நிலைத்திருக்குமா?

அந்தவகையில், குறித்த தலிபான் ஆட்சியில் மக்களின் அடிப்படை உரிமைகள் குறிப்பாக பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது பறக்கும் விமானத்திலாவது தொங்கிக் கொண்டு சென்று தப்பித்து விட மாட்டோமா என ஆப்கானிஸ்தானியர்கள் அஞ்சி உயிரிழக்க காரணமாகின்றது.

நடப்புலகியில் போரின் கொடிய காட்சிகளாக இவை பதிவாகின்றன. இவற்றுக்கு மத்தியிலேயே தலிபான்கள் தங்களது முகத்தை மிகக் கவனமாக கட்டமைக்க முயல்கின்றார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நாங்கள் தற்போதில்லை பெண்களை மதிக்கின்றோம்; கற்க அனுமதிக்கிறோம்; பொதுவெளியில் பணியாற்ற அனுமதிக்கிறோம் எனத் தோற்றத்தை உருவாக்க முயல்கின்றனர்.

அதுவும் தற்போதைய நவீன ஊடகங்கள் குறிப்பாக சமூகவலைத்தளங்களை மிகவும் பாதுகாப்பாக சிறப்பாக தலிபான்களால் கையாள முடிகின்றது. ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் டுவிட்டருக்குள் செல்ல முடியாமல் இருக்காமல் தலிபான்கள் டுவிட்டரில் நடமாடுகின்றனர்.

ஆக, தற்கால ஒழுங்கில் தனிமைப்படுத்தப்பட்டு ஒன்றும் செய்ய முடியாது என உணர்ந்து நல்லெண்ணங்களை கட்டமைக்க தலிபான்கள் முயல்கின்றனர்.

ஆனால், நிஜத்தில் நிலைமைகள் வேறாக இருக்கின்றன. வட அத்லாண்டிக் ஒப்பந்த அமைப்புக்காக (நேட்டோ) பணியாற்றியவர்களை வீடு வீடாக தலிபான்கள் தேடுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தவிர, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு முன்னதாக தலிபான்கள் கைப்பற்றிய இடங்களில் தொகையாக உணவு சமைத்துக் கொடுக்க மறுத்ததுக்காக தாயொருவர் கொல்லப்பட்டதுடன், பெண்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், ஐக்கிய அமெரிக்கப் படைகளின் வெளியேற்றத்தோடு அதிவிரைவாக ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதற்கு அது மட்டும் காரணமில்லாமல் கிராமப் புறங்களில் தலிபான்களுக்கு காணப்பட்ட ஆதரவும் காரணம் என்பது நிதர்சனமாக உண்மையாகும்.

2001ஆம் ஆண்டு தலிபான்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஜனாதிபதியாக்கப்பட்ட ஹமீட் ஹர்ஸாயின் ஆட்சியில் நிலவிய மோசமான ஊழல்களே ஒதுக்குப்புறமான இடங்களில் உதவிகள் மூலம் தலிபான்களின் ஆதரவுகள் வளர்ச்சியடைந்திருந்தன.

இதுதவிர, தற்போதைய ஜனாதிபதி அஷ்ரப் கானியின் ஆட்சியிலும் இடை மட்ட, இராணுவங்களில் மோசமான ஊழல் நிலவியதே கிராமப் புறங்களில் தலிபான்களின் ஆதரவு அதிகரிப்பதற்கு காரணமாய் அமைந்திருந்தது.

எனினும், தலிபான்களின் தீர்மானமெடுப்பதை அறிந்த சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரின் நேர்காணலின்படி ஜனநாயகம் இல்லை எனவும், இஸ்லாமியச் சட்டமே அமுல்படுத்தப்படும் என தலிபான்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தவகையில், இஸ்லாமியச் சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு கடுமையாக்கப்படும்போதே ஆப்கானிஸ்தானின் கிராமப் புறங்களில் தலிபான்களுக்கான ஆதரவு எவ்வாறிருக்கும் எனத் தெரியவரும்.

தவிர, சோவியத் ஒன்றியத்தின் ஆப்கானிஸ்தானின் ஆக்கிரமிப்பு முடிவில் தோன்றிய தலிபான்கள், வல்லரசுகளின் பின்புலமில்லாமல் இவ்வாறு மேலெழ முடியாது. தலிபான்கள் பாகிஸ்தானிலுள்ள இஸ்லாமியப் பாடசாலைகளில் இருந்தே தோற்றமெடுத்தபோதும், இதை பாகிஸ்தான் மறுத்து வருகின்றது.

தலிபான்களின் ஸ்தாபகர் முல்லா ஓமரும் கராச்சியிலுள்ள வைத்தியசாலை ஒன்றிலேயே இறந்ததாக பாதுகாப்புத் தகவல் மூலங்கள் கூறுவதுடன், அவருக்கு அடுத்த தலைவரும் பாகிஸ்தானில் வைத்தே ஐக்கிய அமெரிக்க எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தார்.

அந்தவகையில், 9/11 தாக்குதல்களுக்குப் பின்னர் அல் கொய்தாவின் ஸ்தாபகர் ஒஸாமா பின்லேடனுக்கு அடைக்கலமளித்ததுக்காக தலிபான்களிடமிருந்த ஆப்கானிஸ்தான் மீது ஐ. அமெரிக்கா போர் தொடுத்ததிலிருந்து எதிர்த் தரப்பு வல்லரசுகளிடமிருந்தும் மறைமுகமான ஆதரவுகளை தலிபான்கள் பெறத் தொடங்கிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஏனெனில், தற்போது ஆப்கானிஸ்தானிலிருந்து ஒவ்வொரு மேற்குலக நாடுகளாக வெளியேறிக் கொண்டிருக்க எஞ்சியுள்ள நாடுகளின் தூதரகங்களை நோக்கினால் வெளிப்படை உண்மை புலப்படும்.

எவ்வாறெனினும், அனைத்து விடயங்களிலும் பாதிக்கப்பட்டவர்களாக ஆப்கானிஸ்தான் மக்களே உள்ளனர். உதாரணமாக, காபூல் விமானநிலையத்தை நோக்கி அனைவரும் படையெடுக்கையில், தங்களுக்காக பணிபுரிந்தவர்களை பாதுகாப்பாக மேற்குலக நாடுகள் அழைத்து வர முடியாத நிலையே காணப்படுகின்றது,. இச்சந்தர்ப்பத்தில் மேற்குலக நாடுகளுக்காக பணியாற்றியவர்கள் கைவிடப்பட்டவர்களாக உணருகின்றனர்.

அடுத்த நாட்டில் மூக்கை நுழைக்காது தமது நாட்டின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவமளித்த ஐ. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தொடர்ச்சியாக வந்த ஜனாதிபதி ஜோ பைடனும் வெளியே வேறு ஒன்றைச் சொன்னாலும் அதையே நிஜத்தில் பேணுகின்றார். ஏனெனில், ஆப்கானிஸ்தானில் இந்நிலைமை ஏற்படுமென அவருக்கு முன்னரே எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனினும், எத்தனை ஆண்டுகளானாலும் ஒரு தோல்வியாகவே அமையப் போகின்ற ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பை தன்னுடன் முடித்துக் கொள்ளும் நோக்கிலேயே ஜோ பைடன் செயற்பட்டிருக்கின்றார். அவரைப் பிழை சொல்லவும் முடியாது; ஏனெனில் உலகில் எல்லா நாடுகளும் இந்நிலையை நோக்கியே நகருகின்றன.

இதுதவிர, தலிபான்களுடன் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் பங்கேற்பில்லாமல் நேரடியாகவே ஐ. அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. ஜனாதிபதி கானியின் நிலைப்பாடாக ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தை அவர்களே தீர்மானிக்க வேண்டும் என இருந்தபோதும், தலிபான்களுடன் ஏதாவதொரு அவசர இணக்கப்பாட்டை ஏற்படுத்துமாறு ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்கியிருந்த ஐ. அமெரிக்கா, தான் கெளரவமாக வெளியேறவே முனைந்திருந்தது.

அப்படிப் பார்க்கும்போது ஆப்கானிஸ்தானை ஆப்கானிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு என மாற்றி தமது கொடியை ஏற்றியுள்ள தலிபான்களுக்கு ஜலலாபாத்திலிருந்து ஆரம்பித்த எதிர்ப்பானது காபூல் உட்பட ஏனைய நகரங்களுக்கும் பரவியுள்ளது. ஆப்கானிஸ்தானியர்களே தமது தலைவிதியை தீர்மானிப்பதற்கு அவர்களே இவ்வாறு போராட வேண்டியுள்ளது. ஆனால் இது தொடர்ச்சியாக நிலைத்திருக்குமா என்பதே கேள்விக்குறியாக இருக்கின்றது.

மறுபக்கம் தலிபான்களும் தொடர்ச்சியாக நிலைத்த தன்மையில் நிலை கொள்வார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில், சிரேஷ்ட உறுப்பினர்களிடத்தே உறுதி இருந்தாலும் இளம் போராளிகள் அவ்வாறு இருப்பார்களா என்பது கேள்விக்குறியே ஆகும். சிறுவர் பூங்காக்களிலும், உடற்பயிற்சிக் கூடங்களிலும் அவர்கள் அடிக்கும் கூத்தே இதற்கு சாட்சி ஆகும்.

அந்தவகையில், சமூகவலைத்தளங்களில் காணக் கிடைப்பது போல சினிமாக்கள் வாழ்க்கையை பிரதிபலிப்பதாக கமல்ஹாசனின் விஷ்வரூபம் படத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பது போல ஆப்கானிஸ்தான் மக்களே துன்பங்களை அனுபவிப்பதுடன், மூளைச்சலவை செய்யப்பட்ட போராளிகள் இளகிய மனமுடையவர்களாகவே காணப்படுகின்றனர்.

தலிபான்களுக்கு பின்புலம் காணப்பட்டாலும் அவர்களைக் கையாளுவது சிக்கலான ஒரு விடயமாகவே இருக்கப் போகின்றது. எனவே எல்லாவற்றுக்கும் காலம்தான் பதில் சொல்லப் போகின்றது.

(முருகவேல் சண்முகன்)