பாடங்களை கற்போம்….! படிப்பினையாக கொள்வோம்….!! மனித குலத்தை மீட்போம்…..!!! (பகுதி 2)

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகள் காத்திருப்பு, மற்றும் கண்காணிக்கும் அணுகுமுறையை செயற்படுத்தின. ஆனால் இதனை கால தாமதமாக ஆரம்பித்தன. ஆனால் வியட்நாம் சீனாவின் வுஹானில் வைரஸ் உருவாக்கத்திற்கு பின் விரைவாக செயற்படத் தொடங்கியது. வியட்நாம் சீனாவுடன் சுமார் 1444 கிலோ மீற்றர் அளவிலான தரை தொடர்பு நெருக்கம் மற்றும் ஆழமான பொருளாதார தொடர்புகள் கொண்டுள்ளது.

வியட்நாமின் மத்திய அரசு சீனாவின் ஹ_பே மாகாணத்தில் கொரனா தொற்று அறியப்பட்ட டிசம்பர் பிற்பகுதியிலிருந்தே கொரனாவின் பரம்பலை உன்னிப்பாக அவதானித்து வந்தது. அமெரிக்கா போன்ற நாடுகள் செய்த தவற்றை வியட்நாம் செய்யவில்லை. இது கொரனா தொற்றுதலை வியட்நாம் வெற்றிகொள்வதற்கு மிக முக்கிய காரணியாக அமைந்திருக்கின்றது.

வியட்நாமில் உள்ள கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சுகாதார அமைச்சகம், உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் யு.எஸ். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (C.D.C) ஆகியவற்றின் உயர் மட்ட அதிகாரிகளுடன் ஜனவரி 15 அன்று அவசர கூட்டம் ஏற்பாடு செய்திருந்தது.

இதனைத் தொடர்ந்து ஜனவரி 23 அன்று வியட்நாமில் வைரஸின் முதல் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட உடன் வியட்நாம் செயற்படத் தொடங்கியது. ஜனவரி மாத ஆரம்பத்தில் நடந்த முதல் அவசரக் கூட்டத்தைத் தொடர்ந்து, கோவிட் – 19 கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான புதிய வழி நடத்தல் குழு வைரஸைக் கட்டுப்படுத்த ஒரு திட்டத்தை தயாரித்து வெளியிட்டது, இது உடனடியாக மாகாண சுகாதாரத் துறைகளால் செயல்படுத்தப்பட்டது. இத் திட்டத்தின் முதற் செயற்பாடாக எந்தவொரு தொற்று நோயாளர்களும் பதிவாகாத அந்த நேரத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தாண்டு(ஜனவரி 16) இற்கு பிறகு எல்லா கல்வி நிலையங்களும் மூடப்பட்டன.

நாட்டை அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான செயற்பாடுகளை மேம்படுத்துவதற்காக, வைரஸைக் கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பது குறித்த வழிகாட்டுதல்களை உடனடியாக வெளியிடுமாறு சுகாதார அமைச்சகத்தை அரசு வலியுறுத்தியது. மேலும் முழு அரசியல் செயற்பாட்டாளர்களும், மத்திய அரசும் இணைந்து நாடு முழுவதும் மத்திய அரசினால் முழு நாடும் வழிகாட்டப்படுவதற்கான பொறிமுறைகளை உருவாக்கி இதற்கான செயற்பாட்டை அரசு ஆரம்பிக்க தொடங்கியது.

பாதுகாப்பு படைகள், இராணுவம் மற்றும் பொது மக்கள், வியட்நாமிய சுகாதார அதிகாரிகளின் கூட்டுச் செயற்பாட்டினால் பிப்ரவரி 26 க்குள், தொற்றுநோய்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த எண்ணிக்கையிற்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்க முடிந்தது. தொடர்ந்து முதல் 16 வைரஸ் தொற்று நோயாளர்களும், வெகு சீக்கிரத்தில் சிகிச்சை பெற்று மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் தைவான் நாடுகள் வெற்றிகரமான கொரனா கட்டுப்பாட்டு முயற்சிகளைச் செய்த நாடுகளின் பட்டியலில் முதன்மையாக இருக்கின்றன. வியட்நாம் இம்மாதிரியாக கட்டுப்பாடு செயற்பாடுகளை ஆரம்பத்தில் குறைவாகவே ஈடுபட்டது. தென் கொரியாவைப் போலன்றி, வியட்நாம் ஆரம்பத்தில் மட்டுப்படுத்தப்பட்ட சோதனைத் திறனை மட்டுமே கொண்டிருந்தது.

மற்றும் மார்ச் 30 க்குள் சுமார் 15,000 சோதனைகளை மட்டுமே மேற்கொண்டது, இது அதே தேதியில் தென் கொரியாவில் நடத்தப்பட்ட 395,194 சோதனைகளை விட மிகக் குறைவான எண்ணிக்கை ஆகும். ஆனாலும் ஆரம்ப தொடக்க நிலையில் தனது கொரனா கண்டறிதல் செயற்பாட்டை ஆரம்பத்த வியட்நாமின் செயற்பாடே அதன் வெற்றிகரமான தொற்று நோய் கட்டுப்பாட்டு வெற்றிக்கான முக்கிய காரணமாகியிருக்கின்றது இன்று.

2003 ஆம் ஆண்டில் சார்ஸ்(SARS) தொற்றுநோயை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடியதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களுடன் கோவிட் -19 இன் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இரண்டு தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டது வியட்நாம்.
அவை வைரஸ் தொடர்பை கண்டறிதல் மற்றும் சந்தேகத்திற்கிடமான தொற்று நோயாளிகளை தனிமைப்படுத்தல் என்பனவற்றிலிருந்து தனது செயற்பாட்டை தீவிரப்படுத்தியது. வியட்நாம் இன் இந்த நடவடிக்கைகள் அதன் பாதிக்கப்பட்ட நோயாளர்களை 1,000 க்கும் குறைவாகக் கட்டுப்படுத்த பெரிதும் உதவியது என்பதில் மாறுபட்ட கருத்தை இல்லாமல் செய்தது.

(மிகுதி நாளை தொடரும்….)