பெருந்தொற்றுக்குப் பிறகான உலகம் எப்படி இருக்கும்?

அமெரிக்க அதிபரைப் பொறுத்தவரை அவர் அரங்கேற்றும் தீமைகளுக்கு எல்லைகளே இல்லை. அவர் மிக அமைதியாக, சூழ்நிலைகளை மேலும் மோசமாக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். கரோனா பெருந்தொற்றுச் சூழலின் பின்னணியை எடுத்துக்கொள்வோம். இதன் நடுவிலேயே சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் ஆலைகள் தொடர்பிலான விதிமுறைகளை ஒவ்வொன்றாகத் தளர்த்திவருகிறார். சுவாச மண்டலம் தொடர்பிலான பிரச்சினைகளை ஏற்படுத்தும் கரோனா பெருந்தொற்று ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில், வளிமண்டலத்தை மேலும் மாசுபடுத்தினால் என்ன ஆகும்? நீங்கள் மக்களைக் கொலை செய்கிறீர்கள். மாசுபடுத்தும் ஆலைகளுக்கு அருகில் வாழும் மக்களை நீங்கள் கொலை செய்கிறீர்கள். அவர்கள் அந்த இடத்துக்கு அப்பால் தொலைவில் வாழ்வதற்கான வசதி இல்லாதவர்கள். அவர்கள் எல்லாம் கறுப்பின மக்களும் ஸ்பானிய மக்களும்.

ப்ளாய்டின் கொலை ஒருபுறம் என்றால், சூழல் மாசுபாட்டால் கொல்லப்படும் மக்கள் இன்னொரு புறம். இறைச்சியை பேக்கிங் செய்து அனுப்பும் தொழிலகங்களுக்குத் திரும்பத் தொழிலாளர்களை வேலைக்குப் போக அதிபர் உத்தரவிட்டதும் அதைப் போன்றதுதான். ஏனெனில், பணக்கார அமெரிக்கர்களுக்கு நேர்த்தியாக வெட்டிய இறைச்சிகள் சாப்பிடத் தேவை. அந்தத் தொழிலாளர்கள் யார்? கறுப்பர்கள், ஸ்பானியர்கள். அவர்கள் மிகச் சங்கடமான சூழல்களில் பணியாற்றுபவர்கள். புதிய தாராளவாதச் சூழலில் காணாமல்போகத் தொடங்கிய தொழிலாளர்கள் உரிமைகள் இப்போது கிட்டத்தட்ட மறைந்தேவிட்டன.

எல்லையில் மெக்சிகோவில் உள்ள தொழிற்சாலைகளில்தான் அமெரிக்க கார்களுக்கான தோல் இருக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. அங்குள்ள நிலைமைகள் மோசமாக உள்ளதென்று அரசு எச்சரித்தும் ட்ரம்ப் அவர்களை வேலைக்குப் போகக் கட்டாயப்படுத்துகிறார். குடியரசுக் கட்சியினர் சட்டத் திருத்தம் வழியாக, தொழிலாளர்களைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் கட்டாயப்படுத்தி பணிக்கு வரச் செய்வதற்கான வழிமுறைகளை முயன்றுவருகின்றனர். இதனால் பாதிக்கப்படப் போவதும்கூட கறுப்பர்களும் ஸ்பானியர்களும்தான். இவையெல்லாம் பொதுமக்களின் பார்வைக்கு முன்னர் அப்பட்டமாக நடக்கிறது.

அமெரிக்க அரசு அறிவித்திருக்கும் ஊக்கநிதித் திட்டத்தால் சிலர் பயனடைகின்றனர் என்பது உண்மையே. ஆனால், பணம் அன்றாடக் கூலியை நம்பியிருக்கும் மக்களின் சட்டைப்பைகளுக்கு நேரடியாகச் செல்லவில்லை. ஊக்கத்தொகையில் பெரும்பகுதி வங்கிகளுக்குச் செல்கிறது. வங்கிகளே அவற்றை நிர்வகிக்கின்றன. அந்தப் பணம் செல்லும் வழிகளைக் கண்காணிப்பதற்கு நேர்மையான மேற்பார்வையாளர் தேவை. அமெரிக்கா போன்ற ஆழமாக ஊழல் வேரோடிய சமூகத்தில் செய்ய வேண்டிய வேலைகள் அதிகம். ஏற்கெனவே மோசமான ஊழலில் இருந்த சமூகம் இது. இப்போது ட்ரம்பின் தாக்குதல் சமூகத்தை மேலும் சேதாரப்படுத்தி உலகின் கேலிப்பொருளாக அமெரிக்காவை மாற்றியுள்ளது.

உலக சுகாதார அமைப்பை ட்ரம்ப் கொலை செய்வதற்குத்தானே முயன்றார்? உலக சுகாதார அமைப்பிலிருந்து தன் நாட்டை விலக்கிக்கொண்டு, நிதி அளிப்பதையும் நிறுத்தினார். அந்த அமைப்பு செயல்படும் நிதியில் 40% பங்கு அமெரிக்கா அளிப்பது. கரோனா வைரஸ் போன்ற பெருந்தொற்றுக் காலங்களில் ஏழை நாடுகளின் மக்கள் உயிரைக் காக்கும் அமைப்பு அது. உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து செயல்படாமல் தடுத்தால் அமெரிக்காவில் உள்ள சாதாரண மக்கள் பெரும் எண்ணிக்கையில் இறந்துபோவார்கள். அது அவரது தேர்தல் வெற்றிவாய்ப்பை அதிகரிக்கும். இது பற்றி யாராவது, ஏதாவது பேசினார்களா?

ஏற்கெனவே அதிகாரத்தில் இருந்த, புதிய தாராளவாதப் பேரழிவை உருவாக்கிய, ட்ரம்பின் தீங்கான கொள்கைகளால் அபிவிருத்தியடைந்த சக்திகள் அனைத்தும் ஒரு விஷயத்துக்காக ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருக்கின்றனர். பெருந்தொற்றுக்குப் பிறகு மீளும் உலகம் மேலும் கொடுங்கோன்மையுடனும், மேலும் கட்டுப்பாடுகளும் கண்காணிப்புகளும் சூழ்ந்ததாகவும் ஆக்கும் பணிதான் அது. தொழிலாளர் சட்டங்கள், சுற்றுச்சூழல் விதிமுறைகள் ஆகியவற்றைத் தளர்த்துவது அதன் ஒருபகுதி தான். அதற்கு எதிரான சக்திகள் உலகம் முழுவதும் உள்ளன. இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் அமெரிக்காவின் சான்டர்ஸ் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ‘ப்ராக்ரசிவ் மூவ்மென்ட்’, ஐரோப்பாவின் ‘டிஐஇஎம்25’ இயக்கம் போன்றவை உலகம் எங்கிலும் உள்ள முற்போக்குக் குரல்களை ஒருங்கிணைக்கின்றன. இந்தியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஐஸ்லாந்து எனக் குரல்கள் எழுகின்றன.

பெருந்தொற்று சூழ்நிலையிலிருந்து ஒரு பெரும் விலைகொடுத்து நாம் குணமாகி வெளியே வரப்போகிறோம். ஆனால், துருவப் பகுதிகளில் உருகும் பனித்தகடுகளை நாம் மீட்கவே போவதில்லை. புவி வெப்பமாதல் ஏற்படுத்தியிருக்கும் மோசமான விளைவுகளிலிருந்து நாம் திரும்பிச் செல்ல முடியாது. தெற்காசியா வாழ முடியாத பகுதியாக மாறிவிடும். அடுத்த பல தசாப்தங்களிலும் அந்த நிலையே தொடரும். இந்தியா உள்ளிட்ட சில நாடுகள், இந்தச் சூழ்நிலை மேலும் மோசமாகாமல் தடுக்க தன்னால் முடிந்த பணிகளைச் செய்கின்றன.

ஆனால், உலகின் மிகப் பெரிய சக்தியைக் கொண்ட நாடான அமெரிக்காவோ, பாதாளத்தை நோக்கிப் போட்டி போட்டுக்கொண்டு ஓடுகிறது. இந்த மாதிரியான சூழ்நிலையில் ப்ளாய்ட் கொல்லப்பட்டதற்கு எதிர்வினையாக நாடெங்கும் எழுந்த போராட்டத்தை நல்ல அறிகுறியாகச் சொல்வேன். 1992-ல் ரோட்னி கிங் கொல்லப்பட்ட சூழ்நிலையை ஒப்பிட்டுப் பார்க்கிறேன். அமெரிக்க ஜனத்தொகையில் ஒரு பகுதி மேலதிகமாக நாகரிகத்தையும் விழிப்புணர்வையும் புரிதலையும் அடைந்துள்ளது. இன்னும் மேம்பட வேண்டும். இந்த மாற்றம் நம்பிக்கை அளிக்கிறது. ஆனால், அடிப்படைப் புரிதலில் மாற்றம் வேண்டும். சட்டங்களால் அதைச் செய்ய முடியாது. அப்படியான அடிப்படைப் புரிதலில் மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

(கேரள அரசு ஒருங்கிணைத்த ‘கேரளா டயலாக்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமெரிக்க அறிஞர் நோம் சோம்ஸ்கி உரையின் சுருக்கப்பட்ட வடிவம் இது.)

தமிழில்: ஷங்கர்