முதல்வரை தம் தாளத்துக்கு ஆடவைக்கவா தாரை தப்பட்டை?

ஒருமித்த குரலில் உங்கள் சேவை எம்மக்களுக்கு தேவை என அழைத்ததால்தான், முன்நாள் நீதியரசர் இன்நாள் முதல்வர் ஆனார். ஆனால் தன் தம்பிக்கு அமைச்சர் பதவி கேட்டு சிபார்சு செய்த சுரேஸ் கொடுத்த அழுத்தத்தில், சினமுற்ற முதல்வர் அதை பகிரங்கமாக கூறும் நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போது அறைக்குள் நடந்த விடயத்தை அரங்கில் கூறியது அநாகரிகம் என விமர்சனம் எழுந்தாலும், இன்று நடக்கும் சம்பவங்கள் ஒரு நீதி அரசராக இருந்தவரை சிறுமைப்படுத்தி, அவர் சிந்தையை கலக்கும் செயல் அன்றே தொடங்கி விட்டதாகவே தென்படுகிறது. தேரை இழுத்து தெருவில்விட என ஒரு கூட்டம் தொடர்ந்து செயல்ப்படுகிறது என்பது புரிகிறது.

உங்கள் மீதான எங்களின் நம்பிக்கையை வெளிப்படுத்த எங்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் தாருங்கள் என 11-01-2016ல் கேட்ட உறுப்பினர்களுக்கு, முதல்வர் தனது நாட்குறிப்பு புத்தகத்தில் ஏற்றதொரு நாளை தானே தேர்ந்தெடுத்து, 17-01-2016ல் நாம் சந்திப்போம் என நம்பிக்கையூட்டி சென்றார். ஆனால் அவரிடம் இருந்து சந்திப்பு நிகழாது என்ற செய்தி மட்டுமே வந்தது. அதுகூட சிலருக்கு தொலைபேசி மூலமும், பலருக்கு மின் அஞ்சல் மூலமும் தான் தெரிவிக்கப்பட்டது. முதல்வருக்கு உடல் நலமில்லை என்றால் இயற்கையின் மீது பழி போடலாம். மனநலம் இல்லை என்றால் விசமிகள் பக்கமே எம் பார்வை திரும்பும்.

மறைகரங்களின் செயல் இது என என்னிடம் கூறியவர்கள் கூடவே ஒரு செய்தியையும் கசியவிட்டார்கள். போராட்ட காலத்தில் தான் மட்டும் டெல்லிவரை சென்று மெத்தப்படித்ததாக கூறப்படும் தம்பிதான் இவ்வாறான சந்திப்பை சற்று தாமதப்படுத்தவேண்டும், ஏனென்றால் எமக்கு அரணாக நிற்கும் அனந்தி அக்கா வெளிநாடு செல்வதால் முதல்வருக்கு மயக்க நிலை ஏற்படுத்தும் எமது செயலுக்கு, ஆளணி பற்றாக்குறை ஏற்படும் என கூறியதாகவும் தகவல் கிடைத்தது. மேலும் வடக்கில் இருந்து வெளிவரும் பத்திரிகை மற்றும் இணைய செய்திகள் வேண்டுமென்றே முதல்வர் மீது சேறு பூசும் செயலை செய்வதாகவும் அமைச்சர் பதவிக்கு சிபார்சு செய்யப்பட்டவர் அந்த செய்தி நிறுவனங்கள் மீது வெறுப்பில் புலம்பி திரிவதாகவும் அறியத்தந்தனர்.

இந்த கலாநிதிக்கு தெரிந்த ஆனால் அதுபற்றி மற்றவர் அறியார் என எண்ணி தனக்குள் கமுக்கமாய் வைத்திருக்கும் செய்தி ஒன்றும் அறியக்கிடைத்தது. ஏற்கனவே இதற்கு முன்பு சுண்ணாகத்தில் நடந்த கலந்துரையாடலில் சுரேஸ் பிரேமசந்திரன் தான், முதல்வர் செயல்த்திறன் அற்றவர், அவர் எங்களின் பிழையான தெரிவு போன்ற பல விடயங்களை முதல்வருக்கு எதிராக கூறி அவர் மீது சேறு பூசினார். ஆனால் இன்று சுரேஸ் பிரேமசந்திரனின் தெரிவான இந்த சகோதரர், பத்திரிகைகள் மற்றும் இணைய செய்தி நிறுவனங்கள் வேண்டுமென்றே முதல்வர் மீது சேறு பூசி, சிண்டு முடியும் செய்திகளை வெளியிட்டு பிழைப்பு நடத்துவதாக குற்றம் சாட்டுகிறார் எனவும் கூறினர்.

இருதலை கொள்ளி எறும்பு நிலையில் முதல்வர் இருப்பதை அவருக்கு விருப்பு வாக்களித்த மக்கள் விரும்பவில்லை. மக்கள் மனநிலை அறிந்த உள்ளூர் பத்திரிகைகள் கூட முதல்வர் யாராலோ பிழையாக வழி நடத்தப்படுகிறார் என்றே எழுதின. முதல்வரை குறைத்து மதிப்பிட்டு எவரும் எழுதவில்லை. நிர்வாகத்தில் காணப்படும் குறைகளை தான் எழுதினர். குள்ளநரி கூட்டம் தம் செயலுக்கு தலைமை தாங்க சிங்கத்தை அழைப்பது போல, சுயநலமிகள் முதல்வரை சுற்றி நின்று தாம் நினைத்ததை அடைய அவரை தலைமை ஏற்க செய்ய முற்படுவதாகவே தெரியவருகிறது. மோகினி (விஸ்ணு) ஆட்டத்தில் அந்த சிவனே மதி மயங்கினான் என்றால், புருசோத்தமனின் தாரை தப்பட்டை முதல்வரை தடுமாற வைக்காதா? என்றனர்.

வார்த்தை தவறிவிட்டார் முதல்வர் என இதனை எடுப்பதா? இல்லை வேடன் வலையில் சிக்கிய மானின் நிலை என கொள்வதா? என்பது எவருக்கும் புரியவில்லை. ஒரு மாயக்கரம் முதல்வரை பிடித்து இழுக்கிறது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. மகா பாரதத்தில் புருசோத்தமன் செய்த மாய விளையாட்டுகளை நீண்டநாள் வேலையில்ல பட்டதாரியாய் இருந்தவர் தற்போது தன் முழுநேர வேலையாக சிரமேற் கொண்டு செய்வதாகவே அபிப்பிராயப்பட்டனர். நன்மை விளைய எத்தனை தில்லுமுல்லுகள் செய்தான் அந்த மகாபாரத புருசோத்தமன் என்பதை அறிந்தும், தீமை செய்ய அல்லவா விழைகின்றார் இந்த புருசோத்தமன் என அவர் மீது குறை கூறினர்.

பூதேவியின் பாரம் குறைக்க, அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க, அவதாரம் கண்ட அந்த புருசோத்தமன் பெயரில், மறைகரமாய் எழுதும் இவர் முதல்வரின் பெயருக்கு, அவரின் மீதான நல்மதிப்பிற்கு, அவரின் வயதிற்கு, அவர் பார்த்த நீதிஅரசர் பதவிக்கு, களங்கம் ஏற்படுத்தியே தீருவேன் என கங்கணம் கட்டி, மகாபாரத சகுனி போலல்லவா செயல்படுகிறார் என சலித்துக்கொண்டனர் . பசுக்கன்றினை சுற்றி நிற்கும் பன்றிகள் போல, முதல்வரை சேற்றுக்குள் இறக்கும் செயலை செய்பவர் அடைய நினைப்பது, தனி நபர் சுயநல தேவைகள். ஏனென்றால் எதிர்வரும் 21-01-2016ல் இடம்பெற உள்ள பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் கூட்டத்தில், முதல்வர் ஆதரவு அணி எதிர் அணி என அணி பிரிந்து குருசேத்திரம் தொடங்க வாய்ப்பு உண்டு என ஆரூடம் கூறினர்.

அதனால் தான் உறுப்பினர்களுடனான முதல்வரின் சந்திப்பு காரணம் கூறாமல் இரத்து செய்யப்பட்டுள்ளது என்ற சந்தேகத்தையும் கசியவிட்டுள்ளனர். எங்கள் முதல்வராக மட்டும் நீங்கள் செயல்படவேண்டு என்ற அவர்களின் கோரிக்கைக்கு முதல்வர் சாம்மதித்தால், பேரவை போண்டியாகிவிடும் என்ற பயம் அதை உருவாக்கிய உத்தம புத்திரர்களுக்கு உண்டு. பால் விற்ற பணத்தில் பால்மா வாங்கி குடிக்கும் புத்திஜீவிகள் நிறைந்ததாக மாறிவிட்டது எம் மண். தலைப்பகை வைத்தவர் எல்லாம் தலைவர். பேசத்தெரிந்தவர் எல்லாம் அரசியல்வாதி. எழுதத்தெரிந்தவர் எல்லாம் பத்திரிகை ஆசிரியர். எனும் நிலைமை இருந்ததால் தான் முதல்வர் தெரிவில் முன்நாள் நீதியரசரை சம்மந்தர் தெரிவு செய்தார் எனவும் கூறினர்.

சிலுசிலுப்பைகள் பாத்திரம் ஏற பலகாரத்துடன் ஒட்டி விடும். அதுபோல் தாமும் பதவி கதிரையில் ஏற முதல்வருடன் ஒட்டி உறவாட வேண்டும் என்ற உள் நோக்கில், அவரை சுயமாக சிந்தித்து செயல்ப்பட இவர்கள் விடுவதில்லை. மாறாக முதல்வர் தும்மினால் இடி இடித்தது எனவும் இருமினால் பெருமழை பெய்தது எனவும் மிகைப்படுத்தி செய்தி வெளியிடுகின்றனர். விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின் எங்கள் வடக்கு மாகாண சபை முதல்வர் தான் தென் இலங்கை அரசியல் வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாய் செயல்படுகிறார் என அவரை உசுப்பேற்றுபவர்கள் எதிர்வரும் 21-01-2016 ல் கூடி கும்மியடிக்கும் செயலை பார்த்தபின் நாம் ஒரு முடிவெடுப்போம் அதை மக்களுக்கு தெரியப்படுத்துவோம்.

நல்லிணக்கம்காட்ட மகிந்த முன் பதவிபிராமாணம் எடுத்தால் தமிழர் வீரம் மண்டியிட்டது என்றீர்கள். அதனால் முதல்வர் முரண்பட தொடங்கினார். பொய்யர் என பிரதமர் கூறியதால் போயிற்று தமிழர் மானம் என்றீர்கள். அதனால் வந்த பிரதமரை வரவேற்க முதல்வர் போகவில்லை. மைத்திரியை வரவேற்றால் நியாயம் கிடைக்கும் என போனவரை ரணில் பக்கம் பார்க்காதே என்றீர்கள். அவரும் பார்க்கவில்லை. இரண்டு வருடம் ஆகியும் முதல்வர் எதனை சாதித்தார் என கேள்வி எழுந்ததால் விரக்தியில் இருந்த முதல்வரை தருணம் பாத்தது பேரவையில் இணைத்தலைவர் ஆக்கிவிட்டீர்கள். முதல்வரும் கூட்டமைப்பு, பேரவை என இரு தோணிகளில் கால் வைத்து எம்மவர் இடர் தீர்க்கும் பயணத்தை தொடர முடியாமல் தடம்மாறும் நிலைக்கு தாரை தப்பட்டை அடிக்கிறீர்கள். இது தகுமோ! இது முறையோ! இது தர்மம்தானோ! சொல் புருசொத்தமா! உன் செயல் கண்டு மக்கள் மனம் அலைபாயுதே!

(மாதவன் சஞ்சயன்)