பழைய குருடி கதவை திறவடி

திடீரென ஏறிய விலைவாசிகள் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவுகளை புரட்டிப் போட்டுவிட்டது. இப் பெருந்தொற்றுக்காலத்தில் சிறு சிறு கூலி தொழில்களை செய்து அன்றாடம் தன் வாழ்க்கைச் செலவுகளை சமாளித்து வருகின்ற சாதாரண மக்களின் காதுகளில் பேரிடியாய் விழுந்தது அச்செய்தி.

ஒரே இரவில் எரிவாயு, சீனி, பால்மா, சிற்றுண்டி உணவுகள் என பொருட்களின் விலை ஏற்றத்தால் மக்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்க தயாராகினர். குறிப்பாக எரிவாயு விலையேற்றத்தால் இன்றைக்கு மாயமாக இருந்த மண்ணெண்ணெய் அடுப்புகள் மலைபோல விற்பனைக்கு குவிந்து கிடக்கின்றன.

இதன்படியே லீட்ரோ கேஸ் விலை 12.5 கிலோகிராம் ரூபாய் 2,675 இற்கும், 5 கிலோகிராம் ரூபாய் 1,071 இற்கும், 2.3 கிலோகிராம் 506 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக எரிவாயு வெளியேற்றத்தின் பின்னர் அதிகமானோர் விறகு அடுப்பு பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். மறு பாதிப் பேர் மண்ணெண்ணெய் அடுப்புகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.

மலையகப் பகுதிகளில் மக்கள் விறகடுப்பினையே அதிகமாக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக மலையகப் பிரதேசங்களில் பொறுத்தமட்டில் எரிவாயு அடுப்பு புழக்கத்தில் இருந்தாலும் கூட அனேகமானோர் விறகடுப்பினையை பயன்படுத்தி வருகின்றனர். காரணம் கிராமப்புறங்களை சுற்றிலும் காடுகள், மலைகள் என இயற்கை சூழலில் அம்சங்கள் நிறைந்து இருப்பதனால் விறகு தட்டுப்பாடு அங்கு இருப்பதில்லை.

அத்தோடு மக்கள் தங்களுக்குத் தேவையான விறகுகளை காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் பெற்றுக் கொள்வதனால் விறகிற்கான தேவை இருந்துகொண்டே இருக்கின்றன. அதுமட்டுமன்றி காடுகளில் மரங்களில் இருந்து விழுகின்ற சிறு குச்சிகளும் தளபாடங்களுக்காக வெட்டப்படுகின்ற மரத்தின் கழிவு விறகுகளும் விறகடுப்பிற்காக பயன்படுகின்றன.

மலையகப் பிரதேசங்களில் விறகு அடுப்பும், அதற்கு தேவையான விறகுகளும் இருப்பதனால் ஓரளவிற்கு இந்த எரிவாயு விலை ஏற்றத்தை மலையகத்தில் வாழ்கின்ற மக்களால் எதிர் கொள்ள முடிகின்றது எனலாம். இதனால் எரிவாயு அடுப்பின் பயன்பாட்டை குறைத்து அனேகமாகமானோர் தங்களுடைய தேவைக்காக விறகடுப்பினையே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க நகரங்களில் வசிக்கின்ற மக்களுடைய நிலைமை பற்றியும் கவனம் செலுத்தப்பட வேண்டிய தேவை உண்டு. அதிகமாக நகர்ப்புறங்கள் எரிவாயு அடுப்பினையே பெரிதும் உபயோகப்படுத்துகின்ற மக்கள் வாழ்கின்ற ஒரு பகுதியாகும்.

கிராமப்புறங்களில் இலவசமாக கிடைக்கக்கூடிய விறகுகள் இங்கு அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. பணம் கொடுத்து விறகுகள் வாங்க வேண்டிய சூழலுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் நகர்ப்புற மக்களின் வாழ்வில் எரிவாயுவிலை ஏற்றம் நெருக்கடிகளை கொடுக்க ஆரம்பித்துள்ளது எனலாம்.

எனவே இக்கொரோனா காலப்பகுதியில் தொழில் முடக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விறகடுப்பு பயன்படுத்த வேண்டும் என்றாலும் அதிகமான விலை கொடுத்தே விறகுகளை வாங்க வேண்டியதாக உள்ளது. குறிப்பாக மக்கள் விறகடுப்பு பாவனைக்கு மாறத் தொடங்கிய உடனே விறகுகளின் விற்பனையிலும் விலைகள் ஏறத் தொடங்கின.

நகர்ப்புறங்களில் கருவாப்பட்டைக்காக வெட்டப்படுகின்ற மரங்களும், தளபாடங்கள் செய்ய வெட்டப்படுகின்ற மரங்களுமே விறகுகளாக விற்பனை செய்யப்படுகின்றன. எனவே கருவா மர விறகுகளின் விற்பனை அதிகரித்துள்ளதோடு விலையிலும் ஏற்றம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மண்ணெண்ணெய் அடுப்புகளுக்கான விற்பனை சடுதியாக அதிகரித்தது. இன்றைக்கு எரிவாயு அடுப்பின் வருகையோடு மண்ணெண்ணெய் அடுப்பினை மறந்து போயிருந்தனர். இலகுவாக சமைக்கவும், நேரத்தை மிச்சப்படுத்துவதாகவும் எண்ணி எவ்வளவு விலை கொடுத்தும் எரிவாயு அடுப்பினை வாங்க தயாராகிவிட்டனர்.

ஆனால் இந்நிலையில் விறகடுப்பினதும், மண்ணெண்ணெய் அடுப்பினதும் பயன்களைப் பற்றி மக்கள் சிந்திக்கத் தொடங்கிய சூழ்நிலையை காலம் உருவாக்கி விட்டது எனலாம். எரிவாயு விலை ஏற்றத்தினால் மண்ணெண்ணெய் அடுப்பினை வாங்குவதற்கு வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர் இன்று!

ஆனாலும் கூட விறகு அடுப்பு பயன்பாட்டினால் விறகிற்காக காடுகளை அழிக்கக் கூடிய சந்தர்ப்பம் ஒருபுறம் இருந்தாலும் கூட அதிகமாக காய்ந்த மரப்பட்டையும், ஒடிந்த குச்சிகளையுமே தன் பாவனைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனாலும் மரக்கழிவுகள் விறகுகளாக விற்பனையாகினாலும் கூட, காலப்போக்கில் இந்நிலைமை நீடிக்கும் பட்சத்தில் காடுகளை அழித்து விறகுகளாக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோமோ என்ற அச்சம் ஒரு புறம் இருக்க தான் செய்கின்றது.

எரிவாயு விலை அதிகரிப்பு ஒருபுறமிருக்க சில இடங்களில் அதிக விலைக்கும் எரிவாயு விற்பனை செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே மலையக பிரதேசங்களை பொறுத்தவரையில் விலையானது குறிப்பிட்ட நிலையிலிருந்து அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்கின்ற ஒரு வழக்கம் இன்று காணப்படுகின்றது.

அந்தவகையில் எரிவாயு விலையானது ஆரம்பத்தில் கூட்டப்பட்டு இருந்தாலும்கூட அதற்குப் பின்னர் 75 ரூபாய் குறைக்கப்பட்டு இருந்த போதிலும் 2,800 ரூபாய் விலையிலேயே விற்பனை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதற்கடுத்த கட்டமாக, பால்மா விலையேற்றம் பாரிய தாக்கத்தினை மக்களிடையே ஏற்படுத்தி விட்டது. பால்மா விலையேற்றத்தால் சிறு வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரையிலும் பாரிய சிக்கல்களை இன்று எதிர்கொள்கின்றனர். ஆரம்பத்தில் பதுக்கப்பட்ட பால்மா பெட்டிகள் அனைத்தும் விலையேற்றத்தின் பின்னர், புதிய விலைப்பட்டியலோடு முன் அடுக்குகளில் பிரகாசிக்கின்றன. அவை எவ்வாறு திடீரென உதயமாகின?

ஆரம்பத்தில் பால்மாவானது தட்டுப்பாடு ஏற்பட்ட போது அனேகமான கடைகளில் 7 யோகட் வாங்கினால் மாத்திரமே பால்மாவானது விற்பனை செய்யப்பட்டது. ஆனால் பால்மா விலை ஏற்றத்தின் பின்னரும் இதே நிலை தொடர்ந்து இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். காரணம் இன்றைக்கும் பால்மா விலை ஏற்றத்துக்குப் பின்னரும்கூட கடைகளில் குறிப்பிட்ட விலைக்கு பொருட்களை வாங்கினால் மாத்திரமே பால் மாவானது விற்பனை செய்யப்படுகிறது.

இதனைத் தவிர தற்போது சீமெந்து விலை அதிகரிப்பின் காரணமாக பல இடங்களில் சீமெந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக சீமெந்தின் விலையானது மேலும் விலையேற்றப்படலாம் என்ற காரணத்தினால் பல கடைகளில் பதுக்கி வைக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பல பொருட்கள் பழைய விலைக்கு வாங்கிய பொருட்களாக இருந்தாலும் கூட புதிய விலையின் அடிப்படையிலேயே அவை விற்பனை செய்யப்படுகிறது.

நாட்டில் கொரோனா பிடிக்குள் சிக்கித் தவிக்கும் மக்கள் விலைவாசி ஆட்டத்தில் சிக்கிக்கொண்டு அல்லல் படுகின்றனர். அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு தேடும் மக்கள் வாழ்வில் படிப்படியான விலை ஏற்றம் பட்டினியே தேடித்தருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றமானது பெரும்பாலான மக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தினை செலுத்தி வருகின்றதோடு திடீரென ஏற்பட்ட விலைவாசி ஏற்றம் காரணமாக மக்கள் பதற்ற நிலையை எதிர்கொண்டு வருகின்றனர்.

இன்னும் கண்ணுக்கே தெரியாத அளவிற்கு எத்தனையோ பொருட்களின் விலைகளில் சிறிய சிறிய மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. விலைவாசி ஏற்றமும் மக்கள் எதிர்நோக்கி வருகின்ற சிக்கல்களும் நாளுக்குநாள் கூடுகிறதே தவிர அவை குறைந்தபாடில்லை.

காஸ் விலை அதிகரித்ததை அடுத்து ‘பழைய குருடி கதவைத் திறவடி’ என்பதற்கிணங்க பழைய அடுப்புகளின் மீதான நாட்டம் அதிகரித்துள்ளது. மண்ணெண்ணெய் மற்றும் விறகுகளின் விலைகள் அதிகரிக்காமல் இருந்தாலே உத்தமம்.