புதிய கேரள அமைச்சரவை

ரெண்டாவது சங்கதியில் –
‘பினராயி மருமகன்’ என்பது மட்டும் பூதாகாரப்படுத்தப்பட்டு
ஊதிப் பெருக்கப்பட்ட விஷயம்.
அவர் – மொஹம்மத் ரியாஸ் – புதிதாக எம்எல்ஏ ஆனவர்
என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் அவர் இடம் என்பது அது மட்டுமல்ல.
பள்ளி மாணவனாயிருக்கும்போதே – கேரளத்தின் வலிமையான மார்க்சிஸ்ட் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கத்தில் (SFI) உறுப்பினராகத் தொடர்ந்து – கோழிக்கோடு சட்டக்கல்லூரி மாணவராயிருந்து வழக்கறிஞர் பட்டம் பெறும்வரை அதில் இயங்கியவர்.

பிறகு அக்கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் (DYFI) செயலாற்றி அதன் அகில இந்தியத் தலைவராக உயர்ந்தவர். கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுவில் அங்கம் வகித்துவருவது வரை இவருக்கான கட்சி வரலாறு இருக்கிறது.
ரியாஸ் பினராயின் மருமகனானது போன வருஷந்தான்.
எனவே – மருமகனுக்குப் பதவி கொடுத்துவிட்டார் என்பது சத்தியமான அவதூறு.

ரெண்டாவது சங்கதி.
சென்ற அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக இருந்த கேகே.ஷைலஜா இயற்பியல் படித்து பட்டம் பெற்று,
இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
பின்னர் அரசியல் களம் கண்டவர்.

2016இல் அவருக்கு சுகாதாரத் துறை வழங்கப்பட்டபோது ஷைலஜா டீச்சர் சொன்னாராம் : “ரொம்ப சிரமமான துறை. கையாள்வதில் சிக்கல் ஏற்படலாம். கொஞ்சம் எளிதான
வேறு துறை தரக்கூடாதா?”

ஆனால் கட்சி சுகாதாரத்தை அவரை நம்பி ஒப்படைத்தது.
அவர் புரிந்ததோ அளப்பரிய சாதனை. கொரோனாக் காலத்தில் இந்தியாவின் சிறந்த சுகாதார அமைச்சராக மிளிர்ந்து
உலக அளவில் பேசப்பட்டது அவரது செயல்பாடு.

ஆனால் – இம்முறை மார்க்சிஸ்ட் கட்சி வென்றபோது, ஷைலஜாவின் பெயர் அமைச்சரவைப் பட்டியலிலேயே இல்லை.
“என்னால் இயலுமா என்று அவர் ஐயுற்ற காலத்திலேயே அவருக்கு சுகாதாரத்துறை கொடுத்த கட்சி, இப்போது அவர் அந்தத் துறையின் ஒப்பற்ற சாதனை அமைச்சர் என்று நிறுவிக்காட்டிய பிறகு அவரைப் புறந்தள்ளியதில் என்ன ஞாயமிருக்கிறது?” என்று கேட்பவர், மார்க்சிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக்குழு உறுப்பினரும், கண்ணூர் மாவட்டச்செயலாளருமான எம்.வி.ஜெயராஜன் மட்டுமல்ல, என்போன்ற பலருந்தான்.

பல்லாண்டுகள் முன்னர், மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட கேஆர்.கௌரி அம்மாளின் வரலாறை கேரளியர் பலரும் தூசிதட்டியெழுப்பி, சைலஜாவோடு ஒப்பிட்டுக்கொண்டிருக்கிற வேளையில்….

நேற்று நான் செவியுற்ற நேற்றைய செவ்வியில்,
முதல்வர் பினராயி விஜயன் இப்படி உரைத்தார் :
“ஷைலஜா மட்டுமல்ல, தத்தம் துறையில் சிறப்புடன் பணியாற்றிய பல அமைச்சர்கள் கடந்த அமைச்சரவையில் இருந்தார்கள். ஆனால், முழுக்க முழுக்க புதியோரை அமர்த்துவது என்று கட்சி முடிவெடுத்தபிற்பாடு, ஷைலஜா ஒருத்தருக்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பது எப்படி சரியாகும்? சரி, நான் மட்டும் மீண்டும் முதல்வராவது சரியா என்கிறார்கள். ஒரு சாதாரண மனிதனுக்கும் எழக்கூடிய கேள்விதான் இது. ஆனால், நான் முதல்வர் பொறுப்பை ஏற்கவேண்டுமென்று கட்சி முடிவு செய்தபிறகு, நான் என்ன செய்யமுடியும், சொல்லுங்கள்?”

அலைகள் இன்னமும் ஓய்ந்தபாடில்லை.
அவை – ஷைலஜா டீச்சர் செய்த அளப்பரிய செயல்பாடுகளின்
நற்சான்றிதழ்களைத் திரும்பத்திரும்பப் புரட்டிக் காட்டுகின்றன .
மக்களின் விருப்பை மடங்கள் புறம் தள்ளலாம்.
மார்க்சியர்கள் தள்ளலாமா என்பதே பலரின் கேள்வி.
சரி, வாருங்கள், அவர்கள் சொல்வதற்குள் நாம்

நம் வேலையைப் பார்க்கப் போவோம்.