வார்த்தை தவறிவிட்டாய்

(மொஹமட் பாதுஷா)

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் அமெரிக்கத் தூதுவருக்கும் முன்னிலையில், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கடற்படை அதிகாரியொருவரை அவமதித்ததாக, ஒரு பெரும் சர்ச்சை இப்போது சூடுபிடித்திருக்கின்றது. கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிலைப்பாட்டைச் சரி எனக் கூறி ஒரு சிலரும், அவரது செயற்பாட்டைக் கண்டித்து அதிகமானோரும் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கின்றனர். சம்பந்தப்பட்ட கடற்படை அதிகாரி, இது தொடர்பில் பகிரங்கமாகக் கருத்து எதையும் வெளியிடாத நிலையில், முதலமைச்சர் நஸீர், தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். பிராந்தியம் கடந்து, ஒரு தேசியப் பிரச்சினையாக இது ஆகியிருக்கின்றது அல்லது ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

சம்பூர் மகா வித்தியாலத்தில் இடம்பெற்ற ஆய்வுகூடத் திறப்பு விழாவில், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ, இலங்கைக்கான அமெரிக்கத்

தூதுவர் அப்துல் கெஷாப் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டிருந்ததுடன், முதலமைச்சர் நஸீர் அஹமட் மற்றும் விதுர கடற்படை முகாமின் கட்டளையிடும் அதிகாரியான கப்டன் ரஞ்சித் பிரேமரத்ன ஆகியோரும் சமுகமளித்திருந்தனர். அங்கு மாணவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டுக் கொண்டிருந்த போது, ஆளுநர் பெர்ணான்டோ, முதலமைச்சரை ‘மேடைக்கு வருமாறு’ அழைத்துள்ளார். அப்போது மேடையில் ஏறிச் செல்ல முதலமைச்சர் முற்பட்ட வேளையில் அதைத் தடுக்கும் விதத்தில் கடற்படை அதிகாரி சைகை காட்டியதாகவும், அதனால் ஆத்திரமடைந்த கிழக்கு முதல்வர், கடுந்தொனியில் கடற்படை தளபதியை ஏசியதாகவும் கூறப்படுகின்றது. மேடையை நோக்கி ஊடகவியலாளர்கள் படையெடுத்தமையினால், கடற்படைத் தளபதி, அவர்களை நோக்கிச் சைகை காட்டியதாக, மற்றுமொரு கருத்தும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான காணொளிகள் வெளியாகியுள்ளதால், இவ்விவகாரத்தில் நஸீர் அஹமட் ஆதார பூர்வமாகச் சிக்கிக் கொண்டுள்ளார் என்றே தோன்றுகின்றது. ‘நெறிமுறை (protocol) தெரியாவிட்டால் வெளியே போ முட்டாளே. என்னைத் தடுத்து நிறுத்த நீ யார்? நான் தூதுவரை அதிகம் மதிக்கின்றேன். ஆனால், நெறிமுறை தெரிந்திருக்க வேண்டும்’ என்று கடற்படை அதிகாரியைப் பார்த்து முதலமைச்சர் பகிரங்கமாகக் கூறியுள்ளமை, காணொளிகளிலான குரல்பதிவைப் பிரித்தறிகையில் தெரியவருகின்றது. நமது நாட்டில் இதுபோன்ற விதத்திலான, ஆனால், இதை விட மோசமான சம்பவங்கள் இதற்கு முன்னர் இடம்பெற்றிருக்கலாம் என்றாலும் இந்தச் சம்பவத்தைப் பொறுத்தமட்டில் சில வேறுபாடுகள் உள்ளன. அதாவது, இது ஒரு பாடசாலையின் பகிரங்க மேடையில் இடம்பெற்றிருக்கின்றது. அது, வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வார்த்தைகளின் கனதி அதிகமாக உள்ளது. அதுமட்டுமன்றி, அமெரிக்கத் தூதுவர் இருந்த மேடையில், பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த மாகாண ஆளுநர் ஒருவர் முன்னிலையில், அதே இனத்தைச் சேர்ந்த கடற்படை அதிகாரியை, சிறுபான்மை முஸ்லிமான முதலமைச்சர் திட்டியுள்ளமை இந்த விவகாரத்தை பூதாகரமாக்கியுள்ளது.

இந்தச் சம்பவம் வெறுமனே உடனடிக் காரணங்களால் ஏற்பட்டதல்ல. கடற்படைத் தளபதி, அப்போது நடந்து கொண்ட விதத்துக்காக மட்டும் முதலமைச்சர், அவரை ஏசவில்லை என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். உண்மையாகச் சொல்லப் போனால், கிழக்கு ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான பனிப்போரில் கடற்படை அதிகாரி பலிக்கடாவாகி இருக்கின்றார். நீண்டகாலமாக இருவருக்கும் இடையில் புகைந்து கொண்டிருக்கும் தீயில், சம்பூர் நிகழ்வு தீ மூட்டியிருக்கின்றது என்றும் கூற முடியும்.

13ஆவது அரசியலமைப்பு திருத்தம் சரியாக நடைமுறைப்படுத்தாத காரணத்தினால், மத்திய அரசாங்கத்துக்கும் மாநில ஆட்சிக் கட்டமைப்பான மாகாண சபைகளுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி எப்போதும் இருந்து வருகின்றது. ஏனைய மாகாணங்களில் இந்த முரண்நிலை மேற்கிளம்புவது மிகக் குறைவாகவே அவதானிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முரண்பாடுகள் வலுத்து வருகின்றன.

மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதியான ஆளுநருக்கும், மாநிலத்தின் மக்கள் பிரதிநிதியான முதலமைச்சருக்கும் இடையிலான அதிகாரப் பகிர்ந்தளிப்பு சார்ந்த பிரச்சினைகள், பல தடவை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்கிளம்பியிருக்கின்றன. மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களுக்கு இடையிலான ஒத்திசையாத் தன்மையும் அதிகார விட்டுக் கொடுப்பின்மையும் மிகப் பெரும் நிர்வாகச் சிக்கல்களை இவ்விரு மாகாணங்களிலும் ஏற்படுத்தியுள்ளதை இனியும் மறைக்க இயலாது.

சம்பூரில் பகிரங்க மேடையில் வைத்து கடற்படை அதிகாரிக்கு முதலமைச்சர் நஸீர் ஏசிய சம்பவம் தொடர்பான பின்னணியைத் தேடிப் பார்க்கையில், இரகசியத் தகவல் ஒன்று கிடைக்கப் பெற்றது. அதாவது, சம்பூர் நிகழ்வுக்கு செல்லும் ஹெலி கொப்டரில் ‘நானும் வரட்டுமா’ என்று கிழக்கு முதலமைச்சர், ஆளுநர் அலுவலகத்திடம் கேட்டுள்ளார். ‘இல்லை, ஹெலிக்கொப்டர் முழுவதுமாக நிரம்பிவிட்டது. அதில் இடம் இல்லை என்பதால், நீங்கள் தாமதிக்காமல் தரைவழியாகச் செல்லுங்கள்’ என்று பதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அந்த ஹெலியில், இரண்டு பேர் மாத்திரமே வந்திறங்கியதாக முதலமைச்சர் தரப்பில் கூறப்படுகின்றது.

இந்தத் தகவல் உண்மையாக இருக்குமாக இருந்தால், இந்நிகழ்வில் முதலமைச்சர் நஸீர் அஹமட் கடுமையாக கோபமுற்று இருந்திருப்பார். தன்னை, ஹெலியில் ஏற்றிவராமல் தவிர்த்ததை ஒரு புறக்கணிப்பாகவே அவர் கருதியிருப்பார். முன்பிருந்த முரண்பாடுகளின் பின்னணியில் இதை அவர் யோசித்திருப்பார் என்பதே நிதர்சனமாகும். இவ்வாறான சூழ்நிலையிலேயே, அமெரிக்கத் தூதுவர் முன்னிலையில் கடற்படை அதிகாரி இவ்வாறு தடுத்து நிறுத்தியமை அவரது ஆத்திரத்தை வெளியில் கொண்டு வந்திருக்கலாம் என்று அனுமானிக்க முடிகின்றது. ஆனாலும், இந்தச் சம்பவம் குறைமதிப்பீடு செய்யப்படக் கூடியதல்ல.

ஏனென்றால், மாணவர்களும் பாடசாலைச் சமுகமும் இருந்த ஓர் அரங்கில் இந்த அசிங்கம் இடம்பெற்றிருக்கின்றது. வெளிநாட்டுத்

தூதுவரும் அங்கிருந்துள்ளார். கமெராக் கண்களில் இது பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. எனவே, கிழக்கு முதலமைச்சர் தன்னுடைய வார்த்தைகளில் நாகரிகத்தையும் நடத்தையில் விவேகத்தையும்; கடைப்பிடித்திருக்க வேண்டும் என்பதில் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது. தன்னை, ஒரு கடற்படை அதிகாரி அவ்வாறு நடத்தியமை தனக்கு எவ்வாறு இழுக்காக இருந்திருக்குமோ, அவ்வாறே கடற்படை அதிகாரியை ஏசியதும் அவருக்கு கௌரவப் பிரச்சினையாக இருந்திருக்கும் என்று, ஒரு கணம், நஸீர் அஹமட் நினைத்துப் பார்த்திருந்தால் இத்தனை சர்ச்சைகள் ஏற்பட்டிருக்காது.

அரச நடைமுறைகளில் pசழவழஉழட என்றொரு விடயம் இருக்கின்றது. உதாரணமாக, ஒரு நிகழ்வுக்கு பல மட்டத்தில் உள்ள ஆளுமைகள் வருகின்றார்கள் என்றால், அவர்களுக்கான கதிரைகள் ஒதுக்குவதில் இருந்து எல்லா விடயங்களிலும் இது செல்வாக்குச் செலுத்தும். protocol அடிப்படையிலேயே எல்லா ஒழுங்குகளும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். சம்பூர் நிகழ்வைப் பொறுத்தமட்டில், protocol அடிப்படையில், கிழக்கு மாகாண முதலமைச்சருக்குரிய அந்தஸ்து வழங்கப்பட்டதா என்பதில் தெளிவின்மைகள் இருக்கின்றன. அரசாங்கம் – மாகாண சபைகளின் அதிகாரங்களை மேம்படுத்துவதாகச் சொல்லிக் கொண்டிருக்கின்ற ஒரு காலப் பகுதியில் முதலமைச்சர் ஒருவர் எவ்வகையிலும் புறக்கணிப்புக்கு உள்ளாக இடமளிக்க முடியாது.

எனவே, அது குறித்து அரசாங்கம் விசாரிக்க வேண்டும். அது வேறு விடயம். ஆனால், தன்னை மதிக்கவில்லை என்பதற்காக அல்லது தனக்குரிய protocol மீறப்பட்டுள்ளது என்பதற்காக ஒரு பாதுகாப்பு அதிகாரிக்கு முதலமைச்சர் ஏச முடியாது. அதற்கு என்ன காரணம் கூறப்பட்டாலும் நியாயப்படுத்த முடியாத ஒரு நடவடிக்கையாகவே அது கருதப்படும். அதேபோன்று, இந்தச் சம்பவத்துக்கு முன்னரான இருபக்க உறவுகள் குறித்து ஆராயப்படுவதுடன், ஒரு முஸ்லிமாக இருக்கின்ற காரணத்தினால் இது ஒரு பெரிய விடயமாக பூதாகரமாக்கப்படுகின்றதா, என்ற கோணத்திலும் சிந்திக்க வேண்டியுள்ளது.

மாகாண சபைகளுக்குப் பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்குவது, ஏற்கெனவே பல்வேறு வாதப்-பிரதிவாதங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. முன்னதாக, வடக்கு முதலமைச்சர், படையினரை ‘வடிகான்களைச் சுத்தப்படுத்த’ சொன்னதாக செய்தி வெளியாக பெரும் சார்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இப்பின்புலத்தில், கிழக்கு மாகாண முதலமைச்சர், கடற்படை அதிகாரிக்கு இப்படி ஏசுவாராக இருந்தால், பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் என்னவாகும் என்று பெருந்தேசியவாதிகள் கேட்கலாம். இதனைக் காரணமாகக் கொண்டு, காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்காதிருக்கும் தமது நிலைப்பாட்டை அரசாங்கம் நியாயப்படுத்தவும் வாய்ப்பிருக்கின்றது. சமகாலத்தில், இதற்கு இன்னுமொரு பார்வைக் கோணமும் இருக்கின்;றது. இந்த ஆட்சிமுறைக் கட்டமைப்பு, ஒரு சிறுபான்மை முதலமைச்சருக்கு உரிய மரியாதையையும் இடத்தையும் கூட வழங்காதிருக்குமானால், ஏனைய அதிகாரங்களை வழங்குவதன் சாத்தியப்பாடு குறித்தும் அதைப் பெறுவதன் அவசியம் குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது.

இச்சம்பவம் பற்றி ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது. முறைப்பாடு கிடைத்தால் விசாரணை இடம்பெறும் என்று பாதுகாப்புச் செயலாளர் அறிவித்திருக்கின்றார். கடற்படை உள்ளக ஆரம்பக்கட்ட விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது. முப்படைகளும் கிழக்கு முதலமைச்சரை கையாள்வதில் சில முடிவுகளுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் கிழக்கு முதலமைச்சர் நஸீர் அஹமட்டுக்கும் ஒருவித நோய் பீடித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண கருத்து வெளியிடுகையில், ‘இந்நிகழ்வை, முதலமைச்சருக்குத் தெரியாமல் ஆளுநர் ஏற்பாடு செய்திருந்தால், அது இனவாதச் செயலாகும்’ எனத் தெரிவித்துள்ளார். ‘இவ்விடயத்தில் முதலமைச்சருக்கு அநீதி ஏற்பட்டிருந்தால், அதை முறையாக அணுகித் தீர்வு கண்டிருக்க வேண்டும்’ என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அத்துடன்,

நஸீர் அஹமட்டுக்கு எதிராக, மட்டக்களப்பில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றும் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டுள்ளது. ஆனால், நஸீரை முதலமைச்சராக நியமித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மட்டும் இன்னும் வாயைத் திறக்கவில்லை.

இவ்விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட கடற்படை அதிகாரியின் கருத்துக்கள் எதுவும் பகிரங்கமாக வெளியாகவில்லை. ஆனால், கிழக்கு முதலமைச்சர் மன்னிப்புக்கோர வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு எதிர்பார்ப்பதாக தெரிகின்றது. இவ்வாறிருக்க, நஸீர் அஹமட் இது பற்றிக் கருத்து வெளியிட்டுள்ளார். ‘இச்சம்பவத்துக்கு ஆளுநரின் செயற்பாடுகளே காரணமாகும். அவரது மரியாதைக் குறைவான செயலால் நான் ஆத்திரமடைந்தேன். ஆளுநர், எனது பணிகளில் தலையிடுவது, எனது மதிப்பைக் குறைப்பதாக உள்ளது. என்னை மேடைக்கு அழைக்க வேண்டும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அவர் கூறியிருந்தால், இச் சம்பவம் நடந்திருக்காது. கடற்படை அதிகாரிகள் அப்பாவிகளே’ என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி பார்த்தால், ஆளுநர் மீதிருந்த கோபத்தையே முதலமைச்சர், கடற்படை அதிகாரி மீது காட்டியிருக்கின்றார் என்பது நிரூபணமாகின்றது. ஆனாலும், இவ்வாறு வார்த்தை தவறுதல் முறையற்றது என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை. இலங்கையின் ஆட்சிமுறைக் கட்டமைப்பில், நாகரிகமற்ற தன்மை எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கின்றது. நாடாளுமன்றத்தில் நாகரிகம் வெட்கித் தலைகுனிந்ததை நாம் கண்டோம். ஆனால், இந்நிலைமை எல்லாக் கட்டமைப்புக்களிலும் உருவாவதை அனுமதிக்க முடியாது.

மன்னிப்புக் கேட்பது மட்டும் இதற்குத் தீர்வாகாது. மாறாக, அரசாங்கம் இது பற்றி நியாயமான விசாரணைகளை நடாத்த வேண்டும். என்ன காரணத்துக்காக கடற்படை அதிகாரியை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஏசியிருந்தாலும் அதை விசாரிக்க வேண்டும். அத்துடன், கிழக்கு ஆளுநர், முதலமைச்சரின் அதிகாரத்தை மேவுவது தொடர்பான குற்றச்சாட்டுக்களை கட்டாயமாக விசாரிக்க வேண்டும். அதேபோல், கடற்படை அதிகாரியோ ஏற்பாட்டாளர்களோ pசழவழஉழட அடிப்படையில் தவறிழைத்திருந்தால், அதையும் தீர விசாரிக்க வேண்டியுள்ளது.