அதிமுக அரசு மீது சோனியா வைத்த முக்கிய குற்றச்சாட்டு..

காங்கிரஸ் – திமுக கூட்டணி உருவானதை கூட்டணி உருவானபோதே வரவேற்றுப் பதிவு செய்தேன். பெரும்பான்மை பலத்துடன் வஞ்சகமாகப் பா.ஜ.க அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றுபட வேண்டியது அவசியம். மே.வங்கத்தில் காங் + மார்க்சிஸ்ட் கட்சி கூட்டணியையும் வரவேற்றேன். தமிழகத்தில் அப்படி ஒரு நிலை ஏற்படாமல் போனது துரதிர்ஷ்டமே. மே.வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் தாங்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் முஸ்லிம்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு நேர்மையாகச் செயல்பட்டிருந்தால் இம்முறை நிச்சயம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கலாம்.

நேற்று சென்னையில் பேசும்போது வழக்கமாக அதிமுக அரசு மீது நாம் வைக்கும் குற்றச்சாட்டைத் தாண்டி சோனியா அவர்கள் ஒரு முக்கிய கருத்தைச் சொல்லியுள்ளார். டெல்லியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிக்காலத்திய சாதனைகளில் நிலப்பறிப்புச் சட்டத் திருத்தம் முக்கியமான ஒன்று. அப்போது நான் அதை விமர்சித்து எழுதியுள்ளேன். (பார்க்க: ‘சிங்காரச் சென்னையும் சீரழியும் வாழ்வுகளும்’). நாம் எதிர்பார்த்த அளவில் அந்தத் திருத்தங்கள் அமையவில்லை என்பது நம் குற்றச்சாட்டு. ஆனால் கார்பொரேட்கள் சென்ற 2014 தேர்தலில் காங்கிரசுக்கு எதிராகத் திரண்டதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று மன்மோகன் அரசு இயற்றிய இந்த நிலப்பறிப்புச் சட்டம்தான் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். கார்பொரேட் அடிமையாகிய மோடி அரசு வந்தவுடன் செய்ய முயற்சித்துத் தோற்றது இந்தச் சட்டத்தை ஊத்தி மூடுகிற முயற்சியில்தான் என்பதும் நினைவிற்குரியது.

நேற்று நமக்கு சோனியா நினைவூட்டியது இதுதான். மன்மோகன் தலைமையிலான ஐமுகூ அரசு நிலச் சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியபோது (2013) மாநில அரசுகள் அந்தச் சட்டதில் திருத்தங்கள் செய்து கொள்ளலாம் என்பதைப் பயன்படுத்தி முதலில் அச்சட்டத்தைத் திருத்தி அதை நீர்க்கச் செய்தது ஜெயாவின் அதிமுக அரசுதான். கார்பொரேட்களுக்காக நிலத்தைக் கைப்பற்றும்போது நில உரிமையாளர்களான விவசாயிகளின் சம்மதம் வேண்டும் என்கிற பிரிவைத்தான் ஜெயா நீகினார்.

அதிமுக அரசு பாஜக அசைப்போலவே மக்கள் விரோதமானது என ஆணித்தரமாகச் சொலியுள்ளார் சோனியா.

சோனியா அவர்களுக்கு வாழ்த்துகள்.

ஈழப் பிரச்சினையில் தாங்கள் எதிர்பார்த்ததுபோல நடக்கவில்லை என நேற்று சிலர் சோனியாவுக்குக் கருப்புக் கொடி காட்டியுள்ளனர். மோடி ஈழப் பிரச்சினையில் சோனியா-மன்மோகன் அரசைக் காட்டிலும் மோசமாக நடந்து கொள்கிறார் என்பதை உலகறியும். மன்மோகன் கூட தமிழகம் தந்த அழுத்தத்திற்குப் பணிந்து கொழும்பில் நடந்த காமன்வெல்த் மாநாட்டிற்குப் போவதைத் தவிர்த்தார். ஆனால் பதவி ஏற்ற சில மாதங்களில் கொழும்பு சென்று 28 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை சென்ற இந்தியப் பிரதமர் என்கிற பெயரை் மோடி தட்டிச் சென்றபோது இவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்பது நினைவிற்குரியது.

இன்னும் இரண்டு நாட்களில் மோடி இங்கு வரப்போகிறார். அப்போது சோனியாவுக்குக் கருப்புக் கொடி காட்டியவர்கள் மோடிக்கு என்ன கொடி காட்டப்போகிறார்கள் எனப் பார்ப்போம்.