கொரோனா வைரஸ் கதையாடல்-1: இன்னொரு பெருந்தொற்றைத் தவிர்க்க இயலுமா?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் இடையிலான ஊசலாட்டத்தின் நடுவே, மனிதகுலம் முக்கியமான புள்ளியொன்றில் நிற்கின்றது. ஒருபுறம், கொவிட்-19 நோய்த் தொற்றுத் தொடங்கி, ஓராண்டாகி விட்டது. மறுபுறம், இந்தப் பெருந்தொற்றுக்கான தடுப்பு மருந்து, பரிசோதனைகளின் பின்னர், பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, இந்தப் பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பணியை, தடுப்பு மருந்தின் மீது போட்டுவிட்டு, உலகம் அப்பால் நகர்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. உலக நாடுகளின் தலைவர்கள், அமைப்புகள் அந்தத் தொனியிலேயே பேசிப் பரிகசித்துவிட்டு, அப்பால் நகர்வது நடக்கிறது.