அஜந்தாவின் கவிதை நூல்கள் வெளியீட்டு நிகழ்வு.

திரு.அஜந்தா ஞானமுத்து (சக்திசாந்தன்) அவர்களால் எழுதப்பட்ட கவிதை நூல்களின் வெளியீடு மே-29-2016 ஞாயிறுமாலை ரொரன்ரோ கனடாவில் சிறப்பாக நடைபெற்றது. அந்நிகழ்வினை இங்கு வாழும் நமது தாய்மார்கள் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைக்க திருமதி சுஜி கலிங்கரத்தினம் அவர்கள் தமிழ்மொழி வாழ்த்து இசைக்க தமிழன்னைக்கு மரியாதை செலுத்தினர்.

செல்வி அஜானி ஞானமுத்து வருகைதந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றிய பின்னர் வித்துவான் க.ஞானரெத்தினம் அவர்களின் ஆசியுரையுடனும் திரு.கல்கிதாசன் கனகசபாபதி அவர்களின் வாழ்த்துரையுடனும் விழா நிகழ்வுகள் தொடர்ந்தன.

மண்டபம் நிறைந்த மட்டக்களப்புத் தமிழகமக்களின் முன்னிலையில் அஜந்தாவின் ‘முத்துமணிமாலை’ கவிதை நூலினை கல்விமான்களும் சமூகசேவையர்களுமான எம்மண்ணை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி. குணமலர் ஏரம்பமூர்த்தியும் ‘மனோஞானம்’ கவிதை நூலினை கலாநிதி. சிறிதரகுமார் சின்னத்தம்பியும் சிறப்பாக விமர்சனம் செய்தனர்.

தொடர்ந்து ‘மனோஞானம்’ நூலினை கலாநிதி இ.பாலசுந்தரம் அவர்களும் ‘முத்துமணிமாலை’ நூலினை திருமதி. நேசம்மா செபரெத்தினம் அவர்களும் (மறைந்த வித்துவான் க.செபரெத்தினம் ஐயா அவர்களின் துணைவியார்) வெளியிட்டு வைத்தனர்.

செல்விகள் ஜிச்சாயினி, ஹம்சாயினி கோபாலகிருஸ்ணன் சகோதரிகளினதும், செல்வி நிருஜா புவி அவர்களின் சிறப்பான நடனமும், செல்வி கனிரா உதயகுமாரின் இனிமையான பாடலும், செல்வன் அபிராம் நீதிராஜாவின் துடிப்பான பரவசமிக்க நடனமும் சிறப்பாக இடம்பெற்றதோடு திரு. அஜந்தாவின் மனதோடு ஊர்வலம் இசைத்தொகுப்பிலிருந்து “மட்டக்களப்பு தமிழகமே” என்ற பாடல் வரிகளுக்கு திரு.பவன் கந்தசாமி அவர்கள் இசையமைத்துப் பாடி பலரது பாராட்டுக்களையும் பெற்றார்.

கணீரென்ற குரலில் களப்பூரான் திரு.தங்கா கோபாலசிங்கம் அவர்களால் நிகழ்ச்சிகள் யாவும் சிறப்பாக தொகுத்து வழங்கப்பட்டன. இறுதியாக பிரபல எழுத்தாளரும் கவிஞருமான திரு.சுதாகர் (சக்கரவர்த்தி) குழுவினரின் நாடகத்துடன் வருகைதந்த அனைவரும் சுவையான உணவு உண்டு மிகவும் களிப்புடன் நூல் வெளியீட்டு விழாவினை நிறைவு செய்தனர்.
நூல்வெளியீட்டு நிகழ்வுகளை பார்வையிட கீழுள்ள இணைப்பினை அழுத்தவும்.