வ.உ.சி. 150

தொழிலாளர்களைத் திரட்டுதல்

தூத்துக்குடி கோரல் மில் நூற்பாலை காலத்திலிருந்தே தொழிலாளர்களை ஒன்றுதிரட்டுவதிலும், அவர்களைப் போராட வைப்பதிலும் வ.உ.சி. தீவிரமாக இருந்தார். சென்னையில் வாழ்ந்த காலத்தில் ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.க.வுடன் இணைந்து ஜவுளி ஆலைத் தொழிலாளர்கள், அஞ்சல் ஊழியர்களுக்குத் தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்தியாவிலேயே முதன்முறையாக அஞ்சல் ஊழியர்களுக்கான தொழிற்சங்கம் உருவாவதற்குக் காரணமாக இருந்தவர் வ.உ.சி.

அரிசி, மண்ணெண்ணெய்க் கடை!

1912-ல் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட வ.உ.சி. 1916-ல் சென்னை வந்தார். காரணம், அவருடைய தாய் மாவட்டமான நெல்லைக்குச் செல்ல ஆங்கிலேய அரசு தடை விதித்திருந்தது. அந்தக் காலத்தில் காங்கிரஸ் கட்சியில் மிதவாதிகள் செல்வாக்கு பெற்றிருந்ததால், வ.உ.சி.க்கு முக்கியத்துவம் குறைந்திருந்தது. மயிலாப்பூர், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாழ்ந்தார். வழக்குரைஞர், தமிழக விடுதலைப் போராட்டத்தின் முதன்மையான உந்துசக்தி, எழுத்தாளர் எனப் பல முகங்கள் இருந்தும், சிறைவாசத்துக்குப் பிறகு வ.உ.சி. பொருளாதாரரீதியில் பெரிதும் கஷ்டப்பட்டார். அரிசி, மண்ணெண்ணெய் விற்கும் கடைகளை நடத்தும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருந்தார்.

திரையில் உயிர்த்தெழுந்த வ.உ.சி.

வ.உ.சிதம்பரனார் மறைந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு, பி.ஆர்.பந்துலு இயக்கம், தயாரிப்பில் வெளியான ‘கப்பலோட்டிய தமிழன்’ திரைப்படம் வ.உ.சி.க்குச் சிறந்த அஞ்சலியாக அமைந்தது. அநேகமாக, தமிழர்களின் மனதில் வ.உ.சி.யின் சித்திரத்துக்கு உயிர்கொடுத்தவர் ‘சிவாஜி’ கணேசனாகவே இருப்பார்.

பாரதியாரின் புகழ்பெற்ற கவிதைகள், இப்படத்தின் பாடல்களாக உருப்பெற்றிருந்தன. 1961-ல் முதன்முறை வெளியானபோது பெரிய வரவேற்பைப் பெறாத இந்தப் படம், சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது. படத்தைப் பார்த்துவிட்டு, வ.உ.சி.யின் மூன்றாவது மகன் சுப்ரமணியன், தன் தந்தையை நிஜத்தில் பார்ப்பதைப் போல் உணர்ந்ததாகக் கூறியதை, மிகப் பெரிய விருதாக சிவாஜி கணேசன் கருதினார்.

1967-ல் மறு வெளியீட்டின்போது இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. தேசியத் தலைவர் ஒருவரைப் பற்றிய படம் என்பதால், அந்தப் படத்துக்கு வரிவிலக்கும் அளிக்கப்பட்டது. வரிவிலக்கு பெற்ற முதல் தமிழ்ப் படம் இது. ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட ஒரு விளம்பரம் ‘25 நாட்களில் 40 லட்சம் பேர் பார்த்த படம்’ என்று பெருமையுடன் கூறுகிறது.