வைகோ

மிஸ்டர் வைகோ ! நீங்களும் பழ நெடுமாறனும் சுபவீயும் இன்னும் சிலரும் சேர்ந்து கொண்டு விடுதலைப் புலிகளை உசுப்பேற்றி உசுப்பேற்றி தமிழீழ மக்களை புண்ணாக்கி ஒரு தலைமுறையையே புதைகுழிக்குள் போட்டு மூடிவிட்டீர்கள். ஒரு தலைமுறையையே அழித்து விட்டீர்கள்.

டெலோ ஈராஸ் ஈபிஆர்எல்ஃப் பிளாட் போராளிக் குழுக்கள் ஒன்றிணைந்து ஒரு பக்கமும் எல்டிடிஈ மறுபுறமும் இருக்கும்போது உங்களால் பிரபாகரனை அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டுமென்று கடுமையாக அறிவுறுத்தி வழிநடத்த முடியவில்லை.

பிரேமதாசாவோடு சேர்ந்து கொண்டு பிரபாகரன் மற்ற போராளிக்குழுக்களை கொன்று குவித்த போதும் உங்களால் அதை வன்மையாக கண்டிக்க முடியவில்லை.

அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் சிவசிதம்பரம் போன்ற தலைவர்களை கொன்ற போதும் வாய்மூடி மெளனியாக இருந்தீர்கள். உங்களால் கண்டிக்க முடியவில்லை.

கலைஞரை விடுதலைப்புலிகள் கொலை செய்துவிட்டால் நீங்கள் எளிதில் திமுகவின் பொது செயலாளராக ஆகி விடுவீர்கள் என்பதால் விடுதலைப்புலிகளால் கலைஞர் உயிருக்கு ஆபத்து என்று மத்திய மாநில அரசுகளின் உளவுத்துறைகள் எச்சரித்த போதும் திமுக தலைவர்களுக்கு எச்சரிக்கை சென்றபோதும் நீங்கள் நான் அப்படி செய்வேனா நான் அப்படி செய்வேனா என்று கேட்டுக் கொண்டிருந்தீர்களே தவிர “பிரபாகரன் அப்படி செய்வாரா” என்று உங்களால் கேட்க முடியவில்லை. கேட்கவும் முடியாது. ஒரு மாபெரும் இயக்கத்தின் ஒரு பகுதியை உடைத்து மூளியாக்கி விட்டு வெளியேறினீர்கள்.

காரணம் பயம்.. அதன்பிறகு விடுதலைப் புலிகள் உங்களை விட்டு வைக்க மாட்டார்கள். கருணாவையும் ஆண்டன் பாலசிங்கத்தையும் விடவா நீங்கள் பிரபாகரனுக்கு நெருக்கம்! அவர்களையே கொல்ல உத்தரவிட்டவருக்கு உங்களை எல்லாம் காலி செய்ய எவ்வளவு நேரம் ஆகிவிடபோகிறது ?
குற்றுயிரும் கொலையுயிருமாக கிடக்கும் ஈழத்தமிழ் சமூகந்தானே சின்னா பின்னமானது.. .. அவர்கள்தானே சூறையாடப்பட்டார்கள்.. மார்பகங்கள் துண்டிக்கப்பட்டு உறுப்புகள் சிதைக்கப்பட்டு சிறுக சிறுக கொல்லப்பட்டார்கள்.

பங்கரில் பயந்து பயந்து வாழ்ந்து ஒரே குண்டில் செத்து சிதறி மடிந்தார்கள்.. அவர்களுக்குத்தானே அந்த வலியும் இழப்பும் தெரியும்! நமக்கில்லையே! நாம் கலோசியத்தின் உப்பரிகைகள் இருந்து தானே பார்த்துக் கொண்டு இருந்தோம்!

உங்களுக்கு அந்த போராட்ட காலம் வசந்த காலம் என்பதில் சந்தேகம் இல்லை! வேண்டுமென்றால் இப்போது ஒரு முறை ஈழம் சென்று அந்த போராட்ட காலம்தான் என்னுடைய வசந்த காலம் என்று சொல்லி பாருங்களேன்.