பெரியார் கண்ட கைம்பெண் கமலா அம்மா இற்கு அஞ்சலி

1960 களில் பத்து ஆயிரம் ரூபாய் சீதனம் என்பது மிகப் பெரிய தொகை. தனது ஏக புத்திரிக்கு பெற்றோர், சகோதரர் மூவரும் அள்ளிக் கொடுத்த தொகை அதிகம்தான். அதுவே அம்மாவின் அடையாளமாக மாறி நிற்பதை அம்மாவை… கமலா அம்மாவை.. கல்வியங்காடு விளையாட்டு மைத்தானப் பகுதியில் ‘பத்தாயிரம்” என்றால் தான் தெரியும் இன்று வரை.

பொது வாழ்கையில் தலைமறைவிற்கான இடங்களைத் தேடிய போது பல யாழ்ப்பாணத்து, ஏனைய மாவட்ட இளைஞர்களும் இராஜவீதியில் அமைந்த தோட்டப்பகுதிகளை தமது இரவு ஒளிவிடமாகவும் வாழ்விடமாகவும் மாற்றியவர்களின் நானும் ஒருவன். அதில் கிடைத்த அறிமுகம் அவரின் இன்னொரு பிள்ளையாக நானும் இணைந்த உறவு.

1980 களில் நெற்றியில் பெரிய வட்ட கும்குமம் பொட்டு…. அழகான வதனத்தை மேலும் மெருகூட்டிய தோற்றம்…. ஐயர் அம்மாவா…? என்று எண்ணத் தோன்றும் மாநிறம், நல்ல கலர் புடவை, எந்த நேரமும் சிரித்த முகம், வாழ்வை நான் வெல்லுவேன் என்ற உறுதிப்பாடு இவை அவரிடம் நான் கண்ட முதல் தோற்றம்.

நீண்ட நாட்களாகவே அவர் தன் வாழ்க்கைத் துணைவரை தனது 32 வயதில் இழந்துவிட்டு 50 வயது வரை தனது வாழ்வை வெற்றிகரமாக நம்பிக்கையுடன் கடந்து வந்து கொண்டிருக்கும் மனுஷி என்று எனக்கு தெரியாது.

அவாவும் தனது மரணம் வரையும் இந்த தனித்த வாழ்வை ஒரு இழப்பாக.. எல்லாம் இழந்து விட்டோம் இனி எனக்கு யார் துணை என்று புலம்பியதோ, சோர்ந்திருப்பதையோ, நம்பிக்கையீனங்களையோ வெளிப்படுத்தியதோ இல்லை. பெண்மையிற்குள் ஒரு வைராக்கியம் நிறைந்த குடும்பத் தலைவனையும், தலைவியையும் தனக்குள் கொண்டிருந்த நான் கண்ட சில பெண்களில்… தாய்மைகளில் இவரும் ஒருவர்.

அவ்வளவு வைராக்கியம். அவ்வளவு தன்னம்பிக்கை. சமூகம் கணவனை இழந்தவள் பொட்டு வைக்கலாமா…? நிறப் புடவை கட்டலாமா…? பூ வைக்கலாமா….? வேறு ஆண்களுடன் பேசலாமா…? என்ற தடைகளைப் போட்ட காலத்தில் பாடசாலைக்கு அந்த 32 வயதில் சென்று பரீட்சை எழுதி வெற்றிகளை பெற்றவர்.

அதுவும் எண் கணிதத்தில் சித்தியடைந்தால்தான் தனது மூன்று சிறு குழந்தைகளையும் காப்பாற்றி அவர்களுக்கான வாழ்வை சிறந்ததாக உருவாக்க முடியும் என்ற வைராக்கியம் உடைய பெண்ணாக தன்னை இழப்புகளை அடுத்து சிறிய கால அவகாசத்தில் உருவாக்கிக் கொண்ட பெண்மணி இவர்.

அன்று ஆரம்பமானது ஈழத்தில், ஒரு தமிழ்நாட்டுப் ஈ.வே.ரா. பெரியார் எதிர்பார்த்த கைபெண்ணின் வாழ்வு. இவர் பெரியாரின் கருத்துரைகளை படித்திருப்பாரோ தெரியாது..? ஆனால் விதவையான ஒரு பெண் சமூகத்தில் எவ்வாறு வாழ அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை இவர் தானாகவே வரிந்து கட்டிக் கொண்டார்.

இதற்கு வெள்ளைப் புடவை, பொட்டற்ற நெற்றி, பூ இல்லா கூந்தல் என்று எவ்வாவற்றையும் மறுத்தார். சக மனிதர்களுடன் ஆண்கள், பெண்கள் வேறுபாடின்றி பழகினார். தன்னை ஒரு செழுமையடையாத சமூகத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடிந்தளவில் கணவருடன் வாழ்ந்து வருவதாக காட்டுவதற்காக கணவரின் இழப்பை வெளியில் தெரிவதை தவிர்த்து வந்தார்.

இதற்கு 1960 களின் நெற்றிப் பொட்டும், கலர் புடவையும், கூந்தலில் பூவும் நிறையவே உதவின. தான் வேலை செய்த யாழ் கச்சேரியில் இருந்து விடிவிக்கும் வரை யாருக்கும் தெரியாது இவர் கைம்பெண் என்று. இதனை அவர் சில தினங்களுக்கு முன்பு எம்மை விட்டுப் பிரியும் வரை அவர் மாற்றிக் கொள்வில்லை.

என் திருமணத்தில் இவரைப் போலவே எனது வாழ்கைத் துணைவியாரின் அம்மா கைம்பெணாக மணவறையின் முன் வந்து உட்காருவதற்கு ‘…தான் சுமங்கலி அல்ல…” என்று எங்கேயோ தூரத்தில் ஓரமாக ஒழித்து நின்ற போது…. திருமணத்தை நடத்தியவர் முன்னிலையில் முன்வரிசையில் தானாகவே இருந்தவர் இந்த அம்மாதான்.

எம் வாழ்க்கைத் துணையின் அம்மாவை அருகில் அழைக்க நான் திருமண நிகழ்வைத் தொடரமாட்டேன் என்று மண மேடையில் சபதம் எடுக்க இறுதியில் அவரும் எமக்கு அருகில் வந்த எமக்கு முன்பாக உட்கார்ந்தது வேறுவிடயம். அப்படி சுமங்கலியாக வாழ்ந்த விதவை பெண்தான் என் அம்மா கமலா அம்மா.

இப்படியான பெண்கள் சிலரே எம் சமூகத்தில் அந்த நாட்களில் வாழ்ந்திருக்கின்றார். பலருக்கு இதே மாதிரியான விருப்பங்கள் உள்ளுக்குள் இருந்தாலும் அதனை செயற்படுத்தும் தைரியம் நெளிவு சுழிவுகள் அவர்களிடம் அன்று பெரும்பாலும் இருக்கவில்லை. சமூகத்தின் அடக்குமுறைகள் அப்படி.

சமூகம் அவ்வாறான ஒரு அடிமை விலங்கை இந்த கைபெண்களுக்கு விதித்திருந்தது. இந்த விலங்கை உடைத்த கமலா அம்மாவை நான் புதுமைப் பெண்ணாக… முன்மாதிரியான தைரியமான பெண்ணாகவே பார்க்கின்றேன். இன்று அவரின் இழப்பு பேசப்பட வேண்டியதாகின்றது. அவாவின் 87 வயது வாழ்விழப்ப இன்னமும் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற ஏக்கத்திற்கான நியாயங்களை கற்பித்த வண்ணமே உள்ளன.

தன் வீட்டிற்கு அருகால் போன பொது வாழ்வில் ஈடுபட்ட சகலரையும் அழைத்து தான் வளர்த்த நாட்டுக் கோழியின் முட்டையை பாதுகாத்து வைத்து முட்டை அப்பமும், முட்டைத் தோசையும் கொடுப்பதில் இருந்த ஆனந்தம் தன் மகன்மார்கள் 1980 ல் புலம் பெயர் தேசங்களுக்கு சென்ற பின்பு பேருதவிகள் மகன்மார்களிடம் இருந்து பெறமுடியாத நிலையிலும் தன் ஒரு மகளுடன் இணைந்து செயற்பட்ட செயற்பாடுகள் அளப்பரியவை.

‘….அண்ணா எனக்கு கூட முட்டை அப்பம் இல்லை எல்லாவற்றையும் ஒழித்து வைத்து உங்களுக்குதான் தருவா…” என்று செல்லமாக எங்களிடம் கோபப்படும் மகளையும் தன்னைப் போலவே வளர்த்து தனக்கு முதலாகவே சில மாதங்களின் முன்பு காலனிடம் கொடுத்து விட்டு வருந்தியதில் சற்று வேளைக்கே தனது மகள் சென்ற வழியில் சென்ற அந்த நல்ல உள்ளம் இன்னும் எம்மோடு வாழ்ந்திருக்க வேணடும். இந்த ஏக்கம் எம்மைப் போன்றவர்களிடம் ஏற்படுவதில் வியப்பேதும் இல்லை.

கணவனை இழந்து பொருளாதாரத்திற்கு கஷ்டப்பட்ட ஆரம்ப நாட்களில் தனது தோட்டத்தில் ‘இலகு” பயிராக கீரையை விதைத்து அதனை புடுங்கி கடகத்தில் வைத்து சுமந்து சந்தையில் விற்கும் வாழ்க்கையை ஓட்ட தொடங்கிய அம்மா… பகுதி நேர கச்சேரி வேலையுடன் இந்த சுமையை.. கீரைச் சுமையை நான் அறிந்த வரை நான் புலம்பெயர் தேசம் வரும்வரை அவர் இறக்கவே இல்லை.

இப் போதும் மகளைத் தேடி கனடா வராவிட்டால் இறப்பதற்கு முதல் தினமும் இந்த கீரைச் சுமை கல்வியங்காடு சந்தைக்கோ, திருநெல்வேலி சந்தைக்கோ சுமையாக கொண்டு செல்லப்பட்டிருக்கும் என்ற சுய சம்பாத்தியத்தை தன் இயலுமையிற்குள் செய்து வாழ்ந்த பெண் மகள் இவர்.

கனடாவின் இடம்பெயர்விற்கு பின்னர் தனக்கு சரளமாக ஊரிலேயே வந்த ஆங்கில் மொழியை சிறுவர்களுக்கு தனது பேரப்பிள்ளைகளுடன் சேர்த்து வாழும் சூழலில் கற்பித்து நல் ஆசிரியையும் இவர்.

தலைமுறை தாண்டியும் பேரப்பிள்ளைகளுடன் நல் உறவில், அரவணைவில், பாதுகாத்துக் கொள்ளல் என்ற எல்லாப் பன்முகத் தன்மையிலும் இந்த அம்மம்மா தனது பேரப்பிள்ளைகளால் போற்றப்பட்டார்… அன்பு செலுத்தப்பட்டார்… ஆராதிக்கப்பட்டார்…. என்பது அவரின் 32 வயதில் தனது வாழ்க்கைத் துணையை இழந்தவுடன் ‘எல்லாம் போய்விட்டது’ என்று சோராமல் எடுத்து வைத்த அடுத்த அடியே காரணமாயின.

என் உடல் ஒடும் இரத்தத்தில் அம்மாவின் முட்டைத் தோசையும், முட்டை அப்பம், ஆட்டுப்பால் தேத்தண்ணியும் இதனுடன் கலந்த பாசப்பிணப்பும் கலந்திருக்கின்றன.

எதிரியிடம் இருந்து எம்மை பாதுகாக்க மகளுக்கு கல்யாணத்திற்கு என ‘கீரை” விற்று சேகரித்து வைத்த பணத்தை எந்த உத்தரவாதமும் இல்லாமலே தானாக எடுத்துத் தந்த உதவிகளும் நான்…. நாம் வாழ்வதற்கான உறுதிபாட்டை ஏற்படுத்தியிருந்தது. இது நடைபெறாவிட்டால் எனக்கான இரங்கல் உரையை பல வேளைகளில் 1986 களிலேயே யாரோ எழுதித்தான் இருக்க வேண்டும்.

பிரதி உபகாரம் பாராது செய்யும் உதவிகளாக விரிந்த இந்த அம்மாவின் மரணம் நினைவுகளால் போற்றப்படக் கூடிய ஒரு தாயின் மரணம்தான். ஈழ விடுதலைப் போராட்டத்தின் வரலாறும் இந்த அம்மாவின் வரலாற்றை தவிர்த்து எழுதவும் முடியாது. ஆனால் இவர் ‘கிழக்கு பூபதி” போல் பேரெடுத்த பெருமகள் அல்ல.

மாறாக பெரியார் காண நினத்த சுய மரியாதை வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய கமலா அம்மா. கமலா அம்மாவிற்கு எமது ஆழ்ந்த அஞ்சலி மரியாதைகள்.

தனது கணவனை இழந்த ஆரம்ப நாட்களில் கோவில் திருவிழாவறிற்கு தனது மூன்று பிஞ்சுக் குழந்தைகளையும் அழைத்துச் சென்று காலாற அமரும் போது கொறிப்பதற்காக வாங்கிய கச்சான கடலை ஐ பகிரும் போது மூன்ற குழந்தைகளுக்கும் போதுமானதாக இருப்பதில்லை அது ஒரு ‘வறுமையின் நிறம் சிவப்பு”.

தற்போது போதுமானவளவு இவை கிடைத்தாலும் ‘…கடலையை கொறிக்க பல்லு இடம் கொடுக்கவில்லை…’ என்ற ‘பல் போனால் சொல் பொய்விடும்’ என்பதை தற்போதெல்லாம் எடுத்தியம்பி நிற்கும் தத்துவங்கள் என் காதில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கும்.

வாழ்ந்து வாழ்வை நிறுத்திக் கொண்ட வாழ்வு பல கைபெண்களுக்கு உதாரணமாக நம்பிக்கைகளை கொடுக்கும் ஈ.வே.ரா. பெரியாரின் சீர்திருத்தங்களின் ஒரு அங்கமே. அம்மாவிற்கு எனது குடும்பத்தின் அஞ்சலிகள் மரியாதைகள் வணக்கங்கள்.