என் கவுண்டர் என்ற ‘மின்கம்ப” தண்டனை

(சாகரன்)

என் கவுண்டரில் முடிந்திருக்கின்றது அண்மைய ஹைதராபாத் வல்லுறவும் அதனைத் தொடர்ந்த கொலையும். பெண்களைத் தெய்வம் என்று மதிப்பதாக கூறும் இந்தியாவின் தென் மாநிலமான தெலுங்கானாவில் நடைபெற்றிருக்கின்றது. தனியாக வேலை முடிந்து வீடுதிரும்பும் வழியில் தான் பயணித்த இரு சக்கர வண்டியின் சக்கரம் காற்றுப் போனதற்கு உதவி கேட்ட ஒரு வைத்தியப் பெண்ணுக்கு நடைபெற்ற வன் கொடுமை இது. கைதொலைப் பேசி என்று எப்போதும் தொடர்புகளை ஏற்படுத்தக் கூடிய யுகத்தில் உறவுகளை அழைத்து ‘…….பயமாக இருக்கின்றது அவர்களின் பார்வை சரியல்லை…..” என்றதும் பதறியடித்து இடத்திற்கு விரைந்தது மட்டும் அல்லாது காவல் துறைக்கும் அறித்து விட்டு பின்பு ஸ்தலத்திற்கு விரைந்த போதும் காப்பாற்ற முடியாத காவல் துறையும், சமூக அமைப்பும் இந்தியாவின் அவலங்களை எடுத்துக் கூறும் நிகழ்வுகள்.

இதே காவல் துறைதான் இன்று என்கவுண்டர் மூலம் நீதியை நிலை நாட்டி இருக்கின்றதாம்….? வேகமாக செயற்பட்டு பிரியங்காவை காப்பாற்ற முடியாது கொலை செய்யவுக் கொடுத்து பின்பு கொலை செய்து நீதியையும் நிலைநாட்டுமாம்

இது இலங்கையிலும் கதிர்காமத்தில் பிரேமாவதி மன்னப்பிரிவிற்கும், கைதடியில் கிரிசாந்தியிற்கும், 2009 இறுதி யுத்தத்தில் இசைப்பிரியாவிற்கும், புங்குடுதீவு வித்தியாவிற்கும் நடைபெற்ற வன் கொடுமைகளின் தொடர்ச்சிதான். நிருபையாவும் அண்மைய (தற்)கொலையிற்கு உள்ளான பாத்திமாவிற்கும் இது பொருந்தியே இருக்கின்றது. பொள்ளாச்சியில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்ற போது அரசியல் செல்வாக்கு தேர்தலையும் மீறி நீர்த்துப் போனதே வரலாறு. ஏற்றத் தாழ்வுகளை மறுத்து நடைபெற்ற காதல்களும்…. திருமணங்களும்…. இதனைத் தொடர்ந்த ஆதிக சாதியினரது ‘சாதி’க் கொலை வெறியாட்டங்களையும் இதிலிருந்து வேறுபடுத்தி பார்க்க முடியாது. 8 வயது முஸ்லீம் ஆசீபா குழந்தையை வன்கொடுமையிற்கு உள்ளாக்கி கொலை செய்தவற்றையும் இங்கு இழுத்து வரவேண்டித்தான் இருக்கின்றது.

இங்கெல்லாம் நாட்டின் சட்டமும், ஒழுங்கும், நீதித்துறையும், காவல் துறையும் தமது நியாயமான கடமைகளை செய்யவில்லை என்பதினால் சமான்ய மக்களிடம் ஏற்பட்ட ஏமாற்றங்களின் தொடர்ச்சியே அண்மைய ஹைதராபாத் என்கவுண்டரை மக்கள் கொண்டாடும் மனநிலைக்கு வந்ததற்கான காரணங்களாகும்.

மேற்குறிப்பிட்ட மனிதத் தன்மையற்ற வக்கிரச் செயற்பாடுகளை செய்தவர்களை மன்னிக்க முடியாது. அதேவேளை ஒரு அரசியல் அமைப்பையும் நீதித்துறையையும் தனக்குள் கொண்டிருக்கும் நாட்டில் விசாரணக்காக கொண்டு போன இடத்தில் தப்பியோட முற்பட்டார்கள் என்று தாம் நினைத்தவாறு தண்டனை வழங்குவதை ‘ஆதரிப்பது” ஒரு கட்டுபாடற்ற சமூகச் செயற்பாட்டு வீக்கத்தையே ஏற்படுத்தும்.

இலங்கையில் ஈழவிடுதலைப் போராட்ட காலத்தில் ஈழவிடுதலை அமைப்புகளினால் தாம் நினைத்த வகையில் மின்கம்பத்தில் கட்டி சமூக விரோதி என்று ஆரம்பித்து துரோகி என்று வளர்ந்த போது நாம் யாரும் கேள்வி கேட்கவில்லை. மாறாக நம்ம பொடியள் சரியாகத்தான் செய்வார்கள் என்று பொதுப் போக்கில் இருந்ததன் விளைவு அது எமது படலையை தட்டி எம்மையே சுட வந்த போது நாம் ஒன்றும் செய்ய முடியாமல் தரோகிகளாகவும் விரோதிகளாகவும் சாவை பலர் தழுவிக் கொண்டனர். இதனையொத்ததே அண்மை என்கவுண்டர்கள்.

வருமுன் காப்போனாக செயற்பட முடியாத காவல் துறை கட்டமைப்புகளும்இ காவல் நிலைய வன்புணர்வுகளும்இ மாடி வீடுகளில் ஏழையின் அழகுகளை காசு பணத்தால் ஏலம் போட்டு கபீளிகரம் செய்வதுவும் சின்னவீடுகள் இல்லையென்றால் அரசியல் தலைவருக்கு? பெருமையே இல்லை என்று வளர்க்கப்பட்ட நாட்டில் இதனைத் தவிர வேறு எதனை எதிர்பார்க்க முடியும்.

பெண்களை ஆண்கள் அனுபவிக்க பிறந்த பண்டங்களாகவும் உணர்வு அற்ற ஜீவன்களாகவும் திரையிலும் புதினப் பத்திரிகை சஞ்சிகைளிலும் கலாச்சாரம் பண்பாடுகள் என்று பிற்போக்குத் தனங்களை ஊட்டி பொது வெளியில் பொதுப் போக்காக சித்தரிக்கும் போக்கே இந்த குற்றச் செயல்கள் அதிகரிப் பதற்கான ஊற்றுவாயில் அதிக இடத்தை பிடித்திருக்கின்றது.

அடங்கி இரு. பெரியவள் ஆனதும் யாருக்காவது இரையிடுவது அது குழந்தையாக இருந்தாலும்… இதில் முறை மாப்பிள்ளை, மாமன் என்று புரியாத வயதில் ‘புணர்வுகளுக்கு’ சடங்குகள் செய்வது என்ற அபத்தங்கள் சிந்தனை ரீதியாக மாற்றப்பட வேண்டும்.

இருட்டில் செல்லக் கூடாது… தனியாக செல்லக் கூடாது…. அடக்க ஒடுக்கமாக உடையணிந்து செல்ல வேண்டும்…. அதிகம் பேசக் கூடாது…. என்று பெண்ணை வளர்பதுவும் இந்த கொடுமைகளில் இருந்து தப்ப அறிவுரை கூறுவதை விடுத்து விட்டுசிறுவயதில் இருந்தே தன்னம்பிகையுடன் தைரியத்துடன் இந்த மாதிரியான வன் கொடுமைகளை எவ்வாறு தனியாக சமூகமாக கையாளுதல் என்று கற்றுக் கொடுக்க வேண்டும்.

நாம் வெறும் அழகும் பண்டங்கள் அல்ல நாமும் உணர்வுள்ள ஆசாபாசங்கள் உள்ள மனிதர்கள் பொது வெளியில் எம்மையும் கண்ணியமாக கண்ணை நோக்கி பழகும் நாகரீக பழக்க வழக்கங்களை எதிர்பாலினர் கொண்டிருபபதே சரியானது. யாரும் தவறான ‘தொடுதலை” கண்டு அஞ்சாமல் அவ்விடத்திலேயே அதற்கான மறுப்புகளைஇ எதிர்வினைகள் ஆற்றுவதையும் கற்றுக்கொள்ளுதல் குழந்தை பராயத்திலேயே உருவாகப்பட வேண்டும். கல்யாணங்களில் நான் விற்கப்பட்டவள் அல்ல வாழ இணைக்கப்பட்டவள் என்ற உணர்வுடன் பெண் வளர்க்கப்படவேண்டும்.

இவை எல்லாவற்றையும் மீறி பிறப்பில் மனிதராகவும் செயற்பாட்டில் கட்டுப்பாடற்ற மிருகங்களாகவும் செயற்படுபவர்கள் கைது… விசாரணை.. நீதி மன்றத்தில் நிறுத்துதல்…. சட்டங்களின் அடிப்படையில் பாகுபாடின்றி தீர்ப்புகளை வழங்கி தண்டனையை நிறைவேற்றுதல்… என்று வரையறுக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள் நிறைவேற்றுதல் எனபதை நடைமுறைப்படுத்தினால் நீதிதித்துறை, அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

அன்றேல் என்கவுண்டர் என்ற மின்கம்ப தண்டனைகளை மக்கள் கொண்டாடித்தான் தீர்ப்பார்கள் அந்த மின் கம்பத் தண்டனை தங்கள் வீட்டுக்கதவுகளையும் தான் வைத்ததுதான் சட்டம் என்று நிறைவேற்றும் தனிமனிதஇ குழும மேலாதிக்க ஆதிக்கவாதிகளின் கைகளால் தம்மை நோக்கி வரும்வரை.