குடும்பத்தை பிரிக்கும் நேரம்

குறிப்பாக தனியார் துறையினரைச் சேர்ந்தவர்களுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்த நேரம் தொடர்பில் அத்துறையைச் சார்ந்தவர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. இந்த புதிய நேரத்தின் பிரகாரம் குடும்ப வாழ்க்கைக்கும் தொழில் வாழ்க்கைக்குமிடையில் சமநிலையைப் பேணுவது என்பது இயலாத காரியமாக அமைந்திருக்கும் என்பது அந்த எதிர்ப்பின் பிரதான அங்கமாக அமைந்திருந்தது.

இந்தப் புதிய நேரத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதன் நோக்கம், வீதிகளில் போக்குவரத்து நெரிசலைப் பெருமளவு குறைத்து, அதனூடாக விரயமாகும் எரிபொருள் செலவைக் குறைப்பதாகும் என மின், வலு மற்றும் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு அரச துறையினர் குறிப்பிட்ட நேரத்திலும், தனியார் துறையினர் பிரிதொரு நேரத்திலும் பணிக்கு செல்வதாலும், பணியிலிருந்து வீடு திரும்புவதாலும் வீதிகளில் வாகன நெரிசல்களையும் தவிர்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும், எரிபொருள் செலவையும் குறைத்துக் கொள்ளலாம் என்பதாக அவரின் கருத்து அமைந்திருந்தது.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு போக்குவரத்து அமைச்சின் மேலதிகச் செயலாளர் திலகரட்ன பண்டாரவின் தலைமையில் செயலணி ஒன்று நியமிக்கப்பட்டு பணிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அமரவீர குறிப்பிட்டிருந்தார். இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு போக்குவரத்து அமைச்சின் செயலாளர் காமனி செனெவிரட்னவிடம் ஏற்கனவே கையளிக்கப்பட்டுமுள்ளது.

இந்த அறிக்கையின் பிரகாரமே அரச அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரையிலும், தனியார் அலுவலகங்கள் காலை 9.45 மணி முதல் மாலை 6.45 வரையிலும் திறந்திருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைப்புகள் நடைமுறைப்படுத்தப்படுமாயின், அரச துறையைச் சேர்ந்தவர்களுக்கு பெருமளவு பாதிப்புக் காணப்படாது. ஆனாலும், தனியார் துறையைச் சேர்ந்தவர்களின் குடும்ப வாழ்க்கைக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த நேரமாற்றம் தொடர்பான தீர்மானங்களைப் போக்குவரத்து எனும் ஒரு துறையை மாத்திரம் கவனத்தில் கொண்டு மேற்கொள்ள முடியாது என்பதை கொள்கை வடிவமைப்பாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பல குடும்பங்களைப் பொறுத்தமட்டில், பெற்றோர்கள் தமது அலுவலகங்களுக்குச் செல்லும் போது பிள்ளைகளை பாடசாலையில் விட்டுவிட்டுச் செல்வதும், பாடசாலையின் பின்னர் சென்று அவர்களை மீளச் சென்று அழைத்துச் செல்வதையும் வழமையாகக் கொண்டுள்ளனர். பாடசாலை நேரங்களும் அலுவலக நேரங்களுடன் ஒன்றித்துக் காணப்படும்பட்சத்தில் இவ்வாறான பெற்றோருக்கு தமது கடமைகளை இலகுவாக நிறைவேற்றக்கூடியதாக உள்ளது.

பல குடும்பங்களின் வீட்டிலுள்ள வாகனங்களில் ஒரு வாகனத்தில் தான் குடும்பத்தார் காலையில் தமது பணிகளுக்குச் செல்வதுண்டு. குறிப்பாக அரச மற்றும் தனியார் துறைகளில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்த முறையில் பயணிக்கின்றனர். எனவே, இந்த பணி நேரங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதானது, வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதாக அமையும்.

இதனால் குடும்பத்தாரின் போக்குவரத்துக்கான எரிபொருள் செலவும் அதிகரிக்கும். பொதுவாக தனியார்துறையைச் சேர்ந்த நிறுவனங்களில் அதிகளவு பணிச்சுமை காணப்படும். இந்த பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய நேரத்தின் பிரகாரம் 6.45 மணி வரை தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் பணியாற்ற வேண்டும் என்பதால், வாகன நெரிசல், தூரம் போன்ற பல்வேறு காரணிகளால் 8 மணி வரையிலேனும் வீடுகளைச் சென்றடைய முடியாதநிலை தனியார் துறையில் பணியாற்றுவோருக்கு ஏற்படும்.

இதனால் வீட்டுப் பணிகளில் பங்கேற்பது, பிள்ளைகளுடன் பொழுதைச் செலவிடுவது, வாழ்க்கைத் துணைக்கு உதவிகளை வழங்குவது போன்ற வாழ்க்கையின் முக்கியமான பணிகளுக்கு நேரம் ஒதுக்குவது என்பது இல்லாமல் போய்விடும். இதனால் வீடுகளில் ஒரு அழுத்தமான நெருக்கடியான சூழல் எழும். குடும்பத்தினுள் தகராறுகள் கூட எழலாம்.

ஏனெனில் குடும்பத்துடன் செலவிடுவதற்கு போதியளவு நேரமின்மை காரணமாக குடும்பக் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண்பதற்குக்கூட முடியாமல் போகக்கூடும். தற்போதைய சூழலில் கூட பல பெற்றோர் தமது பிள்ளைகளுடன் போதியளவு நேரத்தை தினசரி செலவிட முடியாத சூழலில் காணப்படுகின்றமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

அதுபோன்று இலங்கையின் பணியாற்றும் மக்கள் தொகையினர் மற்றும் வழங்கப்படும் போக்குவரத்து சேவைகளிடையே பாரிய இடைவெளி காணப்படுகின்றது. பணிகளுக்குச் செல்லும் அனைவரும் பொதுப் போக்குவரத்து சேவையை நாடுவார்களாயின் தற்போது இலங்கையில் பாவனையிலுள்ள பேருந்து சேவைகள் மற்றும் புகையிரத சேவைகள் போதியதாக இருக்காது. தற்போது கூட பேருந்துகளிலும், புகையிரதங்களிலும் பணிக்குச் செல்வோர் பலத்த நெரிசல்களுக்கு மத்தியில் பயணிப்பதை அவதானிக்க முடிகின்றது.

இந்த போக்குவரத்து சேவைகள் தசாப்த காலமாக மீளமைக்கப்படாமல் உள்ளன. குறிப்பாக கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ள போதிலும், கொழும்பு நகரினுள் காணப்படும் வீதிகளின் அளவுகளில் அல்லது புதிய வீதிகளின் நிர்மாணங்கள் இந்த அதிகரித்துச் செல்லும் வாகனங்களுக்கேற்ப விரிவாக்கம் பெறவில்லை.

இந்த விஸ்தரிப்பு செயற்பாடுகளுக்கு பெருமளவு நிதி முதலீடுகள் தேவைப்படுகின்றன. இந்நிலையில் பதவியிலுள்ள அரசாங்கத்தினால் நிர்மாணிப்பதற்கு பிரேரிக்கப்படும் போக்குவரத்துக்கட்டமைப்பு, ஆட்சி மாற்றத்தின் பின்னர் வரும் அரசினால் இடைநிறுத்தப்படுகின்றது. இவ்வாறான நிலை தொடர்ந்தும் இடம்பெறுகின்றது. இதற்கு ஒரு உதாரணமாக ஜப்பானிய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட ஏற்பாடாகியிருந்து தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள LRT சேவையை குறிப்பிடலாம்.

எனவே, கொழும்பிலும், அதனை அண்டிய நகரங்களிலும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின் உட்கட்டமைப்பு வசதிகள் துரிதமாக மேம்படுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் கொள்கை வடிவமைப்பாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன், பொதுப் போக்குவரத்து சேவையில் பெண்களின் துன்புறுத்தல்களை இல்லாமல் செய்வதற்கான வழிமுறைகளை முன்னெடுப்பது பற்றியும் கவனமெடுத்து, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தேவையும் உள்ளது.

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக போக்குவரத்துப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சிறந்த சந்தர்ப்பம் ஒன்று எழுந்துள்ளது. பல நிறுவனங்கள் தமது ஊழியர்களை ஒன்லைன் ஊடாக வீடுகளிலிருந்து பணியாற்றுமாறு பணித்து ஊக்குவிக்கின்றன. அத்துடன், நெகிழ்ச்சியான பணி நேரங்களும், தனியார் துறையைச் சேர்ந்தவர்களுக்கு தமது தினசரி செயற்பாடுகளை திட்டமிட உதவியாக அமைந்திருக்கும்.

தொழில்நுட்பத்தின் உதவியுடன் தமது தினசரி கடமைகளை நிறைவேற்ற ஊக்குவிக்கின்றன. எனவே, எழுந்தமானதாக இந்த பணி நேரங்களில் மேற்கொள்ள எதிர்பார்க்கும் மாற்றம் என்பது செயற்றிறனற்றதாக அமைந்திருக்கும் என்பதுடன், குடும்பங்களைப் பிரிக்கும் நேரமாகவும் அமைந்துவிடும்.