ஈகைத் திருநாள் வாழ்த்துகள்……

“ஈதுல் பித்ர்” எனப்படும் ஈகைத் திருநாளானது சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும மனித நேயத்தையும் இவ்வுலகில் பரப்பும் நோக்கில் முஸ்லீம்கள் கொண்டாடும் ஒரு உன்னத பெருவிழா.

இஸ்லாம் என்பது வெறும் மார்க்கமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை முறையே, அவர்களின் உறுதியான நம்பிக்கை. அப்படியான நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை முறையில் ஈகைத் திருநாள் ‘ரம்ஜான் பண்டிகை’, மற்றும் தியாகத் திருநாள் ‘பக்ரீத் பண்டிகை’ என ஆண்டுதோறும் இஸ்லாம் மார்க்கத்தில் இரு பண்டிகைகள் மட்டுமே பெருநாளாக கொண்டாடப்படுகிறது.

இஸ்லாமிய மாதம் சந்திரனின் சுழற்சியை வைத்துக் கணக்கிடப்படுகிறது. சந்திர இயக்க மாதங்களில் ஒன்பதாவது மாதமான ரமலான் முஸ்லிம்களைப் பொருத்தவரையில் முக்கிய மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் தான் முஸ்லீம்களின் திருமறையான புனித குர்ஆன் பூமிக்கு மனிதனின் வழிகாட்டியாக பெறப்பட்டது.

ரமலான் மாத தலைப்பிறை தென்பட்டதும் உலகத்தின் பல்வேறு பாகங்களில் வாழும் முஸ்லிம்களும் அம்மாதத்தில் நோன்பிருப்பர்.முஸலீம்களுக்கு ஐம்பெரும் கடமைகள் உண்டு. அதில் ஒன்று, ரமலான் நோன்பு. ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.

ரமலான் மாதத்தைப் பொறுத்தவரை எல்லா முஸ்லீம்களுக்கும், அவர்கள் நம்பும் பெருமானாரை அதிகம் நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும் இருப்பதால், சிற்சில காரணங்களுக்காக ஒரு சிலர் தவிர அனைவருமே நோன்பு இருக்க என்றுமே தவறுவதில்லை.

தனித்திரு, விழித்திரு, பசித்திரு என்பதே ரமலான் மாத்தில் பின் பற்றப்பட வேண்டிய கொள்கைகள். அப்படி இருக்கும் பொழுதுதான், மனது தூய்மையை நாடும் என்பது அதன் மறைபொருளாக இருக்கிறது. அதாவது அதிகாலை முதல், மாலை வரை உண்ணாமல், நீர் அருந்தாமல், பிற தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்ற தத்துவதை உணர்த்துகிறது.

ரமலான் நோன்பின் நிறைவாக முஸ்லீம் நாடுகளில் கொண்டாடப்படும் ஈதுல் பித்ர் எனப்படும் ரம்ஜான் பண்டிகை ஆண்டுதோறும் ஷவ்வால் முதல்பிறை தினத்தன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. புவியியல் அமைப்புக்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டிலும் முதல்பிறை தோன்றுவதற்கேற்ப அந்நாடுகளில் ரம்ஜான் கொண்டாடப்படும்.

சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட ஐக்கிய அமீரக நாடுகளில் ரம்ஜான் கொண்டாடிய மறுநாள்தான் இலங்கை இந்தியாவில் ரம்ஜான் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இலங்கை, இந்தியாவில் சிறப்பு தொழுகைகளுடன் ரம்ஜான் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.குறிப்பாக முஸ்லீம்களுக்கு நோன்புக் கடமையானது.

ஒரு முஸ்லீமுடைய புலனடக்கத்தையும், மனக்கட்டுப்பாட்டையும் உருவாக்கும் சிறந்த ஆன்மீகப் பயிற்சியாக நம்பப்படுகின்றது. நோன்பின் அடிப்படை நோக்கம் வெறுமனே பசித்திருப்பதும் தாகித்திருப்பதும் அன்று. இந்தப் பயிற்சியின் மூலம் இறையச்சத்தை தன்னில் வளர்த்துக் கொள்வதேயாகும் என்பதை முஸ்லீம் மக்கள் நம்பும் மார்க்கம் அல்-குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது.

தாம் விரும்பி உண்ணும் உணவுப் பொருட்களையே பெருநாள் தர்மமாக கொடுக்க வேண்டுமேயன்றி தாம் பிரியப்படாததை, விரும்பாததை அளவுக்கு அதிகமாக பிறருக்கு கொடுத்தாலும் அவர்கள் வேண்டி நிற்கும் நன்மை கிடைக்காது என்பதை திருக்குரான் கூறுகிறது. தமது நெருங்கிய உறவுகளான தாய், தந்தை, பாட்டன், பாட்டி, மகன், பேரன் மனைவி ஆகியோருக்கு அப்பால் மற்றய உறவினர்களான விளிம்பு நிலை மக்களுக்கு செய்யப்படும் தர்மமே உயர்வாக கருதப்படும் நம்பிக்கையுடையதே இஸ்லாமிய மார்க்கம் ஆகும்.

என் பாடசாலை காலத்து முஸ்லீம் நண்பர்கள் இப் பெரு நாட்களில் தங்கள் வீடுகளுக்கு என்னை அழைத்து வழங்கிய விருந்துகளும் அழைக்க முடியாத தூர நகரத்தில் இருந்தவர்கள் பொதி மூலம் அனுப்பிய வட்டில் அப்பமும் என் நினைவில் இனிதாக இன்றும் வந்து போகின்றன.

கூடவே பாடசாலை, பல்கலைக் கழக வாழ்வுக் காலத்தில் யாழ்ப்பாண பெரிய கடைப்பகுதியில் வியாபாரத் தொழில் ஈடுபட்டிருந்த பல நூறு முஸ்லீம் சகோதரர்கள் என் நெருஙகிய நட்பு வட்டத்தில் இருந்தனர் பலரும் தொடர்பு விடுபட்ட இன்றைய நிலையிலும் அந்நாட்களில் அவர்களுடன் இணைந்து யாழ்ப்பாணத்து உணவகங்களில் உணவருந்திய தேநீர் ஐஸ்கறீம் அருந்தி மகிழ்ந்த நாட்களும்…..

என் அழகுணர்வை உடைகளின் வடிவமைப்பாக அவர்களிடம் எடுத்துரைக்க நான் எதிர்பார்த்த படியே தைத்துக் கொடுத்த ஆடைகளும் அலங்காரங்களும் என்னை அழகனாக்கிய அந்த நாட்கள்… அவர்களின் வீட்டிற்கு இடையிடையே சென்று வந்த அந்த நாட்களும் என் இனிய நினைவலையில் இன்றும் வந்து போகின்றன.

பொது வாழ்வில் ஈடுபட்ட காலத்தில் எங்கள் சக தோழமையாக எம்முடன் இணைந்து பணியாற்றி அந்த இந்த நாட்களும் என்று தொடரும் தோழமைகளும் மறக்க முடியாத மறுக்க முடியாத உறவுகள். அதன் தொடர்சியை இணைந்து வடக்கு கிழக்கு மாகாணசபை காலத்தின் மகாண அரசின் அமைச்சர் பெருமானார்களுடன் கூடிக் கொண்டாடியதை மறக்க முடியுமா…?

தமிழ் நாட்டில் திருவல்லிக்கேணியில் அச்சகம் ஒன்றை பொதுத் தேவைக்காக நடாத்திக் கொண்டிருந்த நாட்களில் ஐந்து வேளைத் தொழுகையும் அதற்கான மசூதியில் இருந்து ஒலி பெருக்கி மூலம் அழைப்புக்களும் பெயரை சொன்னால் மாத்திரம் அவர் முஸ்லீம் என்று அறியும் அளவிற்கான தமிழும் அந்த சகோதரத்துவமும் இன்றும் அவர்களுக்கு அண்மையாக வாழ்வது போன்ற உணர்வை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

யுத்தத்தினால் ஏற்பட்ட இடம்பெயர்வினால் விடுபட்ட தொடர்பாக இருக்கும் பல நட்புகளை தேடிக் கண்டுபிடிப்பதில் இன்று வரை ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நான் இன்னமும் எனது பால்ய காலத்து முஸ்லீம் நட்புகளை தேடுகின்றேன் என்று இந்த ஈகைத்திருநாளில் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பிரியாணி என்பது வெறும் உணவு அல்ல அது ஒரு உணர்வு…. உறவு… என்பதை எனக்கு உணர்த்திய என் முஸ்லீம் நண்பர்களை சகோதரர்களை தேடி அலைகின்றேன்……!