நறுவிலியாறு

ரஞ்சினி

மார்கழி 2 1984. அது ஓர் அதிகாலை. சுறுசுறுப்பான கமக்காரர்கள். சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கும் கார்காலக் காலை பனியை விலக்கி சூரியன் எழுந்ததோ இல்லையோ
பச்சையுடைப் பகைவன் வந்தான்
சத்தமின்றி பதுங்கியே ஊரும்
ஒருவகை வண்டிகளினணியில்
மெதுவாய் மெதுவாய் ஊர்ந்தபடி
சற்று நிமிடங்களுக்கு முன்தான்
திடீர் என்ற அதிகாலை ஊரடங்கு
உத்தரவை அறிவித்திருந்தது அரச
ஊதுகுழல் வானொலி
வெளியே புறப்பாடுகளை செய்திருந்த
ஊரார் விரைந்து வீடு திரும்மியும்
திரும்பியவாறும் இருந்தனர்
வந்த இராணுவம்
பிரதான பாதையில் இருந்து சிறிய
சந்திகளுக்குள் நுழைய தொடங்க
பரபரப்பு மக்களிடையே நாங்கள்
இராணுவத்தை எப்பொழுதும் மனிதராக
பார்ப்பதில்லை கூற்றுவராகத்தான்
பார்ப்போம் அவர்கள் கையில் சிக்காமற்
தப்பினாற்தான் உயிர்தப்பமுடியும்
பரபரப்பாய் ஓடும் போது ‘ஆமி வாரான்
ஆமி வாரன் ஓடுங்கோ ஓடுங்கோ’ என்று
எச்சரித்தபடி ஓடுவார்கள், அப்படித்தான்
இன்றும் எச்சரித்தபடி ஓடிக்கொண்டிருந்தனர்
நான் எனது தோழி வீட்டில்
தங்கியிருந்தேன் என்னுடன் என்னும்
இரு தோழியர் மக்களின் எச்சரிக்கை
கிடைத்தவுடன் அவர்களின் வீட்டின்
பின்னால் இருந்த வாய்க்கால் தாண்டி
வயற் பகுதிக்குள் ஓடிச் சென்றோம்
அங்கே ஏற்கனவே ஓடிவந்தவர்கள்
நின்று சுதரித்துக்கொண்டு ஊரை
கவலையுடன் பார்த்தார்கள் நாங்களும்
நின்று திரும்பிப் பார்த்தோம்..
எனக்கு இப்பொழுது என் வீட்டு ஞாபகமும்
என் அண்ணாவின் ஞாபகமும், எங்கள் வீடு ஊரின் பிரதான வீதியில் இருக்கிறது அதனால் எப்பொழுதும் கூடிய கவனத்துடன் இருப்போம். மனதுக்குள் ஒன்றும் நடக்கக்கூடாது ஒன்றும் நடக்கக்கூடது என்று மனம் அடித்துக் கொண்டது.
இப்பொழுது வயல்வெளியில் நிறைய
மக்களின் தலைகள் தெரிந்தன.
வயல் தாண்டினால் சிறிதாய் ஓடும் ஆறு
அது நறுவிலியாறு என்றழைக்கப்படுகிறது.
அது தாண்டினால் காட்டொடு சார்ந்த
சேனைப் பயிர்ச்செய்கைக் காணிகள் அதற்கு பட்டகாட்டுவெளி என்று பெயர்,
அந்த பகுதியில்த்தான் தேவை எற்படும்
போது தஞ்சம் அடைவோம்
அனால் இன்று யாருக்கும் அங்கு சென்று
பதுங்கும் எண்ணமில்லாமல் ஊரைப்
பரிதாபமாகப் பார்த்தபடி ஆங்காங்கே
நின்றிருந்தார்கள். முகத்தான்குளத்தின் முதற்துண்டுப் பகுதியில் நாங்கள் நின்றிருந்தோம்
இப்பொழுத இடையில் இருக்கும் உலுக்குளம் என்ற குளத்தின் வயற்பகுதி அதன் அருகாக இருக்கும் குடியிருப்புக்களில் இருந்தும் மக்கள் ஒடி வந்துகொண்டிருந்தார்கள், திடீர் என்று அந்தப் பகுதியில் தீ பரவத்தொடங்கியது
யாருடையதோ வீட்டுக்குத் தீ வைத்து
விட்டார்கள் என்பது தெரிந்தது. அது மார்க்கண்டு அவர்களுடைய வீடாக இருக்கும் என எண்ணிக்கொண்டோம். தொடர்ந்து
சற்றுத் தூரமாக சூட்டுச்சத்தங்களும் கேட்டது. நாம் தொடர்ந்து ஓடி ஒளிப்பதா? திரும்பிச்செல்வதா? என்று தெரியாமல் நின்றிருந்தோம்
இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக
அங்கே நின்றோம் கிராமத்தில் இருந்து கடைசியாக எங்களுடன் இணைந்தவர்களின் தகவலின்படி பலர் கைதாகி இருக்கலாம் என்பதறிந்தோம்.. வந்தவர்கள் ஊரை இரண்டுபடுத்தி கைதானவரகளுடன் சென்றுவிட்டார்கள் என்பதறிந்து ஊரை நோக்கித் திரும்பினோம்
நான் விரைவாக மிதியூந்தை எடுத்துக்கொண்டு எங்கள் வீட்டை நோக்கி
ஓடினேன் வீதியில் ஊரவர்கள் கவலையுடன் கூடிக் கூடி நின்றுகொண்டிருந்தனர், உறவுகளின் கைதுகளில் தவித்த பல பெண்கள் ஓலமிட்டு அழுதுகொண்டிருந்தார்கள். ஒவ்வொருவராக
கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள் கூடிக்கொண்டிருந்தன, கிளியன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதும், மார்க்கண்டு அவர்களும் மருத்துவர் ஜெயரட்ணம் அவர்களதும் மற்றும் மயில்வாகனம் அவர்களதும் வீடுகள் உடமைகளுடன் முழுதாக தீக்கிரையாக்கப் பட்டிருந்தன. எங்களின் அயலவர்களில் பலர் கைதாகி இருந்தனர். பெரும்பாலும் அவர்கள் உறவினர்கள் கூட. செட்டிகுளம் பிரதான வீதி, செட்டிகுளம் குடியிருப்பு, துடரிக்குளம் வீதி மருத்துவமனை சுற்று வட்டம் மற்றும் பிரதான குடியிருப்பான முகத்தான்குளம் என்று இங்கே மட்டுமல்ல வரும்பாதையிலேயே நேரியகுளம் அடப்பன்குளம் மற்றும் முதலியாகுளம் பகுதிகளில் ஆண்களைக் கைதுசெய்துகொண்டே வந்திருந்தார்கள் என்பதை அறிந்து கொண்டோம்.
நான் மேலே குறிப்பிட்டது போல் பிரதான வீதியில் இருந்த எங்கள் வீட்டிற்கும் எனது சிற்றன்னை வீட்டுற்கும் சென்றிருந்தார்கள், ஆனால் அங்கே ஆண்கள் யாரும் அந்த வேளை இருந்திருக்கவில்லை. எனது அண்ணா காலையிலேயே வெளியிற்சென்றிருந்தார் அவரும் இராணுவத்தின் துரத்துதலில் இருந்து மயிரிழையில் தப்பியிருந்தார். அவர் சென்ற மிதியுந்து அப்பாவினுடையது, 21 வருடமாக அவர் வைத்திருந்த ரலி மிதியுந்து அதன் துணையுடன்தான் அவர் தனது இதுவரையான ஆசிரிய சேவையையும் செய்திருந்தார் அதுவும் இன்று அவர்கள் கையில் சிக்கிவிட்டது.. அது போகட்டும் பல உயிர்களின் முன்னே எதற்கு அது? இருந்தாலும் ஞாபகம் வந்து விட்டது.
அன்று முழுவதும் ஊர் சோகமப்பியதாக தங்கள் உறவுகளை எங்கே கொண்டசென்றார்கள் என்று தேடலிலும் விடை காணுவதிலும் தவித்தபடியும் நகர்ந்தது . பல்வேறு தகவல்கள் சுட்டு ரயர் போட்டு கொழுத்திவிட்டார்கள் என்றும், உயிரோடு குளிகளில் போட்டு மூடிவிட்டார்கள் என்றும் பல தகவல்கள், ஆனால் எது உண்மை என்று இதுவரைத்தெரியாத கேள்வியுடன் மறக்கமுடியாத துயரவரலாற்றுச் சம்பவம் என்ற பதிவுடன் இன்றுடன் 35 வருடங்கள் கடந்துவிட்டன,
மருத்துவர் சங்கரப்பிள்ளை அவர்கள் தனது 3 பிள்ளைகளையும் செல்லர் என்பவரின் இரு பிள்ளைகள் இவ்வாறு பல குடும்பங்களில் மூவர் இருவராய் 52 பேர் அன்று காணாமற் போயினர். எம் ஊருக்கு என்றும் மறக்காத துயரம் இது.
இதே நாளில் சேமமடு மற்றும் வவுனியா பூந்தோட்டப் பகுதியிலும் இதே போன்ற கைதுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
.அன்றய சாட்சிகளில் ஒருத்தியாக அன்று காணமற் போனவர்களுக்கும் அவர்தம் உறவுகளுக்கும் சமர்ப்பிக்கிறேன்.