ஜெய் பீம் சமூக நீதியிற்கான திரைப்படம்

அதன் ஒரு பரிணாம வளர்ச்சியான விடயம்தான் சினிமா. இந்த சினிமா ஊடாக சமூக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தலாம் அதுவும் பொருளாதார ரீதியாக பாரியளவு அடிவாங்காமல் பலதரப்பட்ட மக்களையும் அது சென்றடையக் கூடிய வகையில் காட்சி ஊடகத்தின் ஊடு ஆவணப் படமாகவும் இல்லாமல் அதே வேளை அதிக பொழுபோக்கு அம்சங்கள் நிறைந்த வியாபாரம் படமாகவும் இல்லாமல் விளம்பு நிலையில் இருந்து விளம்பு நிலை மக்களின் வாழ்வியலை ஆழமாக, அகலமாக, தெளிவாக உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப் படமாக நான் உணர்கின்றேன்…. ஜெய் பீம் திரைப்படத்தை.

தமிழ் சினிமா உலகில் ‘உயர்ந்த’ நிலையை அடைந்த நிலையில் இருக்கும் சூரியா, ஜோதிகா இணையரின் தயாரிப்பில் உருவான சமூகம் முன்னேற்றம் சார்ந்த இந்த செயற்பாட்டிற்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இதில் சந்துரு என்ற வக்கீல் வேடத்தை ஏற்று நடித்திருக்கும் சூரியா…. நடித்திருக்கின்றார் என்பதை விட வாழ்ந்திருக்கின்றார் என்பதே சரியானது.

காட்சி ஊடகத்திற்கு சினிமாவிற்கு தேவையான ஏற்ற இறக்கங்கள் என்ற ஜனசஞ்சாரம் திரைப்படத்தில் அங்காங்கே இருந்தாலும் அது திரைப்படத்தை நோக்கி மக்களை கொண்டு வருவதற்கு தேவையானதாகவே உணர்கின்றேன்.

இடையிடை சிணுங்கல்களும், இணைப்பும், பிணைப்புமாக, காதல் களிப்புகள் ஏழைகளின் வாழ்வில் உள்ள சுகந்தங்களை

அருமையாக படத்தின் இடையிடையே தூவி இருப்பதும்… வயிற்றில் பிள்ளையை சுமந்த படி கணவனின் இழப்பிற்காக நீதி கேட்டு போராடுவதும் பணம் தருகின்றோம் ‘செத்த உன் புருஷன் இனி வரப் போகின்றானா…’ என்று கேள்வியுடன் பணம் தருகின்றோம் என்று அதிகாரவர்க்கம் சமரசம் செய்ய…. விலை பேச… முற்பட்ட போது….’ ‘வயிற்றில் இருக்கும் பிள்ளை பிறந்து ஒரு நாள் என் அப்பா எங்கே என்னும் போது பணத்தை பெற்று உங்களை வளர்த்தேன் என்று சொல்ல விரும்பவில்லை….’ என்று விலை போகாத வீரமாக தைரியமான பெண்ணாக கதையின் நாயகி.

கதாநாயகியாக நடித்தவர் தனது சுய அடையாளத்தை இழந்து பழகுடி மகளாக அவர்களில் ஒருவாராகவே மாறிப் போய்விட்டார். நான் இங்கு நடிகை ‘லிஜோமோல் ஜோஸ்” ஐக் காணவில்லை ‘செங்கேணி” ஐத்தான் காண்கின்றேன்.

கூடவே அவருடன் இணையராக ராஜாக்கண்ணு ஆக நடித்த மணிகண்டன் அவர்களது குழந்தை கிராமத்து மக்கள் என்று எல்லோரும் இருளர் என்று அழைக்கப்படும் மலைவாழ் பழங்குடி மக்களாக வாழ்கின்றனர் திரைப்படத்திற்குள். அவர்கள் சுற்றி இருக்கும் இளவரசாக இருக்கட்டும் சந்துருவை சுற்றி இருக்கும் எம்.எஸ். பாஸ்கராக இருக்கட்டும் அவர்கள் இந்த சமுதாயத்தின் கூறுகளாகவே வலம் வருகின்றனர்.

பாம்பு பிடித்தல் கூடவே எலிகளை பிடித்தல் என்பதை தமது தொழிலாக கொண்டு கல்வி அறிவு, வீடுப் பட்டா, வாக்காளர் அட்டை, வாழ்வாதராம், சமூகப்பலம் என்று ஏதும் அற்ற நிலையில் இருக்கும் இந்த மக்களை களவு என்றவுடன் அது இவர்கள்தான் செய்திருப்பார்கள் என்று சமூகம் முத்திரை குத்தியிருக்க அரசு அதிகாரத்திற்கும் பொய் வழக்களில் ஒரு குற்றவாளியை காட்ட இவர்களை காவல் நிலையித்தில் அடைப்பதுவும் அப்படி அடைத்து அடித்து துவைத்தால் கேள்வி கேட்க இவர்களுக்கு யாரும் இல்லை என்ற சமூதாயப் பலமற்றவர்கள் என்ற நிலையில் அதனை சாதமாக்கி வாழும் சமூகச் சூழல் தமிழகத்தில் மட்டும் அல்ல ஈழத்தில் இருக்கும் சாதி வெறித்தனத்திற்கும் பொருந்தித்தான் இருக்கின்றது. அந்த வகையிலும் இது எமக்கான திரைப்படமும் தான்.

இவர்களின் துன்பங்களை அங்கு ‘மரத்தடி’ ஆசிரியராக பணியாற்றும் பெண் ஆசிரியை பொது வெளியிற்கு கொண்டு வருவதுதான் இதற்கான திசைவழியை கம்யூனிஸ்ட் தோழர்கள் வழி காட்டுவதும் இந்த படத்தின் சிறப்பான திறவு கோலாக நான் பார்க்கின்றேன். அந்த திறவு கோல் இல்லை என்றால் சந்துருவும்(சூரியா) நேர்மையான பொலிஸ் அதிகாரி பெருமாள் சாமியும்(பிரகாஷ்ராஜ்) உம் இல்லாமல் போய் இருப்பார்கள்.

மக்களுடன் எண்ணிக்கையில் சிறிதாகினும் கருத்தியலில் பலமாக இருக்கும் இடதுசாரிகளும் அவர்களின் விடாப்பிடியான போராட்டமும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இந்த மக்களின் பிரச்சனையை அரசியல் மயப்படுத்துவதில் இந்த இடதுசாரிகளும் நிர்வாகத்துறையில் வழக்கறிஞர் சந்துரு பொலிஸ் அதிகாரி பெருமாள் சாமி போன்றவர்களும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயற்பட்டு காவல் நிலையில் பல ஆண்டு காலமாக நடைபெற்று வரும் இந்த கீழ் நிலை மக்கள் மீதான வன்மத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றனர். அப்போது ஆட்சியில் இருந்த திமுக வின் பெரியாரின் சமூக நீதிப் பார்வை இவற்றிற்கு வலுவூட்டுகின்றது.

சமூக நீதியிற்கான அரசிலை திரைப்படம் சொல்லி இருந்தாலும் இதில் சம்மந்தப்பட்ட அரசியல் கட்சிகளை நேரிடையாக சொல்வதில் இருந்து தன்னை தவிர்த்திருப்பாகவும் உணர முடிகின்றது. திரைபடம் சகலருக்குமானதாக அமைய வேண்டும் என்பதற்கான ‘தந்திரமான’ செயற்பாடாக நான் இதனை உணர்கின்றேன்.

இறுதிக் காட்சியில் அந்த பழகுடியினர் குழந்தை மூரியா முன்னிலையில் கால மேல் பால் போட்டு பத்திரிகையை வாசிப்பது போன்ற காட்சி எமக்கு பலதையும் இறுக்கமாக… சமத்துவமாக சொல்லியிருக்கும் காட்சி அது அபாரம்.

தற்போதும் நீதிபதியான சந்துருவும், ஓய்வு நிலை பொலிஸ் அதிகாரியாகவும் பெருமாள் சாமியும் கம்யூனிஸ்ட் போராளி கோவிந்தன் இருளர் நலன் வாரிய அமைப்பு செயற்பாட்டாளர்கள்….. பேராசிரியர் பிரபா கல்வி மணி இவர்களுடன் கூடவே செங்கேணி என்ற பார்வதி என்று பலரும் உயிர்வாழும் சாட்சியங்களாக இருப்பதுவும் திரைப்படத்தின் இறுதியில் அவர்களையும் குறிப்பிட்டு இருப்பது திரைப்படத்தில் சொல்லப்படும் விடயத்தின் உண்மைத் தன்மையையும் வலுவையும் சேர்திருப்பதில் உண்மையிற்கு நெருக்காமாக இருந்து எழுதிய நெறியாள்கை செய்திருக்கும் ஞானவேல் பாராட்டிற்குரியவர்.

திரைப்படத்தில் வரும் பல நூறு காட்சிகள் வசனங்களை குறிப்பிடலாம்

ஆனாலும் அவற்றில் சில மனதை அப்படியே அள்ளி விழி நீரை வரவழைத்தன. அவை…

1.

‘…..தப்பு பண்ணுறவங்களுக்கு பணம் பதவி சாதியென்று பக்க பலமாக இருப்பது போல்… பாதிக்கப்படவர்களுக்கு நாமதானே இருக்கோம்… நாமும் எந்த எல்லைக்கும் போய் இதற்காக போராடுவோம்….’

2.

பொலிஸ் அதிகாரியிற்கு வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு வரும்… ‘பிள்ளையை பாடசாலைக்கு கொண்டு போக வண்டி அனுப்பு…’ என்று அதற்கு இணைப்பைத் துண்டித்தபடியே நேர்மையான அதிகாரி ‘திருந்தவே மாட்டீங்களா…” என்று பொதுப்பட பலருக்குமாக வெறுப்பாக கதைப்பது.

3.

வழக்கறிஞர் சந்துருவிடம் “…உங்களுக்கு கொடுக்க காசு ஏதும் இல்லை….” என்று செங்கேணி கலங்கும் போது

‘…. பாம்பு கடிச்சு உயிர் ஆபத்தென்று அவசரமாக ஒருவரைக் கூட்டி வந்தால் காசு இல்லை என்றதற்காக வைத்தியம் பார்க்காமலா விடுவாயா…..” என்று வினவ

“… காசும் உயிரும் ஒண்ணாகுமா..? என்னை அடிச்ச போலிசே வந்தாலும் வைத்தியம் பார்பேன்….” என்ற செங்கேணியிற்கு

‘….ஒருதர்கிட்ட இருக்கிற திறமை எதுக்கு உதவுதோ அதை வைச்சுத்தான் அதற்கு மரியாதை…..’ என்று தொடரும் சந்துருவின் வார்த்தைகள்

4.

‘…திருட்டிற்கு இந்த சாதிதான் சொத்தம் என்று ஏன்தான் பார்கின்றீர்கள் திருட்டு எல்லா சாதியிலும் உள்ளது…’

5.

வலி தாளாமல் பொலிஸ் காவலில் ராஜாக்கண்ணுவுடன் இருப்பவர் சொல்கிறார் ‘அண்ணே வலி தாங்க முடியலணே, பேசாம திருடுனோம்னு ஒத்துக்கிருவோம்ணே…!’,

அதற்கு ராஜாக்கண்ணுவின் பதில்: ‘தம்பி இந்த வலி காயம் ஒரு நாள் ஆறிப் போயிரும், ஆனா திருட்டுப்பட்டம் சாகுறவர கூட வரும். கொஞ்சம் பொறுத்துக்கடா…’ – இதுவும் நாம் கடந்து வந்த பாதைதானே

6.

அதிகாரியொருவர் வேட்டை சமூக மக்களைப் பார்த்து ‘உங்களுக்கு சாதிச் சான்றிதழ் வேணுமாடா…? பாம்பு பிடிச்சுக் காட்டுவியா..?’ என்கிறார்.

அதற்கு ராஜாகண்ணுவின் பதில் ‘பாம்பு பிடிக்க வேணாம்னுதான்யா சர்டிபிகேட் கேக்குறோம்.!’ என்கிறார்.

போன்ற விடயங்கள் சமூகத்தில் புரையோடிப் போய் இருக்கும் பிற்போக்கு விடயங்களுக்கு கொடுக்கும் சாட்டையாக இப்படி பற்பல விடயங்களை கூறிக் கொண்டே போகலாம்…

இதுபோன்ற சினிமாக்கள் வெளிவரும் போதெல்லாம் ‘இப்ப யார் சார் சாதி பாக்குறா…? இதெல்லாம் பாருங்க 20 வருசம் 30 வருசம் முன்ன நடந்தது இன்னைக்கு எல்லாம் மாறிடுச்சு……” என பேசுகிறவர்களுக்காக….

சமீபத்தில் யாழ்ப்பாணம்…. வட்டுக்கோட்டையில் நடந்த சம்பவத்தை ஞாபகத்திற்கு கொண்டுவர வேண்டிய தேவையாகின்றது.

இறுதியாக அம்பேத்காரின் வழிமுறையில் மராத்தியில் வழக்கத்திற்கு

வந்த ‘ஜெய் பீம்’ சொல்லாடல் பற்றி….

ஜெய் பீம் என்றால் ஒளி….

ஜெய் பீம் என்றால் அன்பு…..

ஜெய் பீம் என்றால் இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கிய பயணம்..

ஜெய் பீம் என்றால் பல கோடி மக்களின் கண்ணீர் துளி….

***********************************************************************

திரைப்படத்தின் உண்மை கதையை அறிய விரும்புபவர்கள் தொடர்ந்தும் வாசியுங்கள்……

ஜெய் பீம் படத்தில் வரும் ராஜாக்கண்ணு கொலைவழக்கு உண்மையில் நடந்தது என்ன …??

இந்திய கடலூர் மாவட்டத்தில்.

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் ஒன்றியத்திலுள்ள கம்மாபுரம் அருகில் உள்ளது முதனைக் கிராமம். இந்தப் பகுதியில் கூடை பின்னும் தொழிலில் ஈடுபட்டு வந்த குறும்பர் பழங்குடிச் சமூகத்தைச் சேர்ந்த நான்கு குடும்பங்கள் 1970கள் முதல் அங்கு வாழ்ந்து வந்தனர். (குறும்பர்கள் வேட்டை, மேய்ச்சல் தொழிலில் ஈடுபடுபவர்கள். வில் எய்வது இவர்கள் முன்னோர் தொழில்.)

90களின் மத்தியில், சுற்று வட்டார கிராமங்களில் வயல் அறுவடைக் காலங்களில் குடும்பத்தோடு கூலி வேலைக்குச் செல்வது அவர்களது உபதொழிலாக இருந்துவந்தது.

1993ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில், கம்மாபுரத்திற்கு அருகிலுள்ள கோபாலபுரம் என்ற கிராமத்துக்கு இந்தக் குரும்பர் பழங்குடியினர் கூலி வேலைக்காகச் சென்றனர். அந்த ஊரில் தங்கியிருந்து விவசாயக் கூலி வேலைகளைச் செய்து, நெல்லைக் கூலியாகப் பெற்றுக்கொண்டு, சிலநாட்கள் கழித்து முதனை கிராமத்திற்குத் திரும்பியிருக்கிறார்கள்.

இந்த சமயத்தில் கோபாலபுரத்திலுள்ள ஒரு வீட்டில் அன்றைய கணக்கில் சுமார் 1.5லட்சம் மதிப்புள்ள 43.5 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் 1,141 பணம் திருடுபோனது. இந்த வழக்கு தொடர்பாகக் கம்மாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதும். வயலில் கூலிவேலை செய்ய வந்த குரும்பர் பழங்குடி மக்களைத் தேடிப்பிடித்து விசாரணைக்கு இழுத்துச் சென்றனர் கம்மாபுரம் காவலர்கள்.

போலீஸ் காவலில் ராஜாக்கண்ணு என்ற பழங்குடி இளைஞர் அவரது சகோதரர், சகோதரி மற்றும் மைத்துனர் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டார். ராஜாக்கண்ணுவின் மனைவி, அவர்கள் எந்த குற்றமும் செய்யவில்லை எனக் கெஞ்சியபோது, அவரும் காவலர்களால் அடித்து துன்புறுத்தப்பட்டனர்..

மறுநாள், ராஜாக்கண்ணு உடன் கைது செய்யப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் இருந்து தப்பியோடிவிட்டதாகவும் அவர்கள் கம்மாபுரத்துக்குத் திரும்பவந்தால் உடனே போலீஸில் சொல்லவேண்டும் என்றும் ராஜாகண்ணு மனைவியிடம் மிரட்டும் தொனியில் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அடித்து துன்புறுத்தப்பட்ட தன் கணவர் காவல்நிலையத்தில் இருந்து தப்பி ஓட வாய்ப்பில்லை என்றும், அவரை போலீஸார்தான் என்னவோ செய்துவிட்டார்கள் என்றும் அழுது தீர்த்த ராஜாக்கண்ணுவின் மனைவி, கடலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உதவியை நாடினார். ஆர்டிஓ, டிஎஸ்பி தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரைக்கும் புகார் கொடுத்துப் பார்த்தார்.

1993ல் அளிக்கப்பட்ட அவரது புகாரின்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், “போலீஸார் விசாரணையில் ராஜாக்கண்ணு அடித்துக் கொலை செய்யப்பட்டார்” என நீதி விசாரணை கேட்டுத் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இருந்தபோதும் வெகுநாட்கள் கழித்தே இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது.

அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தவர் ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு அவர்கள். அவரது உறுதுணையுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில், ராஜாக்கண்ணு உட்பட மூவரின் நிலை குறித்து அறியத் தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் சாட்சியம் அளித்தனர். காவல்துறை சார்பில் தங்கள் மீது போடப்படும் பொய்வழக்குகள் குறித்து நீதிமன்றத்தில் எடுத்துரைத்தனர்.

1996-ல் (அதிமுக ஆட்சி காலம் முடிந்த பிறகு) சென்னை உயர் நீதிமன்றம் ஓர் இடைக்காலத் தீர்ப்பளித்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு சார்பில் 3 சென்ட் நிலம், ரூ.2.65 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது. கூடுதலாக இந்த வழக்கு குறித்து சென்னை உயர் நீதிமன்றம் இட்ட உத்தரவுப்படி சிபிசிஐடி விசாரணை ஏற்படுத்தப்பட்டது.

சிபிசிஐடி விசாரணையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டானிலிருந்து காட்டுமனார்கோயில் செல்லும் பாதையில் உள்ள மீன்சுருட்டி அருகே ஓர் அடையாளம் தெரியாத ஆண் சடலம், ஏறத்தாழ ராஜாக்கண்ணுவின் அங்க அடையாளங்களுடன் விபத்தில் சிக்கியதாகக் கண்டெடுக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது தெரியவந்தது.

இந்த முக்கியமான தடயத்தை மேலும் விசாரித்தபோது, அது ராஜாக்கண்ணுவின் உடல் என்று கண்டறியப்பட்டது. அதன் பின்னரே ராஜாக்கண்ணு மனைவியின் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

முதலில் கடலூர் நீதிமன்றத்திலும் பின்னர், விருதாச்சலம் விரைவு நீதிமன்றத்திலும் நடந்த இந்த வழக்கில், ராஜகண்ணு காவல் நிலையத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டார். காவலர்கள் சாட்சியங்களை மிரட்டினர். அது தண்டனைச்சட்டம் பிரிவு 354-ன் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்று முன்வைக்கப்பட்டது.

ஆட்கொணர்வு மனு மூலம் இந்த வழக்கு தொடங்கப்பட்டிருந்தாலும், இரண்டு அமர்வு வழக்குகளில் விசாரணையைத் தொடங்கினாலும், 1995இல் பதியப்பட்ட வழக்கின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டதால் அதை வைத்து மேல்முறையீடு செய்து குற்றவாளிகள் சிலருக்கு விடுதலையும் கிடைத்திருந்தது.

ஆனால், 1997ல் சிபிசிஐடி பதிவுசெய்த கூடுதல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, அந்த வழக்கின் விசாரணைகளும் 1995ஆம் ஆண்டின் முந்தைய வழக்கோடு தொடர்புபடுத்தப்பட்டது. அந்த விசாரணையின் முடிவில், நீதிபதிகள் ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.சி.ஆறுமுகப்பெருமாள், ஆதித்யன் ஆகியோர் அமர்வு, 2006-ஆம் ஆண்டில் ராஜாக்கண்ணு வழக்கில் தீர்ப்பு வழங்கியது.

20-3-1993 அன்று ராஜாக்கண்ணு மீது நகைத் திருட்டு குற்றச்சாட்டின் பேரில் பொய் வழக்கு போடப்பட்டது. அவரது மனைவி (சாட்சி-1) சகோதரி (சாட்சி-6), மைத்துனர் (சாட்சி-3) உள்ளிட்டோர் குற்றத்தை ஒப்புக்கொள்ளச்செய்ய காவலர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.

அன்று முழுவதும் நடந்த காவல்துறை சித்ரவதைக்குப் பிறகு, இரவு 11.00 மணிக்கு வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்ற தலைமைக் காவலர் மறுநாள் மாலை மூன்று மணிக்கு ராஜாக்கண்ணு நிலை கவலைக்கிடமானதும் அவரது மனைவியை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். உடன் சாட்சிகளான பழங்குடிகள் 5 பேருக்கு தலா 10 ரூபாய் பணம் கொடுத்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர் காவல்துறையினர்.

மாலை 6.00 மணிக்கு முதனை கிராமத்திற்குத் திரும்பிய ராஜாக்கண்ணுவின் மனைவிக்கு, மாலை 4.15 மணிக்கே ராஜாக்கண்ணு தப்பி ஓடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. விருதாச்சலம் பேருந்து நிலையத்தில் ராஜாக்கண்ணுவைப் பார்த்த்தாகவும் போலீஸ் தரப்பில் சாட்சி உருவாக்கப்பட்டது.

ராஜாக்கண்ணுவுக்கு வேலை அளித்த, அரிசி ஆலை அதிபர் கோவிந்தராஜு தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு, அவரும் ராஜாக்கண்ணு தப்பிச்சென்றதற்கான போலீஸ் தரப்பின் சாட்சியாக்கப்பட்டார். (வழக்கு விசாரணையின்போதே கோவிந்தராஜு இறந்துவிட்டார்).

ராஜாக்கண்ணு மனைவி, குடும்பத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் தொடர் முயற்சிகளைத் தடுக்க, களவுபோன நகைகளை எங்கே வைத்திருக்கிறாய் என ராஜாக்கண்ணு மனைவி மற்றும் குழந்தைகள் மீண்டும் போலீஸாரால் துன்புறுத்தப்பட்டனர். பழங்குடியினரான ராஜாக்கண்ணு மனைவி மற்றும் அவரது தரப்பு சாட்சிகளை ஆடைகளை அவிழ்க்க வைத்து சித்ரவதை செய்தனர். எல்லா துன்பங்களுக்கு மத்தியிலும் சட்டப் போராட்டத்தை அவர்கள் கைவிடவில்லை.

வழக்கு சிபிசிஐடி கைக்கு மாறிய பிறகே, 23.3.1993 அன்று மீன்சுருட்டியில் ஒரு கோவிலுக்கு அருகிலுள்ள பொது இடத்தில் ராஜாக்கண்ணுவின் சடலம் அடையாளம் காணப்பட்டது. சென்னை கும்பகோணம் சாலையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றின் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் வழியாக, காவல் நிலையத்தில் காயங்களுடன் பார்த்த தன் கணவர் ராஜாக்கண்ணுவை முதன்முதலாக அதுவும் இறந்த நிலையில் புகைப்படமாகப் பார்த்தார் அவரது மனைவி.

ராஜாக்கண்ணு கஸ்ட்டி மரணத்துக்குக் காரணமானதோடு, அவரது சடலத்தை அப்புறப்படுத்தி, சாட்சிகளை மிரட்டித் துன்புறுத்தி, தடயங்களை அழித்த்து ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்ட கம்மாபுரம் காவலர்கள் 5 பேருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அரசு மருத்துவமனை மருத்துவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கி, விருதாச்சலம் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இவர்கள் தவிர, இந்த வழக்கில் தொடர்புடைய ஓய்வுபெற்ற டிஎஸ்பி, கம்மாபுரம் காவல்நிலைய ஆய்வாளர் உள்பட 12 பேரைக் கைது செய்து சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏறத்தாழ 13 ஆண்டுகள் நீண்ட சட்டப்போராட்டம் நடத்திய ராஜாக்கண்ணுவின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு இறுதிவரை உறுதுணை புரிந்தவர் அப்போதைய கம்மாபுரம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்த கோவிந்தன் இந்த வழக்கில் வெற்றிபெறும் வரை கோவிந்தன் திருமணமே செய்துகொள்ளவில்லை. தீர்ப்பு வந்த 2006ஆம் ஆண்டில் அவரது 39ஆம் வயதில் அவருக்குத் திருமணம் நடைபெற்றது.

பல்வேறு மிரட்டல்கள், சமரசப் பேச்சுவார்த்தைகள், அதிகார மீறல்கள் அனைத்தையும் மீறி இந்த வழக்கில் வாதாடி நீதி பெற்றுத் தந்ததில் வழக்கறிஞர் கே.சந்துருவின் பங்களிப்பு முக்கியமானது. அசாத்தியமானதும் கூட.

தன் கணவனுக்கு நிகழ்ந்த அநீதி, தன் சமூகத்தவர்களுக்கு இழைக்கப்படும் அநியாயம் இனி தன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கும் நடைபெறக்கூடாது என்று அன்றைக்கு நீதிமன்றத்தின் படியேறிய ராஜாகண்ணுவின் மனைவியின் நிஜப்பெயர் பார்வதி. 76 வயதான அவர் இன்றும் விருத்தாச்சலம் முதனை கிராமத்தில் வசித்துவருகிறார்.

(நன்றி: உண்மை சம்பவம் பற்றிய தகவல்களுக்கு: கார்த்திக் புகழேந்தி)