அத்து மீறல்களும் இனத் துவேசிகளும்

ஜெர்மனி கெல்ன் (Köln) நகரில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது நடந்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான சர்ச்சை இன்னமும் தொடர்கின்றது. ஜெர்மனியில் மட்டுமல்லாது, பிற ஐரோப்பிய நாடுகளிலும் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக ஊடகங்களில் விவாதிக்கப் பட்டு வருகின்றது.

“நூற்றுக்கணக்கான ஜெர்மன் பெண்கள், அரபு குடியேறிகள் அல்லது அகதிகளால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு பலியாகினார்கள். ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார்.” இந்தத் தகவல் காட்டுத்தீயாக பரவி, அரேபியர், அகதிகள், முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேஷக் கருத்துக்கள் பரவ வழி வகுத்தது. கெல்ன் நகர மத்தியில், தீவிர வலதுசாரிகள் அகதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆறு பாகிஸ்தானியர்களும், ஒரு சிரியரும், வலதுசாரிக் காடையர்களினால் தாக்கப் பட்டனர்.

கெல்ன் நகரில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் பற்றிய தகவல்கள் ஊடகங்களினால் ஊதிப் பெருக்கப் பட்டன. அது உண்மையில் இனவாதிகளுக்கு சாதகமாக அமைந்து விட்டது. இவ்வாறு ஜெர்மன் பெண்ணியவாதிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “இது பொதுவாகவே ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சினை. வழக்கமாக நடக்கும் ஜெர்மன் ஆண்களின் அத்துமீறல்களை கண்டுகொள்ளாத சமூகம், வெளிநாட்டு குடியேறிகள் என்றால் மட்டும் பொங்கி எழுகின்றது. ஒவ்வொரு வருடமும் ஜெர்மன் ஆண்கள் கூட அத்துமீறல்கள் புரிகின்றனர். ஆனால், வெளிநாட்டுக் குடியேறிகள் சம்பந்தப் பட்ட படியால் மட்டுமே, இன்று இந்தப் பிரச்சினை ஊதிப் பெருப்பிக்கப் படுகின்றது. அது இறுதியில் இனவாதிகளுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகின்றது. இந்தச் சந்தர்ப்பத்திலாவது பெண்கள் மீதான வன்முறையை ஒழிப்பதற்கு எல்லோரும் முன்வர வேண்டும்.” என்று தெரிவித்துள்ளனர்.

ஜெர்மன் ஆண்களால் நடத்தப்படும் பாலியல் அத்துமீறல்களுக்கு உதாரணமாக மியூனிச் நகரில் நடக்கும் அக்டோபர் விழாவை சுட்டிக் காட்டியுள்ளனர். ஒவ்வொரு வருடமும், “Oktober fest” என்ற பெயரில் நடக்கும் கொண்டாட்டத்தின் பொழுது, நூற்றுக் கணக்கான பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். பெரும்பாலும் ஜெர்மன் ஆண்களே குற்றவாளிகளாக இருப்பதால், சமூகம் அதனை பெரிது படுத்துவதில்லை. “பையன்கள் அப்படித் தான் இருப்பார்கள்…” “நடத்தை கெட்ட பெண்கள் தான் முறைப்பாடு செய்கிறார்கள்…” “இது சாதாரண விடயம் பெரிது படுத்தக் கூடாது…” முறைப்பாடு செய்தால் இவ்வாறான பதில்கள் தான் கிடைக்கின்றன. ஜெர்மன் ஊடகங்கள் எதுவும் அக்டோபர் விழா அத்துமீறல்கள் பற்றி தெரிவிப்பதில்லை.

Bild போன்ற மூன்றாந்தர ஜெர்மன் பத்திரிகைகளில் வெளியாகும் பெண்களின் அரை நிர்வாணப்படங்கள், பாலியல் இச்சையை தூண்டும் வீதி விளம்பரங்கள் போன்றனவும் தடை செய்யப் பட வேண்டும் என்று பெண்ணியவாதிகள் கோரிக்கை வைத்துள்ளனர். உதாரணத்திற்கு “ஒரே இரவில் நூறு யுவதிகள்” என்று ஒரு விளம்பரம் வைக்கப் பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் பாலியல் அத்துமீறல் புரிந்தவர்களின் நோக்கமும் அது தான்.

Tharmalingam Kalaiyarasan