மே 26, 2020: மீண்டும் ஒரு கறுப்பின அடிமையை கொல்லுதல்…..

அதுவும் பொலிஸ்காரானின் பொலிஸ்காரரிடம் இது சற்று தூக்கலாகவே இருக்கின்றது இந்ப பாசிசம். இது அமெரிக்காவை தாண்டி ஏனைய பல நாடுகளிலும் உள்ளதை கனடாவும் ஒப்புக் கொண்டிருக்கின்றது.

பல் தேசிய நாடுகளாக தம்மை அறிவித்துக் கொண்ட நாடுகளிலும் பல் தேசியம் தமக்கு பொருளாதாரத்தை கட்டியமைக்க மட்டும் தேவைப்படும் சொற்பதம் என்ற வகையிற்குள் ஏனைய குடியேற்றவாசிகளை கூலி அடிமைகளாக பார்க்கும் மேலாதிக்க சிந்தனையின் வெளிப்பாடுகள் இவை.

நான் இங்கு பேசிவிளைவது மே 26, 2020 ம் நாள் 4 பொலிசாரால் அமெரிக்காவின் மினியாபொலிஸ் மாநிலத்தில் கைது செய்யப்பட்டு நிலத்தில் வீழ்த்தி கழுத்தை பொலிஸ் தனது முழங்காலால் நெரித்து கொலை செய்யும் போது இதற்கு பாதுகாப்பாக நின்ற மற்றைய 3 பொலிஸ்காரர்களையும் பற்றியது.

‘என்னால் மூச்சு விட முடியவில்லை…” என்று ஜோர்ஜ் புளோயிட் (George Floyd ) இரத்தம் வடிய கதிய போது தொண்டைக் குழி இறுக்கத்தை எற்படுத்தி முழங்கால் மிதியை தளர்த்தாத அந்த கொடூர செயற்பாடுகள் பற்றியே பேச விளைகின்றேன். ஒடுக்கு முறை எவ்வடிவத்திலும் அந்நாட்டிலும் எவ் இனத்தின் மீதும் நடைபெறும்போது மனிதாபிமானத்தின் பெயரால் குரல் கொடுக்கின்றேன்.

இந்த தெரு நடு வீதி பகிரங்க கொலையை செய்வதற்கும் இதற்கான தண்டனை 3ம் நிலை கொலை குற்றச்சாட்டு வரைக்கும் அல்லது எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் பொலிசார் தமது ‘கடமை”யைச் செய்தனர் என்று போகலாம், அல்லது பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படலாம் என்ற நம்பிக்கைகளே தொண்டைக் குழியை நெரித்த பொலிஸ்காரருக்கும் அவருக்கு ஆதரவாக நின்ற ஏனைய பொலிஸ்காரகளுக்கும் இருந்ததே காரணமாக அமைகின்றது.

இதற்கான வரலாற்றுப் பின்புலத்தை பார்ப்போம்……
காலனி ஆதிக்கம் உலகம் எங்கும் வியாபித்திருந்த 2ம் உலக மகா யுத்தம், அதற்கு முந்தைய கால கட்டங்களில் தமது காலனி நாடுகளில் வளங்களை சுரண்டுதல் என்பதே பிரதான செயற்பாடுகளாக இருந்தன.

ஏனைய நாடுகளின் வளங்களை சுரண்டுவதற்கு முதலில் அந்தந்த நாடுகளுக்கு போச் சேர வேண்டிய தேவைகள் இந்த ஆக்கிரமிப்பு தேசங்களுக்கு ஏற்பட்டன. இதற்கு கடல் மார்க்கப் பயணங்களை ஏற்படுத்தி அந்தந்த நாடுகளுக்கு வியாபாரம் என்ற போர்வையில் வந்திறங்கினர் ஆக்கரம்பிப்பாளர்கள்.

உள்ளுர் மக்களின் வெகுளித் தன்மையை தமக்கு சாதமாக்கி அவர்கள் காணாத புசித்திராத உணவுப் பொருட்களை அவர்களுக்கு ‘பரிசு”ப் பொருட்களாக கொடுத்து சமான்ய மக்களின் மனங்களில் இடம் பிடித்த அதே வேளை தமக்கு விசுவாசமாக செயற்படக் கூடியவர்களையும் உள்ளுரில் கண்டு பிடித்தனர்.

இவர்கள் மூலம் கூலிகளாக உள்ளுரில் வேலை செய்வதற்கு என மக்களின் வறுமைகளை வசதியின்மைகளை தமக்கு சாதகமாக்கி உள்வாங்கியும் கொண்டனர். முதலில் கூலிகளாக அமர்த்தப்பட்டவர்கள் நாளடைவில் அடிமைகள் போல் நடாத்தப்பட்டனர். மேலும் இந்த ஆக்கிரமிப்பாளர்கள் தமது ஏனைய காலனி ஆதிக்க நாடுகளுக்கு இந்த அடிமைகளை கூலிகளாகவும் அடிமைகளாகவும் கப்பலில் அடைத்து கொண்டு சென்று இறக்கினர்.

இந்த வரலாறே ஆபிரிக்க கறுப்பின மக்கள் அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டதன் பின்னணி. ஆரம்பத்தில் நாட்டை கட்டியமைக்க இயந்திரங்கள் குறைவாக இருந்த காலங்களில் இந்த கறுப்பின மக்கள் மிருங்கங்கள் போல் ஓய்வு ஒழிச்சல் இன்று வேலை வாங்கப்பட்டனர்.

கால்களை சங்கிலியால் பிணைத்து அவர்கள் தப்பி ஓட முடியாமல் தமது உரிமைகளை கேட்க முடியாமலும் அடிமைகளாக ஆனால் திறந்த வெளியில் நடக்க அனுமதிக்கப்பட்டு உருவாக்கப்பட் நாடுதான் அமெரிக்கா.

அமெரிக்காவின் ஒவ்வொரு வீதியிலும் கட்டத்திலும் தண்டவாளத்திலும் ஆற்றுப்படுகையிலும் அகழிகளிலும் இந்த கறுப்பின மக்களின் இரத்ச் சிந்தல்கள் இல்லாமல் இல்லை.

உயிரினங்களிடம் இருக்கும் இயல்பான தமது இருத்தலுக்கு உயிர் வாழ்தலுக்கான போராட்டதை அது தனது உயிரைக் கொடுத்தாகினும் செயற்பட முனையும். இந்தப் பண்பாட்டின் அடிப்படையில் ஒரு படி முன்னேற்றம் அடைந்த மனித இனம் தனது அடிப்படை உரிமைக்காக போராடவே செய்யும்… செய்திருக்கின்றது. அதுதான் அமெரிக்க வரலாற்றிலும் நடைபெற்றது.

மிக மோசமான அடக்கு முறையின் வடிவமான காலை எட்ட வைத்து நடக்க முடியாத சங்கிலிப் பிணைப்பு அவர்கள் மத்தியில் சங்கிலியால் பிணைந்திருந்த மனிதன் எவ்வாறு நடப்பான் என்ற வடிவத்திற்கு காலப் போக்கில் பழக்கமாக மாறுவிடும் என்ற பழக வழக்க பண்பாட்டிற்கு அமைய கறுப்பின மக்கள் தமது நடையை இயல்பாகவே அவ்வாறே மாற்றிக் கொண்டனர்.

அதனை தற்போது தமது அடையயாளமும் ஆக்கிக் கொண்டனர் என்பது அந்த கறுப்பின சமூகம் எந்தளவிற்கு அடிமைகளாக நடாத்தப்பட்டனர் என்பதற்கான அடையாளச் சின்னம் ஆகும்.

அதிக அடக்கு முறைக்குள்ளாகும் மனித சமூகம் மிக மூர்க்கமாக தனக்கான அடிமைச் சங்கிலியை உடைக்கப் போரிடும் என்பதன் வெளிப்பாடே இயல்பில் கறுப்பர்கள் ‘வன்முறையாளர்கள்” என்று அவர்களின் போராட்ட குணாம்சம் பிரச்சாரப்படுத்தப்பட்டு இன்றை நவீன உலகில் கறுப்பர்கள் என்றால் வன்முறையாளர்கள் வெள்ளையர் எனறார் சாந்தமானவர்கள் என்ற முத்திரையை வரலாறு பதிய முற்பட்டிருக்கின்றது.

இதனை புரட்டிப் போட்ட சம்பவங்கள் நாம் வாழும் காலத்தில் சத்தியங்களாக நிற்கின்றன தென் ஆபிரிக்காவில். இங்கு வெள்ளை இன போத்தாவின் ஆட்சி அடக்கு முறையும் நெல்சன் மண்டலாவின் ஆபிரிக்க தேசிய காங்கிரசின் போராட்டம். சாத்வீக முறையில் சிறை வாழ்கையில் பல தசாப்பங்கள் இருந்து போராடி உரிமையை வென்றெடுத்த வன்முறையற்ற போராட்ட வடிவம் ஆகும்.

ஆனாலும் உலக ஒழுங்கில் முதலில் நடைபெற்ற அடிமை விலங்கை உடைக்க நடைபெற்ற கறுப்பின மக்களின் போராட்டங்கள் வன்முறை சார்ந்ததாக இருந்த படியால் இதில் ஈடுபட்ட கறுப்பின மக்கள் வன்முறையாளர்கள் என்ற பொது போக்கான அடையாளத்தை இன்றுவரை அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகள் நிலை நிறுத்தியே வருகின்றன தம்மை நியாயப்படுத்திக் கொள்ள.

இப்படியான ஒர் பின்புலத்தின் தொடர்சியாகத்தான் அண்மைய அமெரிக்க மாநிலம் மினசோட்டாவில் கறுப்பின இளைஞனை தரையில் வீழ்த்தி அவர் மேல் ஏறி இருந்தபடி முழங்காலால்; தொண்டைக் குழியை நெரித்படி மக்கள் முன்னிலையில் நடைபெற்ற கொலைச் சம்பவத்தை பார்க்க வேண்டியிருக்கின்றது.

இதன் போது ‘தன்னால் மூச்சு விட முடியவில்லை” என்ற நிலையில் வாய் மூக்கு வழியே இரத்தம் வழிந்த நிலையில் சுற்றியிருந்து மக்கள் கூட்டம் அவரை விடுங்கள் சாகப் போகின்றார் என்று குரலும் எழுப்பி ஒளிபதிவை அடையாளச் சாட்சிக்காக எடுத்த போது விடாது காலால் மிதித்து கொலை செய்த சம்பவத்திற்கு நீதி மன்றம் ஏது தீர்பு வழங்குவது நாமே எமக்கான தீர்பை பெற்றுக் கொள்கின்றோம் என்று கறுப்பின மக்களும் அவர்களுடன் இணைந்து ஏனைய மனித நேய மக்களும் உலகெங்கும் போராடி வருகின்றனர்.

அந்த இடத்திலேயே இந்த அநியாயத்தை செய்தவர்கள் தண்டனைக்கு உள்ளாகி இருக்கப்பட வேண்டும் என்று உரிமையிற்காக குரல் கொடுக்கும் மனிதர்களின் செயற்பாட்டில் எந்த தவறும் இல்லை என்றே அறம் சார்ந்து இந்த விடயத்தை பார்பவர்கள் கூறுவது சிந்திக்க வைத்திருக்கின்றது.

சவூதி போன்ற இடங்களில் தண்டனை என்ற வடிவில் மக்கள் கூடி நிற்க உடல் உறுப்புக்களையும், தலையையும் வெட்டி தன்டனை கொடுப்பது சரிதான் என்ற அநியாயங்களை ஏற்க மறுக்கும் மனித நேய சமூகம் இந்த கழுத்து நெரித்து பகிரங்கத்தில் நடைபெற்ற கொலையை மட்டும் எவ்வாறு மன்னிப்பார்கள்.

இழப்பதற்கு ஏதும் இல்லை என்ற நிலையில் எதனையும் அது தமது உயிழராக இருந்தாலும் என்ற வரலாற்று பாரம்பரியத்தை தமது மரபணுவில் கொண்ட இந்த முன்னர் ‘ஆபிரிக்க கறுப்பின மக்கள்” என்றும் இன்று ‘ஆபிரிக்க அமெரிக்கரகள்” என்று அமெரிக்கர்காளாக மாறிய பின்பும் தமது உரிமையிற்காக வீதியில் இறங்கிப் போராடவே செய்வர்.

கொரானாவிற்கு ஊரடங்கு போட்டு நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த மறுத்த அமெரிக்க ஆளும் வர்க்கம் கறுப்பின மக்களின் இந்த கொலைக்கு எதிரான உணர்ச்சி மேலிட்டு சில இடங்களில் கட்டுப்பாட்டை மீறிய போரட்டத்தை அடக்க மட்டும் ஊரடங்கு போடுவதில தாமதம் காட்டவில்லையே.

இங்கு எந்த பொருளாதாரம் அடிபட்டுப்போகும் என்ற காரணங்களைக் காட்டி கொரனாவால் மக்கள் செத்தாலும் பரவாய் இல்லை என்று ஊரடங்கை போட மறுத்த அமெரிக்க அரசு இன்ற உரிமைக் கேட்கும் மக்களை அடக்க பொருளாதாரம் என்பதை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ஊரடங்கிற்கு வந்திருக்கின்றது என்றால் இங்கு சுரண்டும் வர்க்கம் தன்னை தக்க வைக்க உரிமைக்காக போராடும் சாதாரண மக்களின் குரல் வளையை நெரிக்க தயங்காது என்ற செய்தியை உலக மக்கள் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த மக்களின் நியாயமான போராட்டதிற்கு நாம் ஆதரவுக் கரம் கொடுத்தேயாக வேண்டும். அன்றேல் எனது குரல் வளையை இதே முழங்கால் நசுக்க முற்படும் போது குரல் கொடுக்க யாரும் இருக்கமாட்டார்கள். நாம் அனாதைப் பிணங்களாகவே வீதியில் தூக்கி எறியப்படுவோம்.

இது பற்றி மேலதி விபரங்களுக்கு இந்த இணைப்பை அழுத்தவும்: https://www.cbc.ca/…/minneapolis-george-floyd-protest-may29…