இலங்கையின் சுதந்திர(ம்) தினம்

(சாகரன்)

இலங்கையின் சுதந்திர தினம் இன்று. (பிரித்தானிய) காலணியாதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட தினம் இன்று. இத் தினத்தையே நாம் சுதந்திர தினமாக கொண்டாடுகின்றோம். எமக்கு சுதந்திரம் கிடைத்து 68 வருடங்கள் ஆகின்றன என்ற கணக்குகள் வேறு எம்மிடம் உள்ளன. இந்தியாவின் தேசிய எழுச்சி பிரித்தானிய காலணியாதிக்கவாதிகளுக்கு எதிராக அகிம்சை வழியிலும், ஆயுதப் போராட்ட வடிவத்திலும் பரந்துபட்ட மக்களை இணைத்து நடாத்தப்பட்ட போராட்டம். இந்த போராட்டத்தின் உந்துதல் இலங்கையிலும் இருந்தது. பிரித்தானியர்கள் நவ காலணித்துவ சுரண்டல் முறமைக்கு தம்மை மாற்றிக் கொண்டு இந்தியாவை விட்டு வெளியேறும் போது இலங்கையையும் விட்டு வெளியேறினர். மற்றையபடி இலங்கை தனது சுதந்திரத்திற்காக இந்தியா அளவிற்கு போராடவில்லை. இதன் அர்த்தம் இலங்கையின் சுதந்திரத்திற்காக பங்களிப்பு செய்தவர்களின் தியாகங்கள் குறைந்தவை என்பதல்ல. இலங்கை சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையில் வாழும் சிறுபான்மையினர் தாம் இரண்டாம் தர பிரஜைகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்ற உணர்வலைகளுக்கு உள்ளாகின்றனர். இதனால் பிரித்தானியரிடம் இருந்து கிடைத்த இலங்கையின் சுதந்திரம் தமக்கான சுதந்திரம் என்று இவர்களால் உணரப்படாமல் தள்ளிப்போனது. இதுவே இன்று வரை சுதந்திர தினம் சிறுபான்மை மக்களால் கொண்டாடப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம்.

ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள் தமது சம உரிமைகளை கோரி அகிம்சை, ஆயுதப்போராட்டம் என்று பல்வேறு வழிகளில் போராடினர். இந்தப் போராட்டத்தின் நியாயத்தன்மையை புரிந்து கொள்ளாத இலங்கை ஆளும் வர்க்கம் இவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி ஆயுத ரீதியில் ஒடுக்க முற்பட்டதன் விளைவு இலங்கையின் சுதந்திரம் என்பது எம்மை ஒடுக்கும் ஒரு அரசின் கொண்டாட்டத்தினமே ஒழிய சிறுபான்மையினரின் கொண்டாட்டத்தினம் அல்ல என்ற உணர்வலைகளை மேலும் மேலும் அதிகரிக்க செய்தன. இது இறுதியில் பகிஷ்கரிக்கப்படும் ஒரு தினமாகவும் பரிணாமம் அடைந்துள்ளது. இலங்கை எமது நாடு என்ற உணர்வலை நாம் உரிமை மறுக்கப்படும் சிறுபான்மையினர் என்ற உணர்வலை தகர்க்கப்படும் வரை இருந்து கொண்டே இருக்கும். இது தகர்க்கப்பட்டால் நாம் இலங்கையர் என்று உணர்வுகளின் அடிப்படையில் எமது சுதந்திம் கொண்டாடப்படும். அதுவரை சுதந்திம் என்பது இலங்கையர் யாவருக்கும் கொண்டாடும் தினமாக இருக்குமா என்பது கேள்விக்குறியே?