம்பும் புத்திஜீவிகள், சிவில் சமூகம், கல்விமான்கள், துறைசார் அறிஞர்கள், சமயபெரியார்கள், அனைவரும் இணைந்து இன்னொரு பிரிவினை குழுவை உருவாக்கி அதை அரசியல் கட்சி அல்ல, இனவிமோசன ஆலோசனை சபை என வியாக்கியானம் செய்ததும் பாலன் பிறந்த மார்கழி.

மனிதகுல மீட்சிக்காய் பாலகனாயாய் இயேசு தோன்றிய மாதத்தில் தான் பல பாதக செயல்களும் நடந்தன. மீட்பரையே சிலுவையில் அறைந்த மனித குலத்தை மீட்க அவர்களுக்காக சிலுவை சுமக்க இன்னொரு பாலகன் எப்போது பிறப்பார்? பரமபிதாவே ஈழத்து பாவிகளை இரட்சிக்க விடிவெள்ளி எப்போது வானத்தில் தோன்றும் என முற்றத்தில் படுத்து வானத்தை பார்த்தபடி நாங்கள் காத்திருக்கிறோம்

(ராம்)