கையூர் தியாகிகளின் கதை

இந்த நாவலை நான் வாசிப்பதற்கு காரணமாக அமைந்தவர் யாழ்.பல்கலைக்கழகத்தில் முன்னர் விரிவுரையாளராக இருந்த திருமதி சித்திரலேகா மௌனகுரு அவர்கள்தான். யாழ் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் அமைந்திருந்த எனது புத்தகக்கடைக்கு ஒருநாள் வந்த அவர் அந்த நாவலைப்பற்றி அறிமுகம் செய்ததுடன், அதை தான் ஒரு இரவு முழுவதும் நித்திரை கொள்ளாமல் வாசித்து முடித்ததாகவும் சொன்னார். அதிலிருந்து அந்த நாவலில் எனக்கு ஆர்வம் பற்றிக்கொண்டது.

இந்த நாவலுக்கு ஒற்றை வசனத்தில் மதிப்பீடு வழங்கிய இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும், முன்னாள் கேரள மாநில முதலமைச்சருமான தோழர் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாத் அவர்கள், “இதைப் போன்றதொரு நாவலை என் வாழ்நாளில் வாசித்ததில்லை” எனப் புகழாரம் சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் நான் தொடர்பு வைத்திருந்த ‘சென்னை புக் ஹவுஸ்’ நிர்வாகி தோழர் இரா.பாண்டியன் மூலம் அந்த நாவலின் பிரதிகளை வரவழைத்ததுடன் பலருக்கும் அதை விநியோகித்தேன். சரி, இனி கையூர் தியாகிகளின் வரலாற்றை சுருக்கமாப் பார்ப்போம்.

கையூர் என்பது கேரள மாநிலத்திலுள்ள ஒரு சிறிய கிராமம். இந்தக் கிராமத்தில் வழமையாக இந்தியாவில் அந்தக் காலத்தில் இருந்தது போல் நிலப்பிரபுக்களின் கொடூரமான சுரண்டலும் ஒடுக்குமுறையும் இருந்தது. அந்த நிலப்பிரபுக்கள் ‘ஜாமின்தார்’ என்ற வடிவத்தில் கோலோச்சினார்கள். அவர்களுக்கு அப்பொழுது இந்தியாவை அரசாட்சி செய்த பிரித்தானிய ஏகாதிபத்தியமும் முழு ஒத்துழைப்பு வழங்கியது.

இந்த நிலைமையில் கேரளாவில் தனது பணியைத் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கையூர் கிராமத்திலும் தனது கிளையை அமைத்து பணியாற்றத் தொடங்கியது. 1940இல் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டலில் கையூர் விவசாயிகள் தமது கிராமத்திலிருந்த இரண்டு ஜமின்தார்களான நம்பியார், நாயனார் என்பவர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார்கள். இந்தக் கிளர்ச்சியின் போது பல பொதுமக்கள் பொலிசாரினால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தக் கிளர்ச்சிக்குக் காரணமானவர்கள் எனக் கருதப்பட்ட ஐந்து இளம் தோழர்களைக் கைது செய்வதற்கு பிரித்தானிய காலனித்துவ அரசு முயற்சி செய்ததுடன் அவர்களைக் கைது செய்ய உதவுபவர்களுக்கு சன்மானத் தொகையையும் அறிவித்தது.

இறுதியாக அந்த ஐவரும் கைது செய்யப்பட்டார்கள். அவர்களில் நால்வருக்கு 1943 1943 மார்ச் 29ஆம் திகதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்களின் பெயர்கள் மதகில் அப்பு, கோயித்தாரில் சிறுகண்டன், பொடுரா குஞ்ஜாம்பு நாயர், பள்ளிகல் அபுபக்கர் ஆகும். கைது செய்யப்பட்ட இன்னொருவரான சூரிகடன் கிறிஷ்னன் நாயர் வயது குறைந்தவர் என்பதற்காக ஆயள் தண்டனை விதிக்கப்பட்டார்.

இந்தத் தியாகிகள் எந்தக் கலக்கமும் இல்லாமல் பூரண கம்யூனிச உணர்வுடன் தூக்குமேடையை வரவேற்றார்கள். அவர்கள் தூக்குக் கயிற்றை முத்தமிட்டபோது “இந்தியப் புரட்சி வெல்க!”, “கம்யூனிசம் நிடூழி வாழ்க!” என கோசமிட்டவாறு தமது மரணத்தைத் தழுவிக் கொண்டனர்.

இப்படியான பல அநியாயங்களைச் சுமார் இரு நூற்றாண்டுகளாகச் செய்த பிரித்தானிய அரசுதான் இப்பொழுது அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து இலங்கை உட்பட பல நாடுகளில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் நிலைநாட்டப் போவதாகச் சொல்கிறது.