இலங்கைக்கு பின்லாந்தின் கல்விப் பாரம்பரியம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையிலான இராஜதந்திர தூதுக்குழு இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை கடந்த திங்கள், செவ்வாய் தினங்களில் பின்லாந்து வந்திருந்தது.

இவ்விஜயத்தில் இரு நாடுகளுக்கு மத்தியிலான அரசியல், பொருளாதார, இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்திக்கொள்ளவது, கல்வி, சுகாதாரம், விவசாயம், புத்தாக்கம், கழிவு மீள்சுழற்சி மற்றும் கடல் அலை மூலம் மின் சக்தி பெறுதல் போன்ற விடயங்களில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் Akila Viraj Kariyawasam உட்பட இலங்கையின் தூதுக்குழுவினர் பின்லாந்தின் கல்வித்துறையினருடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களைத் தொடர்ந்து செவ்வாயன்று இரவு எம்முடனும் கலந்துரையாடினர்.

குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த இராஜதந்திரியொருவரின் கூற்றையும், அதன் தழிழ் மொழியாக்கத்தையுமே நான் கட்டுரையின் ஆரம்பத்தில் தந்துள்ளேன்.

ஆம், இலங்கையின் கல்விக் கொள்கை வகுக்கப்பட்ட காலத்தில் இருந்தது போன்றே இதுவரையும் தொடர்கின்றது. இதில் காலத்துக்கு பொருத்தமான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக 2015 ஜனவரி 8இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் பல தடவைகளும் கூறின. பிரதமர் ரணில் விக்ரமசி;ங்க தலைமையிலான பின்லாந்து விஜயம் மற்றும் அந்நாட்டு கல்வித் துறையினருடனான கலந்துரையாடல்கள் இதனை சாத்தியப்படுத்தும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

பின்லாந்தின் கல்வித் திட்டம் மற்றும் இலங்கைக்கு ஏதுவான காரணிகள் பற்றி கலந்துரையாட முன்னர், அந்நாட்டின் அறிமுகத்தையும் பயண அனுபவத்தையும் சுருக்கமாக தருகின்றேன்.

பின்லாந்து குடியரசு சுவீடன், நோர்வே மற்றும் ரஸ்யாவை எல்லைகளாக கொண்ட வட ஐரோப்பிய நாடாகும். 2016 கணக்கெடுப்பின் படி 5.5 மில்லியன், அதாவது 55இலட்சம் சனத்தொகையை கொண்ட, நிலப்பரப்புக்கேற்ப ஐரோப்பாவின் 8ஆவது பெரிய நாடும்கூட. 88 வீதமான மக்கள் பின்னிஸ் மொழியையும், எஞ்சியோர் சுவீடிஸ், ஆங்கிலம் ஆகியனவற்றையும் பேசுகின்றனர்.

இவ்விஜயத்தில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ ஊடகக்குழுவில் இடம்பெற்றிருந்தேன். நாம் பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கியை சென்றடைந்தபோது, அந்நாட்டு பிரதமர் காரியலயம் மற்றும் வெளிவிவகார அமைச்சு சார்பாக எம்மை வரவேற்று, உபசரிக்க பிரதமர் ஊடகப் பிரிவின் மார்க்கோ ரூனாலா நியமிக்கப்பட்டிருந்தார்.
அவருடனான அறிமுகத்தைத் தொடர்ந்து, அவர் எம்மிடம் இடையிடையே பகிர்ந்துகொண்ட விடயங்கள் சுவாரஸ்யமானது.

‘இங்கு எங்களுக்கு செக்கன்களும் நிமிடங்களும் முக்கியம். நாம் உங்களைப் போன்று தினமும் சூரியனைக் காண்பவர்கள் அல்ல. சூரியனைக் கண்டு நாளாச்சு. குளிர் -20க்குச் சென்றாலும் அன்றாட வேலைகளோ, காலதாமதமோ ஏற்படாது. குளிர் கால்ததில் 1 மீட்டர் வரை பனி படரும். குளிருக்கெதிராக வருடாவருடம் போராடி வெற்றிபெறுகின்றோம்.

இது இலங்கையைப் போன்று பல ஆயிரம் வருட வரலாற்றைக்கொண்ட நாடல்ல. 100 வருட வரலாற்றைக் கொண்ட இளம் நாடு. நான் இந்தியாவில் இருந்துள்ளேன். டுக் டுக் முச்சக்கரவண்டிகள் என்றால் எனக்கு பயம். டுக் டுக் இல்லாத இலங்கை இவ்வாறே இருக்கும்’ என்று அங்குள்ள வீதியைக் காட்டினார். 1917ஆம் ஆண்டு சுவீடனிலிருந்து சுதந்திரம் பெற்ற பின்லாந்து இவ்வருடம் 100ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ளது.

பின்லாந்து பெரும் இயற்கை வளங்களைக்கொண்ட நாடல்ல. வருடத்தில் குறிப்பிட்ட சில காலமே சூரியன் உச்சம் கொடுக்கின்றது. ஒரே வகையான மரங்களே அதிகமாக உள்ளன. தளபாடம் மற்றும் பேப்பர் உட்பத்தியே முக்கியமானதாக இருந்தது. பினனர், நோக்கியா கையடக்க தொலைபேசி பின்லாந்தின் பெயரை உலகின் மூளைமுடுக்குகளுக்கும் கொண்டுசென்றது. இப்போது, காட்டூன் தயாரிப்பும், சுற்றுலாத் துறையும் பெருமளவான அந்நிய செலாவனியை ஈட்டிக்கொடுக்கின்றது.

கோடை காலங்களில் பச்சை நிறமாக உள்ள மர இலைகள், இலையுதிர் காலம் ஆரம்பிக்கும்போது, மஞ்சல், செம்மஞ்சல், சிவப்பு நிறங்களாக மாறி உதிர்ந்துபோகின்றன. பனி படர்ந்த பாதையோரங்களில் தூவியுள்ள வண்ண பூக்களும், வர்ண இலைகளும் அழகு சேர்க்கின்றன. தலைநகரிலிருந்து 10 நிமிடங்களில் அடர்ந்த இயற்கைக் காட்டுப் பகுதிகளை சென்றடையலாம். மாசடையதாக இயற்கை நகரமே ஹெல்செங்கி.

இவ்வாறிருந்த பின்லாந்து, இன்று உலகின் சிறந்த கல்வித் துறையைக் கொண்டுள்ள, புதிய கண்டுபிடிப்புகளில் மிளிர்கின்ற நாடாக மாறியது எவ்வாறு என்ற கேள்வி எழுகின்றதல்லவா?

ஆம், பின்லாந்தின் கல்விக் கொள்கையே அதற்குக் காரணம். இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் தீட்டப்பட்ட கல்விக் கொள்கையின் அறுவடையையே இன்றைய உலகம் காண்கின்றது. நாம் நினைப்பதைப் போன்று பின்லாந்து உலக மகா அதிசயங்கள் புரிந்து உலகின் சிறந்த கல்வித் தரம் பெற்ற நாடாக மாறவில்லை. தாம் உருவாக்கிக்கொண்ட கல்விக் கொள்கையை தொடர்ந்தும் கடைபிடித்ததும், ஆட்சியாளர்களும் பொதுமக்களும் இணையொத்து செயற்பட்டதே அவர்களின் வெற்றிக்கு காரணம்.

மாணவனொருவன் 7 வயதில் பாடசாலைக்கு உள்வாங்கப்படுகிறான். நாளொன்றுக்கு 4 மணி நேர கல்வி, வாரத்துக்கு 20 மணித்தியாலங்கள், 26 கற்றல் துறைகள், 7 வயதிலே மாணவர்கள் பயணிக்கவேண்டிய துறையை இணங்காணல், துறைசார் கற்ற ஆசிரியர்கள், ஒரு ஆசிரியருக்கு 20 மாணவர்கள், மாணவர்கள் மீது தனியான- விசேட கவனம், பரீட்சை முறைகளை தவிர்த்து தொடர் மதீப்பீடு செய்தல், 13 வருட கட்டாய கல்வி போன்றனவே பின்லாந்து கல்வித் துறையின் அடிப்படைகளாகும்.

பின்லாந்தின் ஆசிரியர்கள் மேலானவர்களாக மதிக்கப்படுகிறார்கள். உலக நாடுகளில் அரச நிர்வாகத்தில் வெளிவிவகார விடயம், இராஜதந்திரிகளுக்கே அதிக ஊதியம் வழங்கப்படுகின்றது. அதற்கிணையான ஊதியத்தை பின்லாந்து அரசு ஆசிரியர்களுக்கு வழங்குகின்றது. ஆசிரியர்களும் பெறும் ஊதியத்திற்கு குறைவின்றி செயற்படுகின்றனர். பின்லாந்தின் கல்வித் துறையை ஆராய்ந்த பின்னர் இலங்கையின் கல்வி அமைச்சர் சில விடயகளை பகிந்துகொண்டார்.

‘உண்மையில், இலங்கை மாணவர்களுக்கு கல்வியில் அதிக அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இன்று பரீட்சைகள் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதைக் காண்கின்றோம். இங்கு ஆசிரியர்கள் மதிக்கப்படுவதில்லை. குறைந்த ஊதியமே பெறுகின்றார்கள். ஆசிரியர்களுக்கான ஊதியங்கள் அதிகரிக்கப்படுவதோடு, அவர்கள் மதிக்கப்படும் நிலை உருவாகவேண்டும். இலங்கையின் கல்விக் கொள்கையில் மாற்றங்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளோம்.

படிப்படியான மாற்றங்கள் மேற்கொள்ளவேண்டியது காலத்தின் தேவை. பின்லாந்து 20 வருடங்களில் இலக்கை எட்டியுள்ளது. பின்லாந்தின் உயர் கல்வி அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்து, நிலைமைகளை ஆராயவுள்ளனர். நாம் இதனை அமுல்படுத்த முனையும்போது தொழிற்சங்கங்கள் போர்க்கொடி தூக்காமல் இருந்தால் போதும்’ என்றார்.
இலங்கை மாணவர்களிடம் உங்கள் எதிர்கால இலக்கு என்ன? என்று கேட்கும் போது, வைத்தியர், பொறியியலாளர், சட்டத்தரணி, ஆசிரியர், கணக்காளர் போன்ற சில பதில்களே கிடைக்கின்றன. நானும் அவ்வறே நினைத்திருந்தேன். இவற்றில் சிலதை மாத்திரமே சமூகம் மேன்மையாக கருதுகின்றது. இதற்காக, மாணவர்களையோ, சமூகத்தையோ குறைகூறுவதிலும் பயனில்லை.

பின்லாந்தில் மாணவர்கள் 7 வயது முதலே 26 துறைகளுக்காக தனித்தனியே இனங்காணப்படுகின்றனர். இங்குபோன்று, நான் ஒரு டாக்டராகவேண்டுமென்று அனைவரும் ஆசைவைப்பதில்லை. அவர்கள் 13 வருட கட்டாய கல்வியைத் தொடர்ந்து, பல்கலைக்கழகம் அல்லது தொழிற்கல்வி நிலையங்களில் இணைந்துகொள்கின்றனர். இலங்கையில் தொழிற்கல்வி நிலையங்களில் இணைந்துகொள்பவர்கள் இரண்டாம் தரமாக எடைபோடப்படுவதைக் காண்கின்றோம்.

பின்லாந்தில் தொழிற்கல்வியைத் தெரிவுசெய்பவர்கள் பட்டம்பெற்று வெளியாகும் போது, தான் சார்ந்த துறையில் தொழிற்சாலையொன்றை ஆரம்பித்து- புதிய கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டு தொழில் வழங்குநராக வெளியேறுகின்றனர். அங்கு, பல்கலைக்கழகங்களைவிட தொழிநுட்ப துறையையே மாணவர்கள் அதிகமாக தேர்ந்தெடுக்கின்றனர். அவர்களிடையே ஏற்றத்தாழ்வு காணப்படுவதில்லை.

இலங்கையின் கல்வி அமைச்சும் குறித்த 26 துறைகளை இலங்கையில் போதிக்க தேவையான முன்னெடுப்புகளை ஆரம்பித்துள்ளது. இதனையே நான், கட்டுரையின் ஆரம்பத்தில் ‘ இனிமேல் இலங்கையில் எந்த மடையனும் சித்தியடையலாம்’ என்று குறிப்பிட்டேன்.

காலம் கடந்தேனும், இலங்கையின் கல்விக் கொள்கையில் மாற்றம் வேண்டுமென்று உணர்ந்த அரசாங்கம் பொருத்தமானவர்களின் உதவியையும் வழிகாட்டலையும் நாடியிருப்பது பாராட்டத்தக்கதே.

(பின்லாந்திலிருந்து ஆதில் அலி சப்ரி)