திட்டமிட்டு நஞ்சை ஊட்டாதீர்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தி, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகவும் பாராளுமன்றத்துக்குச் செல்லும் வளாகத்திலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இவ்விரு ஆர்ப்பாட்டங்களும் தனித்தனியாக முன்னெடுக்கப்பட்டமையால், இரண்டுக்குப் பின்னாலும் அரசியல் இருக்கிறது என்பது மட்டுமே உண்மையாகும்.

மக்களின் பங்கேற்பின்றி, மக்களின் மனங்களை நெருடாத, ஆர்ப்பாட்டங்களை ஏன் செய்கின்றார்கள் என்ற கேள்விகள் எழாவிடின், அவ்வாறான ஆர்ப்பாட்டங்களின் ஊடான அழுத்தங்களும் வெற்றிகளும் குறைவானதாகவே இருக்கும்.

ஏனெனில், தங்களுடைய இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே அரசியல்வாதிகள் பலர், இவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் தலையைக் காட்டிவிடுவர். இன்னும் சிலர், மக்களோடு மக்களாக நின்று, குரல்கொடுத்துக்கொண்டே இருப்பார். இவ்விரண்டு வகையினரையும் மேற்படி இரண்டு ஆர்ப்பாட்டங்களிலும் அவதானிக்க முடிகின்றது.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற வடக்கு, கிழக்கு, மலையகம் போன்ற பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், காணாமலாக்கப்பட்டுள்ள தங்களுடைய உறவினர்களைத் தேடித்திரி​யும் உறவுகளின் கவனயீர்ப்புகள், சுழற்சி முறையிலான ​போராட்டங்கள் ஆகிய எல்லாவற்றையும் அரசியல்வாதிகள் இலாவகமாக உரசிச்சென்றுவிடுகின்றனர்.

‘சுற்றாடலைப் பாதுகாப்போம்’ எனும் தொனியில், பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம், ஒரு பதிவுக்கானது என்பது மட்டுமே தெட்டத்தெளிவாகியது. அல்லது, நாங்களும் செய்தோமென மக்களிடத்தில் பிரமையை ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்திருந்தது.

ஒவ்வொரு நினைவு நாளுக்கும் மரக்கன்று நாட்டுவதைப் பலரும் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். வெளிநாட்டுத் தலைவர்கள், முக்கியஸ்தர்களின் விஜயங்களின் போது, ஞாபகார்த்தமாக மரக்கன்று நாட்டப்படுவதுண்டு. அத்துடன், சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கியமான நாள்களில், பாடசாலை மட்டத்திலிருந்து மரக்கன்றுகள் நாட்டப்படுகின்றன.

கன்றுகள் ஒருபுறம் நாட்டப்படும் அதேநேரத்தில், விலைமதிக்கமுடியாது, விருட்சங்கள் அடியோடு அறுத்தெடுக்கப்பட்டு, வனாந்தரங்கள் கட்டாந்தரைகளாக்கப்பட்டும் வருகின்றன. ‘அபிவிருத்தி’ எனும் பதாகைக்குள் மறைந்துகொண்டே, இவ்வாறு மிகச் சூட்சுமமான முறையில், வனாந்தரங்கள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

குற்றம், சட்டத்தின் வரையறைக்கு உட்பட்டது; அதற்குத் தண்டனை வேறுபடுமே தவிர, குற்றம் குற்றம்தான். ஆனால், காடுகளை அ​ழித்தொழிப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத சட்டம், தங்களுடைய வீட்டுத்தேவைக்காக சிறிய சுள்ளிகளை முறிப்போருக்கு எதிராகப் பாய்வதுதான் வியப்பாகவே உள்ளது.

இயற்கையின் மீது, எவர் கை வைத்தாலும் அது குற்றமாகும். இது எதிர்கால சந்ததியினரின் மீது திட்டமிட்டு ஊட்டப்படும் நஞ்சாகும். ஆகையால், ஓரணியில் திரண்டு, இயற்கையைப் பாதுகாப்பதே நாட்டுக்கும் எதிர்காலத்துக்கும் நன்மை பயப்பனவாய் அமையும்.

(Tamil Mirror)