‘அவதார்’ படமும், அமெரிக்க செவிந்தியர்களின் எதிர்ப்புக் குரலும்! – ஒரு பின்புலப் பார்வை

அமெரிக்காவில் உள்ள செவிந்திய மக்களுக்கு கிறிஸ்டோபர் கொலம்பஸ் மீது எப்போதும் வெறுப்பு உண்டு. கொலம்பஸ் அமெரிக்காவின் முதல் தீவிரவாதி, கொடூரமானவர், இன அழிப்பாளர், பூர்வகுடி பெண்களுக்கு எதிரான குற்றங்களை நடத்தியவர், நிலங்களை அபகரித்தவர் என்றே அமெரிக்க செவிந்திய மக்கள் இன்றளவும் கொலம்பஸை அடையாளப்படுத்துகிறார்கள்

நூற்றாண்டு காலமாக கொலம்பஸ் மீது இருக்கும் அதே கோபம், ‘அவதார்’ பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் மீது அம்மக்களுக்கு கடந்த பத்து ஆண்டுகளாக இருந்து வருகின்றது. அதன் பொருட்டே ’Avatar: The Way of Water’ படத்திற்கு எதிராக “boycott” என்ற வாதத்தை அமெரிக்க செவிந்தியர்கள் கடந்த ஒரு மாதமாகவே எழுப்பி வருகின்றனர்.

ஆனால், அம்மக்களின் குரல்கள் மறுதலிக்கப்பட்டு உலகம் முழுவதும் கோடிகளை வசூலித்து வருகிறது ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ திரைப்படம்.

யார் இந்த செவிந்தியர்கள்..? – மங்கோலியா – ரஷ்யா வழியாக பயணித்து வந்த ஆசியர்கள்தான் செவிந்தியர்கள் என்று அறியப்படுகின்றனர்.

அமெரிக்காவின் தற்போதுள்ள அலாஸ்கா மாகாண பகுதியிலிருந்து வட அமெரிக்க பகுதிகளில் சுமார் 500-க்கு மேற்பட்ட இனக்குழுக்களாக இம்மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.

உண்மையில் நாம் அழைப்பதுபோல் இவர்கள் செவிந்தியர்கள் இல்லை. அப்பெயரை அம்மக்களும் விரும்பவில்லை. செவிந்தியர்கள் என்று இம்மக்கள் அழைக்கப்பட பல காரணங்கள் கூறப்படுகின்றது. ஆனால், முதன்மையாய் நிற்பது கொலம்பஸின் பெரும் தவறு.

வரலாற்றில் பிரபல காலனித்துவவாதியான இத்தாலியின் கொலம்பஸ் தனது இந்தியாவை நோக்கிய பயணத்தில் வழிதவறி கரீபியன் தீவுகள் வழியாக அலாஸ்காவை வந்தடைந்தாகக் கூறப்படுகின்றது. அங்கிருந்த இனக்குழுக்களை கொலம்பஸ் ‘இந்தியர்கள்’ என்று நினைத்தார்.

ஆனால், இந்தியர்கள் கருப்பு நிறத்தில்தால் இருப்பார்கள் என்று கேள்விப்பட்டதை அறிந்து, அவர்களை ‘சிவப்பு இந்தியர்கள்’ என்று அவர் பதிவு செய்தார். இதன் காரணமாகவே அம்மக்கள் இன்றும் ‘செவிந்தியர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர்.

(The Hindu)